நூல் புழு
nūl puḻu
சில நூல் புழுக்கள் விலங்கினங்களையும், பயிரினங்களையும் தாக்குகின்றன.
சில நூல் புழுக்கள் விலங்கினங்களையும், பயிரினங்களையும் தாக்குகின்றன. விலங்கினங்களைத் தாக்குபவை மிக நீளமாக இருக்கும். ஆனால், பயிரினங்களைத் தாக்கும் நூல் புழுக்கள் உருவில் மிக, மிகச் சிறியவையாயும், மெலிந்தும் காணப் படும். தாவர நூல் புழுக்களை உருப் பெருக்கியின் மூலமே காண இயலும்.
விலங்குகளைத் தாக்கும் நூல் புழுக்களில், குடல் உருண்டைபுழு. (Intestinal round worm), கொக்கிப் புழு (hook worm), யானைக் கால் நோய்ப் புழு (Elephantiasis), கினியாப் புழு, இழைப் புழு (thread work), டிரைக்கினாப் புழு, சாட்டைப் புழு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவை மனித இனத்தில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
குடல் உருண்டைப் புழு. ஆக்காரிஸ் லும்ரிகாய்டிஸ் (Ascaris lumbricoides). என்பது இதன் விலங்கினப் பெயராகும்.. இப்புழு உலகம் முழுவதும் பரவியுள்ளது. மனிதனின் குடலில், குறிப்பாகக் குழந்தைகளின் குடலில் இது ஒட்டுண்ணியாக வாழ்கிறது. பொதுவாக, ஆண் புழு குட்டையாகவும், அதன் பின் புறம் சற்றுக் கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். பெண் புழு நீளமாகவும், அதன் பின் புறம் நேராகவும் இருக்கும்.
இப்புழுக்களின் இனச் சேர்க்கை மனிதனின் குடலில் நிகழ்கிறது. இனச் சேர்க்கைக்குப் பின்பு, பெண் புழு நாளொன்றுக்கு 20,000 முட்டைகள் வீதம் 2,00,000 முட்டைகள் வரை இடும். இம்முட்டைக்குள் மலத்துடன் வெளி வருகின்றன. முட்டைக்குள்ளேயே கரு வளர்கிறது. இது முட்டைக்குள் சுருண்டு கிடக்கும். பின்பு, முட்டைகள் மலத்திலிருந்து ஈயின் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோ, உணவையோ, குடி நீரையோ உட்கொள்ளும் போது, முட்டை குடலுக்குள் செல்கிறது. அங்கே, முட்டையிலிருந்து இளம் புழு வெளி வருகிறது. இது குடலின் சுவரைத் துளைத்து, அங்குள்ள குருதிக் குழாயினுள் புகும். இங்கிருந்து, முறையே கல்லீரல், இதயம், நுரையீரல், சுவாசக் குழல், தொண்டை, அன்னக் குழல், வயிறு ஆகிய உறுப்புகளின் வழியாகச் சென்று இறுதியில் சிறு குடலை அடையும். இங்கு இளம் புழு முதிர்ந்து, பெரிய புழுவாகிறது. இளவுயிரி சுவாசக் குழாயின் வழியாகத் தொற்றித் தொண்டைக்குச் செல்லும் போது, தொண்டையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். இது கூட்டமாகச் சுவாசக் குழாயில் செல்வதால், சுவாசக் குழாய் அடைபடலாம். குடலில் புழுக்கள் கூட்டமாக இருந்தால், குடல் அடைபடவும் வாய்ப்புண்டு. இப்புழுத் தாக்குதலைத் தவிர்க்க முட்டை தொற்றியுள்ள உணவு வகைகளையும் குடிநீரையும் தவிர்க்க வேண்டும்.
கொக்கிப் புழு. கொக்கிப் புழுவின் விலங்கினப் பெயர் ஆங்கிலோஸ்டோமா டியோடினேல் (Anchylostoma dyodenale) என்பதாகும் . இப்புழுவை வட சீனா, இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணலாம். கொக்கிப் புழு மனிதச் சிறு குடலின் நடுப் பகுதியில் வாழ்கிறது. இங்கு, புழுக்களுக்குள் இனச் சேர்க்கை நிகழ்கிறது. இதன் பின், பெண் புழு முட்டையிடுகிறது. முட்டைகள் மலத்துடன் வெளி வருகின்றன. பின்பு, முட்டையிலிருந்து இளவுயிரி வெளி வருகிறது. இவ்விளம் புழு மண்ணிலுள்ள பொருள்களை உண்டு வளர்ந்து, இரண்டாம் வளர் புழு நிலையை அடையும். இந்நிலைக்கு, இழை வளர் புழு என்று பெயர். இப்புழு தொடர்ந்து வளரும் போது, இதன் தோல் உரியும். இவ்வாறு தோல் உரிந்த நிலையில், இழை வளர் புழு உண்ணுவதில்லை. இதற்கு உண்ணாத இழை வளர் புழு என்று பெயர். மண்ணில் இப்புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். இத்தகைய மண்ணில் ஒரு மனிதன் நடந்தால், தோலைத் துளைத்துக் கொண்டு, அவன் குருதிக் குழாயினுள் இழை வளர் புழு புகுந்து விடுகிறது. குருதிக் குழாயின் மூலம் நேராக இப்புழு நுரையீரலுக்குச் செல்லும். பின்பு, அங்கிருந்து முறையே சுவாசக் குழாய், தொண்டை, அன்னக் குழல், வயிறு ஆகிய உறுப்புகள் வழியாகச் சென்று, இறுதியில் சிறு குடலின் நடுப் பகுதிக்கு வந்து சேரும். பின்னர், அங்கு அது வளர்ந்து, பெரிய புழுவாகி விடும்.
பாதத்தில் கொக்கிப் புழுவால் துளைக்கப்பட்ட காயத்தினுள் பாக்டீரியா புகுந்து, பாத அரிப்பு (ground itch) என்னும் கால் நோயை ஏற்படுத்தும். குடலில் இருக்கும் போது, அதன் சுவரைக் கொக்கிப் புழு சேதப் படுத்தி, நஞ்சையும் சுரக்கிறது. இந்நஞ்சு குருதி உறைதலை நிறுத்தும் தன்மை கொண்டது. இதனால், குடல் புண் வழியாகப் பெரும் அளவில் குருதி வெளிப் படும். இவ்வாறு வெளிப்படுவதால், குருதிச் சோகை ஏற்படும். கொக்கிப் புழு பரவாமல் இருக்க, கால்களில் எப்போதும் செருப்பு அணிதல் வேண்டும்.
யானைக் கால் நோய்ப் புழு. யானைக் கால் நோய்ப் புழுவிற்கு ஃபிலேரியா பாங்கராஃப்ட்டி (Filaria bancrofti) என்னும் விலங்கியல் பெயருண்டு. இப்புழு சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் மிகப் பரவலாகக் காணப் படும். இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப் படும். தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சாவூரில் இப்புழுவின் தாக்குதல் மிகுதி. மனிதனுக்கு உண்டாகும் யானைக் கால் நோயைக் கியூலெக்ஸ் (culex) என்னும் கொசு பரப்புகிறது. இப்புழு தோலுக்கு அடியில் காணப் படும் நிண நீர்க் குழாய்களில் காணப் படுகிறது. இனச் சேர்க்கைக்குப் பின் உண்டாகும் குட்டிப் புழுக்களை, நுண்ணிழைப் புழுக்கள் என்பர். மிகச் சிறிய இவை, நிணநீர்க் குழாயை விட்டுத் தோலின் அடிப் பகுதியிலுள்ள குருதிக் குழாயை அடைகின்றன. இரவு நேரம் நெருங்கும் போது, இப்புழு தோலின் மேற்.பகுதியிலுள்ள குருதிக் குழாய்க்கு இடம் பெயர்கிறது. இது இரவு உணர்தன்மை எனப் படும். இச்சமயத்தில், கியூலெக்ஸ் கொசு ஒட்டுண்ணியால் பாதிக்கப் பட்டவரின் குருதியை உறிஞ்சினால், குருதியுடன் நுண்ணிழைப் புழுவையும் சேர்த்து உட்கொள்கிறது.
கொசுவின் குடலுக்குள் நுண்ணிழைப் புழு தன் தொய்வான உறையை விட்டு வெளி வருகிறது. பின்பு, குடற்சுவரைத் துளைத்துக் கொண்டு, கொசுவின் மார்புத் தசைகளில் தங்குகிறது. அங்கே, இன உறுப்பைத் தவிர, ஏனைய உறுப்புகள் யாவும் வளர்ச்சியுறுகின்றன. இதற்குப் பின், ஒரு வாரத்தில் இதன் வெளித் தோல் உரிந்து வளரும். இறுதியில், வளர்ச்சியுற்ற நுண்ணிழைப் புழு கொசுவின் வாய்ப் பகுதியில் வந்து தங்குகிறது. இச்சமயத்தில், கொசு வேறொருவரின் குருதியை உறிஞ்சினால், அவர் குருதியினுள் அதன் உமிழ் நீருடன் நுண்ணிழைப் புழுவும் செல்கிறது. பின்பு, நேராக நிண நீர்க் குழாயை அடைந்து பெரிய புழுவாக மாறிப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது.
கினியாப் புழு. <!---- கினிப் புழு என்பதே சரியான உச்சரிப்பு. See : https://en.wikipedia.org/wiki/Dracunculus_medinensis ---> கினியாப் புழுவிற்கு டிராகன்குலஸ் மெடினென்சிஸ் (Dracanculus medinensis), ஃபிலாரியா மெனென்சிஸ் (Filaria medinensis) என்னும் விலங்கினப் பெயர்கள் உண்டு. இப்புழுவை இந்தியா, ஆப்பிரிக்கா, பிஜித் தீவு, அரேபியா, மேற்கிந்தியத் தீவு,தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணலாம். பெண் புழு ஏறக் குறைய 50 செ.மீ. நீளமிருக்கும். ஆண் புழு ஏறக்குறைய 2 செ.மீ. நீளமிருக்கும். கினியாப் புழுவின் உடல் பால் வெள்ளை நிறமாக இருக்கும். இப்புழு கால், கணுக் கால், பாதம் ஆகிய உறுப்புகளில், தோலுக்குக் கீழுள்ள இணைத் திசுக்களில் (connective tissues) வாழ்கிறது. இங்கே, ஆண், பெண் புழுக்களுக்கிடையே இனச் சேர்க்கை நிகழ்கிறது. இனச் சேர்க்கைக்குப் பின், ஆண் புழு இறந்து விடுகிறது. கருவுற்ற பெண் புழு, தோலைத் துளைத்து ஒரு சிறிய வீக்கத்தைத் தோற்றுவிக்கும். இவ்வீக்கமுற்ற உறுப்பில் நீர் பட நேர்ந்தால், வீக்கம் உடையும். உடைந்த பகுதியின் வழியாகப் புழுவின் கருப்பை வெளிப் படும்.
கருப்பையிலிருந்து எண்ணற்ற வளர் புழுக்கள் நீருக்குள் வெளிப் படும். இவை அதே நீர் நிலையில் வாழ்கின்ற சைக்ளோப்ஸ் என்னும் கணுக் காலியின் உடலினுள் புகுந்து கொள்ளும். பின்பு, வளர் புழு சைக்ளோப்சின் உடற் குழிக்குச் சென்று, இரண்டு முறை தன் தோலை உரிக்கிறது. இந்நிலையில், சைக்ளோப்சைச் சேர்த்து, நீருடன் அருந்தினால், வளர் புழுவும் குடலுக்குள் செல்கிறது. பின்பு, அங்கிருந்து குருதிக் குழாயின் வழியாக நேராகத் தோலுக்கு அடியிலுள்ள இணைத் திசுக்களுக்குச் சென்று, பெரிய புழுவாக வளர்கிறது. இப்புழுவால் உண்டாகும் நோய் பரவாமலிருக்கச் சைக்ளோப்ஸ் கலந்த நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது நீரைக் கொதிக்க வைத்து, அருந்த வேண்டும். நீர் நிலைகளிலுள்ள சைக்ளோப்சைச் சுண்ணாம்பு தெளித்து அழிக்கலாம் அல்லது, சைக்ளோப்சைத் தின்று வாழும் மீன்களை நீர் நிலைகளில் விட்டு வளர்க்கலாம். உடலில் இருக்கும் போது, இப்புழு ஒவ்வொரு நாளும், தன் உடலைப் புண்ணின் வழியாக நீட்டி, வளர் புழுக்களை ஈனும். ஒவ்வொரு நாளும் வெளியே நீளுகின்ற இதன் உடல் பகுதியை மெதுவாக ஒரு குச்சியால் இதன் உடல் முழுவதும் வெளி வரும் வரை சுற்ற வேண்டும்.
இழைப் புழு. இப்புழுவிற்கு எண்டிரோலோபஸ் வேர்மிகுலாரிஸ் (Enterolobus vermicularis) என்றும், ஆக்சியூர்ஸ் வெர்மிகுலாரிஸ் (Oxyuirs vermicularis) என்றும், விலங்கினப் பெயர்கள் உண்டு. உலகெங்கும் காணப் படும் இழைப் புழு குழந்தைகளின் மலக் குடலில் வாழ்கிறது. ஆண் புழு ஏறக்குறைய 4 மி.மீ. நீளமிருக்கும். பெண் புழு இதைப் போல் இரண்டு மடங்கு நீளமிருக்கும். இனச் சேர்க்கைக்குப் பின், கருவுற்ற பெண் புழு குழந்தையின் மல வாய் அருகில் வந்து, மல வாயின் வெளிப்புறத் தோல்களின் மீது முட்டைகளை இடும். இச்சமயத்தில், மல வாயைச் சுற்றிலும் அரிப்பு ஏற்படும். அரிப்பை நீக்குவதற்காகக் குழந்தை தன் விரல் நகத்தால் சொரியும் போது, நகத்தினுள் முட்டைகள் சிக்கிக் கொள்ளும். கையைக் கழுவாமல், குழந்தை உணவு உட்கொண்டால், உணவுடன் நகத்திலுள்ள முட்டைகளும் குடலுக்குள் செல்லும். அங்கே முட்டையிலிருந்து வளர் புழுக்கள் வெளி வந்து பெரிய புழுக்களாகின்றன.
நோயுற்ற குழந்தைகளின் ஆடைகளில் முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆடையிலிருந்து முட்டைகள் பிறருடைய உணவுக்குச் செல்லலாம். இந்நோய் பிறருக்குப் பரவுதலும் உண்டு. இதனைத் தடுக்க, குழந்தைகளின் உடலைக் குறிப்பாக, விரல்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நகங்களை வளர விடாமல் அடிக்கடி வெட்டிக் கொண்டிருக்க வேண்டும். உண்பதற்கு முன், கையை நன்றாகக் கழுவ வேண்டும்.
தாவர நூற்புழுக்கள். தாவர நூற்புழுக்கள் மிகவும் சிறியவையாக 0.01–1.00 மி.மீ. நீளம் கொண்டிருக்கும். பொதுவாக, இப்புழுக்கள் நீண்டும், மெல்லியவாகவும், வளைந்தும் காணப்படும். வாய்ப் பகுதியில் ஊசி போன்ற அலகினைக் கொண்டிருக்கும். இதனால் தாவரத் திசுவறைகளைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். இவை மண்ணில் 4–25 மி.மீ. ஆழத்தில் இருக்கும். மண்ணின் மேற்பரப்பில் இவை காணப்படா. நூல் புழுக்கள் ஓர் இடத்திலிருந்து, ஏனைய இடங்களுக்கு நீர், பண்ணைக் கருவிகள் மூலமாகப் பரவும். ஒரு நாட்டிலிருந்து, ஏனைய நாடுகளுக்கு விதைப் பொருள்களால் பரவும்.
வாழ்க்கைச் சுழற்சி. நூற்புழுக்கள் நூற்றுக் கணக்கான முட்டைகளை மண்ணிலோ, தாவரத் திசுக்களிலோ, தனித் தனியாகவோ, கூட்டமாகவோ இடும். சில புழுக்கள் முட்டைகளைப் பசை போன்ற கசிவால் மூடி விடும். வேறு சில நூற்புழுக்கள் முட்டைகளைக் கடினமாக்கப் பட்ட உடலினுள் அடக்கி மடிந்து விடும். இவற்றினுள் பாதுகாக்கப் படும் முட்டைகள் எவ்விதக் கெடுதலுக்கும் உட்படாமல் இருக்கும். நூற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியில் 6 பருவங்கள் உள்ளன. அவை, முட்டைப் பருவம், 4 புழுப் பருவங்கள், வளர்ச்சிப் புழுப் பருவம் என்பன.
புழு, முதல் தோலுரிப்பை முட்டையிலேயே கழித்து விடும். இரண்டாம் பருவ புழுக்கள், முட்டை களிலிருந்து வெளி வந்து, மூன்று முறை தோலுரித்த பின், முழு வளர்ச்சியடையும். வாழ்க்கைப் பருவம் ஏறக் குறைய 30–40 நாள் இருக்கும். சில நூற்புழுக்கள் மண்ணிற்குள்ளும், இலை, தண்டு, விதை முதலியவற்றிலும், பல ஆண்டுகள் உறக்க நிலையில் இருந்து, பிறகு தகுந்த பருவ காலத்தில், பெருக்கமடையும். ஏனைய உயிரினங்களைப் போல், தாவர நூற் புழுக்களிலும், பெண் சேர்க்கையுண்டு. சில வகைகளில் ஆண் புழுக்கள் இல்லை. எனினும், அவை இனப் பெருக்கமடையும் தன்மை கொண்டவை. அனைத்து வகை நூற்புழுக்களும் முட்டையிடுகின்றன.
தாவர நூற்புழுத் தாக்கமும் அறிகுறியும். நூற்புழு தாக்கிய பயிர்கள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். மேலும், மஞ்சள் நிறமாகி, இலைகள் வாடி விடும். இளம் பயிர்கள் அழிந்து விடும். வேர் குட்டையாகும். வேர்களில் முடிச்சுகளையோ, கருகலையோ உண்டாக்கி, வேரின் சத்து, நீர் உறிஞ்சும் தன்மையைப் பாதிக்கும். உருளைக் கிழங்கில் உண்டாகும் பொன்னிற நூற்புழுவால் (golden nematode) கிழங்கு பளபளப்புத் தன்மையை இழந்து சொறி போன்ற தோற்றத்தைத் தரும். எலுமிச்சை நூற்புழுத் தாக்குதலால், மரத்தின் வளர்ச்சி குன்றுவதுடன், சிறு சிறு காய்களே உற்பத்தியாகின்றன.
வேர் நூற்புழுக்கள். வேர் நூற்புழுக்கள் (root nematodes) மண்ணில் தோன்றி, அருகிலுள்ள வேர்களைத் தாக்கி அழிக்கின்றன. தக்காளி, பப்பாளி, பருத்தி, கத்தரி, கரும்பு, வாழை, எலுமிச்சை, நெல், திராட்சை, புகையிலை போன்ற பயிர்களில், வேர் முடிச்சு, வேர்க் கருகல், வேர் அழுகல் முதலிய நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றால், செடிகளின் காய்ப்புத் திறன் குறைவதோடு, காய்களும் சிறியனவாக இருக்கும். இவை வேரின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவதோடு, வேரின் உணவு, நீர் ஆகியவற்றை உள்ளேற்கும் திறனையும் குறைத்து விடுகின்றன. வேர்ப் புழுக்களால் தாக்கப்பட்ட செடிகள், நாளடைவில் பழுத்துக் காய்ந்து அழிந்து விடுகின்றன. உருளைக் கிழங்கைத் தாக்கும் பொன்னிற நூற்புழு இவ்வகையைச் சேர்ந்தது. இதனால், வேரின் வளர்ச்சி குன்றி, கிழங்குகள் குறைந்த அளவிலும், சிறியனவாகவும், உருமாறியும் உண்டாகின்றன. நாளடைவில் செடிகள் பழுத்து, வாடி, வதங்கி, அழிந்து விடுகின்றன.
இலை நூற்புழுக்கள் (leaf nematodes). இவை பயிர்களின் இலைகளைத் தாக்கி, அழிக்கின்றன. தாக்கப்பட்ட இலைகள், வளர்ச்சி குன்றியும், வெளுத்தும் காணப் படும். இவை இலைகளிலுள்ள பச்சையத்தைத் தாக்குவதால், பயிரின் ஒளிச் சேர்க்கை தடைப் படுகிறது. நெல் இலைகளின் நுனி பழுத்துக் காய்ந்து, காணப் படும். தாக்கப் பட்ட இலைகள் உதிர்ந்து விடுகின்றன. கனகாம்பரச் செடியின் இலைகள் தாக்கப் படுவதால், அக்செடியின் பூக்குந் தன்மை குறைகிறது. இலைக் குருத்துகளும், மொட்டுகளும் பெருமளவில் பாதிக்கப் படுகின்றன. கோதுமை போன்ற பயிர்களிலும், இலைகள் அழிக்கப் படுகின்றன.
தண்டு நூற்புழுக்கள் (Stem nematodes). இவ்வகை நூற்புழுக்களால் தென்னை, பாக்கு போன்ற மர வகைகள் தாக்கப் பட்டுப் பேரழிவடைகின்றன. நூற்புழுக்களால் தாக்கப் பட்ட ஓட்ஸ் பயிர்களின் வளர்ச்சி குன்றி, தானிய மணி உற்பத்தியும் தடைப் படுகிறது.
மலர் மற்றும் தானிய நூற்புழுக்கள் (flower and grain nematodes). இவ்வகைப் புழுக்களால், கனகாம்பரச் செடிகள் தாக்கப் படுகின்றன. தாக்கப் பட்ட செடிகள் உருவில் சிறியனவாகியும், உரு, நிறம் மாறியும் இருக்கும். கோதுமையில், தானியங்கள் அழிக்கப் படுகின்றன. இலைகளின் வளர்ச்சிக்கேற்றவாறு, நூற்புழுக்களும் எடுத்துச் செல்லப் படுகின்றன. தானியங்களுக்குப் பதிலாக, ஆயிரக் கணக்கான நூற்புழுக்கள் அவற்றில் உற்பத்தியாகின்றன. நூற்புழுக்கள் அடங்கிய தானியங்கள் மிளகு உருவத்தில் கறுப்பாக இருக்கும். தாக்கப் பட்ட கோதுமையின் இலைகள் சுருட்டிக் கொண்டும், வளைந்தும் காணப் படும்.
தாவர நோய் நூற்புழுக்கள். வேரில் நூற்புழுக்கள் ஏற்படுத்தும் துளைகளின் மூலம், பாக்டீரியா, பூசணம், நச்சுயிரி போன்ற நோய் நுண்ணுயிரிகள் பரவி, நோய்களை மிக எளிதில் ஏற்படுத்துகின்றன. சில வகை நூற்புழுக்கள் இந்நோய் நுண்ணுயிரிகளை ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குப் பரப்புகின்றன. நூற்புழுக்கள், பூசணங்கள் கூட்டுறவின் மூலம் பருத்தி, கனகாம்பர வாடல் நோய்களால் ஏற்படும் அழிவு கூடியுள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மண்ணில் காணப் படும் நச்சுயிரி நோய்கள், நூற்புழுக்களால் பரவுகின்றன. திராட்சை விசிறி இலை என்னும் நோயை உண்டாக்கும் நச்சுயிரியைச் சிஃபினேமா இன்டெக்ஸ் என்னும் நூற்புழு பரப்புவது 1958ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. சிஃபினேமா (Xiphinema), லான்ஜிடோரஸ் (Longidorus), டிரைகோடாரஸ் (Trichodorus) என்னும் மூன்று பேரினங்களைச் சேர்ந்த நூற்புழுக்கள் நச்சுயிரிகளைப் பரப்புகின்றன. நோயுள்ள செடியிலிருந்து, சாற்றை உறிஞ்சிய நூற்புழுக்கள், பின்பு, நல்ல செடியில் உள்ள வேரிலிருந்து சாற்றை உறிஞ்சும் போது, நச்சுயிரிகள் பரவுகின்றன. நச்சுயிரிகள் நூற்புழுக்களில் முட்டை வழியாகப் பரவுவதில்லை. நூற்புழுக்கள் தோலுரித்த பின்னர், நச்சுயிரியைப் பரப்பும் தன்மையை இழந்து விடுகின்றன. இளம் நூற் புழுக்களும், முதிர் நூற்புழுக்களும் நச்சுயுயிரிகளைப் பரப்புகின்றன. இளம் நூற்புழுக்கள் முதிர் நூற்புழுக்களை விடப் பெருமளவில் நச்சுயுரிகளைப் பரப்புகின்றன.
பயிர்ச் சுழற்சி (Crop rotation). ஒரே வகைப் பயிரையே பயிரிடாமல், பயிர்ச் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள் நாளடைவில் பெருகி, விளைச்சலைப் பெரிதும் குறைக்கும். நீலகிரி மாவட்டத்தில், உருளைக்கிழங்கை ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்தாற் போல் பயிர் செய்து வந்தமையால், உருளைக் கிழங்கைத் தாக்கும் பொன்னிற நூற் புழுக்களின் எண்ணிக்கை பெருகி, உருளைக் கிழங்கை அந்நிலங்களில் தற்போது சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பு முறைகள்
ஆழ உழுதல். அறுவடை செய்த வயலை, ஆழ உழ வேண்டும். இதனால், மண்ணிலுள்ள நூற்புழுக்களும், நூற்புழுக்கள் உள்ள வேர்களும், தாக்கப்பட்ட பிற தாவர உறுப்புகளும் ஆழப் புதைக்கப் பட்டு விடுகின்றன.
தரிசு போடுதல். நூற்புழுக்கள் ஈரமுள்ள, வெப்பம் குறைந்த மண்ணில் வாழும் தன்மையுடையன. வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிகுந்தால், அவை இறந்து விடுகின்றன. நீர் விடாமல் தரிசு போட்டு, மூன்று அல்லது நான்கு முறை நிலத்தை உழுதல் வேண்டும். நூற்புழுக்களும், அவற்றின் முட்டைகளும், சூரிய வெப்பத்தால் தாக்கப் பட்டு அழிந்து விடுகின்றன. களைகளையும், அவ்வப்போது களைந்து அழித்து விடுதல் வேண்டும். நிலத்தைத் தரிசாகப் போடுவதால், உணவு கிடைப்பதற்குரிய தாவரங்கள் கிடைக்காமையால், நூற்புழுக்கள் அழிந்து விடுகின்றன.
பண்ணைத் தூய்மை. நூற்புழுக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பாசன நீர், உழு கருவி, விதை, நாற்று வழியாகப் பரவுகின்றன. ஆகையால், நூற்புழுக்கள் தாக்கிய நிலத்தின் வழியாக ஏனைய நிலங்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. நூற்புழுக்கள் உள்ள நிலங்களில், அறுவடைக்குப் பின் வேர், தண்டு, இலை முதலியவற்றை நீக்கி எரித்து விட வேண்டும். நூற்புழுக்கள் தாக்கிய நிலத்திலிருந்து கிடைக்கும் விதைகளையும், நாற்றுகளையும் விதைக்காக, பயன் படுத்தாமை நன்று. தாக்கப்பட்ட நிலங்களில், பயன்படுத்திய கருவிகளைத் தூய்மை செய்த பிறகே, ஏனைய நிலங்களுக்குப் பயன் படுத்த வேண்டும்.
இயற்கை உரமிடுதல். இயற்கை உரங்களாகிய பிண்ணாக்கு, சாணம், குப்பை, எரு போன்றவற்றைப் பயன் படுத்துவதால், பயிர்கள் செழுமையாக வளர்வதற்குரிய சத்துகள் கிடைக்கின்றன. மேலும், இவை நூற்புழுக்களைக் கொல்லக் கூடிய பாக்டீரியா, பூசணம், நன்மை செய்யும் நூற்புழுக்கள் முதலியவற்றையும் உற்பத்தி செய்து, பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப் படுத்துகின்றன.
நூற்புழுக்கள் தாக்காத செடிகள். கடுகு, துளுக்க மல்லிகை, சணப்பை போன்ற பயிர்களின் வேர்களிலிருந்து வெளி வரும் வேதிப் பொருள்கள், நூற்புழுக்களுக்கு நஞ்சாக அமைந்து, அவற்றை அழிக்கின்றன. எனவே, இவ்வகைப் பயிர்களைத் தழையுரமாகவும், மாற்றுப் பயிராகவும் பயிரிடுதல் நல்லது.
நூற்புழுக் கொல்லிகள் (Nematocides). நூற்புழுக்கள் பெரும்பாலும், மண்ணில் தோன்றி, வேர்களைத் தாக்குவதால், மண்ணிற்குள் மருந்தைச் செலுத்தி, அவற்றை அழிக்க வேண்டும். தற்பொழுது டி.டி. (DD), டி.பி.சி.பி. (DBCP) அல்லது நெமகான், வேப்பம், வி.சி 13 (VC 13), டெரசர்மீ (Terracurp), போன்ற நூற்புழுக் கொல்லிகள் பெரும்பாலும் பயன் படுகின்றன. இவற்றில், நெமகான் தவிர ஏனைய மருந்துகள் முளைக்கும் விதைகளுக்கும், பயிர்களுக்கும் தீமை செய்பவை. ஆதலால், அவற்றை விதைப்பதற்கு அல்லது நடுவதற்கு ஒரு மாதம் முன்பே, மண்ணிற்குள் செலுத்தி விடுதல் வேண்டும். —பி. வி. சுப்பாராவ்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 130)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ydzkr8h/
தமிழ்“நூல் புழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7ydzkr8h/APA
Oliyon Research. (2026). நூல் புழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ydzkr8h/MLA
"நூல் புழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7ydzkr8h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment