புராணத் திருமலை நாதர் இயற்றிய ஒரு தல புராணம். இந்நூல் ‘இறைவாச நல்லூர்த் தல புராணம்’ என்னும் பெயரில் அச்சிடப் பெற்றுள்ளது. இறைவாச நல்லூர் என்னும் ஊர் தென்னார்க்காடு மாவட்ட உளுந்- தூர்ப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் மேற்கே 7 கல் தொலைவு சென்று இவ்வூரினை அடையலாம். இவ்வூர் முதலாம் இராசராசன் காலத்திற்கு முன்பிருந்தே, சிவத்தலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இறைவாச நல்லூர் என்னும் பெயர் இலவானாசூர் என்று மருவி, இக்காலத்தே எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூருக்கு இறையானறையூர், அரசவனம், மூங்கில் வனம், இறையாபுரி, நீரேற்றபுதி முதலிய பல வேறு பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இங்குள்ள திருக்கோயில் மாடக்கோயில் அமைப்புக் கொண்டது. இறைவன் திருப்பெயர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘அமர புயங்கர தேவர்’, ‘ஊர் பாகங் கொண்டருளிய மகாதேவர்’, ‘ஊர் பாகங் கொண்டருளிய நாயனார்’ என்று காணப்படுகிறது. இலக்கியங்களில் இறைவன் பெயர் சிகர சிகாமணி நாதர், அரசவனத் திறை, மங்கையொரு பாகன், சோதிலிங்க நாதன், அரசவனத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பிகையின் பெயர் பெரிய நாயகி. இவ்வூர்க்குத் தலபுராணம் பாடியவர் ‘புராணத் திருமலை நாதர்’ ஆவார். இவர் பெயரிலமைந்த ‘புராணம்’ என்னும் அடைமொழி, சிறப்பான பல புராணங்கள் பாடியமையால் அமைந்தது என்றும், புராணச் சொற்பொழிவு ஆற்றுவதில் வன்மை பெற்றிருந்தமையால் அமைந்தது என்றும் கூறுகின்றனர். இவரது காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் மெய்கண்ட சந்தான மரபினைச் சேர்ந்த திருவண்ணாமலைச் சத்தியஞான தரிசினிகள் என்பவரின் சீடராவார். சிதம்பரப் பாட்டியலை இயற்றிய பரஞ்சோதியார் இவருக்கு மகனாவார். இறைவாச நல்லூர்ப் புராணம், சென்னையிலுள்ள டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தாரால் 1984–ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் 374 விருத்தப்பாக்களால் ஆகியது. ‘வேகமா நெறி’ எனத் தொடங்கும் விநாயகர் வணக்கமும், ‘வேதன் நாவிலும்’ எனத் தொடங்கும் கலைமகள் வணக்கமும் ஆகிய இரண்டு கலிலிருத்தங்களும் நூலின் முதலிரு பாடல்களாக அமைந்துள்ளன. இவ்விருபாடல்களும், வேறு நூல்களுக்குரியனவாகும். இப்புராணம் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, காருண்டன் உற்பவச் சருக்கம், தெய்வீகராசன் உற்பவச் சருக்கம், காருண்டன் வதைச் சருக்கம், நீரேற்ற சருக்கம் ஆகிய எட்டுப் பிரிவுகள் கொண்டு அமைந்துள்ளது. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள இரு விருத்தங்கள் நூலின் வரலாறும் அமைப்பும் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்நூலாசிரியர் சைவசித்தாந்த சாத்திரப் பயிற்சி மிக்கவராதலின், நூலினுள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. சிவபெருமானைக் குறிப்பனவாக, ‘ஆருயிர்கள் முத்தியினை அடைந்திடுமாறு அருளிச்சை ஆயினான்’, ‘சாரும் உயிர் கருமத்தின் அளவறிந்து நிற்பான்’, ‘தக்க காலம் சேர வினை அருத்துவிக்கும் செயலான்’, ‘மலங்கள் தனைச் சிதைத்து நேசம் கூரவரு முத்தியினைக் கொடுப்பான்’ எனவரும் தொடர்கள் நூலாசிரியர்தம் சைவசித்தாந்த சாத்திரப் புலமையினையும் ஈடுபாட்டினையும் உணர்த்துவனவாக உள்ளன. பாடல்கள் எளிமையும் இனிமையும் கொண்டன. இப்புராணத்திற்கு ஒரு பழைய உரை உண்டு. அவ்வுரை திருமுதுகுன்றம் வீரசைவ சுப்பராய தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது. இச்செய்தி ‘விடலரிய உரை என்னும் நெய்த் தீபம் கவிஞர் சபை மேவ வைத்தான், திடமுது குன்றினின் மருவு சுப்புராயக் கவிஞன் செகத்தின் மீதே’ என நூலின் இறுதியிலமைந்துள்ள செய்யுட் பகுதியால் புலனாகிறது. இவ்வுரை வடமொழித் தொடர் மிக்குள்ளதாயினும் பாடற்பொருளை இனிது விளக்கப் பேருதவியாக அமைந்துள்ளது.