உணவுப் பயிர்களில் நெல் மிகப் பழமையானது. பண்டைக் காலம் தொட்டு, இந்தியா, சீனா, இந்தோசீனா ஆகிய நாடுகளில் இது. பயிரிடப்பட்டு வந்துள்ளது. உலக மக்கள் பெரும் பகுதியினருக்கு இன்றியமையாத உணவுப் பொருளாக இது விளங்குகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் பொருள் அரிசியாகும். நெல், புல் குடும்பத்தைச் சேர்ந்த தானிய வகையாகும். இதில் ஏறத் தாழ நூறுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றுள் இரண்டு மட்டுமே பயிர் செய்யப் படுகின்றன. மற்றவை காட்டுப் புற்களாகவே இருந்து வருவன. நெற்பயிரின் தாவரவியல் பெயர் ஒரைசா சடைவா (Oriza sativa) என்பதாகும். ஒரைசா சடைவாவில் வளரிடம், பருமன், முதிரும் பருவம் முதலியவற்றைப் பொறுத்துப் பல வகைகள் உள்ளன. நெல்லின் தாயகத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூற இயலாதெனினும், இது இந்தியாவிலும், இந்தோசீனாவிலுமே முதன் முதலாகத் தோன்றியது எனலாம். வளரியல்பு. நெற்பயிர் ஏறக் குறைய 1–2 மீ. உயரம் வளரும். முதலில் ஒரே ஒரு கிளை மட்டுமே தோன்றும். பிறகு, மேலும் பல கிளைகள் வெடித்துப் பரவும். ஒவ்வொரு கணுவும், குறைந்தது 5 அல்லது 6 இணைப்புகளைக் கொண்டது. ஒவ்வோர் இணைப்பிலும், ஓர் இலை உண்டாயிருக்கும். அந்த இலைகள் நீண்ட, கூரிய தட்டையான அமைப்புடையவை. நன்கு வளர்ந்து, கிளையாகப் பிரியும் இவை, ஒவ்வொன்றும் ஒரு தலைப் பகுதியைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தலையும் 50–300 நெற்கதிர்ப் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். அதிலிருந்து நெற்கதிர்கள் வளர்ச்சியடைகின்றன. அரிசியை உமி என்னும் கடின மேலுறை மூடிக் கொண்டிருக்கும். இதை அகற்றினால், பழுப்பு நிற அரிசி காணப் படும். பயிர் செய்முறை. நெல்லுக்கு மிகுந்த வெப்ப நிலையும், நீரும் தேவை. அது வளரும் போது, 70–110°C வெப்பம் வேண்டும். மேட்டுப் பகுதியில் 25–30 அங்குல மழையளவுள்ள இடத்தில் புன்செய் பயிராகவும், பள்ளத்தாக்கில், 200 அங்குலம் அல்லது அதற்கு மிகுதியான மழையுள்ள இடத்தில் நன்செய் பயிராகவும் விளையும். இது மணல் சேர்ந்த குறுமண், களி, ஆழங்குறைந்த சரளை ஆகிய மண்ணில் பயிர் செய்யப் படுகிறது. சில வகைகள் கோடையிலும், சில வகைகள் குளிர் காலத்திலும் பயிராகும். சில வகை 80 நாளிலும். சில வகை 200 நாளிலும் முதிரும். இவ்வாறு, பல வகை வேறுபாடுகள் கொண்ட ஏறக் குறைய எட்டாயிரம் நெல் வகைகள் காணப் படுகின்றன. தமிழ்நாட்டில் மிக இன்றியமையாப் பயிரான நெல்லைச் சாகுபடி செய்ய, முதலில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். இதற்குச் சேற்று நாற்றங்கால், புழுதி நாற்றங்கால் என்று இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. நாற்றுகள் பரந்த அளவில், சேற்று நாற்றங்காலில் தயார் செய்யப் படுகின்றன. நல்ல வடிகால் வசதியும், நீர் வளமும் உள்ள இடத்தில், நாற்றங்காலை அமைத்துக் கொள்ள வேண்டும். நெல் நாற்றங்காலில் மண்ணின் பதத்தைச் சீராக்கினால், நல்ல நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். நாற்றங்காலுக்கு நிலம் குளிர நீர் பாய்ச்சி, இரு முறை நன்கு உழுது உரமிட்டு, நாற்றங்காலின் மண்ணை மென்மையாக்க வேண்டும். இதற்கு, இயற்கை உரங்கள், பசுந்தழை, தொழு உரங்கள் இவற்றை மிகுதியாக இட வேண்டும். இவை மண்ணை மென்மையாக்குவதோடு, நாற்றுக்குத் தொடர்ந்து ஊட்டச் சத்துகளையும் கொடுக்கின்றன. நாற்றங்காலில் சென்ட்டிற்கு 2 கிலோ டைஅம்மோனியம் பாஸ்ஃபேட் இட வேண்டும். நாற்றங்காலில் அடியுரமாக இட்ட மணிச் சத்து, நாற்றுகளில் வேர்களின் எண்ணிக்கையையும் வளர்ச்சியையும் மிகுதிப் படுத்துகிறது. மண் இறுக்கமாக உள்ள களி மண் நிலத்தில், நாற்று பறிக்கும் போது, வேரும், வேர் தோன்றும் அடிப் பகுதிகளும் பாதிக்கப் படுகின்றன. நெற்பயிருக்கு நுண்சத்துகள் இடுவது இன்றியமையாததாகும். இச்சத்துகளை நாற்றங்காலுக்கு இட்டால், நடவு வயலில் உள்ள சத்துப் பற்றாக்குறையைச் சரி செய்யலாம். உவர், களர் நிலங்களிலும், நீர் மிகுதியாகத் தேங்கி நிற்கும் இடங்களிலும், துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை காணப் படுகிறது. இதனால், பயிரில் ஆங்காங்கே வளர்ச்சி குன்றி, இலைகளில் புள்ளிகள் தோன்றும். பயிர் கருகுவதால், விளைச்சல் பாதிக்கப் படுகிறது. துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க நாற்றங்காலுக்குத் துத்தநாக சல்ஃபேட் உப்பை, ஏக்கருக்கு 25 கி.கி. வீதம் நாற்றங்காலில் பரப்பிற்கு தக்கபடி இட வேண்டும். பின்னர் நாற்றங்காலில் 54 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட ஒரு செண்ட் பாத்தி அமைக்க வேண்டும். விதைகளைச் சீராக விதைக்கலாம். நாற்றங்காலில் விதைத்த விதையனைத்தும், பழுதில்லாமல் முளைப்பதற்கு, விதைகளை நீரில் நன்கு ஊற வைத்து, முளை கட்டும் வரை வைத்திருக்க வேண்டும். இவ்விதைகள் எளிதாகவும், விரைவாகவும் முளைக்கும். விதைத் தரம். விதையின் தரம் புறத் தூய்மையையும், பாரம்பரியத் தூய்மையையும் பொறுத்தது. விதை நன்கு முளைப்பதும், கல், மண், களைச் செடிகளின் விதை, மாற்று வகை விதை முதலியவற்றின் கலப்பில்லாமல், ஏற்ற ஈரத் தன்மை கொண்டிருப்பதும், புறத் தூய்மை ஆகும். பாரம்பரியத் தூய்மை என்பது, வகையின் குணங்கள் தாய்ப் பயிரில் இருந்து புதிதாக வெளி வரும் பயிருக்கு வருவது. விதைகளின் தரம் குறையாமலும், இனக் கலப்பு ஏற்படாதவாறும் கவனிக்க வேண்டும். விதையின் தரம் கெடாமல் இருக்க, மூன்று ஆண்டிற்கு ஒரு முறை நெல் விதையை மாற்ற வேண்டும். தரமான வித்துகளின் தயாரிப்பில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை பயிர் வல்லுநர் விதை, அடிப்படை விதை, சான்றிதழ் விதை என்பன. புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வகைகளின் விதைகளை மிகவும் கவனத்துடன் பயிர் செய்து, விதை உற்பத்தி செய்யலாம். ஆடுதுறை, கோயம்புத்தூர், அம்பாசமுத்திரம், திரூர், குப்பம் போன்ற இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளன. இந்நிலையங்களில் பயிர் வல்லுநரின் மேற்பார்வையில் விதை உற்பத்தி செய்யப் படுகிறது. கருவொட்டு மூலம் கிடைத்த புதிய வகைகளைப் பயிர் செய்து, அவற்றின் பண்புகள் மாறாதவாறு வல்லுநர்கள் பாதுகாக்கின்றனர். இத்தூய்மையான விதையே பயிர் வல்லுநர் விதை எனப் படும். பயிர் நிபுணர்கள் அளித்த விதையைப் பெருக்கிப் பெறப் படுவது அடிப்படை விதை எனப் படும். இவ்விதை உற்பத்தி கிள்ளிகுளம், சாக்கோட்டை, மேட்டூர் அணை முதலிய இடங்களில் நிறுவப் பெற்றுள்ள அரசு விதைப் பண்ணைகளில் செய்யப் படுகிறது. இவற்றில் ஆண்டிற்கு ஏறத்தாழ 250 மெட்ரிக் டன் விதை உற்பத்தி செய்யப் படுகிறது. அடிப்படை விதை தரமானதெனச் சான்றிதழ் கொடுக்கப் படுகிறது. இச்சான்றிதழ் பெற்ற விதை உழவர்களுக்கு வழங்கப் படுகிறது. ஆண்டிற்கு ஏறத் தாழ 9500 மெட்ரிக் டன் விதை வழங்கப் படுகிறது. உழவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்க வழி வகுப்பது விதைச் சட்டமாகும். இச்சட்டத்தின் படி, விதையின் தூய்மை முளைப்பு திறன், வகை முதலியவற்றை உண்மைக் குறிப்புச் சீட்டில் உற்பத்தியாளர் குறிப்பிட வேண்டும். இது அரசு அலுவலரால் ஆய்வு செய்யப் படும். தரமான நெல் விதையில் 14% க்கு மேல் ஈரத் தன்மை இருக்கக் கூடாது. தூய்மைப் பண்பு 97%க்கும் மேலும், முளைக்கும் தன்மை 70%க்கும் குறையாமலும், இருக்க வேண்டும். விதையில் நோய் பரவாதிருக்க வேண்டும். சிறந்த சேமிப்பு முறையின் வாயிலாக, அழிவின் வேகத்தைத் தடுத்து நிறுத்த இயலும். விதையின் ஈர அளவு ஒரே சீராக இருக்குமாறு அமைக்கச் செயற்கை முறையில் சரியான தட்ப வெப்ப நிலை அமையுமாறு செய்ய வேண்டும். காற்றின் ஈரப் பசை 45–50% எனவும், வெப்பம் 10°C எனவும் இருந்தால், விதைகள் மூன்று ஆண்டுகள் கூடக் கெடாமலிருக்கும். நடவு வயல் தயாரித்தல். நடவு வயல் என்பது நெற்பயிர், தன் வளர்ச்சிக் காலத்தில் பெரும் பகுதியைக் கழிக்க வேண்டிய இடமாகும். ஆதலின், உயர் விளைச்சல் பெற, நாற்றங்கால் நன்கு தயாரிக்கப் பட வேண்டும். நாற்றங்கால் தயார் செய்யும் போதே, நடவு வயல் பணியைத் தொடங்க வேண்டும். வயலில் இயற்கை உரங்களைப் போட்டு, 10 நாள்கள் வரை வயலில் நீர் தேங்கியிருக்கும் படிச் செய்து வந்தால், பயிர் வளர்ச்சிக் காலத்தில் வயலில் நீர் குறையாமல் இருந்து வரும். பிறகு, நிலத்தை நன்கு சமப் படுத்த வேண்டும். வரப்புகளையும் செம்மையாக அமைக்க வேண்டும். வாய்க்கால்களிலும், வரப்புகளிலும் புல், பூண்டு முளைக்கா வண்ணம், அவை செதுக்கப்பட்டு, அழகாக அமைக்கப் பட வேண்டும். வயலில் சீரிய முறையில் நீர்ப் பாசனம் செய்யப் பாசனக் கால்வாய், வடிகால் கால்வாய் இவற்றைத் தனித் தனியே அமைத்துக் கொள்வது நலம் பயக்கும். தழையுரம் அழுகும் போது, உண்டாகும் நச்சு வளிமங்கள் நெற்பயிரின் வேர்களைப் பாதித்துப் பயிர்களை அழித்து விடும். பசுந்தழையைப் போட்டு, 10 நாள்கள் கழித்து, வயலில் ஒரு வித மணம் வரும் போது, மட்டுமே நடவு போட வேண்டும். வரப்புகளிலுள்ள புல், பூண்டு, கோரை போன்றவற்றை முற்றிலும் அழித்து விட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வயலில் பயிர் செழித்து வளரும். நடவு முறை. சீராக வளர்ந்த நாற்றைக் குறித்த காலத்தில் நட வேண்டும். நெருக்கமாக வளர்ந்த நாற்றைச் சற்றுக் கூடுதலாக நட்டாலும், பாதிப்பு ஏற்படுவதில்லை. சம்பாப் பட்டத்தில் நெருக்கமாக விடப் பட்ட நாற்றின் வயது 70 நாள் வரை இருக்கலாம். பொன்னி நெல் வகைகளில், மிகுந்த விளைச்சல் பெற, இளம் நாற்றை நடாமல் 60 நாள் வயதுடைய நாற்றை நடுவதே சிறந்தது. நாற்று, பட்டையாக வளர்ந்து 4 அல்லது 5 தாள்களைக் கொண்டிருக்கும். இதைக் குறித்த காலத்தில் பறித்து நட்டு விட வேண்டும். சிறப்பாக நாற்றங்கால் தயார் செய்த இடத்தில் வாளிப்பான, செழிப்பான நாற்றுக் கிடைக்கும். இவற்றை வகைகளுக்கு ஏற்றவாறு தவறாமல் 25,35,45 நாள்களில் நட்டு விட வேண்டும். ஒரு குத்து நாற்று, பயிர் பூக்கும் பருவத்தையும், வளர்ச்சியையும் கட்டுப் படுத்துகிறது. நடப் படும் நாற்றுகளின் எண்ணிக்கை 1 ச. மீட்டரில் 400 கதிர்கள் கொடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பாப் பட்டத்தில் கூடுதலான நாற்றுகளையும், கார் பட்டத்தில் குறைவான நாற்றுகளையும் நட வேண்டும். குறுகிய கால நெல் வகைகளுக்கு (95–110 நாள்கள்) வரிசைக்கு வரிசை 15 செ.மீ. இடைவெளி தேவை. நீண்ட கால நெல் வகைகளுக்கு (150–180 நாள்கள்) வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளி வேண்டும். நெல் விதை விதைத்து, பின் நட்ட பயிரில், எட்டுப் பருவ நிலைகள் காணப் படுகின்றன. அவை: தூர் கட்டும் பருவம், துடிப்போடு தூர் கட்டும் பருவம், அதிக அளவு தூர் கட்டும் பருவம், பூங்கொத்து தோன்றும் பருவம், தொண்டைக் கதிர்ப் பருவம், கதிர் வெளி வரும் பருவம், கதிர் முற்றும் பருவம், அறுவடைப் பருவம் என்பன. முதலில் தூர் கட்டும் பருவம் தொடங்குகிறது. பிறகு, இத்தூர்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இதைத் துடிப்போடு தூர் கட்டும் பருவம் என்பர். தூர்கள் உயர் நிலையை அடைவது, அதிக அளவு தூர் கட்டும் பருவம் எனப் படும். உயர் நிலையிலிருந்து, தூர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து, ஒரு நிலையில் வலிமை பெற்றுக் காணப் படும். பயிரின் தண்டு தட்டையான நிலையிலிருந்து, உருண்டையான நிலையை அடைந்து வரும் இச்சமயத்தில், பயிரின் அடித் தண்டைப் பிரித்தால், உள்ளே இளங்கதிர் முளையைக் காணலாம். நெல் வளர்ச்சிப் பருவங்களில் இது முக்கியமான பருவமாகும். தண்டு உருண்ட சமயத்தில் தோன்றிய இளங்கதிர், சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து 2 மி.மீ. நீளத்தை அடையும். பின் வளர, வளர கதிரில் மலர்கள் உருப் பெறத் தொடங்கும். இக்கட்டத்தை தொண்டைக் கதிர்ப் பருவம் என்பர். தொண்டைக் கதிரிலிருந்து கதிர் வெளி வரும் பருவம் முடிந்து, தானியம் உருவாகத் தொடங்கும். இப்பருவத்தில், பால் பிடிக்கும் நிலை, மாவு தோன்றும் நிலை, மணிகள் முதிரும் நிலை போன்ற உட்பிரிவுகள் உள்ளன. களை எடுத்தல். நாற்றங்காலை நன்முறையில் தயாரிக்காத நிலையில், நெல் நாற்றுகளுடன், புல், பூண்டு முதலிய களைகள் வளருகின்றன. இதனால், நெற்பயிருக்குப் பேரழிவு உண்டாகிறது. நீர்ப் பாசனம் சீராக இருக்கும் இடத்தில் மிகாது. களைச் செடிகள் தம்முடைய பூப்பருவத்தையும், கதிர்ப் பருவத்தையும் அடைவதற்கு முன் அகற்றப் பட வேண்டும். உயர் விளைச்சல் பயிர் சாகுபடியாலும், பின் முறைச் சாகுபடியாலும் விளைச்சல் அதிகரிக்கலாம். விரைவான களையொழிப்பு மிக, மிக இன்றியமையாததாகிறது. தக்க சமயத்தில் களையொழிப்பு செய்யவில்லையென்றால், பயிர் வளர்ச்சியின்மையால், விளைச்சல் கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதற்கு வேதிக் களைக் கொல்லி பயன்படுத்தலாம். பயிரில் நடந்து, வல, இடக் கைகளால் பயிரை விலக்கி, அடிப் பகுதியைக் காலால் மிதித்துச் செல்லும் போது, பயிரின் நடுவில் ஒளி மிகுந்து, புகையான் பூச்சி மறைகிறது. இவ்வாறு செய்யும் போது, பயிரின் அடிப் பகுதி மருந்து தூவவும் எளிதாக உள்ளது. இதனால், தத்துப் பூச்சிகளை ஒழிக்கவும் முடியும். உரமிடல். மண்ணில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருப்பதற்கும், சாகுபடி செய்து வரும் பயிர்கள் வளம் பெற்று, உயர் விளைச்சல் அளிக்கவும் உரமிடல் வேண்டும். தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றைத் தவிர, கால்சியம், கந்தகம், நுண் சத்து ஆகியவையும் தேவைப் படுகின்றன. நெற்பயிர் வளர்ச்சியின் தொடக்க காலத்திலும், தூர் கட்டுதல் மிகுதியாகிக் கொண்டிருக்கும் சமயத்திலும், தூர்களின் -எண்ணிக்கையை உயர்த்த, தழைச் சத்து தேவைப் படுகிறது. இது பயிருக்குக் கரும் பச்சை நிறத்தை அளிக்கிறது. நெல் மணிகளில் புரதச் சத்தைப் பெருக்கி, அரிசியின் ஊட்டச் சத்தை அதிகரிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும், மணிகள் பிடிப்பதற்கும் பாஸ்ஃபரஸ் தேவைப் படுகிறது. இச்சத்து சேற்று நிலத்தில் பயிருக்கு எளிதாகக் கிடைக்கிறது. நெற்பயிரின் வேர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. நிலத்திலுள்ள உணவுச் சத்துகளைப் பயிர் சீராக, உள்ளேற்க வழி வகுக்கிறது. பயிரைச் சீராகக் கதிர்ப் பருவத்திற்குக் கொண்டு வருகிறது. நெல் மணிகளை ஒரு மிக்க முதிர்ச்சியடையச் செய்கிறது. சாம்பல் சத்து. இச்சத்து நெற்பயிருக்கு மிகுதியான அளவு தேவைப் படுகிறது. இது தூர் கட்டுதலை ஊக்குவிக்கிறது. மேலும், எடையையும் சீராக்குகிறது. தண்டுகளில் உள்ள திசுக்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால், தண்டுகள் வலிமை பெற்று, வறட்சி போன்றவற்றை தாங்கும் ஆற்றலைப் பெறுகின்றன . இச்சத்துக் குறைவால், பயிர் வளர்ச்சி குன்றிக் காணப் படும். இலைகளின் விளிம்புகள் காய்ந்து கருகி விடும் .நெற் பயிருக்கு இரண்டாந் தரச் சத்துக்களான சுண்ணாம்பு, கந்தகம் போன்றவையும் தேவைப் படுகின்றன. தாமிரம், மாங்கனீஸ் முதலிய நுண் சத்துக்களும், பயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன் படுகின்றன. பயிருக்கு ௭௬, உரம் ஆகியவை இன்றியமையாதவை. நெற்பயிர்ச் சாகுபடியில் செயற்கை உரங்கள் செய்ய முடியாத சில பணிகளை இயற்கை உரங்கள் செய்ய முடியும். தும்பைச் செடியையாவது, சணற் செடியையாவது பயிராக்கி, நாற்று விடு முன் உழுது விட்டால், இதுவே மிகவும் குறைந்த செலவில், நன்கு பயன் படும் உரமாகும் அல்லது பசுந்தழை எரு இடுவது நல்லது. இது மண்ணில் உயிரோட்டத்தை அதிகரிக்கவும், மண்ணின் தன்மை கெடாமல் இருக்கவும், மண் வளத்தைக் காக்கவும் பயன் படும். பசுந்தழை உரம் தானியத்திற்குச் சுவையையும், புரதச் சத்தையும், வைட்டமின் சத்துகளையும் கொடுக்கிறது. நெற்பயிருக்குச் செயற்கை வேதி உரங்களும் தேவை. பாஸ்ஃபேட், பொட்டாசியம், யூரியா ஆகியன வேதி உரங்களாகும். பாஸ்ஃபேட்டில் மணிச் சத்தும், பொட்டாசியத்தில் சாம்பல் சத்தும் அடங்கியுள்ளன. இவற்றை அடியுரமாகப் பயன் படுத்த வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 2 கி.கி.டை–அமோனியம் உரமிட வேண்டும். பொட்டாசியம் வேதி உரத்தையும் அடியுரமாகப் பயன் படுத்தலாம். 15 கி.கி. பொட்டாசியம் உரத்தை இரு முறை மேலுரமாக அளிக்கலாம். நாற்றங்காலுக்கு துத்தநாக சல்ஃபேட் மற்றும் நீரில் வளரக் கூடிய அசோலா என்னும் செடியை உரமிடலாம். மேலும், கந்தகம் பூசப் பட்ட யூரியா, பிண்ணாக்கு, கரு நீலப் பாசி, அசோலா கம்போஸ்ட் போன்ற உரங்களும் பயன் படுகின்றன. கரிம உரங்களையும், கரியற்ற உரங்களையும் தக்கவாறு இட்டால், நிலத்தின் வளம் கெடாமல் மிகுந்த விளைச்சலைப் பெறலாம். நெல்லின் உற்பத்திக்கான சில இன்றியமையாத் தேவைகளில், நீர் முதன்மை பெறுகிறது. பயிர் பூக்கத் தொடங்கியதிலிருந்து, தானியம் முதிரும் வரை நீர் இருக்க வேண்டும். 120–135 நாள்கள் வயதுடைய நெல் வகைகளுக்கு முறையான நீர்ப் பாசனம் மேற்கொள்ள வேண்டும். வயலில் நீர்த் தேக்கத்தை 5 செ.மீ. வைத்திருந்தால் போதுமானது. பாசனம் செய்ய வேண்டிய நீர், பாசனத்திற்குத் தகுதி வாய்ந்ததா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பூச்சிகளும் நோய்களும். நெல் உற்பத்தி பாதிக்கப் பட்டு வருவதற்குப் பூச்சி, பூசண நோய்கள் முதன்மைக் காரணங்களாகின்றன. குருத்துப் பூச்சி, இலைச் சுருட்டைப் புழு, இலைப் புழு ஆகியவை பயிரின் தோகை, இளந் தண்டு ஆகியவற்றை உட்கொண்டு விடும். தத்துப் பூச்சி தண்டுப் பகுதியிலுள்ள சாற்றை உறிஞ்சி அழிக்கும். நெல் குருத்துப் பூச்சி என்பது அந்துப் பூச்சி வகையைச் சேர்ந்ததாகும். இளம் மஞ்சள் நிறப் பஞ்சு போன்ற மயிரால் இது மூடப் பட்டிருக்கும். இது தண்டினுள் நுழைந்து, குருத்தின் கீழ்ப் பகுதியைத் துண்டிக்கிறது. இதை ஒழிக்கப் பாரத்தியான், எண்ட்ரின் போன்ற தெளிப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். மேலும் மாவுப் பூச்சி, இலைப் பேன், புகையான், நெல் கருவண்டு போன்றவற்றால், நெல்லுக்குப் பேரழிவு உண்டாகி வருகிறது. குலை நோய், இலைப் புள்ளி நோய், தண்டு அழுகல் நோய், தூர் அழுகல் நோய், இலைப் பட்டை அழுகல் நோய், வைரஸ் நோய் போன்றவையும் நெற்பயிரைத் தாக்குகின்றன. இவற்றை மருந்தைத் தூவியும், தெளித்தும் ஒழிக்கலாம். உழவர்கள், எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய நெல் வகைகளைப் பயிர் செய்து நோயைக் கட்டுப் படுத்துகின்றனர். நெல் வகைகள். நெல் ஆராய்ச்சி நிலையங்கள் ஏறத்தாழ 85 வகைகளைக் கண்டு பிடித்துள்ளன. அவற்றுள், சில நெல் வகைகள் சிறப்பான விளைச்சலைத் தருகின்றன. ஐ.ஆர்.8. இது தமிழ்நாட்டில் நல்ல வடிகால் வசதியுள்ள இடத்தில் சாகுபடி செய்ய ஏற்ற வகையாகும். இது மிக உயரமாக வளரும் பீட்டா எனும் நெல் வகைக்கும், மிகக் குள்ளமாக வளரும் டி.ஜி.ஆ.ஜென் என்னும் வகைக்கும் பிறந்ததாகும். 130 நாள் வயதுடைய இது, ஏக்கருக்கு 3 டன் வரை விளைச்சல் கொடுக்கக் கூடியது. பாசன வசதி இருக்கும் போது, கார், சொர்ண வாரிப் பட்டங்களிலும் சாகுபடி செய்யப் படுகிறது. ஐ.ஆர். 20. இது ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தது. ஐ.ஆர்.262–24–3 என்னும் வகையையும், தமிழ்நாட்டு ஒட்டுக் கிச்சிலி என்னும் டி.கே.எம் 6 வகையையும், ௧ரு ஒட்டுச் சேர்த்து உண்டாக்கப் பட்டது. தரமான அரிசியையும், மெல்லிய நெல்லையும் கொண்டுள்ள இதன் வயது 130 நாள்களாகும். இது பச்சரிசிக்கு ஏற்றது. அரிசி, அரைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் சமையலுக்கு ஏற்ற குணத்தை அடைகிறது. இது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. இது குருத்துப் பூச்சியின் தாக்குதலைத் தாங்குவதோடு, வறட்சியையும் தாங்குகிறது. செங்கற்பட்டு மாவட்டத்தில் புழுதிக்கால் சாகுபடிக்கு இவ்வகை ஏற்றது. பவானி. ஆந்திரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இது, பீட்டா என்னும் நெட்டையான வகையையும், பி.பி. ஐ. 76 என்றும் ஃபிலிப்பைன்ஸ் நெல்லையும் இனக் கலப்புச் செய்து, உருவாக்க ப்பட்டது. 130–135 நாள் வயதுடைய இவ்வகை நெல் ஏக்கருக்கு 2000 கி.கி. விளைச்சல் தருகிறது. நெல் அறுவடையின் போது மழை வந்தாலும், கதிர்களில் உள்ள நெல் மணிகள் முளைப்பதில்லை. பொன்னி. இது இந்திய வகைக்கும், ஜப்பான் வகைக்கும் உருவான நெல் வகையாகும். 140 நாள் வயதுடைய இது, குறைந்த உரமேற்று, நிறைந்த விளைச்சலைக் கொடுக்கும். இவ்வகை நெல் ஏக்கருக்கு ஏறத் தாழ 1500–1800 கி.கி. விளையும். தரமான அரிசியைத் தரும் இது, சமையலுக்கு மிகச் சிறந்தது. எனவே, இதன் சாகுபடி அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் முன் போகச் சம்பாப் பட்டத்திற்கு ஏற்றது. சற்று உயரமாக வளரக் கூடியது. நீர்ப் பிடிப்பு, வெள்ளம் இவற்றைத் தாங்க வல்லது. வெள்ளைப் பொன்னி, சிவப்புப் பொன்னி என்னும் இரு வகை இதில் உண்டு. கருணா. இது ஐ.ஆர் 8 வகையையும், ஆடுதுறை 27 வகையையும் இனக் கலப்புச் செய்து உருவாக்கப் பட்ட குள்ளமான நெல் வகையாகும். இது ஏறத்தாழ 180 நாள் வயதுடையது. ஏக்கருக்கு 1½ முதல் 2 டன் வரை விளைச்சல் தரும். இது பச்சரிசிக்கு ஏற்றது. அரிசியில் 10.58% புரதச் சத்து உள்ளது. கருணா வகை தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகுந்த அளவும் , மதுரை மாவட்டத்தில் குறைந்த அளவும் சாகுபடியாகிறது. இதன் வயது குறைவாக உள்ளமையால், வட கிழக்குப் பருவ மழை தொடங்கு முன், அறுவடைக்கு வந்து விடுகிறது. கண்ணகி. இது தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்ற படி நிலையான விளைச்சல் தந்து வரும் நெல் வகையாகும். இது ஐ.ஆர் 8 நெல்லுடன், ஒட்டுக் கிச்சிலி என்னும் டி.கே.எம்.6 வகையைக் கலப்புச் செய்து பெறப் பட்டதாகும். இந்த நெல் ஏக்கருக்கு 3 டன் வரை விளையும். இது கார், குறுவை, சொர்ண வாரிப் பட்டத்திற்கு ஏற்றது. வயல் முழுதும் உள்ள நெற்பயிர்கள் ஒருமிக்க பூப்பதால், கதிர் அனைத்தும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையக் கூடிய சிறப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். சமையலுக்கு மிகச் சிறந்த இதைக் குலை நோய் தாக்கா வண்ணம் காக்க வேண்டும். இந்நெல் இந்தியா முழுமையும் பரவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆடுதுறை 31. இது ஐ.ஆர். 8 நெல் வகையையும், வளர் வகை 340 நெல்லையும் கருவொட்டுச் சேர்த்து உண்டாக்கப் பட்டது. இதன் வயது 105 நாள்களாகும். இதில் பூச்சி நோய் பெரும்பாலும் தொற்றுவதில்லை. சமையலுக்கு மிகச் சிறந்த இது, கருணா, கரிகாலன் நெல் வகைகளை விட, மிகுந்த விளைச்சலைத் தரும். இவ்வகை நெல்லை 50% பயிர் பூக்கத் தொடங்கிய நாளிலிருந்து, 30 நாள்கள் தள்ளி அறுவடை செய்ய வேண்டும். சொர்ணவாரிக் கிச்சடி. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவைப் பட்டத்தில் மிகுதியாகப் பயிர் செய்யப் படுகிறது. ஐ.ஆர். 8 நெல் வகையையும், தடுக்கன் என்னும் வகையையும் கருவொட்டுச் சேர்த்து உருவாக்கப்பட்டது. ஏறத் தாழ, 103 நாள் வயதுடைய இது, இலைச் சுருட்டைப் புழுவால் எளிதாகத் தாக்கப் படும். இது ஏக்கருக்கு 2 டன் விளைச்சல் தரும். ரத்னா. இது தமிழ்நாட்டில் பல போகப் பயிர்ச் சாகுபடியில் உயர் விளைச்சலை அடைய உதவியது. ஒர் ஆண்டில் மூன்று முறை சாகுபடி செய்து, ஒரு ஹெக்டேரில் 22 டன் பெற்று, உலகச் சாதனையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இது காஞ்சி டி.என். 1 நெல்லுக்கும், கோ 29 நெல்லுக்கும் உருவானது. ஏறத் தாழ 90 நாள் வயதுடைய இது, நடுத்தர நெல் வகையைச் சேர்ந்தது. இதன் அரிசி மோட்டா வகையில் அடங்கும். இது மிகுந்த விளைவைத் தருவதால், பெரிதும் விரும்பிச் சாகுபடி செய்யப் படுகிறது. கோ 32. இது ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற ஒரு போக நன்செய் நெல் வகையாகும். இது திருச்செங்கோடு சம்பா என்றும் குறிப்பிடப் படுகிறது. இதன் அரிசி சன்ன வகையைச் சேர்ந்தது. மிகுந்த உரமேற்று, சாயாத தன்மை வாய்ந்தது. ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற நெல் வகை கோ. 36, ஐ.ஆர். 8 வகைக்கும், கோ. 32 வகைக்கும் பிறந்த நெல் வகையாகும். இது 125–140 நாள் வயதுடையது. இவ்வகை நெல்லை ஜுன், ஜுலைப் பட்டத்தில் மட்டும் ஒரு போக நன்செய் பயிர் செய்ய வேண்டும். இது சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் பயிர் செய்யப் படுகிறது. காஞ்சி, வைகை. காஞ்சி என்பது டி.என். 1 வகையையும், கோ. 29 வகையையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. வைகை என்னும் நெல் வகை டி.என். 1 வகைக்கும், கோ 29 வகைக்கும் பிறந்தது. வைகை 115–120 நாள் வயதுடையது. இது, இலைக் கருகல் நோயையும், கொள்ளை நோயையும் தாங்கும் திறன் கொண்டது. இதை எப்பருவத்திலும் சாகுபடி செய்யலாம். இவ்வகை நெல், செங்கற்பட்டு, தென் ஆர்க்காடு, கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம், மதுரை மாவட்டங்களில் பயிர் செய்யப் படுகிறது. காவேரி. இது செங்கற்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரிப் பட்டத்தில் சாகுபடி செய்யப் படுகிறது. இது டி.கே. எம். 6 வகைக்கும், டி.என். 1 வகைக்கும் பிறந்தது. 110–115 நாள் வயதுடைய இதன் அரிசி சன்ன வகையைச் சேர்ந்தது. பெண்ணை. இது நெல்லை மாவட்டத்தில் சாகுபடி செய்யப் படுகிறது. இது கார் சம்பா என்னும் ஏ.எஸ் டி. 1 வகையையும், டி.என். 1 வகையையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. இதன் வயது 110–115 நாள்களாகும். இது சன்ன நெல்லையும், சிவப்பு அரிசியையும் கொண்டுள்ளது. ஜெயா. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் விளைச்சல் தந்து கிருஷி பண்டிட் என்னும் விருதைப் பெற்றுத் தந்தது. இது டி.என். 1. நெல் வகையையம், டி. 141 நெல் வகையையும் ஒட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. 125 நாள் வயதுடைய இது, நல்ல விளைச்சல் அளிக்கும் திறன் பெற்றுள்ளது. நெல் மணிகளின் எடை மிகுதியாக உள்ளமையால், இதை வணிக முறையில் பயிர் செய்யலாம். அரிசி ஐ.ஆர். 8 போன்றது. இவ்வகை, குறுவைப் பட்டத்திற்கு ஏற்றது. மணிலா. இது, தென் ஆர்காடு மாவட்டம், விழுப்புரம் பகுதி முழுவதும் சாகுபடியாகிறது. இது 120 நாள் வயதுடையது. வைகாசி-ஆனிப் பட்டச் சாகுபடிக்கு ஏற்றது. அறுவடைத் தருணத்தில் மழை வந்தால், கதிரில் உள்ள நெல் மணிகள் முளைத்து விடும். ஆகையால், ஆடிப் பட்டத்தில் இதைச் சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது. இவ்வகை அரிசியின் விலை ஏனைய வகை அரிசியை விடக் குறைவாக உள்ளமையால், ஏழை மக்கள் மிகுதியாகப் பயன் படுத்துகின்றனர். இது சமையலுக்கு ஏற்ற அரிசியைக் கொண்டது. அமராவதி (கோ 39). இது இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில், குளத்துப் பாசனப் பகுதியில் கிடைக்கும் நீரைக் கொண்டு, குறுகிய காலப் பயிராகப் பயிர் செய்யப் படுகிறது. இதன் வயது 90 நாளாகும். இது ஹெக்டேருக்கு 4–5 டன் விளைச்சலைத் தரும். அன்னபூர்ணா, திருவேணி. அன்னபூர்ணா, டி.என். 1 வகையையும், பி.டி.பி. 10 வகையையும் கருவொட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. அன்னபூர்ணாவுக்கும், பி.டி.பி. 15 வகைக்கும் பிறந்தது, திருவேணி நெல் வகையாகும். இது, 110 நாள் வயதுடையது. திருவேணியின் தானியம், வைக்கோல் இவற்றின் விளைச்சல் மிகுதி. இவ்வகை நெல் புழுங்கலரிசித் தயாரிப்புக்குச் சிறந்தது. நெய்க் கிச்சடி, சன்னச் சொர்ணவாரி. இது 110–115 நாள் வயதுடையது. ஏறத் தாழ ஏக்கருக்கு 2½ டன் விளையும் இது, குழாய்ப் பாசனம் மிகுதியாக உள்ள வட மாவட்டங்களுக்கும், சொர்ணவாரிப் பட்டங்களுக்கும் ஏற்றது. இவ்வகை நெல்லின் அரிசி, ஆர்க்காடு கிச்சடி, பொன்னி, பவானி இவற்றின் அரிசியை விடச் சன்னமாக வழுவழுப்பாக உள்ளது. இதனால், இது நெய்க் கிச்சடி எனப் படுகிறது. தரமான அரிசியைக் கொடுப்பதுடன், உயர் விளைச்சல் தரும் சன்ன சொர்ணவாரி சி.ஆர். 10–114 வகையையும், சி.ஆர். 115 வகையையும் கருவொட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. இது 105–108 நாள் வயதுடையது. கிச்சடிச் சம்பா. இது தர்மபுரி மாவட்டச் சிறப்பு நெல் வகையாகும். ஏறத் தாழ 145–150 நாள் வயதுடைய இதைப் பூச்சி நோய் பெரும்பாலும் தாக்குவதில்லை. இவ்வகை நெல், ஏக்கருக்குச் சராசரியாக 15 மூட்டைகள் விளையும். இதை ஆனிப் பட்டத்தில் நாற்று விடுவர். இதை நடவு செய்யத் தனி நிலம் தேவையில்லை. நிலம் ஆயத்தமான நிலையில் நடலாம். நெல் மணிகள் மார்கழி–தையில் பனியின் போது, முதிர்ச்சியடையும். இதற்கு மிகுதியாக வேதி உரம் பயன் படுத்தத் தேவையில்லை. இதன் நாற்றைப் பருவத்தில் நட்டால், மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும். இவ்வகை நெல்லை அரைக்கும் போது, அரிசி உடையாத காரணத்தால், ப்படியே பச்சரிசி தயார் செய்யலாம். மேலும் கிச்சடி அரிசி சமையலுக்கு மிகவும் சிறந்தது. சமைக்கும் போது, குழையாதாகையால் இது, மிகவும் சுவையாக இருக்கும். ராஜராஜன். இது தமிழ்நாட்டில் மொத்த உணவுத் தானிய உற்பத்தியைப் பெரிதும் உயர்த்தக் கூடிய புதிய நெல் வகையாகும். இது ஐ.ஆர். 8 நெல்லுடன், கோ. 25 வகையை ஒட்டு முறையில் சேர்த்து உருவாக்கப் பட்டது. 170 நாள் வயதுடைய இது, ஏக்கருக்கு 2½ டன் விளைச்சல் அளிக்கும். நாற்றங்காலில், நாற்றுக்கு அதிக வயதாகி நட்டாலும், விளைச்சல் பாதிக்கப் படுவதில்லை. இதன் அரிசி சன்ன வகையைச் சேர்ந்தது. சிறப்பு நெல் வகைகள் பாஸ்மதி. இது ஆடிப் பட்டத்திற்கு மட்டும் ஏற்றது. 135–150 நாள் வயதுடையது. இதை 8 மாதம் வைத்திருந்து, அரைவை செய்தால், அரிசி குழையாமல் இருக்கும். இதன் புது நெல் அரிசி சமைக்கும் போது, குழைந்து விடும், அரிசி சமையல் செய்யும் போது, நறுமணத்துடன் மென்மையாக இருக்கும். ராஸ்காடம். இது மத்தியப் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப் பட்டது. இதன் வயது 150 நாளாகும். இது ஆடிப் பட்டத்திற்கு மட்டும் ஏற்ற நறுமணம் தரும் வகை. புட்டு அரிசி. இதில் வெள்ளைப் புட்டு, கறுப்புப் புட்டு, கருஞ் சிவப்புப் புட்டு என்னும் மூன்று வகையுள்ளது. இவற்றின் வயது 150 நாள்களாகும். சீரகச் சம்பா. இது கம்பன் எனப் படுகிறது. இது சம்பாப் பட்டத்திற்கு மட்டும் ஏற்றது. இதில் நறுமணம் தரும் வகையுள்ளது. சபர்மதி. இது நறுமணம் தரும் ஓர் உயர் விளைச்சல் நெல் வகையாகும். 125 நாள் வயதுடையது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடிக்குச் சிறந்தது. ஆழ் நீர் நிலங்களுக்கு ஏற்ற நெல் வகைகள். கடற்கரைப் பகுதிகளில் ஆழ் நிலங்கள் கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளமையால், வடிகால் வசதி இருப்பதில்லை. செப்டம்பர் மாதம் முதல் நீர்த் தேக்கம் அதிகரிக்கும். இந்நிலங்களில், வாடல்–சம்பா, முழு முழுங்கி, களிங்ஞன் பூதலா எஸ்.எல்.ஓ.13, குள்ளக் கார் ஆகியன சாகுபடி செய்யப் படுகின்றன. இவ்வகை அரிசி சிவப்பாக உள்ளது. புழுங்கல் அரிசிக்கு இது ஏற்றது. களர் நில நெல் வகை. இது பேராவூரணி 1 எனப் படுகிறது. 145 நாள் வயதுடையது. சில களர் நிலங்களில், ஐ.ஆர். 20 நன்றாக வளர்கிறது. உப்பு நிலப் பயிர். மேற்குக் கடற்கரையில் ஆறுகள் கடலில் சேருமிடத்தில், உப்பு நீர் எதிர்த்து வருவதால், அங்குள்ள நீரும், உப்புத் தன்மை கொண்டுள்ளது. மார்ச்சுத் திங்களில், மண்ணைக் குவித்து வைத்து, ஜுன் திங்களில் பருவ மழை தொடங்கிய பின், சில குறிப்பிட்ட நெல் வகைகளை முளைக்க வைத்து விதைப்பர். நாற்று 15 அங்குல உயரம் வளர்ந்ததும், மண் குவியலைச் சிறு துண்டுகளாக வெட்டி விட்டு, அவற்றில் நாற்றுகளை நட்டு, அவை 9 அங்குலத் தொலைவில் இருக்கும் படிச் செய்து நீர் பாய்ச்சுவர். நெல் சாகுபடிப் பட்டங்கள். தட்ப வெப்ப நிலை, சூரியனின் கிரணங்கள் விழுவதைப் பொறுத்து, மாறு படுகிறது. இதையே பருவங்கள் என்பர். ஆடிப் பட்டம். அழுத்தம் மிகுந்துள்ள காற்று தென் பகுதியிலிருந்து விரைவாக வடக்கு நோக்கிச் செல்கிறது. புவியின் சுழற்சியினால், இது தென் மேற்குத் திசையிலிருந்து அடிக்கிறது. இதைத் தென் மேற்குப் பருவ காலம் என்பர். இப்பருவம் ஏறத் தாழ, வைகாசி மாதம் 15ஆம் நாளில் மேற்குக் கரையில் தொடங்குகிறது. இக்காற்று பரந்த இந்துப் பெருங்கடலின் மேல் தவழ்ந்து வருவதால், நீர் உட்கொண்ட மேகம் நிரம்பிய ஈரக் காற்றாக இருக்கிறது. இக்காற்று, மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கிப் பெரு மழையைக் கொடுக்கிறது. இம்மழை ஆடிப் பட்டத்தில் சம்பா நெல் சாகுபடியைத் தொடங்கி வைக்கிறது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகைப் பட்டம். ஆடிப் பட்டச் சூழ்நிலை, புரட்டாசி 15 ஆம் நாள் வரை நிலவும். பின்னர், வடக்கே நிலம் குளிர்ச்சி அடைவதால், காற்றின் அழுத்தம் மிகுந்து, தெற்கே வீசத் தொடங்குகிறது. இதை வட கிழக்குப் பருவம் என்பர். இக்காலம், தமிழ்நாட்டில் மார்கழி 15 ஆம் நாள் வரையில் நிலவும். இப்பருவக் காலத்தில், வங்கக் கடலில் உருவாகும் புயலாலும், காற்றாலும், மழை கரையோரப் பகுதிகளில் மிகுந்து காணப் படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அப்போது மழையும் மிகுதியாகக் காணப் படும். தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பயிரும், தாளடிப் பயிரும் திருநெல்வேலி மாவட்டத்தில், பிஷாணப் பயிரும் பயன் அடைவது வட கிழக்குப் பருவ மழையாலேயாகும். காரீஃப், ராஃபிப் பட்டங்கள். இவை பொதுவாக மழைக் கால, குளிர் காலப் பயிர்ச் சாகுபடிப் பட்டங்களைக் குறிக்கின்றன. காரீஃப் பட்டம் என்பது மாரிக் காலத்தில், குறிப்பாகத் தென் மேற்குப் பருவ மழை உதவியுடன், சாகுபடி செய்யப் படும் பட்டம் என்றும், ராஃபிப் பட்டம் என்பது குளிர் காலத்தில் தொடங்கிக் கோடை வரை தொடரும் பட்டம் என்றும் கொள்ளலாம். சம்பாப் பட்டம். இது பொதுவாக, ஏறத் தாழ ஜுன் 21 முதல் டிசம்பர் 21 வரை நீடிக்கும் பட்டமாகும். இப்பட்டத்தைப் புயல், வெள்ளம், வறட்சி ஆகியனதாக்கும். பொதுவாகச் சம்பாப் பட்டத்தில், நீண்ட காலப் பயிரையே சாகுபடி செய்வது வழக்கம். இது ஏறத் தாழ 150–180 நாள் வயதுடையது. சம்பாப் பட்டத்தில் ஒளிக் காலமும், வெப்ப நிலையும் மாறு படுவதால், நெல் வகைகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆடிப் பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. கோ 36, பவானி, ஐ.ஆர். 20 ஆகியன இப்பட்டத்தில் நல்ல விளைச்சலைத் தருகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோடைப் பயிருக்கு அடுத்து வருவது புரட்டாசிப் பட்ட மாகும். இப்பட்டத்தில், ஈரோடு கோட்டத்தில் மிகுந்தளவு ஐ.ஆர். 20. பவானி ஆகியன சாகுபடி செய்யப் படுகின்றன. சாகுபடி முறைகள். இதில் மானாவாரிச் சாகுபடி, புழுதிக்கால் சாகுபடி, விதைக்கால் சாகுபடி, ஒட்டடம் சாகுபடி போன்ற முறைகள் உள்ளன. மானாவாரிச் சாகுபடி. நிலத்தை நன்கு சமமாக உழுது பண்படுத்தி, நெல் விதைகள் கையாலும், கலப்பையாலும் விதைக்கப் படுகின்றன. நிலத்தைச் சமப் படுத்தி, மண்ணை நன்றாக அழுத்தி விடுவதால், விதைகள் ஈரத்தை உறிஞ்சி, நன்கு முளைக்கின்றன. மழை பொழியும் போது, சிறிது யூரியா உரம் போடலாம். இவ்வகையில் நெல் விதைப்பு, மழை வளத்தைப் பொறுத்து, ஆடி மாத இறுதியில் அல்லது ஆவணித் தொடக்கத்தில் செய்யப் படுகிறது. பிசினி என்னும் சிவப்பு நெல் (டி.கே.எம் 1) விதைக்கப் பயன் படுகிறது. இது, 150 நாள் வயதுடையது; வறட்சியைத் தாங்கக் கூடியது. கோ. 31 நெல் வகையும், இம்முறை விதைப்புக்கு ஏற்றது. இது, 180 நாள் வயதுடையது. இதன் விளைச்சல், பருவ மழையைப் பொறுத்தே இருக்கும். சீராகச் சாகுபடி செய்த இடத்தில் ஏக்கருக்கு 6 மூட்டைகள் விளையும். தமிழ்நாட்டில் செங்கற்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரிச் சாகுபடி மிகுதியாகச் செய்யப் படுகிறது. புழுதிக் கால் சாகுபடி. நிலத்தை நன்கு உழுது புழுதியாக்கித் தொழு உரமிட்டு, நெல் விதைக்கப் படுகிறது. இச்சாகுபடி, வட கிழக்குப்பருவ மழை வந்த பின்பு, நீர் தேங்கும் நிலங்களில் செய்யப் படுகிறது. பயிர் வளர்ந்ததும், களையெடுக்கப் பட்டு, மேலுரமாக யூரியா அளிக்கப் படுகிறது. இச்சாகுபடிக்கு, டி.கே.எம். 8 வகை மிகவும் சிறந்தது. மேலும் பொன்னி, பவானி, ஐ.ஆர். 20 ஆகியவையும், நிறைந்த விளைச்சலை அளிக்கின்றன. புழுதிக்கால் சாகுபடிக்கு, உயர் விளைச்சல் தரும் நெல் வகைகள் பயன் படுகின்றன. ஏக்கருக்கு 10–15 மூட்டை விளைச்சல் பெறலாம். இதை ஆவணி இறுதி அல்லது புரட்டாசித் தொடக்கத்தில் செய்ய வேண்டும். இம்முறை செங்கற்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. விதைக்கால் சாகுபடி. முளை கட்டப் பட்ட வித்துகளை, நேரடியாக நிலத்தில் விதைப்புச் செய்வதை, விதைக்கால் சாகுபடி முறை என்பர். செங்கற்பட்டுப் பகுதிகளில், சம்பாப் பட்டம் முடியும் போது, கோ. 2 என்னும் நெல்லைச் சேற்றில் விதைப்பர். இம்முறை, விதைப்புக்கு இப்போது, குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் வகைகள் சிறந்தவை யாக உள்ளன. இம்முறையில், பயிரின் வயது குறைவதால், நீர்ப் பாசன வசதி குறையுமுன், பயிர் அறுவடைக்கு வந்து விடுகிறது. இலைச் சுருட்டுப் புழு போன்றவை, இப்பயிரைத் தாக்குவதில்லை. உழவர்களுக்குக் கார்த்திகைப் பட்ட விதைக்கால் சாகுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விதைக்கால் பயிரின் வயது, நடவுப் பயிரின் வயதை விட 10 நாள் குறையும். ஒட்டடம் சாகுபடி. இம்முறையில் 100 நாள் வயதுடைய குறுவை நெல் வகையுடன், 200 நாள் வயதுடைய நீண்ட கால நெல் வகையை, 3:1 விகிதத்தில் ஒன்றாகக் கலந்து நாற்று விட்டு, 25 நாளில் நடலாம். குறுவை செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப் படுகிறது. பின்னர், இரண்டையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுக்கப் பட்ட ஒட்டடம் மிகுதியாக வளர்ந்து, கார் கட்டி, கதிர் பிடித்திருக்கும். இது ஜனவரி–பிப்ரவரியில் அறுவடை செய்யப் படும். இம்முறை, செங்கற்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் மேற்கொள்ளப் படுகிறது. மறுதாம்புச் சாகுபடி. சம்பாப் பயிரை அறுவடை செய்தவுடன், நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். இதற்கு உரம், பூச்சி மருந்து ஆகியவை இட வேண்டும். மறுதாம்புப் பயிர் வளர்ந்து, உயர் விளைச்சல் அளிக்கும். இதைப் பூச்சியும், நோயும் பெரிதும் தாக்குவதால், இது புகழ் பெறவில்லை. அறுவடை. கதிர் முதிர்ந்ததும், தாள் பழுத்துச் சிறிதே பசுமையாயுள்ள வேளையில், அறுவடை செய்யப் படுகிறது. குறுகிய, நடுத்தர வயதுடைய நெல் வகைகளில், பூப்பூத்ததும் 27–33 நாள் கழித்து அறுவடை செய்வதும், நீண்ட கால வயதுடைய நெல் வகைகளில் பூப்பூத்ததும், 33–39 நாள் கழித்து, அறுவடை செய்வதும் சிறந்ததாகும். அறுத்த கதிர்கள் 2 நாள் வயலில் கிடந்து உலர்ந்த பின், எடுத்துச் சென்று அடித்து, நெல்மணிகளை எடுக்கின்றனர். சில பகுதிகளில் காளைகளைக் கொண்டு அடிப்பர். சில பகுதிகளில் தாள்களைத் தரையிலோ, பலகையிலோ அடிப்பர். அடித்து எடுத்த நெல் மணிகளைத் தூசி நீக்கித் தூய்மை செய்து, காயப் போட வேண்டும். நெல் மணிகளைத் தானியம் உலர்த்தும் எந்திரங்களைக் கொண்டும் உலர்த்தலாம். ஈரப் பசையற்ற குளிர்ச்சியான காற்றிலும், நெல் தானியங்களை உலர்த்தலாம். தானிய சேமிப்பு. அடித்துத் தூய்மையாக்கப்பட்ட பின், நெல்லை உலர்த்தி, மண், வைக்கோல், மூங்கில் பத்தை, கோளத் தட்டை முதலியவற்றால் ஆன குதிர்களில் சேமித்து வைப்பர். இதில் 10 சதவீதத்திற்கு மேல் ஈரம் இருக்கக் கூடாது. ஏனெனில், ஈரத்துடன் சேமித்தால், நெல்லில் பூச்சிகள் தோன்றும். புதிய கோணிப் பைகளில் சேமிக்கலாம். மூட்டைகளை அடுக்கும் போது, சுவரில் படாதவாறு 30 செ.மீ. இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். கோடைக் காலங்களில் சேமிப்பு அறைகளில் நல்ல காற்றோடம் இருக்கும்படிச் செய்ய வேண்டும். —அ. அரங்கநாதன் பூசண நோய் குலை நோய். பைரிக்குலேரியா ஓரைசே என்னும் பூசணத்தால் இந்நோய் உண்டாகிறது. இது நாற்றங்காலிலும், நட்ட பயிரிலும் காணப் படும். தொடக்கத்தில், நாற்றங்காலில் இந்நோயால் இலைகளில் சிறு, சிறு பூச்சிகள் தோன்றுகின்றன. நாளடைவில், இப்புள்ளிகள் பெரியவையாகக் கண் வடிவத்துடன் காணப் படுகின்றன. இப்புள்ளிகளின் ஓரங்கள் கருஞ்சிவப்பு நிறமாகவும், நடுப்பகுதி சாம்பல் நிறமாகவும் தென்படும். பின்னர், இப்புள்ளிகள் பெரியவையாகி ஒன்றோடொன்று சேர்ந்து, தோகை முழுவதும் பரவித் தோகையைக் கருகச் செய்கின்றன. நாற்றில் தோன்றும் இவ்வறிகுறிகளை, நட்ட பயிரிலும் காணலாம். நட்ட பயிர்களில், கணுக்கள் கருமை நிறம் அடையும். தாக்கப் பட்ட கணுக்கள் ஒடிந்து விடும். கதிர்கள் வெளி வரும் சமயத்தில், கதிர்களின் கழுத்துப் பகுதி கருமை நிறம் பெற்று ஒடிந்து விடும். நோய் கண்ட கதிர்களின் மணிகள், பால் பிடிக்கா. இந்நோயைக் கட்டுப் படுத்த, ஹெக்டேர் ஒன்றுக்கு எடிஃபென்பாஸ் 500 மி.லி, கார்பெண்டாசிம் 250 கி., மேன்கோசெப் 1000 கி. ஆகியவற்றில் ஒன்றைப் பயிரில் தெளிக்க வேண்டும். செம்புள்ளி நோய். இந்நோய்க்கு ஹெல்மிந்தோஸ் பொரியம் ஒரைசே என்னும் பூசணமே காரணமாகும். நோயுற்ற இலை, இலையுறை ஆகியவற்றின் மேல் செம்புள்ளிகள் வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ தோன்றும். நோய் கடுமையாகும் போது, இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, தாக்குதலுற்ற பகுதியைக் காய்ந்து விடச் செய்கின்றன. நெல் மணிகளின் மேல் கரும் பச்சை நிறத்தில், பூசண வளர்ச்சி காணப் படும். கதிரின் கழுத்துப் பகுதி தாக்கப் பட்டுப் பழுப்பு நிறத்தில் பூசண வளர்ச்சி காணப் படும். இந்நோயைக் கட்டுப் படுத்த 1.கி.கி. விதைக்கு 4 கி.கி. அல்லது 4 கி. கேப்டான் வீதம் விதை நேர்த்தி செய்த பின், நாற்றுப் பாவ வேண்டும். நடவுப் பயிரில், நோயின் அறிகுறிகள் தோன்றினால், ஹெக்டேர் ஒன்றுக்கு எடிஃபென்பாஸ் 500 மி.லி. மேன்கோசெப் 1000 கி. கேப்டபால் 600 கி. ஆகியவற்றில் ஒன்றைப் பயிரில் தெளித்துக் கட்டுப் படுத்தலாம். தூர் அழுகல். ஃப்யூசேரியம் மொனிலிபார்மே என்னும் பூசணத்தால், இந்நோய் தோன்றுகிறது. இதனால், நாற்றங்காலில் நாற்றுகள் நீண்டு, மெலிந்து, நலிந்து வெளிறியோ, மஞ்சளாகியோ காய்ந்து விடும். நட்ட பயிரில், செடி நெட்டையாக வளர்ந்து, மெலிந்து கணுக்களில் சல்லி வேர்களைப் பெற்றிருக்கும். இந்நோயைக் கட்டுப் படுத்த விதைக்கும் முன், 1 கி.கி. விதைக்கு 4 கி.கி. அல்லது கேப்டான் மருந்தை விதை நேர்த்திச் செய்து பின், நாற்றுப் பாவ வேண்டும். தண்டழுகல். இந்நோயை உண்டாக்கும் பூசணம் ஸ்கிளிரோசியம் ஒரைசே ஆகும். இந்நோயின் காரணமாக, நீர் மட்டத்தை ஒட்டிய இலையுறையில் நீண்ட கரும் புள்ளிகள் தோன்றும். இவை தண்டிற்கும் பரவித் தண்டை அழுகச் செய்யும். இலைகள் காய்ந்து தண்டு சாய்ந்து விடும். பிளந்த தண்டைக் கூர்ந்து நோக்கினால், கடுகு போன்ற கரு நிற இழை முடிச்சுகள் காணப் படும். இந்நோயைக் கட்டுப் படுத்த நடவு வயலில் நீரை வடித்து விட்டுக் கார்பெண்டாசிம் 0.1% மருந்தைச் செடிகளின் தூர்களில் ஊற்ற வேண்டும். இலையுறை அழுகல். கார்ட்டிசியம் சசாகி என்னும் பூசணம் இந்நோய்க் காரணியாகும். இந்நோயின் போது, நீர் மட்டத்தை ஒட்டிய இலையுறைப் பகுதியில், வட்டமான சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றிப் பரவி, இலையுறையை அழுகச் செய்யும். இதனைக் கட்டுப்படுத்த, நிலத்தில் தேங்கியிருக்கும் நீரை நன்றாக வடித்து விட்டுக் கார் பெண்டாசிம் 0.1%, பிராசிக்கால் 0.1% ஆகியவற்றில் ஒன்றைச் செடிகளின் தூர்களில் ஊற்ற வேண்டும். கதிர் உறை அழுகல். அக்ரோசிலின்டிரியேம் ஒரைசே அல்லது சாரகிளேடியம் ஒரைசே என்னும் பூசணத்தால், இந்நோய் உண்டாகிறது. கதிர் உறைகளில் பெரிய பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். நாளடைவில், தாக்குதலுற்ற பகுதிகள் அழுகிக் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட பயிரிலிருந்து, கதிர் வெளி வருவதில்லை. மேலும் நோய் கண்ட கதிர்களின் மணிகள் பால்பிடிக்கா. இந்நோயைக் கட்டுப் படுத்த, நடவு வயலில் ஹெக்டேர் ஒன்றுக்குக் கார்பெண்டாசிம் 250கி., எஃபென்பாஸ் 500 மி., கேப்டபால் 600 கி. ஆகியவற்றில் ஒன்றைக் கதிர் வெளி வருவதற்கு முன்னால், ஒரு முறையும் 15 நாள் இடைவெளியில் மற்றொரு முறையும் தெளிக்க வேண்டும். பாக்டீரிய நோய் பாக்டீரிய இலைக் கருகல். சாந்தோமோனாஸ் கேம்பெஸ்டிரிஸ் வகை, ஒரைசே என்னும் பாக்டீரியாவால் இந்நோய் உண்டாகிறது. இந்நோயால், இலை ஓரத்திலும், இலை நடு நரம்பு ஓரத்திலும், நீர்ப் புள்ளிகள் தோன்றி, நாளடைவில் நீண்ட கோடுகளாக மாறுகின்றன. அவை, வெண்மையாகவோ, மஞ்சளாகவோ காணப் படுகின்றன. இக்கோடுகளின் அகலம் விரிவடைவதுடன், அவற்றின் ஓரங்கள் வளைந்து, காய்ந்து விடுகின்றன. இந்நோய் மிகக் கடுமையாகப் பரவினால், பயிரின் வளர்ச்சி தடைப் பட்டுக் குட்டையாகி விடுகிறது. இந்நோயைக் கட்டுப் படுத்த நோய் தாக்கிய பயிரிலிருந்து, பெற்ற விதைகளைப் பயன் படுத்தக் கூடாது. நடவுப் பயிரில் நோய் காணப்பட்டால், ஹெக்டேர் ஒன்றுக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்ஃபேட், குளோரோ டெட்ராசைக்கிளின் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுப் பொருள் 300 கி. அளவுடன், காப்பர் ஆக்சி குளோரைடு 1250 கி. சேர்த்துப் பயிரில் தெளிக்கலாம். நச்சுயிரி நோய். துங்ரோ நோய் என்பது நச்சுயிரியால் ஏற்படுகிறது. பாதிக்கப் பட்ட பயிர் குட்டையாதல், தூர்களில் சிம்புகளின் எண்ணிக்கை குறைதல், ஆரஞ்சு நிறமும், மஞ்சள் நிறமும் கலந்த பழுப்பு நிறத்துடன் இலைகள் காணப் படல், இளம் மஞ்சள் இலைகளில் நரம்புகளுக்கிடையில், பச்சையம் குறைந்த வெளிர் நிறப் புள்ளிகள் அல்லது சிறு கோடுகள் காணப் படல்; தானியங்கள் சிறுத்துப் பழுப்பு நிறம் பெற்றிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். 8 செண்ட் நாற்றங்காலுக்கு நாற்றுப் பாவிய 10 நாளில் ஒரு முறையும், 10 நாள் இடைவெளியில் மறு முறையும், மோனோகுரோட்டோபாஸ் 40 மி.லி. அல்லது ஃபாஸ்ஃபாமிடான் 10 மி.லி. அல்லது ஃபென்தியான் 40 மி.லி. வீதம் தெளித்து, நோயைப் பரப்பும் பச்சைத் தத்துப் பூச்சிகளை அழிக்க வேண்டும். நட்ட பயிரில், நோயின் அறிகுறி இருந்தால், 15 நாளில் முதல் முறையும், 15 நாள் இடைவெளியில் மற்றொரு முறையும், ஹெக்டேர் ஒன்றுக்கு மோனோ குரோட்டோபாஸ் அல்லது ஃபாஸ்ஃபாமிடான் அல்லது ஃபென்தியான் 500 மி.லி. வீதம் தெளிக்க வேண்டும். மைக்கோ பிளாஸ்மா. இந்நோய் மைக்கோ பிளாஸ்மா போன்ற நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இந்நோயால் பயிர்கள் மிகவும் குட்டையாக இருக்கும். தூர்களில், குறுகலான கிளை தூர்கள் மிகுதியாகத் தோன்றி, நோய் காணாத பயிர்களை விடக் கூடுதலாகத் தூர் கட்டியிருக்கும். மேலும், பயிர் வளைந்திராமல், நேராக நிற்கும். இலைகள் மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப் படும். இலைகளில், துருப் பிடித்த அல்லது கருத்த புள்ளிகள் தோன்றும். பாதிக்கப் பட்ட செடிகள் காய்ந்து விடுவதில்லையாயினும், கதிர்கள் தோன்றுவதில்லை. தோன்றினாலும், பதர்களே மிகுதியாக இருக்கும். இதனைக் கட்டுப் படுத்த, துங்ரோ நோய்க்கான கட்டுப்பாட்டு முறைகளையே பின்பற்றலாம். துங்ரோ நோய். துங்ரோ நோய் ஏறத் தாழ 68% விளைச்சலைப் பாதிக்கிறது. இந்நோய், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார் ஆகிய மாநிலங்களில் மிகுதியாகப் பரவி வருகிறது. இது ஒரு நச்சுயிரி நோயாகும். பாதிக்கப் பட்ட செடியில், தூர்கள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகும். செடிகள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். செடியின் வயதிற்குத் தகுந்தாற் போல, வளர்ச்சிக் குறைவு வேறு படும். இளம் பயிர் தாக்கப் பட்டால், பயிர் மிகவும் குட்டையாகி விடும். நோயினால் பாதிக்கப் படாத பயிரில் உள்ள தோகைகள், ஒரே சீரான பச்சை நிறத்துடன் காணப் படுவது இயற்கையாகும். ஆனால்,இந்நோயினால் பாதிக்கப் பட்ட தோகையில் உள்ள பசுமை நிறம் மாற்றமடைந்து, நிற வேறுபாடு மிகுந்து காணப் படும். இத்தகைய நிற வேறுபாடுகள் இலைகளில், நரம்புகளுக்கிடையே உள்ள பகுதிகளில் தோன்றித் தேமல் போன்று, கரும் பச்சை நரம்புப் பகுதியும், நிற வேறுபாடு கொண்ட இடைவெளிப் பகுதியும் கலந்து காணப் படும். பசுமை நிறம் குறைந்த நிற வேறுபாடு கொண்ட பகுதிகள் வெளுத்து, நீண்ட வெளிர் கோடுகளாக நரம்புகளுக்கிடையே தோன்றும். சில நெல் வகைகளில் புதிதாகத் தோன்றும் தோகைகள், மஞ்சள் நிறத்துடன் பக்கவாட்டில் வெளிப் புறமாகச் சுருண்டு காணப் படும். நோய் கண்ட செடிகள் வளர்ச்சி குன்றிப் பூப்பதற்கு நீண்ட நாள்களாகும். பாதிக்கப் பட்ட செடிகளில் உண்டாகும் கதிர்கள் சிறுத்தும், தானியங்கள் வளர்ச்சியடையாமலும், பழுப்பு நிறத் திட்டுகளுடனும் காணப் படும். பொதுவாகக் கதிர்கள் சாவியாகி விடும். பரவுதல். நெஃபோடெட்டிக்ஸ் வைரசென்ஸ் (Nephotettix virescens). நெஃபோடெட்டிக்ஸ் நைக்ரோபிக்டெஸ் (N. nigropictes), நெப்போடெட்டிக்ஸ் மலாயானஸ் (N. malayanus), ரெசிலியா டார்சாலிஸ் (Recilia dorsalis) ஆகிய தத்துப் பூச்சிகள் (leaf hoppers) மூலம் இந்நோய் பரவுகிறது. வயலிலும், வரப்பிலும் வளரும் புற்களையும், இந்நோய் தாக்குகிறது. தத்துப் பூச்சிகள் 30 நிமிடங்களில், நோய் கண்ட செடிகளிலிருந்து நக்சுயிரிச் சாற்றைத் தொற்றிக் கொண்டு பரப்பும் இயல்புடையன. நச்சுயிரியைத் தொற்றிக் கொண்ட 5 நாள்களுக்குப் பின், நச்சுயிரியைப் பரப்பும் திறனை இப்பூச்சிகள் இழந்து விடுகின்றன. கட்டுப்பாடு. ஐ.ஆர்.36, ஐ.ஆர்.50, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் வகைகள் இந்நோய்க்கு எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன. புற்களை, வயலிலும், வரப்பிலும் வளரா வண்ணம் அழித்து விட வேண்டும். —கா. சிவப்பிரகாசம் துணை நூல். K.M. Smith, Plant Viruses, Methven and Co Ltd, London, 1960. ஆனைக் கொம்பன் ஈ. நெற்பயிரைப் பாதிக்கும் இப்பூச்சிக்குத் தண்டுத்தன் வெங்காயச் சருகு என்றும் பெயருண்டு. இப்பூச்சியின் அறிவியல் பெயர் ஒர்சியோலியா ஒரைசே (Orseolia oryzae) என்பதாகும். இப்பூச்சியின் தாக்குதலை இந்தியா உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணலாம். இந்தியாவில், முதன் முதலில் 1880ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் இது கண்டறியப் பட்டது. இப்போது, அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மேகாலயம், ஒரிஸ்ஸா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணலாம். தமிழகத்தில் இது, மதுரை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தென்னார்க்காடு, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் பரவலாகத் தென்படுகிறது. அழிவு. இப்பூச்சியினால் மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில், முதல் பருவ நெற்பயிருக்கு இழப்பு ஏற்படுகிறது. தஞ்சையில், சம்பாப் பருவத்தில் அழிவுண்டாகிறது. இப்பூச்சி குறிப்பாக, ஆடுதுறை 36, கோ. 37, ஐ.ஆர்.20, கோ. 47 போன்ற வகைகளில் மிகுந்து காணப் படுகிறது. இது ஆகஸ்டு–டிசம்பர் மாதங்களில் பேரிழப்பை உண்டாக்கும். குறிப்பாக, அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பெரும் எண்ணிக்கையில் ஈக்கள் காணப் படும். இப்பூச்சியின் புழுக்கள், வளர்கின்ற தூர்களைத் தாக்குகின்றன. புழுக்கள் தூர்களின் உட்பகுதிக்குள் சென்று, வளரும் பகுதியை உண்கின்றன. இதனால் தாக்கப்பட்ட தூர்களில் ஒருவித நமைச்சல் ஏற்பட்டு, வெண்மையாக மாறி, மேற்கொண்டு இலைகள் வளராமல் தடுத்து, வெங்காய இலை அல்லது யானைத் தந்தம் போல் மாறி இருக்கும். எனவே, இதற்கு ஆனைக் கொம்பன் என்னும் பெயர் வந்தது. தாக்கப்பட்ட தூர்களிலிருந்து, கதிர்கள் வெளி வருவதில்லை. ஒரு குத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட தூர்களில் ஆனைக் கொம்பன் நோயின் அறிகுறிகள் தோன்றலாம். இந்த ஈக்கு மாற்று ஊனூட்டியாக விளங்குபவை இஞ்சிப் புல், கம்பன் புல், காட்டு நெல், குதிரை வாலி, வரகு முதலியவையாகும். சாதாரணமாகப் பெருமழையுடன் கூடிய குளிரான சூழ்நிலையில் அழிவைக் காணலாம். பொதுவாக வெப்பநிலை 24.1–31.2°C மற்றும் காற்றின் ஈரப் பதம் 62–81% இருக்கும் போது, இதனால் ஏற்படும் இழப்பு மிகும். வாழ்க்கை முறை. ஆனைக் கொம்பன் ஈயில் 4 பருவங்கள் உண்டு. அவை முட்டை, புழு, கூட்டுப் புழு, முதிர்ந்த ஈ என்பவனவாகும். முட்டைப் பருவம். முட்டைகள் நீள்வட்ட வடிவிலும், வழவழப்பாகவும் 0.45X0.25 மி.மீ. அளவிலும் இருக்கும். பொதுவாக முட்டைகளைப் பயிரின் நுனியிலிருந்து மூன்றாம் இலையின் அடியில் காணலாம். முட்டைகள் தனித் தனியாக, இலைகளின் நரம்புகளுக்கு அருகிலோ, தண்டைச் சுற்றியுள்ள இலையுறைகளிலோ இடப் படுகின்றன. ஒரு தாய் ஈ 100–300 முட்டைகள் இடும் இயல்புடையது. பொதுவாக, முட்டைகளை இரவு 8–10 மணி வரை இடும். முட்டைப் பருவம் 7–10 நாள்களாகும். புழுப் பருவம். இதில் மூன்று நிலைகள்உண்டு. முதல் நிலைப் புழுக்கள் 0.5 மி.மீ. நீளமானவை. இப்புழு வயிற்றின் 12, 13ஆம் பிரிவுகளில் இரண்டு இணை மயிர்க் கால்களைப் பக்கத்திற்கு இரண்டாகப் பெற்றிருக்கும். இது 3 நாள்களில் முடிவுறும். இரண்டாம் நிலைப் புழு ஏறக் குறைய 1.7 மி.மீ. நீளமுடையது. வயிற்றில் 13ஆம் பிரிவில், இணை மயிர்க் கால்கள் பக்கத்திற்கு மூன்றாக அமைந்திருக்கும். மூன்றாம் நிலைப் புழு 3.5 மி.மீ. நீளம் வளரும். இதன் வாய்ப் பகுதி, சுவாசத் துளைகள் போன்றவை இளம் பழுப்பானவை. தூய வெண்மை நிறமான இப்புழு ஏறக் குறைய, 7 நாள்கள் நீடித்திருக்கும். கூட்டுப் புழுப் பருவம். கூட்டுப் புழு இளஞ்சிவப்பு நிறமானது. ஆண் கூட்டுப் புழு 4 மி.மீ. நீளத்திலும், பெண் கூட்டுப் புழுவை விடச் சற்று வெளிர் நிறமாகவும் இருக்கும். பெண் கூட்டுப் புழு 5 மி.மீ. நீளமுடையது. இதன் கண்கள் கரு நீலமானவை . தலை, இறக்கை, கால்கள் ஆகியன மஞ்சள் நிறமானவை. இரண்டு இணை மயிர்க் கால்கள் தலைப் பகுதியில் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலில் தெளிவான பிரிவுகளைக் காணலாம். கூட்டுப் புழுப் பருவம் 7–10 நாள்கள் நீடித்திருக்கும். முதிர்ந்த ஈ. இளஞ்சிவப்பு நிறமாயிருக்கும். ஆண் ஈ 3.5 மி.மீ. நீளமாயும் பெண் ஈ 4–9 மி.மீ. நீளமாயும் இருக்கும். பெண் ஈயின் இறக்கை சற்று நீளமானது. ஆண் ஈயின் வயிற்றுப் பகுதி சற்றுக் கறுப்பாயும், பெண் ஈயின் வயிற்றுப் பகுதி ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். கால்கள் மற்றும் உடல் முழுவதும் சிறிய மயிர்களால் மூடப் பட்டிருக்கும். இறக்கைகள் வெளிர் நிறமானவை. ஈயின் வாழ்நாள் ஏறக் குறைய இரண்டு நாள்களாகும். கட்டுப்பாட்டு முறைகள். வளர்ந்த ஈக்கள் குறைந்த வெளிச்சம் கொண்ட விளக்குகளுக்குக் கவரப் படுகின்றன. மற்றப் பூச்சிகளைப் போன்று, இதன் நடமாட்டத்தை வயலில் காண்பது எளிதன்று. வயலில் 10% தூர்கள் பாதிக்கப் பட்டுள்ளமையே இப்பூச்சிக்குப் பொருளாதார அழிவு நிலை யாகும். இதனைக் கட்டுப் படுத்துவதற்கு, பாஸ்ஃபமிடான் 250 மி.லி.,ஃபெந்தியான் 500 மி.லி. ,ஃபெனிட்ரோதியான் 625 மி.லி., எண்டோசல்ஃபான் 750 மி.லி. குவினால்ஃபான் /50 மி.லி., ஃபாசலோன் 1500 மி.லி. என ஒரு ஹெக்டேர் நிலத்திற்குப் பயன்படுத்தலாம். நெற்பயிரைக் காலத்திற்கு முன் நட்டால், இந்த ஈயின் தாக்குதல் குறையும். ஆனைக் கொம்பனின் தாக்குதல் ஆண்டு தோறும் காணப் படும் இடங்களில், எதிர்ப்புத் திறனுள்ள வகைகளைச் சாகுபடி செய்யலாம். இதற்கு எம்டியூ 3, ஐஇடி 6315, ஐஇடி 6350, ஏசிம் 18, ஏசிம் 19, கீரன், விஜயா, பல்குணா, விக்ரம், சக்தி, காகத்தியா, சுரேகா ஆகிய வகைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. தழைச் சத்தை மிகுதியாக இட்டால், இந்த ஈயின் தாக்குதலும் கூடும். எனவே, பரிந்துரைக்கப் படும் தழைச் சத்தைப் பிரித்து, இட வேண்டும். நடவுக்குப் பின், அசோஸ்பைரில்லத்தை இடுவதாலும், இதன் தாக்குதல் குறைகிறது. ஆனைக் கொம்பன் ஈயை, இயற்கையில் 12–க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் தாக்கி அழிக்கின்றன. அவற்றுள், பிளாட்டிகேஸ்டர் ஒரைசே (Platygaster oryzae) என்னும் குளவி 90% அழிவை ஏற்படுத்தும். தாய்க் குளவி, ஆனைக் கொம்பன் முட்டையினுள் தன் முட்டையை இட்டு அழிக்கிறது. இக்குளவி கதிர் வாங்கும் நிலையில், பேரிழப்பை உண்டாக்கும். பொதுவாக, இதன் தாக்குதலை அக்டோபர் 3ஆம் வாரம் முதல் ஜனவரி 2ஆம் வாரம் வரை காணலாம். இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. —கோ. அர்ச்சுனன்