பன்னாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கும் எளிய நாடுகளுக்கும் கடன் அளிக்கின்றன. இவ்வகையில் ஓர் அரசு வெளிநாட்டில் உள்ள தனியார்கள், அரசுகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து பெறும் கடன்கள் அயல்நாட்டுக் கடன்களாகும் (Foreign Debts). ஆனால், இப்போது தனியாரிடமிருந்து கடன் பெறுவது மிகுதியாகக் குறைந்து விட்டது. மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்யவும் அயற் செலாவணிச் சிக்கலைத் தீர்க்கவும் வெளிநாட்டு அரசுகளிடமிருந்து ஒப்பத்தங்களின் அடிப்படையில் அரசு கடன் பெறுகிறது. பன்னாட்டு மறு அமைப்பு வளர்ச்சி வங்கி (International Bank for Reconstruction and Development), பன்னாட்டுப் பணவாக்க நிதி (International Monetary Fund), பன்னாட்டு வளர்ச்சிச் சங்கம் (International Development Association) போன்ற உலக நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கடன் வழங்குகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான எந்திரங்கள், மூலப் பொருள்கள், தொழில்நுட்பம் போன்றவற்றை இறக்குமதி செய்ய அயற் செலாவணி தேவைப்படும். அயல்நாட்டுக் கடன் அயற் செலாவணித் தேவையை நிறைவு செய்கிறது. ஆனால், இக்கடனே பின்னர்ப் பெரும் பளுவாவதால் பல சிக்கல்கள் தோன்றலாம். கடன் வழங்கும் நாட்டிலிருந்து மிகுதியான விலைக்குப் பொருள்களை இறக்குமதி செய்யும்படியும் நேரலாம். அரசியல் உள்நோக்கத்தோடு அயல்நாட்டுக் கடன் வழங்கப்பட- லாம். ஆகவே, கூடியவரை அயல் நாட்டுக் கடனைத் தவிர்ப்பதே சிறப்பாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பின்பு வளர்ச்சியடைந்த நாடுகள், பின்தங்கிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டன. பன்னாட்டு நிதி நிறுவனங்களாரிய நீண்டகாலக் கடன்களை வழங்கும் ‘உலக வங்கி’ (World Bank), குறுங்காலக் கடன்களை வழங்கும் பன்னாட்டுப் பணவாக்க நிதி, பன்னாட்டு வளர்ச்சிச் சங்கம், அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Export, Import Bank of U.S.A) போன்றவைகளிடமிருந்து பின்தங்கிய நாடுகள் அவற்றின் முன்னேற்றத் திட்டங்களுக்கான கடன்களைப் பெறுகின்றன. ஆனால், இவ்வகைப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றும் திட்டங்களுக்கென்றே கடனுதவி அளிக்கின்றன. இவை கட்டுப்பட்ட, கட்டுப்படாத கடன்கள் என்ற வகையில் அமைகின்றன. (காண்க: அயல்நாட்டு உதவி). அயல்நாட்டுக் கடன்கள் பொதுவாக நுகர்வு, முதலீடு ஆகியவற்றின் மீது செல்வாக்கைச் செலுத்துகின்றன. ஏற்றுமதியின் அளவை உடனடியாகப் பெருக்க முடியாததன் காரணமாக இக்கடன்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் கடன்கள் பல இறக்குமதிப் பொருள்களில் முதலீடு செய்யப்படுகின்றன. நுகர்பொருள்கள் இறக்குமதி செய்யப் பெற்றால் உள்நாட்டில் பண்டங்களின் பற்றாக்குறை நீங்குவதோடு, பணவீக்க நிலை இருந்தால் அதுவும் குறையும். பொதுவாக நாட்டின் பொருளாதாரக் குறைபாடுகள், அயல்நாட்டுச் செலுத்துநிலையில் கேடான விளைவுகளை ஏற்படுத்துவதால், அயல்நாட்டுக் கடன் பொருளாதாரக் குறைபாடுகளை முற்றிலும் களையும் எனக் கூற இயலாது. அயல்நாட்டுக் கடன்கள், போருக்காகவும் படைப்பலத்தை மிகுதிப்படுத்தவும் செலவிடும்பொழுது பொருளாதார வளர்ச்சி தோன்றுவதில்லை. ஆனால், குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு அயல்நாட்டு உதவியைப் பெறுவது வரவேற்கப்படும். வளர்ச்சியடைந்த நாடுகள் அளிக்கும் கடன்களிலும், கொடைகளிலும் ஆறில் ஐந்து பங்கு இருமுக ஒப்பந்தக் கடன்களாகப் (Bilateral Loans) பின் தங்கிய நாடுகளுக்குச் செல்கின்றன. அமெரிக்கா வெளிநாடுகளுக்குக் கடன் அளிப்பதில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. ‘ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு முன்னேற்ற நிறுவனம்’, ‘பொதுச் சட்டம் 480’ ‘ஏற்றுமதி இறக்குமதி வங்கி’ ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா கடன்களையும் கொடைகளையும் (Grants) கொடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு முன்னேற்ற நிறுவனம், கொடைகளையும், நீண்டகால முன்னேற்றக் கடன்களையும் தருகிறது. சமுதாய வளர்ச்சி, பயிர்ப் பாதுகாப்பு, கைவினைப் பயிற்சி, பால் பண்ணை முன்னேற்றம், உயர் கல்வி மலேரியா பெரியம்மை ஒழிப்பு ஆகியவற்றுக்கும் கொடை அளிக்கிறது. அமெரிக்க அரசு பொதுச் சட்டம் 480–இன் கீழ்ப் பல வளர்ச்சியடையா நாடுகளுக்கு வேளாண்மைப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ்க்கோதுமை, அரிசி, பருத்தி, பால் பவுடர், சோளம் போன்றவை ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஒரு பகுதி பணமின்றித் தரப்படுகிறது. மீதமுள்ள பகுதிக்கான பணத்தைத் தொடர்புடைய நாட்டின் செலாவணியில் பெற்றுக் கொள்கிறது. இவ்வகையில் இந்தியா உரூபாய் நாணயத்தை அளித்து இவற்றைப் பெறுகிறது. இத்தொகையில் 80.2 விழுக்காடு முன்னேற்றத் திட்டங்களுக்காக அமெரிக்க அரசால் செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகையில் 13.2 விழுக்காடு அமெரிக்கத் தூதரகங்களை நடத்தச் செலவிடப்படுகிறது. தனியார் துறைக்குக் கடனளிப்பதற்கென 6.6 விழுக்காடு ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு முன்னேற்ற நிறுவனத்திடம் தரப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதி வங்கி தனியார் நிறுவனங்களுக்கும். அரசுகளுக்கும் கடன் வசதிகளைச் செய்து தருகிறது. மூலதனப் பொருள்களையும், நுகர்பொருள்களையும் ஏற்றுமதி செய்ய 7 ஆண்டுகளில் திருப்பித் தரத்தக்க ஏற்றுமதிக் கடன்களையும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்குள் திருப்ப வேண்டிய குறிப்பிட்ட முன்னேற்ற முதலீட்டிற்கான உறுதியளிக்கப்பட்ட கடன்களையும் இவ்வங்கி வழங்குகிறது. இதைத் தவிர, அமெரிக்காவின் பிறிதொரு அமைப்பான ‘அமைதி அணிகள்’ வளர்ச்சியடையா நாடுகளின் ஊரகங்களுக்கு அமெரிக்க இளைஞர்களையும் பெண்களையும் அனுப்பி உழவர்களுக்குத் தொழில்நுட்ப உதவியை நாட்டுப்புற வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அளிக்கிறது. இக்கடன்கள் ஒரு விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு கொண்டுள்ளது வட்டியை மட்டுமே குறிப்பிட வேண்டிய ஒன்று. வளர்ச்சியடையா நாடுகளின் முன்னேற்றத்திற்காக இங்கிலாந்தும் பல வழிகளில் உதவுகிறது. கொழும்புத் திட்டத்திற்கு உதவியதோடு, இரண்டாம் உலகப் போரின்போது இந்தியா, பாகிசுத்தான் போன்ற காமன்வெல்த்து நாடுகள் சேமித்த இசுடெர்லிங்கு இருப்புகளைத் (Sterling Balances) திருப்பிக் தருகிறது. காமன் வெல்த்து நாடுகளுக்குக் குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கடன்களைத் தருகிறது. ஐந்து விழுக்காடு அல்லது ஆறு விழுக்காடு வட்டி கொண்ட இக்கடன்களை 25 ஆண்டுகளில் திருப்பித் தரலாம். ‘காமன்வெல்த்து முன்னேற்ற நிதி நிறுவனம்’, ‘குடியேற்ற நாடுகளின் முன்னேற்றக் கழகம்’ என்ற இங்கிலாந்தின் இரு நிதி நிறுவனங்களும் தனியார் துறைக்கும், பொதுத்துறைக்கும் கடன் வசதிகளைச் செய்து தருகின்றன. செருமனி நாட்டின் ‘மறு அமைப்பு வங்கி’ (The Bank for Reconstruction) என்ற நிதி நிறுவனம், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு மூலதனக் கடன்களோடு பெருமளவில் கொடைகளையும் வழங்கியுள்ளது. ஐந்து விழுக்காடு வட்டிவிகிதம் கொண்ட இக்கடன்கள் 20 ஆண்டுகளில் திருப்பித் தரப்படும் வகையில் அமைகின்றன. வளர்ச்சியடையாத நாடுகளின் முன்னேற்றத்திற்காகக் கனடா, கொடைகளுடன் நீண்டகாலக் கடன்களையும், மத்தியகாலக் கடன்களையும் அளித்து உதவுகிறது. மத்தியகாலக் கடன்கள் 6 விழுக்காடு வட்டியில் 10 முதல் 20 ஆண்டுகளில் திருப்பித் தாப்படவேண்டும். ‘சிறப்பு முன்னேற்றக் கடன் திட்டத்தின்’ மூலம் (Special Development Loan Programme) நீண்டகாலக் கடன்கள் 3/4 முதல் 1 விழுக்காடு வட்டி வீதத்தில் அளிக்கப்படுகின்றன. இக்கடன்கள் 40 முதல் 50 ஆண்டுகளில் திருப்பித் தரப்படவேண்டும். வளர்ச்சி குன்றிய நாடுகளின் பொதுத் துறைகளுக்குச் சோவியத்து நாடு உதவிசெய்து வருகிறது. மின்சாரத் திட்டங்கள், சரங்கத் தொழில், பிறவகைப் பெரிய தொழில்கள் ஆகியவற்றைப் பொதுத் துறையில் வளர்க்க இவ்வுதவி அளிக்கப்படுகிறது. எந்திரக் கருவிகள் தொழில் நுட்ப அறிவு ஆகியவை இதன் மூலம் கிடைக்கப்பெறும். இக்கடன்களுக்கு 2½ விழுக்காடு வட்டி செலுத்தப்படுவதுடன் 12 ஆண்டுகளில் கடன் திரும்பச் செலுத்தப்படவேண்டும். இந்தியாவில் இரும்பு, எஃகுத் தொழில் வளர்ச்சிக்குச் சோவியத்து நாடு பெருமளவில் உதவியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிலாய், பீகாரில் பொகாரோ ஆகிய இடங்களில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகளையும், துர்க்காபூரில் நிலக்கரி - சுரங்கத் தொழிலையும், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யும் தொழிலையும், அரித்துவாரில் (Hardwar) பெரிய அனல் மின்சாரத் திட்டத்தினையும் ஏற்படுத்த உதவியுள்ளது. குசராத்து மாநிலத்தில் கொயாலி (Koyali) என்னுமிடத்தில் எண்ணெய் தூய்மை செய்யும் ஆலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மருந்துத் தொழில்களும் நுண்கருவிகள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட நாடுகள் தவிர சீனா, பல்கேரியா, செக்கோசுலோவாகியா, போலந்து, அங்கேரி, உருமேனியா, யூகோசுலாவியா, கிழக்குச் செருமனி போன்ற நாடுகளும் வளர்ச்சியடையா நாடுகளுக்குக் கடனளித்து உதவுகின்றன. அவை அளிக்கின்ற கடன்களின் அளவும் மிகுந்து வருகிறது. இவை தவிர, சில மண்டல நிறுவனங்களும் வளர்ச்சியடையா நாடுகளின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. ஐக்கிய நாடுகளின் அமைப்புகளாகிய ‘இலத்தீன் அமெரிக்காவிற்கான பொருளாதாரக்குழு’, ‘ஆசிய தூரக் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதாரக் குழு’, ‘ஆப்பிரிக்காவிற்கான பொருளாதாரக் குழு’ ஆகியவை இதில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. இவற்றுடன் கொழும்புத் திட்டம் (Colombo Plan), அமெரிக்க முன்னேற்ற வங்கி (Inter–American Development Bank), ஐரோப்பியப் பொருளாதாரச் சமுதாயம் (European Economic Community), இந்திய உதவி மன்றம் (Aid–India Club), ஐரோப்பியக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Organisation for European Cooperation and Development) பன்னாட்டுப் பணவாக்க நிதி, பன்னாட்டு மறு அமைப்பு வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கி போன்ற அமைப்புகளும் அயல்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கின்றன. கொழும்புத் திட்டத்தினால் இந்தியா தொழில்நுட்ப அறிவையும் கருவிகளையும் பெற்றுத் தொழில் நுட்பத் துறையில் முன்னேறியுள்ளது. உலக வங்கியிடமிருந்து கடன் வசதிகளை இந்தியா மிகுதியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இக்கடன்கள் இரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, துறைமுக விரிவாக்கம், நிலக்கரிச் சுரங்க வளர்ச்சி ஆகியவற்றிற்குப் பயன்பட்டுள்ளன. இவ்வங்கியின் மூலம் குறிப்பிட்ட திட்டங்களுக்காகப் பெறப்படும் கடன் அத்திட்டங்களுக்காகவே செலவிடப்பட வேண்டும். இவ்வங்கி, ஒரு நாட்டின் தனியார், வேறொரு நாட்டில் முதலீடு செய்ய ஊக்கமளிக்கிறது. அன்றியும், வெளிநாட்டுச் செலாவணியில் சமநிலை ஏற்படவும் பன்னாட்டு வாணிகத்தில் சமன்பாடான வளர்ச்சி தோன்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation) மின்சாரக் கருவிகள், காரின் பாகங்கள், போக்குவரத்து, பஞ்சாலை, சிமெண்டு, காகிதம், உர உற்பத்தி போன்ற தொழில்களின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்கிறது. பன்னாட்டு வளர்ச்சிச் சங்கம் இந்திய மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கும் சமுதாய மாற்றத்திற்கும் 19 வகைக் கடன்களை, ஏறக்குறைய 675 மிலியன் தாலர் அளவிற்குக் கொடுத்துள்ளது. பன்னாட்டுப் பண நிதி, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கெனப் பெரிதும் உதவுகிறது. இது 1982–ஆம் ஆண்டில் 5 மிலியன் தாலர் கடனைத் தவணை முறையில் பெற்றுள்ளது. நிறைவான பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வந்தபின், மீதமுள்ள தவணைத் தொகையைப் பெறு- வதாகவும் உறுதியளித்துள்ளது. ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியா பெறும் மூலதனம் பெரிய அளவினதாகும். இந்தியாவின் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில்போது 647 கோடி உரூபாய் கடனைச் சோவியத்து நாடு அளித்தது. அதற்குப் பின்னர்ச் செக்கோசுலோவாகியா, போலந்து, யூகோசுலாவியா ஆகிய நாடுகள், 1981–82 வரையில் உரூ. 1423 கோடி கடன் உதவி அளித்துள்ளன. இக்கடனில் 6.1 கோடி உரூபாய் கொடையாகக் கொடுக்கப்பட்டது. இந்த நாடுகளுள் அதிக அளவு கடனளித்த நாடாகச் சோவியத்து உருசியா விளங்குகிறது. சோவியத்து நாட்டிலிருந்து இந்தியா கடனாகப் பெற்ற மூலதனம் உரூ. 1215.3 கோடி ஆகும். இந்நாடுகள் தரும் கடன்கள் 2.5 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வட்டியைக் கொண்டவை. குறுகிய காலத்தில் திருப்பித் தரப்பட வேண்டியவை. ஆயினும், இவற்றை உரூபாயாகவோ ஏற்றுமதிப் பொருள்களாகவோ திருப்பித் தரலாம். கடனளித்த நாடுகள் தங்களின் கடனளவிற்கு இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்வதால் இதன் சுமை மிகுதியாக உணரப்படுவதில்லை. உலக வங்கி, பன்னாட்டு வளர்ச்சிச் சங்கம், பன்னாட்டுப்பண நிதி, மற்றும் தனிப்பட்ட நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சப்பான் போன்ற நாடுகள் ஆகியவற்றிலிருந்து இந்தியா 1982–83 வரை பெற்றுள்ள கடன்கள், கொடைகள், பொருளுதவி ஆகியவை அயல்நாட்டு மொத்த உதலியில் 90% ஆகும். எண்ணெய் விலை உயரத் தொடங்கியதிலிருந்து (1972–73) வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் இன்னல்களைத் தீர்க்க, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (Organisation of Petroleum Exporting Countries) கடனுதவி அளித்து வருகிறது. இந்தியாவிற்கு 1983 வரை உறுதியளிக்கப்பட்ட கடனின் அளவு உரூ. 1710.4 கோடி ஆகும். இதில் 1981–82–வரை இந்தியா பயன்படுத்திய கடனின் அளவு உரூ. 1276.2 கோடி ஆகும். இதைத் தவிர, வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் (Multinational Organisations) இந்தியா பெறும் அயல் நாட்டுக் கடனில் பெரும் பங்கை முதலீடாகவும், தொழில்நுட்ப உதவியாகவும் கொடுத்து உதவி வருகின்றன. இந்தியாவுக்கு 1982–83–ஆம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட அயல்நாட்டு மொத்த உதவி உரூ. 34,811.5 கோடி ஆகும். இதில் இந்தியா பயன்படுத்திய அயல்நாட்டு உதவியின் அளவு உரூ. 27,055 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யாத நாடுகளின் நிதிப் பற்றாக்குறை அயல்நாட்டுக் கடன்களின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. அத்தகைய பற்றாக்குறையானது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் 1979–இல் 58 பிலியனாகவும் 1980-இல் 84 பிலியன் உரூபாயாகவும் கூடியுள்ளது. இந்நாடுகளின் அயல்நாட்டுக்கடன், பன்னாட்டுப் பண நிதி மூலமாக 1979-இல் 37 பிலியனிலிருந்து 61 பிலியன் உரூபாயாக 1980–இல் உயர்ந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் அயல்நாட்டுக் கடன் எல்லா வழிகளிலும் சேர்த்து, 1971–இல் 81 பில்லியன் உரூபாயாக இருந்தது. ஆனால், 1980-இல் 456 பிலியன் உரூபாயாக உயர்ந்தது. சராசரிக் கடன் பளு விகிதம் அதன் ஏற்றுமதி மூலம் வரும் வருமானத்தைச் சார்ந்து, 9 விழுக்காடிலிருந்து 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதுவே தனித்தனியாகப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது. ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் மிக வேகமாக உயர்ந்துள்ளது. 1950–51–இல் 32.03 கோடி உரூபாயாக இருந்த அயல்நாட்டுக் கடன், 1960–61–இல் 760.96 கோடி உரூபாயாகவும் 1973-74-இல் 7,560.86 கோடி உரூபாயாகவும் 1979–80–இல் 9,977.9 கோடி உரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அயல்நாட்டுக் கடன் இன்று இந்தியாவிற்குப் பெரும் சுமையாக கடனையும் அமைந்துள்ளது. அதற்குத் தர வேண்டிய வட்டியையும் கொடுப்பதென்பது சிக்கல் மிகுந்த ஒன்றாகும். அயல்நாட்டிலிருந்து ஈட்டப்படும் இந்தியச் செலாவணியில் பெரும் பகுதி அயல்நாட்டுக் கடனைத் தீர்க்கவே செலவாகிறது. ஏற்றுமதி வருவாயில் பெரும் பகுதி அயல்நாட்டுக் கடன் பணிகளுக்குச் செல்வதால் செலுத்து நிலை வலுவற்றதாகவும் உள்ளது. ஏற்றுமதியைக் கூட்டி அயற் செலாவணி வருவாயைப் பெருக்க இந்தியா முயல்கிறது. அயல் நாட்டுக் கடனைத் தீர்ப்பதில் இருவகைச் சிக்கல்கள் உள்ளன. அவை, கடன் பணத்தை அரசு ஏதாவது ஒரு வழியில் பெறுதலும், கடனை அயல் நாட்டுச் செலாவணியில் கொடுத்தலும் வேண்டும். அயல்நாட்டுச் செலாவணியை ஏற்றுமதியின் மூலமே பெறமுடியும். ஏற்றுமதியைப் பெருக்க வெளிநாட்டினர் விரும்பும் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்களை வளர்க்க வேண்டும். உள்நாட்டுத் தங்கத்தைச் சேர்த்துக் கொடுத்து அயல்நாட்டுக் கடனைத் தீர்க்கலாம். சில வேளைகளில் அயல்நாட்டுக் கடனை அயல்நாட்டிலிருந்து வாங்கப் பெறும் புதுக் கடன் வழியாகத் தீர்க்க இயலும். ஆனால், இது கடனைத் தீர்க்கும் பொறுப்பை எதிர் காலத்திற்கு மாற்றிடும் செயலாக இருக்குமே தவிர, கடனைத் தீர்ப்பதாகாது. கடன் பெற்ற நாடு தன் இயற்கை வளங்களைப் பெருக்கிப் பயன்படுத்திக் கிடைக்கிற தொகையால் கடனை அடைக்கலாம். இம்முறையால் நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்குக் கேடு விளையும் என்பது தெளிவு. அயல்நாட்டுக் கடனைத் திரும்பக் கொடுக்கும் பொழுது வாங்கும் சக்தி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வதால், அதனையொட்டிய சில சிக்கல்கள் எழக்கூடும். அயற் செலாவணியை மிகுதியாகப் பெறுவதன் மூலமே அயல்நாட்டுக் கடனைத் தீர்க்க இயலும். இதற்கு இறக்குமதியின் அளவைக் குறைத்து ஏற்றுமதியின் அளவைப் பெருக்க வேண்டும். அயல்நாட்டுக் கடன், நாட்டின் சேமிப்பு, வருமானச் சுழற்சி, வளர்ச்சி வீதம் ஆகியவற்றைப் பாதிக்கும். ஒரு நாடு குறிப்பிட்ட அளவுதான் உள்நாட்டுக் கடன், வரிவிதிப்பு ஆகிவற்றினால் பணம் திரட்ட முடிகிறது. குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாடு, நீண்ட காலப் பொருளாதார முன்னேற்றத்திற்காக அயல்நாட்டுக் கடனைப் பெறலாம். அயல்நாட்டுக் கடனையே நீண்டகாலத்திற்கு மூலதனமாகக் கொண்டு திட்டமிடுவது முன்னேற்றத்தைப் பாதிக்கும்.என்.இரா. துணை நூல்கள் Baner, B.T., “Two views on Aid to Developing Countries”, Occasional Paper No. 9, The Institute of Economic Affairs, London, 1966. Prasad, D.N., “External Resources in Economic Development of India”, Sterling Publisher, New Delhi, 1972. Khan M.S., “India's Economic Development and International Economic Relation”, Bombay, 1966.