சோவியத்து இலக்கியத்தினை உலகறியச் செய்த இலியோ தோல்சுதாய்க்குப் பிறகு உலகப் புகழ் பெற்றவர். இவர் கி.பி. 1882–ஆம் ஆண்டு சனவரி 10–ஆம் நாள் பிறந்தார். குழந்தைகளுக்கான நூல்களை எழுதி வந்த அன்னை, தன் மகன் அலெக்சியிடம் (Tolstoy, Alexei) இலக்கிய ஆர்வம் வளர்வதற்குப் பெரிதும் துணைபுரிந்தார். கி.பி. 1901–ஆம் ஆண்டில், அலெக்சி பீட்டர்சுபர்க்குத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார்; மாணவப் பருவத்திலேயே சார் ஆட்சிக்கு எதிராக இயங்கிய இயக்கங்களில் பங்கு கொண்டார்; சமூகக் குடியாட்சிக் கட்சியில் சேர்ந்தார். அலெக்சியின் கவிதைகளே முதன்முதலில் வெளி வந்தன. பின்னர்க் கதைகளும் புதினங்களும் எழுதினார். அலெக்சி தொல்சுதாய் சார் ஆட்சிக் காலத்தில் நில முதலாளியம் சிதைந்து வந்ததைச் சித்திரிக்கும் இந்த நூல்கள், இவருக்கு இயற்கையிடமும் மக்களிடமும் உள்ள பேரன்பைப் புலப்படுத்தின. கி.பி. 1917–இல் சமதருமப் புரட்சி வெற்றியடைந்த பிறகு, கி.பி. 1919–இல் நம் தாய்நாட்டிலிருந்து வெளியேறிப் பாரிசு நகரில் புகலடைந்தார். தாய்நாட்டைத் துறந்து வேற்று நாட்டில் எதிரியாக வாழ்வதை வெறுத்துக் கி.பி. 1921–இல் பெர்லினுக்குச் சென்றார். அடுத்த ஆண்டில் மாக்சிம் கோர்க்கி பெர்லின் வந்தபோது இருவரும் நண்பராயினர். அதே ஆண்டில் தாயகம் திரும்பினார். அரசும் உருசிய மக்களும் மகிழ்ந்தேற்றனர். மகா பீட்டர் (கி.பி. 1696–1725) ஆட்சிக் காலத்தினைப் பின்னணியாகக் கொண்டு ‘பேரரசர் பீட்டர்’ எனப் பெயரிய புதினத்தையும் நாடகத்தையும் எழுதினார். புரட்சிக் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினை மையமாகக் கொண்டு ‘அக்கினிப் பரீட்சை’ எனும் பெயரிய புதினத்தையும் வேறு பல புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மதிப்புரைகள் ஆகியவற்றையும் எழுதினார். தம் சோவியத்து நாட்டின் பல்வேறு இன மக்களின் நாட்டுப் பாடல்களையும் கதைகளையும் தொகுத்தார். தம் சிந்தனைகளும் கருத்துகளும் சொற்சித்திரங்களும் புதிய உலகின் எழுச்சிக்குரலாகச் செய்து விளங்கிய அலெக்சி கி.பி. 1945-இல் இறந்தார்.த.கோ.