இந்தியாவில் இன்றைய அமைப்பு முறையில் உள்ள உயர் நீதிமன்றங்கள் முதன் முதலில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோன்றியவையாகும். இவற்றை ஆங்கிலேயர் கி.பி. 1861–ஆம் ஆண்டுச் சட்டத்தின்கீழ்ச் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாநகர்களில் முதன்முதலில் தோற்றுவித்தார்கள். இந்தியாவில் இப்போது உயர்நீதிமன்றங்களைப் பொறுத்தவரை பஞ்சாபு, அரியானா, அசாம், நாகலாந்து போன்ற மாநிலங்களைத் தவிர ஏனைய மாநிலங்களில் மாநிலத்திற்கோர் உயர்நீதிமன்றம் உள்ளது. பஞ்சாபு, அரியானா மாநிலங்களைப் பொறுத்தவரை பஞ்சாபு உயர்நீதிமன்றமும், அசாம், நாகலாந்து மாநிலங்களைப் பொறுத்தவரை அசாம் உயர்நீதிமன்றமும் அவற்றின் உயர்நீதிமன்றங்களாக விளங்குகின்றன. இவ்வாறு, இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவாக ஓர் உயர்நீதிமன்றத்தை நிறுவுகின்ற அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. மைய ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களைப் (Union Territories) பொறுத்தவரை உயர்நீதி மன்றங்கள் அடியிற் கண்டவாறு அமையும்: தில்லி மற்றும் இமாசலப் பிரதேசத்திற்குத் தில்லி உயர்நீதிமன்றமும், மணிப்பூர் மற்றும் திரிபுராப் பகுதிகளுக்கு அசாம் உயர்நீதிமன்றமும், அந்தமான், நிக்கோபார்த் தீவுகளுக்குக் கல்கத்தா உயர்நீதிமன்றமும், இலட்சத்தீவு, மினிக்காய், அமினித் தீவுகளுக்குக் கேரளா உயர்நீதிமன்றமும் கோவா, தையூ, தாமன், தத்ரா, நாகர்கவேலிப் பகுதிகளுக்குப் பம்பாய் உயர்நீதிமன்றமும், பாண்டிச்சேரி மைய ஆட்சிப் பகுதிக்குச் சென்னை உயர்நீதிமன்றமும், சண்டிகார் மைய ஆட்சிப் பகுதிக்குப் பஞ்சாபு மற்றும் அரியானா உயர்நீதிமன்றமும் உரிய நீதிமன்றங்களாகும். உயர்நீதி மன்றங்களின் அமைப்பு உயர்நீதி மன்றம் ஒவ்வொன்றும் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் பணியின் அளவிற்கு ஏற்ற வகையில் பல நீதிபதிகளையும் கொண்டிருக்கும். உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில ஆளுநர், உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம் அல்லாத சமயங்களில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் ஆலோசனைப்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு 10 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றியிருத்தல்வேண்டும்; அல்லது 10 ஆண்டுகள் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்திருத்தல் வேண்டும். இவர்களது பதவிக்காலம் 62 வயது. இவர்களுக்கான ஊதியம் இந்திய அரசியலமைப்புச்சட்டம், இரண்டாம் அட்டவணையில் உள்ளபடி தீர்மானிக்கப்படும். இவர்களது ஊதியம், ஓய்வூதியம், பிற உதவித் தொகைகள், விடுப்புகள் போன்றவை குறித்து மாற்றம் ஏதும் தேவையாக இருக்கும்போது, நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மாற்றியமைக்கலாம். உயர்நீதிமன்றங்களிடையே நீதிபதிகளின் மாற்றம் இந்தியக் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்துரையுடன் ஓர் உயர்நீதி மன்றத்திலிருந்து மற்றோர் உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதிகளை மாற்றலாம். இடைக்காலத் தலைமை நீதிபதி உயர்நீதி மன்றம் ஒன்றின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருக்கும்போது அல்லது தலைமை நீதிபதி இல்லாமையால் அவரது பணிகள் முடங்கிக் கிடக்கும்போது அப்பணிகளைச் செய்து முடிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் அந்நீதிமன்றத்தின் வேறொரு நீதிபதியை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதிபதியாக நியமிக்கலாம். கூடுதல் மற்றும் இடைக்கால நீதிபதிகள்: கூடுதல் நீதிபதி உயர்நீதி மன்றம் ஒன்றின் உடனடிப் பணி அதிகரிப்பு நிமித்தம் அல்லது தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கும் நிமித்தம் அந்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்று குடியரசுத் தலைவருக்குத் தோன்றுங்கால் அவர் இரண்டாண்டுகளுக்குக் குறைவில்லாத விதத்தில் தகுதி வாய்ந்தவர்களைக் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கலாம். இடைக்கால நீதிபதி உயர்நீதிமன்றம் ஒன்றின் தலைமை நீதிபதி அல்லாத வேறு நீதிபதி இல்லாமையின்போது அல்லது வேறு காரணங்களால் அவரது பணி நிறைவுறாதிருக்கும்போது, அல்லது அத்தகையவர் இடைக்காலத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் போது அவர் மீண்டும் தம் பணியில் வந்து ஈடுபடுகிறவரை, குடியரசுத் தலைவர் அவர் பணிகளை நிறைவேற்றுவதற்காகத் தகுதி வாய்ந்த ஒரு வரை இடைக்கால நீதிபதியாக நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் எக்காரணம் கொண்டும் 62 வயதைக் கடந்தவர்களாக இருத்தல் கூடாது. ஓய்வு பெற்ற நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியாதல் உயர்நீதிமன்றத்திற்குத் தேவைப்படுவதாக இருக்குமிடத்து பதவி ஓய்வு பெறு நீதிபதி ஒருவரைக் குடியரசுத்தலைவரின் முன் அனுமதியுடன் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாகப் பணியமர்த்திக் கொள்ளலாம். இவ்வாறு பணியமர்த்தப்படும் நீதிபதி மற்றைய உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் போன்று அனைத்து அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்றிருப்பார். உயர்நீதிமன்ற ஆள்வரை இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயற்படத் தொடங்குவதற்கு முன் உயர்நீதிமன்றங்கள் எத்தகைய அதிகாரங்களையும் ஆள்வரைகளையும் அனுபவித்து வந்தனவோ அத்தகைய அதிகாரங்களையும் ஆள்வரைகளையும் இப்போதும் கொண்டிருக்கும். எனினும், இவைகளை அரசியலமைப்பு மற்றும் சட்டமன்றச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுத்துதல் வேண்டும். நீதிப் பேராணை வழங்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 226–இன் கீழ் உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றது. இதன்படி ஒருவர், ஆகியவற்றில் ஒன்றன்கீழ் நீதி வழங்கிட மனுச் செய்யும் போது உயர்நீதிமன்றம் அவற்றின் மீது நீதிப் பேராணையை வழங்கும். கீழமை நீதிமன்றங்களைக் கண்காணித்தலுக்குரிய அதிகாரம் படைத் துறை அல்லது படைத் துறைத் தொடர்புடைய சட்டத்தின்கீழ்த் தோற்றுவிக்கப்பட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் தவிர உயர் நீதிமன்றம் தனது ஆள்வரைக்கு உட்பட்ட அனைத்துக் கீழமை நீதி மன்றங்களையும் மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. உயர்நீதிமன்றம் இவ்வாறு கீழமை நீதி மன்றங்களின் மீது கொண்ட அதிகார ஆளுகையினால் மேற்சுட்டியவற்றிற்குக் குறை ஏற்படுத்தாச் சூழ்நிலையில், 1) கீழமை நீதிமன்றங்களிலிருந்து தம்மிடத்திற்கு வழக்குகளை அனுப்பி வைக்கக் கேட்கவும், 2) அவற்றின் நடவடிக்கை மற்றும் நடைமுறைகள் குறித்த விதிகளை இயற்றவும், 3) நீதிமன்றப் பதிவேடுகள், கணக்குகள், பதிவுகள் போன்றவற்றை நீதிமன்ற அலுவலர்கள் எவ்வாறு வைத்திருத்தல் வேண்டும் என்பதைக் குறித்துரைக்கவும் செய்யலாம். உயர்நீதிமன்ற அலுவலர்கள், பணியாட்கள், செலவினங்கள் குறிந்து உயர்நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் உயர்நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாட்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவ்லது வேறு நீதிபதி அல்லது அவர்தம் அதிகாரம் பெற்ற அலுவலரால் நியமிக்கப்படுகின்றனர். உயர்நீதிமன்ற அலுவலர்களாக நியமிக்கப்படவிருக்கின்றவர்கள் உயர்நீதிமன்ற அலுவலோடு தொடர்பில்லாதவர்களாக இருக்கும்போது, மாநில ஆளுநர் அத்தகையவர்களை மாநிலத் தேர்வாணைக் குழு கருத்துரைப்படி நியமனம் செய்ய விதி செய்வார். உயர்நீதிமன்ற அலுவலர்கள், பணியாட்களின் பணி நிபந்தனைகள் மாநிலச் சட்டமன்றங்கள் இயற்றும் சட்டத்திற்கு உட்பட்டு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது வேறு நீதிபதி அல்லது தலைமை நீதிபதியின் அதிகாரம் பெற்ற அலுவலர் செய்யும் விதிகளுக்கு ஏற்ற முறையில் அமையும்; இயற்றப்பட்ட விதிகள், ஊதியங்கள், படிகள் (Allowances), விடுப்பு, ஓய்வூதியம், ஆகிவற்றின் தொடர்புடையனவாகவிருக்கும் போது, அதற்கு மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீதிமன்ற அலுவலர் மற்றும் பணியாட்களின் ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் போன்றவை மாநில இணைப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of the state) அளிக்கப்படுகின்றன. துணை நூல் Venkata Subba Rao, Manual of Indian constitutional Law, Law Academy Pvt. Ltd, Hydrabad, 1983.