சோடியம், குளோரைடு ஆகியவை சிறுநீரக நுண் குழல்களால் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும் மருந்துகள், சிறுநீர் ஊக்கிகள் (diuretics) எனப்படும். இதனால், சிறுநீரின் அளவு அதிகரித்து வெளிப்படுகிறது. சிறுநீர் ஊக்கிகளை மிகு ஆற்றலுடையவை, மிதமானவை, குறை ஆற்றலுடையவை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். மிகு ஆற்றலுடையவை. ஃபுரசமைடும், பூமெடனைடும் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றால் உண்டாகும் சிறுநீர்ப் பிரிவு விரைவாகவும், முனைப்புடனும், குறுகிய காலம் நீடிப்பதாகவும் இருக்கும். இவற்றை வளையச் சிறுநீர் ஊக்கிகள் (loop diuretics) என்பர். ஏனெனில், ஹென்லி வளையத்தின் ஏறு பகுதியில் சோடியமும், குளோரைடும் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடை செய்கிறது. இதனால், செறிவடையச் செய்யும் சிறுநீரகத்தின் தன்மை குறைந்து, பெருமளவில் சிறுநீர் வெளிப்படுகிறது. அடுத்துள்ள சிறுநீரக நுண் குழல்களுக்குப் பெருமளவில் சோடியமும், நீரும் வந்து சேர்வதால், சிறுநீரில் பொட்டாசியம் வெளிப்படுகிறது. ஃபுரசமைடு மாத்திரையாக 40—80 மி.கி. கொடுக்கலாம் அல்லது சிரை வழியாக 20—40 மி.கி. கொடுக்கலாம். பூமெடெனைடு, 1—2 மி.கி. அலகில் கொடுத்தால் போதும். இரண்டு மருந்துகளின் விளைவும் ஒரே தன்மையுடன் இருக்கும். பரவலான உடல் வீக்கத்திலும், தீவிர நுரையீரல் நீர்த் தேக்கத்திலும் மிகு பயனளிக்கும். இதன் பக்க விளைவுகளாக, குருதியில் குளூக்கோசின் அளவு அதிகரிப்பதும், கீல்வாதத் தாக்கம் உண்டாவதும் குறிப்பிடத் தகும். காதில் இரைச்சலும், உடல் வலியும் சில வேளை தோன்றலாம். மிதமானவை. சிறுநீர் ஊக்கிகளில் அடங்கும் தயசைடு, நெளிவுடன் கூடிய சேய்மை நுண் குழல்களில் சோடியமும், குளோரைடும் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடை செய்கிறது. பொட்டாசிய இழப்பும் அதிகரிக்கிறது. இவ்வகையைச் சார்ந்தவை பெண்டுரோஃபுளுவசைடும், ஹைட்ரோகுளோர் தயசைடும் ஆகும். இவற்றின் அலகுகள் முறையே 10 மி.கி., 100 மி.கி. ஆகும். குளோர்தாலிடோன் (அலகு 100—200 மி.கி.) மேற்கூறியது போன்று வினை புரிந்தாலும், பொதுவாக 48 மணி நேரங்களுக்கு வினை புரிகிறது. இதன் பக்க விளைவுகளாக வீரியக் குறைவு, நிலை மாற்றக் குறையழுத்தம், ஒவ்வாமைப் பொரிப்பு, யூரிக் அமில மிகைப்பு, நீரிழிவு நோய் போன்றவை தோன்றலாம். குறை ஆற்றலுடையவை. சிறுநீர்ப் பெருக்கிகளில், அமிலோரைடு (20 மி.கி.),டிரையம்டெரீன் (200 மி.கி.), ஸ்பைரனோலாக்டோன் (100—400 மி.கி.) ஆகியவை அடங்கும். அமிலோரைடும், டிரையம்டெரீனும் அல்டோஸ்டீரானின் விளைவுகளைப் பயனற்றவையாக்கி விடுகின்றன. இவை சேய்மை நுண் குழல்களில் சோடியம் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடை செய்கின்றன. பொட்டாசியச் சுரப்பு பாதிக்கப்படுவதில்லை. ஸ்பைரனோலாக்டோன், அல்டோஸ்டீரான் எதிர்ப்பியாக விளங்குகிறது. இம்மருந்து பொட்டாசியம் வெளிப்படுவதைத் தடை செய்கிறது. சிறுநீர் ஊக்கிகளின் பெரிய, தீய விளைவு பொட்டாசிய இழப்பேயாகும். ஆகவே நாளும் 3—4 கிராம் பொட்டாசியம் நோயாளிக்கு அளிக்கப்பட்ட வேண்டும். சோடியம் மிகையாகக் குறைந்து விடுவதும், ஒரு தீய விளைவாகும். இந்நிலையில் தேவையிருந்தால் 100—200 மி.லி. 5% உப்பு நீரைச் சிரை வழியாகத் தருவது நன்மை பயக்கும். —மு.கி. பழனியப்பன் நூலோதி. John Macleod, Davidson's Principles and Practise of Medicine. Fourteenth Edition, ELBS, Churchill Livingstone, 1984.