இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் காணப் படும் பச்சைப் பாம்பைக் கண் கொத்திப் பாம்பு என்றும், கொடிப் பாம்பு என்னும் குறிப்பிடுவர். இப்பாம்பு நச்சுத் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. பச்சைப் பாம்பு, நீண்ட கூர்மையான தலையுடன், மிக நீளமாகக் கொடி போன்று பச்சை நிறத்தில் காணப் படும். ஆண் பாம்பு 1 மீட்டரும், பெண் பாம்பு 2 மீட்டரும் நீளம் உடையன. இப்பாம்புகளின் உடலின் பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். தலையின் முன் பகுதியில், பக்க வாட்டத்தில் நன்கு பெருத்த இரட்டைக் கண்கள் உள்ளன. கண்களின் கருமணி (pupil) படுக்கை வாட்டத்தில் திறக்கிறது. கண்ணிலுள்ள விழிப் படலம் (iris) பொன் நிற மஞ்சளாக உள்ளது. இப்பாம்புக்குச் சீற்றம் வரும் போது, உடலின் முன் பகுதியையும், கழுத்தையும் விரித்துப் பாய்ந்து, கடிக்கும். இப்பாம்பு கண்களைக் கொத்தும் எனப் பலர் தவறாகக் கருதுவர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இப்பாம்பு புல் வெளிகளிலும், புதர்களிலும், மரங்களிலும், சில நேரங்களில் தென்னை, பனை, அத்தி மரங்களின் உச்சியிலும் காணப் படும். மரக் கிளைகளை வாலினால் நன்கு பற்றிக் கொண்டிருக்கும். இது, சிறு பறவை, ஓணான், தவளை ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. நச்சுத் தன்மையற்றதாக இருந்தாலும், இப்பாம்பு கடிப்பதால், வலியும், வீக்கமும் ஏற்படலாம். கண்ணாடிக் கூண்டுக்குள் காட்சிக்காக வைக்கப் படும் இப்பாம்பு, கண்ணாடியில் வேகமாகக் கொத்தித் தன் கூர் மூக்கை உடைத்துக் கொள்ளும் தன்மையுடையது. பச்சைப் பாம்புகளில் பெரும்பாலானவை முட்டையிடுபவை. சில,விரியன் பாம்பு முறையில் 5–10 குட்டி போடக் கூடியவை. இக்குட்டிகள் தாயைப் போன்றே, 20 செ.மீ. நீளத்தில் இருக்கும். —கோவி. இராமசுவாமி