தென்–நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு சிறு நாடு. இது சுவிட்சர்லாந்துக்கும் ஆசத்திரியாவுக்கும் இடையிலமைந்துள்ளது. இந்நாட்டு மக்களுக்குச் சுவிட்சர்லாந்து மக்களுடன் நெருங்கிய தொடர்புண்டு. இவர்கள் செருமானியத் திசைமொழியொன்றைப் பேசுகிறார்கள். இவர்களின் பழக்கவழக்கங்கள், சுவிட்சர்லாந்து நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களைப் போன்றுள்ளன. இலிக்தன் இசுடைன் (Liech–tenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே கையாளுகிறது. சுவிட்சர்லாந்து நாடு, இந்நாட்டின் அஞ்சல், தொலைவரி, தொலைபேசி போன்ற துறைகளை இயக்குகிறது. இந்நாட்டின் தூதர்கள், வாணிகத் தொடர்புகள் போன்றவற்றையும் சுவிட்சர்லாந்தே கையாள்கிறது. ஐரோப்பாவில் நடைபெற்ற பல போர்களின் போதுகூடச் சுவிட்சர்லாந்தைப் போல் இலிக்தன் இசுடைனும் நடுநிலைக் கொள்கையைக் கையாண்டது. இந்நாடு கி.பி. 1866–ஆம் ஆண்டுக்குப்பின் எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை. இது கி.பி. 1806–ஆம் ஆண்டிலிருந்து சுதந்தர நாடாகவே இருந்து வந்துள்ளது. வதுசு (Vaduz) என்னும் சிறு நகரமே இதன் தலைநகராகும். இதன் மக்கள்தொகை 1981–ஆம் ஆண்டுக் கணக்கின்படி 4980. எல்லைகள் இலிக்தன் இசுடைன் கிழக்கில் ஆசுத்திரியாவையும் மேற்கில் சுவிட்சர்லாந்தையும் எல்லைகளாகப் பெற்றுள்ளது. இதன் பரப்பு 160 ச.கி.மீ. மக்கள்தொகை 26,130 (1981). மக்கள் ஆசுத்திரியர்களையும் சுவிட்சர்லாந்து மக்களையும் போல் இலிக்தன் இசுடைனின் மக்களும் செருமானிய மரபிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அமைதியான எளிமை வாழ்வு வாழ்கிறார்கள். இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் நாட்டுப்புறச் சிற்றூர்களில் வாழ்கிறார்கள். பண்ணைகளில் 1930–ஆம் ஆண்டுவரை பணியாற்றிய இம்மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் சிறு தொழிற்சாலைகளிலோ கைவினைஞர்களாகவோ பணியாற்றுகிறார்கள். மேலும், ஐந்தில் ஒரு பகுதியினர் பண்ணைகளில் பணி செய்கிறார்கள். இந்நாட்டு மக்கள் மரத்தாலான வீடுகளில் வாழ்கிறார்கள். இவர்களின் வீடுகளுக்குப் பின்புறத்தில் குதிரை இலாயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவர்கள் மரபுவழியாக உடுத்தி வந்த ஆடைகளையே இன்றும் உடுத்தி மகிழ்கிறார்கள். மக்கள் அனைவருமே உரோமானியக் கத்தோலிக்கர்கள். தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் இன்றும் இலவசம். குழந்தைகள் எட்டாண்டுகளுக்குப் பள்ளி செல்லவேண்டும். ஏறத்தாழ மக்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். வதுசில் உள்ள உலகப்புகழ்பெற்ற அருங்கலைக் காட்சியகம் இளவரசரின் சொந்தச் சொத்தாகும். நிலம் இந்நாட்டின் மேற்கெல்லையில் இரைன் ஆறு பாய்கிறது. ஆற்றின் போக்கையொட்டிக் குறுகலானதும் தட்டையானதுமான பண்ணைநிலம் காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இப்பகுதியில்தான் வாழ்கிறார்கள். மலைச்சரிவுகளில் பைன் மரக்காடுகளையும் அழகான மேய்ச்சற்றரைகளையும் காணலாம். இந்நாட்டைச் சுற்றி மலைகள் சூழ்ந்துள்ளமையால் இங்குத் தட்ப வெப்பநிலை மிதமானது. கோடைக் காலத்தில் நல்ல பழவகைகள் விளைகின்றன. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 90 செ.மீ. மழை பெய்கிறது. இலிக்தன் இசுடைனின் பண்ணை வாழ் மக்கள் தோல்பொருள்கள், மட்பாண்டங்கள் போன்றவற்றைச் செய்வதுடன், சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து பருத்தி ஆடைகள், வெப்பம் கொடுக்கும் அடுக்களைக் கருவிகள், மருந்து மாத்திரைகள், நுண் கருவிகள் போன்றவற்றைச் செய்கிறார்கள். குடியானவர்கள் இறைச்சிக்கும் பாலுக்கும் உதவும் கால்நடைகளை மேட்டு நிலப்புற்றரைகளில் மேய்க்கிறார்கள். திராட்சை, மற்றும் ஏனைய பழவகைகள் ஆகியவற்றை மலைச் சரிவுகளில் பயிரிடுகிறார்கள் உணவுப் பயிர்கள், உருளைக்கிழங்கு, ஏனைய காய்கறிகள் ஆகியவற்றை இரைன் ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் விளைவிக்கிறார்கள். அயல்நாட்டு வணிகர்கள் இந்நாட்டில் தம் வாணிக மையங்களை அமைத்துக்கொண்டு வாணிகம் செய்கிறவர்களிடம் வரிவசூல் செய்து, அரசாங்கத்திற்குப் பொருள் சேர்க்கிறார்கள். இலிக்தன் இசுடைன் கி.பி. 1719–இல் புனித உரோமானியப் பேரரசின் பகுதியாயிற்று. ஆனால், நெப்போலியன் போனபார்ட்டு இப்பேரரசை அழித்து விட்டார். இந்நாடு கி.பி. 1806–இல் சுதந்திர நாடாகியது. செருமானியக் கூட்டாட்சியுடன் கி.பி. 1815–இல் இது சேர்ந்தது. இருப்பினும், இதன் தனித்தன்மை காக்கப்பட்டது. பின் கி.பி. 1866–இல் கூட்டாட்சி முறையும் கலைக்கப்பட்டது. இதற்குப் பின்னர், இந்நாடு கி.பி. 1868–இலிருந்து நடுநிலைக் கொள்கையை ஏற்றுப் படைபலம் இல்லாமலேயே இருந்து வருகிறது. ஆசுத்திரியா, அங்கேரி ஆகிய நாடுகளுடன் இந்நாட்டிற்குப் பொருளாதாரத் தொடர்புண்டு. முதல் போருக்குப்பின்னர், ஆசுத்திரியாவுடன் இருந்த தொடர்பை இந்நாடு துண்டித்துக் கொண்டது. பின்னர், 1924–இல் சுவிட்சர்லாந்துடன் உடன்பாட்டைச் செய்துகொண்டது.