மறைந்துபோன தமிழிலக்கண நூல்களுள் ஒன்றாகும். இந்நூல், மறைந்து போயினும், இதன் நூற்பாக்களுள் சிலவற்றை யாப்பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக் காரிகை உரை, வீரசோழிய உரை, நேமிநாத உரை, நன்னூல் மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை, தக்கயாகப் பரணி உரை, நவநீதப் பாட்டியல் உரை, பன்னிரு பாட்டியல், திருக்குறள் நுண்பொருள் மாலை ஆகியன மேற்கோளாக எடுத்தாளுகின்றன. இம்மேற்கோள்களிலிருந்தே, இந்நூல் இருப்பது அறியப்பட்டது. அவிநயனார் என்பது நாலாசிரியர் பெயராகும். இவர் சமணர். விநயம் என்பது ஐந்து மூடநம்பிக்கைகளுள் ஒன்றாகும். ஏவாந்தம், விபரீதம், விநயம், சம்சயம், அஞ்ஞானம் என்பன சைன அறத்தின்படி அமைந்த ஐந்து மூடநம்பிக்கைகளாம். இவற்றுள், விநயம் என்பது கண்மூடி வழிபடுதல் என்று பொருள்படும். அவிநயம் என்றால், கண்மூடி வழிபடுதல் அற்ற நிலை என்று பொருள்படும். எனவே, அவிநயன் என்பதற்குக் கண்மூடி வழிபாடு இல்லாதவன் என்பது பொருள். தொல்காப்பியன் எனும் ஆசிரியர் பெயரை ஒட்டி தொல்காப்பியம் எனும் பெயர் அமைந்ததைப் போல, அவிநயன் என்னும் நூலாசிரியர் பெயரைச் சார்ந்து, நூலும் அவிநயம் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் காலம் கி.பி. 850–க்கும், 1015–க்கும் இடைப்பட்டது. கி.பி. 1015–1040–இல் வாழ்ந்த, யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் குணசாகரர், அவிநய நூற்பாக்களை அறுபத்தேழு இடங்களில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். எனவே, குணசாகரர்க்கு முற்பட்டவர், அவிநயானார் என்பது தெளிவாகிறது. உலாவைப் பற்றி முதன்முதல் இலக்கணம் கூறும் நூல் இதுவாகும் (அவிநயப் புறனடை 121). தமிழில், முதலில் தோன்றிய உலாநூல் ஆதி உலா. இலக்கியங்கள் தோன்றி, இலக்கணம் படைக்கப்படுவதே தமிழின் பொதுவான இயல்பு. இம்மரபின்படி ஆதியுலாவின் தோற்றத்திற்குப் பின்பே, அவிநயம் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஆதியுலாவின் காலம் கி.பி. 825–850 ஆகும். எனவே, அவிநயம், கி.பி. 850–க்குப் பின்னும் குணசாகரர் காலமாகிய, கி.பி. 1015–க்கு முன்னும் எழுதப்பட்டிருத்தல் வேண்டும், அவிநயனார், எழுத்து, சொல், பொருள் என்று முப்பிரிவு அடங்கிய அவிநயத்தையும், யாப்பை விரிவாகப் பேசும் அவிநயனார் யாப்பையும், அவிநயனார் யாப்பு என்ற நூலிற்குப் புறனடையாக நாற்பது வெண்பாக்களில் எழுதப்பட்ட அவிநயப் புறனடை அல்லது நாலடி நாற்பது என்ற நூலையும், பாட்டியல் நூலாகிய அவிநயனார் கலாவியலையும், மறைந்து போன பன்னிரு படலம் என்ற புறத்திணை இலக்கணம் கூறும் நூலின் ஒரு பகுதியையும் எழுதினாராதல் வேண்டும். தொல்காப்பிய நெறியினின்று விலகி வளர்ந்த இலக்கணச் செய்திகள் நன்னூலிலும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகைகளிலும், பிற இலக்கண நூல்களிலும் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. இச்செய்திகள் பலவற்றிற்கு மூலம், அவிநயம் என்றே தெரிகிறது. எனவேதான், மயிலைநாதர் ‘அளவறு புலமை அவிநயனார்’ என்றும் (நன்னூல் உரை நூற்பா. 130) புவிபுகழ் புலமை அவிநய நூல் (நன்னூல் உரை 359) என்றும் பாராட்டியுள்ளார். மறைந்துபோன அவிநய நூற்பாக்களை ஓரளவு திரட்டிக் காட்டியவர் மயிலை, சீனி, வேங்கடசாமி ஆவார். மேலும் தொடர்ந்து, பல உரைநூல்களில் சிதறிக் கிடந்த நூற்பாக்களைத் தொகை வகை செய்து, உரையெழுதிப் பதிப்பித்துக் கி.பி. 1975–இல், ‘அவிநயம்’ எனத் தனிநூலாகத் திரு. க.ப. அறவாணன் வெளியிட்டுள்ளார்.க.ப.அ.