இலக்சம்பர்க்கு நாட்டில் மழலையர் கல்வியுடன் பள்ளிக்கல்வி தொடங்குகிறது. மழலையர் கல்வியின் தலையாய நோக்கம், மாணவர்களுக்குக் கல்விப் பயிற்சியளித்துத் தொடக்கக் கல்விக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதேயாகும். நான்கு வயதில் கூட மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேரலாம். ஆனால், குழந்தைகள் தங்கள் ஐந்து, ஆறு வயதுகளில் மழலையர் பள்ளிகளில் சேர்ந்து பயிலுவது இந்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் குழந்தைகள் குறிப்பாகப் படிக்கவும் எழுதவும் கணக்கிடவும் பழகுகின்றனர். 7,500 குழந்தைகன் 1981–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, மழலையர் பள்ளிகளில் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இலக்சம்பர்க்கு (Luxembourg) மொழியே இப்பள்ளிகளில் கற்பித்தல் மொழியாகும். இந்நாட்டில் 541 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 28,000 மாணவர்கள் பயிலுகின்றனர். தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு ஆறு ஆண்டுகள். ஏழு வயது நிறைந்த குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேர்ந்து, பன்னிரண்டு வயதில் ஆறாம் வகுப்பினை முடிக்கின்றனர். செருமானிய மொழியை முதல் வகுப்பிலிருந்து குழந்தைகள் கற்கத் தொடங்குகின்றனர். இரண்டாம் வகுப்பு முடியும் தறுவாயில், குழந்தைகளுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிக் கல்வி அளவில் குழந்தைகள் இரு அயல் மொழிகளைக் கற்கின்றனர். தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:16 என்ற அடிப்படையில் உள்ளது. பிரெஞ்சு, செருமன், இலக்சம்பர்க்கு ஆகிய மூன்று மொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. பிரெஞ்சு மொழிதான் அலுவலக நிருவாக மொழியாகும். மிகுதியாகப் பேசப்படும் மொழி இலக்சம்பர்க்கு ஆகும். எனினும், தொடக்கப் பள்ளிகளில் மிகுதியாகக் கற்பிக்கப்படுவது செருமானிய மொழியாகும். தொடக்கப் பள்ளிக் கல்வி முடித்தவர்கள் பதின்மூன்று வயதில் இடைநிலைப் பள்ளிகளிலோ (Secondary School) தொழில்நுட்பப் பள்ளிகளிலோ சேர்ந்து பயிலுகின்றனர். இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் பொதுக் கல்வியினை ஏழாம் வகுப்பிலிருந்து பதின்மூன்றாம் வகுப்பு வரை (Grades 7 to 13) பயிலுகின்றனர். முதல் வகையில், இயந்திரவியல் (Mechanics), மின்நுட்பவியல் (Electro Technology), கட்டடப் பொறியியல் (Civil Engineering) போன்ற பாடங்களைத் தொழில் நுட்ப நிறுவனத்தில் (Institute of Technology) ஏழாம் வகுப்பிலிருந்து பதின்மூன்றாம் வகுப்பு வரை மாணவர்கள் பயிலுகின்றனர். இரண்டாம் வகைத் தொழில்நுட்பப் பள்ளிகளில் இதே போன்ற பாடங்களை மாணவர்கள் கற்றபோதிலும், இறுதி இரண்டாண்டுகள் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்காகப் (Trade) பயிற்சி பெறுகின்றனர். மூன்றாம் வகைத் தொழில்நுட்பப் பள்ளிகளில் ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ளன. இவ்வகைப் பள்ளிகளில் இறுதி மூன்றாண்டுகள் மட்டும் மாணவர்கள் வாழ்க்கைத் தொழிற்கல்வி (Vocational Education) பயிலுகின்றனர். இந்நாட்டில் கல்வியானது ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனத்தில் (Institute of Technology) பொறியாளர்களும் கல்வியியல் நிறுவனத்தில் (Pedagogical Institute) ஆசிரியர்களும் பயிற்சியளிக்கப்படுகின்றனர். இப்பயிற்சிகளும் பல்கலைக்கழகக் கல்வியும் இந்நாட்டு உயர்கல்வியுள் அடங்கும். இலக்சம்பர்க்கு நாடு அன்றி, பெல்சியம் (Belgium), பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து, ஆசுத்திரியா ஆகிய நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் மிகுதியான மாணவர்கள் சேர்ந்து பயிலுகின்றனர். வயது வந்தோர் கல்வி இக்கல்வித் திட்டம் இலக்சம்பர்க்கிலும் நடைபெற்று வருகிறது. மொழிகளைப் பயில வருவோர் எண்ணிக்கை இக்கல்வி வகுப்புகளில் சற்றுப் பெருகி வருகிறது. கல்வி அமைச்சகமும் தனியார் நிறுவனங்களும் இக்கல்விப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. வயது வந்தோர் கல்வி பயிலுவோர்களுள் குறைந்தது ஐந்து பேராவது இடைநிலைக் கல்வி, வாழ்க்கைத் தொழிற் கல்வி பயிலத் தயாராக இருப்பார்களேயானால், கல்வி அமைச்சகம் அவர்களுக்காகவும் வகுப்புகளை நடத்தி வருகிறது. 100 விழுக்காடு மக்களும் கல்வி அறிவு பெற்றுள்ள சிறப்பை இந்நாடு 1983–ஆம் ஆண்டுக் கணக்கின்படி பெறுகிறது. நிருவாகம் கல்வி அமைச்சகமே கல்விக்கான அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றி வருகிறது. மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் பாடத் திட்டம், கற்பித்தல் ஆகியவற்றுக்கு ஆய்வாளர் குழு (College of Inspectors) பொறுப்பேற்கிறது. இடைநிலைப் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் தேசியக் குழுக்கள் (National Commissions) கண்காணிக்கின்றன. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தேசியக் குழு பொறுப்பேற்கிறது. இக்குழுக்களில் திறமைமிக்க பேராசிரியர்கள் உள்ளனர். இப்பேராசிரியர்கள் பாடத்திட்டங்களை உருவாக்குதல், பாடநூல்களை அறுதியிடுதல் போன்ற பணிகளைச் செய்கின்றன்றனர். அரசின் வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கான நிதி பதினான்கு விழுக்காடாகும், இதனுன் ஆசிரியர்களின் ஊதியமும் அடங்கும். திறமைமிக்க மாணவர்கள் சிறப்பு உதவித்தொகைகள் பெறுகின்றனர். தேர்வு முறை இலக்சம்பர்க்குப் பள்ளிகளில் ஒவ்வொரு சுல்வியாண்டுக்கும் மூன்று பருவங்கள் உண்டு. ஒவ்வொரு மாணவர்க்கும் ஆசிரியர்கள் மதிப்பெண்கள் வழங்குகின்றனர். இம்மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் மேல் வகுப்பிற்கு அனுப்பப்படுகின்றனர். தொடக்கப்பள்ளி, இடைநிலைப் பள்ளி இறுதிகளில் மட்டும் கல்வி அமைச்சகம் நடத்தும் தேர்வுகளை மாணவர்கள் எழுதியாக வேண்டும். தொழிற்கல்விப் பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழோ (Certificate) பட்டயமோ (Diploma) வழங்கப்படுகிறது. ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி இலக்சம்பர்க்கில் உள்ள கற்பித்தல் கல்வி நிறுவனம் (Pedagogical Institute) மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இப்பயிற்சியின் கால அளவு 1982–ஆம் ஆண்டு வரை ஈராண்டுகள். இப்பொழுது இக்கால அளவு மூன்றாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இடைநிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் நாற்பதிலிருந்து ஐம்பது மாணவர்கள் மட்டிலுமே இந்நிறுவனத்தில் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இடைநிலைப்பள்ளி ஆசிரியராவதற்கு ஒருவர் நாலாண்டுக் கல்வியும், ஓராண்டு ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். கற்பித்தல் கல்வி நிறுவனத்தில் கல்வியாய்வு மேற்கொள்ளப்படுகிறது. தொடக்கப் பள்ளிக் கல்விச் சிக்கல்களில்தாம் மிகுதியான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. மொழியைச் கற்றுக் கொள்வதில் வெளிநாட்டுக் குழந்தைகள் அடையும் இடர்ப்பாடுகள் குறித்தும் தரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.