அடவு என்பது அடைவு என்ற சொல்லின் திரிபாகும். இதற்குச் சேர்க்கை என்பது பொருள். இது பரதநாட்டியக் கலையில் நிருத்தங்களும் அபிநயங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த ஆடல் பகுதியாகும். கூத்தநூல் என்னும் பண்டைத் தமிழ் நூலில் அடவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தஞ்சையை (கி.பி. 1763–1787) ஆண்ட துலாச மன்னன் இயற்றிய சங்கீதசாராமிருதம் என்னும் வடமொழி நூல், அடவு பற்றி விரிவான விளக்கங்களைத் தருகிறது. இந்த அடவில் பல மாற்றங்களைச் செய்து வேறு புதிய அடவுகளை அமைக்க முடியும் என்று துலாசர் கூறினார். அவர் குறிப்பிட்டுள்ள அடவுகளில் பல இப்பொழுது நடைமுறையில் இல்லை. தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி மன்னன் (கி.பி. 1798–1832) அவையில் திகழ்ந்த ஆடல் வல்லுநர்களான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற நால்வரும் துலாசர் குறிப்பிட்ட விளக்கங்களையே பின்பற்றி வந்தனர். பரத நாட்டியக் கலையில் அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, சப்தம், வருணம், சுரசதி ஆகியவற்றுக்கான நிருத்தங்கள் சிறந்த உறுப்புகளாக அமைந்துள்ளன. இவ்வுறுப்புகளுள் அடவுகள், அழகுறப் பொருந்தி இக்கலையைக் கண்ணுக்கு இனியதாகச் செய்கின்றன. அடவு என்பது பரத முனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரணங்களை ஒத்திருக்கும் ஆடல் பகுதியாகும். கர- ணம் என்பது நிலைகோடல், கால் அசைவு, நிருத்த அத்தம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஆடல் நிலையாகும். கரணம் அல்லது நிருத்த கரணம் என்பது அடிப்படை ஆடற்கூறு ஆகும். இரு கரணங்கள் சேர்தல் ஒரு மாத்திரிகம் என்றும், மூன்று கரணங்கள் சேர்தல் ஒரு கலாபகம் என்றும், நான்கு கரணங்கள் சேர்தல் ஒரு பந்தகம் என்றும், ஐந்து கரணங்கள் சேர்தல் ஒருசங்காடகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. நாட்டிய சாத்திரம் 108 கரணங்களை விளக்குகிறது. தில்லை நடராசர் கோயிலில் இக்கரணங்களுள் பெரும்பாலானவற்றைக் காணலாம். அடவுகளில் இவை யாவும் அமையப்பெற்றுள்ளன. காலப் போக்கில் அடவுகள் பல மாறுதல்களுக்கு உட்பட்டன. இப்போதைய பரத நாட்டியக் கலையில் பல அடவு வழிகள் காணப்படுகின்றன. இவை, ஆடல் ஆசிரியன் (நட்டுவனார்) கற்பனைத் திறனுக்கு ஏற்ப அமைகின்றன. இந்த அடவு வகைகள் ஒன்றுக்கொன்று மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், இவை ‘பத்ததி’ அல்லது ‘வழி’ என்று கூறப்படுகின்றன. ஆடலாசிரியர் எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாரோ அந்த ஊரின் பெயரே இந்த அடவு முறைகளுக்கும் ஆடல் முறைகளுக்கும் வழங்கிற்று. இவ்வாறு பந்தநல்லூர், வழுவூர், தஞ்சாவூர் போன்ற பத்ததிகள் வழக்கத்தில் வரலாயின. தஞ்சாவூர்ப் பத்ததியைத் தோற்றுவித்தவர்கள் குப்பையா பிள்ளையும் அவர் மக்களும் ஆவர். இவர்களே இப்போது பழக்கத்தில் இருந்துவரும் அலாரிப்பு முதல் தில்லானா வரையிலான பரதநாட்டிய நிகழ்ச்சியின் வரிசை முறையை அமைத்தார்கள் என்பது கருதப்படுகிறது. இந்த அடவு வழிகள் ஒவ்வொன்றும் உடல் அசைவில் தெளிவு, நளினம், தாளம், முகபாவம் போன்ற வெவ்வேறான தனிப்பட்ட ஆடற்கூறுகளுக்கு முதலிடம் கொடுக்கிறது. இவ்வழிகளைத் தொகுத்து நோக்கினால், ஒரு பொதுவான முறையில் அடவுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். இது கால் அசைவுகளின் அடிப்படையிலான பாகுபாடு. மேற்குறிப்பிட்டவைகளைத் தவிரச் சொல்லுக்கட்டு என்பதன் அடிப்படையிலும் அடவுகள் பாகுபாடு செய்யப்படலாம். ஆடலின் அசைவுகள் முதலில் வலக்காலாலும் பின்னர் இடக்காலாலும் செய்யப்படுகின்றன. இவை இணைந்து திருத்தங்கள் ஆகின்றன. கரணத்தைப் போன்றே அடவிலும் தானகம், சரீ, நிருத்த அத்தம் ஆகிய மூன்று பகுதிகளும் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தானகம் என்பது நிற்கும் நிலையையும் சரீ என்பது கை கால் அசைவுகளையும் குறிக்கின்றன. அடவுகளுக்குத் தனிப்பட்ட சொல்லுக்கட்டுகள் உள்ளன. இவை ஆடலாசிரியரால் கூறப்படுகின்றன. அடவுகளுக்குத் தனிப்பட்ட பொருள் இல்லை. இவை வெறும் நிருத்தங்களாகும். சொற்கள் பல சேர்ந்து பொருள் பொதிந்த சொற்றொடரை உண்டாக்குவது போல், அடவுகள் பல சேர்ந்து கோ(ர்)வையை உண்டாக்குகின்றன. கோ(ர்)வையின் நடுவில் ஆங்காங்கு ஆடலாசிரியனின் கருத்துக்கு ஏற்பத் தாளத்தைக் குறிக்கும் சொற்களும் அவற்றிற்கு ஏற்ப நிருத்தங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை, சதி என்று வரிசையையும் அதன் பல்வேறு பாகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள முறையையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தாளச் சொற்கள், தீர்மானங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. தீர்மானங்கள் அடவுகளுக்கு அழகும் கவர்ச்சியும் சேர்க்கின்றன. பரத நாட்டியத்தில் அடங்கியுள்ள அலாரிப்பு, சதிசுரம், தில்லானா, வருணம், சுரசதி ஆகிய உறுப்புகளில் எல்லாம் அடவுகள் அமைந்திருக்கின்றன. அடவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாத அசைவுகளில் சில இங்கு விளக்கப்பட்டுள்ளன. பாதங்களின் நிலை : சமயம்: பாதங்களையும் முழங்கால்களையும் நேராக வைத்து நிற்கும் நிலை. : பார்சுவம்: பாதங்கள் பக்கவாட்டில் திரும்பிய நிலை. : திரையச்சுரம்: பாதங்களைக் கொண்டு ‘V’ போன்ற வடிவில் நிற்றல். : சுவசுதிகம்: பாதங்கள் இடம் மாறிய நிலை. பாதங்களின் அசைவுகள் : குட்டனம்: பாதத்தினால் தரையைத் தட்டுதல். : சரிகம்: பாதங்களைத் தூக்காமல் நகர்தல். : அஞ்சிதம்: பின்கால்களைத் தரையில் பதித்து முன் பாதங்களை மட்டும் உயர்த்தல். : அக்கிரதள சஞ்சாரம்: முன் பாதங்களைத் தரையில் பதித்துப் பின் பாதங்களை மட்டும் உயர்த்தல். : சுசி: ஒரு பாதத்தை மட்டும் தரையில் பதித்து மறு பாதத்தின் பெருவிரல் மட்டும் தரையில் பதித்தல். : உத்கட்டிதம்: முன் பாதங்கள் தரையில் பதிந்திருக்கப் பின் பாதங்களினால் தரையைத் தட்டுதல். : குட்டனம்: பின் பாதங்கள் தரையில் படாமல் முன் பாதங்களினால் மட்டும் தரையைத் தட்டுதல். : தடிதம்: பின்பாதங்களினால் நின்று முன் பாதங்களினால் தரையைத் தட்டுதல். : மர்த்திதம்: பாதங்களின் அடிப்பாகத்தினால் தரையை இலேசாகத் தேய்த்தல். : சுகலிதம்: பாதம் தரையில் சறுக்குதல். நிலை கோடல்கள் : சமம்: பாதங்கள் சமநிலையில் இருக்க, உடல் நேராக நிற்றல். : மண்டலம்: பாதங்கள் பாரிசுவ நிலையில் இரண்டிற்கும் இடையே மிகுந்த தூரம் இருக்குமாறு உடலின் கனத்தை இரு பாதங்களிலும் சமமாகப் பகிர்ந்து முழங்கால்கள் வளைந்து நிற்றல். இது பழக்கத்தில் அரைமண்டி என்று சொல்லப்படுகிறது. : அலிதம்–பிரத்தியலிதம்: இடக்கால் மண்டல நிலையில் இருக்க, வலக்காலைப் பக்கவாட்டில் நீட்டுதல், இதனை மாற்றிச் செய்தன் பிரத்திய விதம் எனப்படும். : குஞ்சிதசலு; தொடைகளும் கால்களும் இணைந்திருக்க, பாதங்கள் இரண்டும் அக்கிரதளமாக இருக்கப் பின் பாதங்களின் மேல் உட்காருதல். அடவுகளுக்கான கையசைவுகள் : பதாகை: பெருவிரலை மட்டும் வளைத்து மற்ற விரல்களை நேராக நிமிர்த்தி வைத்தல். : திரிபதாகமயூரம்: பதாகை நிலையினின்று மோதிர விரலைமட்டும் வளைத்துப் பெருவிரலைத் தொடுதல். : அருத்தசந்திரன்: பதாகை நிலையிலிருந்து பெருவிரலை மட்டும் நிமிர்த்துதல். : கபித்தம்: சுட்டுவிரலை வளைத்துப் பெருவிரலால் தொடுதல், மற்ற விரல்களை இரு கைகளுடன் சேர்த்தல். : கடகமுகம்: பெருவிரலை முதல் இரண்டு விரல்களுடன் இணைத்தல். : சந்திரகலை: அருத்த சந்திரநிலையிலிருந்து சிறுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் இரு கைகளுடன் இணைத்தல். : மிருகசீரிடம்: பதாகை நிலையிலிருந்து முதல் மூன்று விரல்களை மட்டும் நிமிர்த்துதல். : ஆலபதுமம்: விரல்களைப் பிரித்தல். : கர்த்தநிமுகம்: பெருவிரல் சிறு விரலையும் மோதிர விரலையும் இணைந்திருக்க, மற்ற விரல்கள் பிரிக்கப்பட்டு இருத்தல். : அஞ்சலி: பதாகை அத்தங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைத்து இருக்க மணிக்கட்டுகள் முன்புறம் வளைந்திருத்தல். : நாட்டியாரம்பம்: பதாகை அத்தம் இரண்டையும் இரு பக்கங்களிலும் தோளுக்கு இணையாக விரித்தல். உள்ளங்கை நிலை : உத்தானம்: உள்ளங்கையை மேல் நோக்கித் திருப்புதல். : அதோமுகம்: உள்ளங்கையைத் தரையை நோக்கித் திருப்புதல் : உள் முகம்: உள்ளங்கையைத் தன்னை நோக்கித் திருப்புதல். : பரன்முகம்: உள்ளங்கையை வெளிப்புறமாகத் திருப்புதல். கூத்த நூல், நாட்டிய சாத்திரம், அபிநயதருப்பணம் போன்ற நூல்களில் ஆடல் இலக்கணத்திற்கான விளக்கங்கள் காணப்பட்ட போதிலும் அடவுகளுக்கான எண்மான முறை (Notation) காணப்படவில்லை. அடவுகளின் நுட்பங்கள், கலைஞர்கள் ஆடல் ஆசிரியரிடம் நேரிடையாகப் பெறப்பட்ட பயிற்சியின் மூலமே கற்கப்பட்டன. ஆடல் தொகுதி அமைப்பியல் (Choreography) என்பதும் ஆடல் கலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். அடவுகளுக்கான எண்மானக் குறியீடு செய்தல் மிகக் கடினமாக இருந்த போதிலும் அவற்றை எண்மான முறையில் வகுத்தல் மிகப் பயனளிப்பதாகும். காண்க: பரத நாட்டியம்; நாட்டிய சாத்திரம்.