உஞ்சை மாகாளம்
uñcai mākāḷam
தேவார ஆசிரியர்களால் தனியே பதிகம் பாடிப் போற்றப்பெறாமல் அவர்கள்தம் பதிகங்களின் இடையே பெயர் மட்டும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் தேவார ‘வைப்புத்தலங்கள்’ எனப்படும்.
தேவார ஆசிரியர்களால் தனியே பதிகம் பாடிப் போற்றப்பெறாமல் அவர்கள்தம் பதிகங்களின் இடையே பெயர் மட்டும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் தேவார ‘வைப்புத்தலங்கள்’ எனப்படும். அத்தகு வைப்புத் தலங்களுள் ஒன்று உஞ்சை மாகாளம். இது உஞ்சேனை மாகாளம் எனவும் வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இப்பதியினைத் தம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் ‘நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்’ (சம். தேவா. 2–39–9) என்றும், திருநாவுக்கரசர் ‘மதில் உஞ்சை மாகாளம்’ (அப். தேவா. 6–7–11), ‘உஞ்சேனை மாகாளம்’ (அப். தேவா. 6–70–8) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இக்குறிப்புகளிலிருந்து இத்திருத்தலம் சோலை சூழ்ந்தது என்றும் மதில் அரண் கொண்டது என்றும் தெரிகிறது. தேவாரத் தலங்களை நாட்டடிப்படையில் தொகுத்துக் காண்போர் இத்தளம் வடநாட்டின்கண் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
உஞ்சை என்னும் பெயர் மத்திய பிரதேசத்து உச்சயினி நகரினைக் குறிப்பதாகும். உச்சயினி நகரம் உதயணன் கதை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் உஞ்சை, உஞ்சேனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உஞ்சேனை மாகாளம் என்னும் பெயர் உஞ்சை என்னுமிடத்தில் அமைந்த மாகாளம் என்னும் சிவன்கோயிலைக் குறிப்பதாகும். ஊர்ப்பெயரும் அங்குள்ள சிவன் கோயிற் பெயரும் சேர்ந்து தலப்பெயராக அமைந்து விளங்கும் மரபு திருமுறைப் பதிகங்களில் காணப்படுகிறது.
உஞ்சை, உஞ்சேனை என வழங்கப்பெற்ற உச்சயினியில் உள்ள சிவன்கோயில் உச்சயினி மாகாளம் என்றும் கூறப்படும். உச்சயினி நகரத்தில் முருகவழிபாடு சிறந்திருந்ததாகப் பெருங்கதை கூறுகிறது. உச்சயினியில் சமண புத்த மடங்களும் மிக்கிருந்தன என்பதும் இந்நகருக்குப் புறத்தில் மாகாளவனம் என்னும் காட்டில் காளிதேவிக்குப் பெருங்கோயில் அமைந்திருந்தது என்பதும் கூறப்படுகின்றன. பல சமயங்களுக்கும் இடமாகத் திகழ்ந்த உச்சயினியிலுள்ள சிவாலயத்தின் சிறப்புணர்ந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நேரே சென்று அத்தலத்தினைத் தனிப் பதிகங்களால் பாடாவிடினும், தங்கள் பதிகப் பாக்களில் வைப்புத்தலமாக அமைத்துப் போற்றி வழிபட்டுள்ளனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 751)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/88g7raeq/
தமிழ்“உஞ்சை மாகாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/88g7raeq/APA
Oliyon Research. (2026). உஞ்சை மாகாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/88g7raeq/MLA
"உஞ்சை மாகாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/88g7raeq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment