கி.பி. 1048–இல் ஈரான் நாட்டிலுள்ள குரான்சான் மாநிலத்தைச் சேர்ந்த நிசாப்பூரில் பிறந்தார். இவர் இயற்பெயர் கியாசுத்தீன் அபுல் பத் உமர் (Ghiyashuddin Abulbath Omer) என்பதாகும். உமர் என்ற பெயருடன் இணைந்துள்ள கையாம் என்பது இவரது குடும்பப் பெயராகும். இதன் பொருள் ‘கூடாரம் தைக்கும் தொழிலாளர்’ என்பதாகும். இவர்தம் மூதாதையர் இத்தொழில் செய்து வந்ததால் இவரும் இப்பெயர் பெற்றார். பாரசீகக் கவிஞராக உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ள உமர்கையாம் ஒரு பல்துறை வித்தகராகத் திகழ்ந்தார் என்பதனை அவர் வரலாற்றால் அறியலாம். இவர் பார்சி நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்து பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், அரபு இனத்திலுள்ள ‘அல்கய்யாமி’ என்னும் பிரிவினைச் சார்ந்தவர் என்னும் கருத்தும் நிலவுகிறது. உமர்கையாம் ஒரு சிறந்த இசுலாமிய சூபியாக — இறைநேசச் செல்வராகத் திகழ்ந்தார். இவர் எழுதிய உருபாத் (Rubaiyat) என்னும் கவிதை நூல் கி.பி. 1859–இல் பிட்செரால்டு (Edward Fitz Gerald) என்பவரால் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட பின்னரே, இவர்தம் ஆன்மிகத் தன்மையின் உயர்வை உலகு முழுமையாக உணர்ந்ததென்று கூறலாம். மேலும், இவர் இறைநேயத்தைப் பற்றியும், இறையின் சிறப்பியல்பு பற்றியும் ஆன்மிக நோக்கில் எண்ணற்ற கவிதைகளை உலகுக்களித்துள்ளார். அக்கவிதைகள் உலகளாவிய மெய்ப்பொருளை உள்ளடக்கமாகப் பெற்று இன்றளவும் உயிர் வாழும் சிறப்பினைக் கொண்டுள்ளன. இப்னு அலீ சீனா என்பவர் அரபு மொழியில் எழுதிய ‘குத்பா’வைப் பார்சி மொழியில் மொழி பெயர்த்துள்ளார். உமர்கையாம் விண்ணியல் ஆய்வாளராகவும் சிறந்த கணித மேதையாகவும் சோதிடராகவும் திகழ்ந்தார். இவர்தம் சிறப்பினை அறிந்த சுல்தான் மாலிக் சா இவரைப் பெரிதும் சிறப்பித்து, இவர்தம் ஆய்வுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். இவர்தம் விண்வெளி ஆய்வின் பயனாய் வெளியான சலாலி பஞ்சாங்கம் இவருக்குப் பெரும் புகழ் தந்தது. இவர்தம் வானநூற் புலமையை இமாம் கசாலி பெரிதும் பாராட்டிப் பெருமைப்படுத்தினார். விண்கலை பற்றிய சட்ட திட்டங்கள் என்னும் ஓர் அரிய நூலினையும் இவர் இயற்றியுள்ளார். இவர் இதனை கி.பி. 1094–இல் இயற்றியகாகத் தெரிகிறது. இவ்வரிய நூல் ‘இசுத்தான் புல்’ (Istanbul) நூல் நிலையத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவர் கணிதத் துறையில் கிரேக்க அறிஞர்களை விஞ்சும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார். குறிக்கணக்கியல் (Algebra) பற்றிய இவர் நூல் கி.பி. 1851–இல் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கணிதத் தொடர்பாக இவர் எழுதியுள்ள ‘மசத்ரத்’, ‘முசுகிலாத்துல் இசாப்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இயற்பியல் தொடர்பாகத் ‘தாரீ கூல்பீ’ என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். இவ்வாறு பல்துறை வித்தகராக விளங்கிய உமர்கையாம் கி.பி. 1123–இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்; நிசாப்பூரில் உள்ள ஒரு பூங்காவில் இவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்துத் துறைகளிலும் உமர்கையாம் சிறந்து விளங்கியிருப்பினும் இன்றளவும் உலகுக்கு அவர் தம் பெயரை நினைவூட்டிக் கொண்டிருப்பன அவர் இயற்றிய ஆன்மிகக் கவிதைகளே எனலாம். சி.ந.