இது கண்ணனின் மனைவியர் பலருள் ஒருவரான நப்பின்னைப் பிராட்டியின் பெயராகும். ‘உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்’ என்னும் திருவள்ளுவ மாலைச் (21) செய்யுளில் இடம் பெற்றுள்ள ‘உபகேசி’ என்பது நப்பின்னையையும், ‘தோள்மணந்தான்’ என்பது அவளை மணந்த கண்ணனையும் குறிக்கின்றன. இத்தொடருக்குப் பிறவாறும் பொருள்கூறுவர். நேமிநாத உரை இப்பெயர் நப்பின்னையைச் சுட்டுவதாகக் குறிப்பிடுகிறது (நேமிநா. சொல். 5, உரை). உபகேசம் என்பதற்கு, ‘மயிராற் பின்னிய பின்’ என்பது பொருள். பின்னை என்ற பெயரும் இப்பொருளில் அமைந்த- தாகும். அது சிறப்புணர்த்தும் இடைச்சொல்லொடு கூடி நப்பின்னை என்றாகி, கண்ணன் மனைவியருள் ஒருத்தியைக் குறிக்கிறது. நப்பின்னை சிலப்பதிகாரத்தில் பிஞ்ஞை என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளாள். உபகேசி, பின்னை ஆகியன ஒரு பொருட் பன்மொழியாகும். வடமொழியில் கண்ணன் இராதைத் தொடர்பு பேசப்பட்டிருப்பது போலக் கண்ணன் நப்பின்னைத் தொடர்பு தமிழ் இலக்கியங்களில் பெரிதும் கூறப்பட்டுள்ளது.