அடகு வணிகர் சட்டம்
aṭaku vaṇikar caṭṭam
கடனுக்கு அல்லது வாக்குறுதி நிறைவேற்றத்திற்குப் பிணையமாகப் பொருளை ஒப்படைத்தல் அடகு எனப்படும்.
கடனுக்கு அல்லது வாக்குறுதி நிறைவேற்றத்திற்குப் பிணையமாகப் பொருளை ஒப்படைத்தல் அடகு எனப்படும். அவ்வாறு பொருளை ஒப்படைப்பவரை அடகு வைப்பவர் (Pawner) என்றும், ஒப்படை பெறுபவரை அடகு பெறுபவர் (Pawnee) என்றும், பொருளை அடகாகப் பெற்றுக் கொண்டு, அதன் மீது கடன் வழங்குபவரை அடகு வணிகர் (Pawn Broker) என்றும் கூறுகின்றனர்.
தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் (Tamil Nadu Pawn Brokers Act 1943) 1943-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நகரத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்கின்ற ஏழைமக்கள் பணமின்மையினால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவதே அடகு வைத்தலுக்குக் காரணமாகவுள்ளது. உடனடிப் பணத் தேவைக்கு ஒரு நகையோ பாத்திரமோ ஏதேனும் ஒரு மதிப்புள்ள பொருளோ அடகு வைக்கப்படுகிறது. பல வேளைகளில் அவை மீட்கப்படுவதில்லை. ஏழைகளின் துன்பநிலையினை நீக்கி, அடகு முறையை ஒரு வரையறைக்குள் உட்படுத்த வேண்டும் என்பதனால், தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் இயற்றப்பட்டது.
அடகு வணிகர் உரிய உரிமம் (Licence) இல்லாமல் அடகுக் கடையினை நடத்தக் கூடாது. ஒரே நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடைகளை நடத்தினால் ஒவ்வொரு கடைக்கும் தனித் தனியாக உரிமம் பெறவேண்டும்.
அடகு வணிகர்களுக்கு வழங்கப்படும் உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உரிமத்திற்குரிய விண்ணப்பத்தினைக் குறிப்பிட்ட படிவத்தில் உரிய தொகையுடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் செய்பவர் ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவராக இருந்தாலும், அடகுக்கடை வைக்கப்படுகின்ற இடத்திற்குத் திருடர்கள் அல்லது ஐயத்திற்குரிய நடத்தை உள்ளவர்கள் அடிக்கடி வந்து செல்வதாக இருந்தாலும் மேற்படி உரிமம் மறுக்கப்படவாம்.
அடகு வணிகர் ஒவ்வொருவரும் தம்முடைய கடையின் வெளிப்புறப் பகுதியில், தம்முடைய பெயரை அந்தப் பகுதியில் வழங்கி வருகின்ற மொழியில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். மேலும் அவரிடத்தில் பொருள்களை அடகு வைத்துப் பணம் பெறுவதற்காக வருகின்றவர் என்ன விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக எழுதி வைத்திருக்க வேண்டும்.
அரசு வரையறை செய்கின்ற வட்டி வீதத்திற்கு மேல் அடகு வணிகர் வட்டி பெறக் கூடாது. கூடுதலாக வட்டி வாங்கக் கூடாது என்பதனால், வேறு முறையில் எவ்வித இலாபத்தையும் பெறக்கூடாது. ஒவ்வொரு பொருளும் அடகு வைக்கப்படும்போது அதற்குரிய அடகுச் சீட்டினைக் குறிப்பிட்ட படிவத்தில் கொடுக்க வேண்டும். அந்த அடகுச் சீட்டினைக் கொடுத்த பின்னரே அடகினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அடகை மீட்பதற்கான நிபந்தனைகள்
1. அடகுச் சீட்டினைக் கொண்டுவந்து அடகுக்கான தொகையினைக் கொடுத்தால் அடகுப் பொருளை மீட்டுக் கொள்ளலாம்.
2. அடகு வணிகர் வேறு யாருக்கேனும் அடகுப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான உரிமையை மாற்றிக் கொடுத்திருந்தால், அதனை அந்த அடகுச் சீட்டில் குறித்துக் கொடுத்துத் தம்முடைய பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும்.
3. அடகு வைத்தவர் தம்முடைய பணியாளரை அனுப்பிப் பொருளை மீட்க விரும்பினால், அடகு வைத்தவருடைய பணியாளர்தாமா என்பதை உறுதி செய்து கொண்டு, அதற்குரிய படிவத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அடகுப் பொருளைத் திருப்பித் தரலாம். அவ்வாறு வந்தவர் அடகு வைத்தவருடைய பணியாளர் அல்லர் என்று உறுதி செய்யப்பட்டால், அடகு வணிகர் அடகு வைத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கக் கடமைப்பட்டவராவர்.
இச்சிக்கலைத் தவிர்க்க அடகு வணிகர் அடகு வைத்தவருக்கு ஒரு பதிவு அஞ்சல் அனுப்பிப் பதினான்கு நாட்களுக்குள் எவ்வகைப் பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால், எவர் அடகுச் சீட்டைக் கொண்டு வருகிறாரோ அவருக்குப் பொருளை மீட்பதற்கான தகுதியினைக் கொடுக்கலாம். அப்போது அடகு பிடித்தவர் இழப்பீடு கொடுக்கின்ற கட்டாயத்திலிருந்து விடுவிக்கப் பெறுகிறார்.
4. அடகு வைத்தவர் இறந்துவிட்டால் அவருடைய சட்டப்படியான வாரிசுகளுக்கு அடகுப் பொருளை மீட்பதற்கு உரிமையுண்டு. ஆனால் வாரிசுதாரர்கள் மீட்கவருகின்றபொழுது குறிப்பிட்ட படிவத்தில் நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, அவர் தாம் இறந்தவரின் வாரிசு என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதே போன்று, தகுந்த பிணைமுறை (Security Bond) வேண்டும் என்று அடகு வணிகர் கூறினால் அதனையும் கொடுக்க வேண்டும். ஆனால் உரிமையியல் நீதிமன்றம் இன்னார்தாம் வாரிசுதாரர் என்று முடிவு செய்து, அவருக்கு மீட்க உரிமையுண்டு என்று கூறி இருந்தால் பிணைமுறை தேவையில்லை.
5. அடகுச் சீட்டினை மற்றவருக்கு மாற்றியிருந்தால் அந்த மாற்றத்தைக் குறித்து, அடகு வணிகருக்குப் பதிவு அஞ்சலில் அறிவிப்புக் கொடுக்கப்பட வேண்டும். பின்னரே, மாற்றம் பெற்றவர் அப்பொருளை மீட்க இயலும்.
6. அடகு வைத்தவர் தம்முடைய அடகுச் சீட்டு காணாமல் போய்விட்டதென்று கூறினால், அதற்கான படிவத்தில் ஓர் உறுதிமொழியினைக் கொடுத்த பின்னரே, அடகுப்பொருளை மீட்க முடியும். ஆனால் அடகு வணிகர் தகுந்த பிணையம் (Surety) கொடுத்தால்தான் மீட்க இயலும் என்று கூறலாம்.
திருட்டுப் பொருள்கள் அடகு வைக்கப்பட்டால் அவ்வாறு வைத்தவர்மேல் நடவடிக்கை எடுக்கச் சட்டம் வகை செய்துள்ளது.
அடகு வணிகர்களுடைய கடமைகள் என்னென்ன என்பது பற்றியும் இச்சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டம் என்னென்ன பதிவேடுகள், படிவங்கள் முதலியன வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றது.
அரசு விதிக்கின்ற பல்வேறு நிபந்தனைகள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிடும்பொருட்டு அரசு ஆய்வாளர்களைப் பணியமர்த்தல் செய்யலாம். இச்சட்ட விதிகளை மீறி அடகுக்கடை செயல்படுகிறது என்பதை அறிந்தால், குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அவ்வடகுக் கடையில் உள்ள கணக்குப் பதிவேடுகள் பொருள்கள் முதலியவற்றைக் கைப்பற்றுவதற்குரிய அதிகாரம் காவல்துறை அதிகாரிக்கு உண்டு.
ஒரு பொருளை அடகு வைத்தவர், அப்பொருளினை அடகு வைத்த தேதியிலிருந்து ஓர் ஆண்டுக்குள் அதை மீட்க உரிமையுண்டு; இந்த ஓராண்டு கழிந்த பின்னர் ஏழு நாட்களுக்குக் கால நீட்டிப்பு உண்டு. ஆகவே, மொத்தமாக ஓராண்டு ஏழு நாட்கள் வரை மீட்கும் உரிமை அடகு வைத்தவருக்கு உண்டு.
ஒரு பொருளை மேலே குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்குள் மீட்க இயலாவிட்டாலும், அப்பொருளை ஏலத்திற்கு விடத் தொடங்குவதற்கு முன்பும் மீட்பதற்கு உரிமையுண்டு. இச்சட்டத்தின் அடிப்படை நோக்கமே, கடன் பெறுவோர் எப்போதும் துன்பத்தில் உழலுபவர்கள்; அந்நிலையினைப் பயன்படுத்திக் கொண்டு அடகு வணிகர் எத்தகைய இலாபத்தையும் பெற முயலக் கூடாது என்பதே ஆகும். அடகு வணிகரும் அடகு வைப்பவரும் தங்கள் விருப்பம் போல இக்காலத்தை நீட்டித்துக்கொள்ள உரிமை உண்டு. அப்பொழுது அவர்கள் ஒப்பந்த மூலம் ஒரு காலவரையறையினைச் செய்து கொள்ளுகிறார்கள்.
பொது ஏலமில்லாது தனிப்பட்ட முறையில் அடகுப் பொருளை அடகு வணிகர் விற்கக் கூடாது. அடகு வணிகர் ஏலம் விடுவதாயின் அத்தொகை அசலும் வட்டியும் சேர்ந்த தொகைக்கு அதிகமாக இருத்தல் வேண்டும். அந்த அதிகத் தொகையினை அடகு வைத்தவர் மூன்றாண்டுகள் வரை திருப்பிப் பெறலாம். 1976-ஆம் ஆண்டு எந்தெந்த அடகுகளுக்கு வட்டி சேருவதில்லை என்பதற்கான ஒரு சிறப்புப் பிரிவு (பிரிவு. 12-ஏ) கொண்டுவரப்பட்டது. 22.7.1975-இல் ஏதேனும் ஓர் அடகுமீது தொகை பாக்கியிருந்தால் அத்தேதியிலிருந்து 15.1.1976 வரை அக்கடன் மீது வட்டி வசூலிக்க முடியாது. மேலும் அந்தப் பொருள்களை 15.1.1977-வரை விற்கக் கூடாது என்றும் ஏலத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்றும் சட்டம் செய்யப்பட்டது. அடுத்து வந்த திருத்தங்களில் 15.1.1977 என்பது 15.1.1978 என்றும், பின்னர் 15.1.1979 என்றும் மாற்றியமைக்கப்பட்டது.
அடகுப் பொருள் திருட்டுப் போய்விட்டால் அல்லது தீயினால் அழிக்கப்பட்டுவிட்டால், அடகு வணிகர் அதற்குரிய தொகையை அடகு வைத்தவருக்குக் கொடுக்க வேண்டும்.
அடகுப் பொருளின் தொகை அசலையும் வட்டியையும் விட கூடுதலாக இருக்கின்றதா என்பதை அடகு வணிகர் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடகு வணிகரின் உரிமம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீக்குதல் செய்யப்படலாம்.
1. உரிமம் வழங்காத இடத்தில் அடகுக்கடை நடத்துதல்.
2. முறையான கணக்குகள் அல்லது பதிவேடுகள் வைக்காத குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருத்தல்.
3. பொய்க் கணக்குகள் வைத்திருத்தல்.
மேற்கூறிய காரணங்களுக்காக உரிமத்தை நீக்குதற்கு முன்னர் அடகு வணிகருக்கு, இன்னின்ன காரணங்களுக்காக உரிமம் நீக்குதல் செய்யப்படும் என்றும் அவ்வாறு ஏன் செய்யக் கூடாது என்றும் விளக்கம் கேட்டு, அதன் பின்னரே நீக்குதல் செய்ய இயலும். மேலும், இந்த நீக்கத்திற்கான ஆணையை உரிய அரசிதழில் வெளிப்படுத்த வேண்டும். இந்த உரிமம் இழந்ததற்காக இழப்பீட்டுத் தொகை கேட்பதற்கு அடகு வணிகர்க்கு உரிமை இல்லை.
அடகு வணிகர் கீழ்க்காணும் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படலாம்.
1. பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களிடமிருந்து அல்லது அறிவுத் தெளிவில்லாத ஒருவரிடமிருந்து அடகு பெறுதல்.
2. மற்றொரு அடகு வணிகருடைய அடகுச் சீட்டை வாங்குதல்.
3. பதினெட்டு வயதுக்குக் கீழ் இருப்பவரைப் பணியில் அமர்த்தி அவர் மூலம் அடகு வணிகம் செய்தல்.
4. தம்மிடம் அடகு வைக்கப்பட்டிருந்த பொருளைத் தாமே வாங்கிக் கொள்ளுதல்.
5. அடகுப் பொருளை மீண்டும் அடகு வைத்து ஏலத்திற்குக் கொண்டுவரும்போது தாமே திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்.
6. அடகு வைத்தவரிடம் கால முறையான வரம்புக்குள்ளே அப்பொருளை வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல்.
7. அடகு வணிகர் சட்டத்திற்குப் புறம்பாக அடகுப் பொருளை விற்றல்.
இக்குற்றங்களுக்கு ஆறுமாதச் சிறைத் தண்டனையோ ஆயிரம் ரூபாய் வரையிலான ஒறுப்போ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 235)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7thr5dqm/
தமிழ்“அடகு வணிகர் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7thr5dqm/APA
Oliyon Research. (2026). அடகு வணிகர் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7thr5dqm/MLA
"அடகு வணிகர் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7thr5dqm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment