செருமானிய நிலவியலாரும் அறிவியலாரும் ஆவார். அலெக்சாந்தர் வான் அம்போல்டு (Humboldt) என்பது இவருடைய முழுப்பெயர். இவர் நிலவியலை இக்கால முறைப்படி நிலைநாட்ட உதவியவர்; செடி கொடிகளின் நிலவியலையும், தட்பவெப்ப இயலையும் முதன்முதலாக ஆய்வு நடத்தி வழிகாட்டியவர். தட்பவெப்பச் சமக் கோடுகளுக்கான முதல் வரைபடத்தை வரைந்தவரும் இவரே. இவர் அமெரிக்காவில் இசுபானியருக்குச் (Spanish) சொந்தமான பகுதிகளில் விரிவாகப் பயணம் செய்தார். இவருடைய பருப்பொருள் படைப்பைப் பற்றிய (Physical Universe) ஐந்து தொகுதி கொண்ட நூலுக்கு அண்டம் (Cosmos) என்பது பெயர். அந்நூலைக் கி.பி. 1845க்கும் 1862க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் எழுதினார். அம்போல்டு அம்போல்டு, பெர்லின் நகரில் கி.பி. 1769–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14–ஆம் நாள் பிறந்தார்; கோட்டின்சன் பல்கலைக் கழகத்தில் மண்ணியல், உயிரியல், அரசியல், கலை போன்ற பாடங்களைக் கற்றார்; சுரங்கங்களைப் பற்றியும், உவோகத் தொழில்களைப் பற்றியும் பிரிபர்குச் சுரங்கப் பள்ளியில் பயின்றார். இவர் கி.பி. 1792–இலிருந்து கி.பி. 1797 வரை பிரசியாவில் சுரங்க மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்தார். அப்பதவியை விட்டு விலகி இயற்கையை ஆராயத் தொடங்கினார். இவர் மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்குக் கி.பி. 1799 முதல் 1804 வரை ஆய்வுப் பயணம் செய்தார். அடுத்த இருபதாண்டுகளை இவர் பாரிசு மாநகரில் கழித்தார். அக்காலத்தில் பாரிசு நகரம் நிலவியல் கல்வியில் தலைசிறந்த இடமாக விளங்கியது. வாழ்வில் எஞ்சிய ஆண்டுகளுள் பெரும்பாலானவற்றை அம்போல்டு பெர்லினில் கழித்தார். அப்போது அண்டத்தின் அடிப்படை பற்றி இவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். இவர் உருசியாவின் சார் மன்னரின் சார்பாக, யூரல் மலைத் தொடரையும், நடு ஆசியாவையும் பார்வையிட்டு, அங்குக் காணப்படும் கனிம மூலங்களைப் பற்றி அறிக்கை விடுதற்பொருட்டுக் கி.பி. 1829–ஆம் ஆண்டில் சிறப்பான பயணமொன்றை மேற்கொண்டார். அம்போல்டு கி.பி. 1856–ஆம் ஆண்டில் காலமானார்.