இலங்கையில் தோன்றிய தமிழ் அறிஞர்களுள் ஒருவர். கொழும்பு நகரில் சிறந்து விளங்கிய பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மகனாக 16.4.1851–இல் தோன்றினார். சிவ நடனம் (Dance of Siva) என்னும் அரிய ஆங்கில நூலை இயற்றிய டாக்டர் ஆநந்த குமாரசாமியின் நெருங்கிய உறவினர். தொடக்கக் கல்வியை இலங்கையிலுள்ள இராயல் அகாடமியிலும் (Royal Academy) உயர்கல்வியைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர், தஞ்சையில் இலக்கணம் இராமசாமிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார். தாமே முயன்று வடமொழியையும் பயின்ற இவர் சொல்வன்மை பெற்று விளங்கினார். கொழும்பு நகரிலுள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்று 14 ஆண்டுகள் பணி புரிந்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை இவர் சிறப்பாக வெளியிட்ட பாங்கினை அறிந்த இங்கிலாந்து நாட்டிலுள்ள கல்விக் கழகம் இவருக்குச் சட்டப் பேரறிஞர் (Barrister) பட்டத்தினைத் தேர்வின்றி அளித்துச் சிறப்பித்தது. பின்னர் இலங்கைச் சட்ட சபையின் தமிழர்ப் பேராளராக இவர் நியமிக்கப் பெற்றார். இவர் தம் ஆயுட்காலம் வரை அப்பதவியிலிருந்து நாட்டுப்பணி புரிந்தார். எல்லா மக்களும் பாராட்டும் வகையில் இவர் பணி அமைந்தது. இவர் பணிகளுள் யாழ்ப்பாணத்திற்கு இருப்புப் பாதை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கதாகும். உயர்நீதிமன்றச் சட்ட அறிஞர் நாயகப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, நாட்டு மக்களின் நலங்கருதிப் பல சட்டங்கள் உருவாகத் துணையாக விளங்கினார். இவருடைய தொண்டுகளுள் இலங்கையிலுள்ள புத்த சமய ஆலயங்களின் சொத்துப் பாதுகாப்புப் பற்றிய சட்டம் நிறைவேறச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் ஆசுத்திரேலியாவைச் சார்ந்த ஆரிசன் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். மேலை நாட்டு வாழ்க்கை முறையில் ஈடுபட்டிருந்த இவர் தம் ஞானகுருவின் துணையால் தமிழர் பண்பாட்டுச் சிறப்புணர்ந்து, தமிழ் நாகரிக வாழ்வினை மேற்கொள்வாரானார். வேற்று நாட்டுப் பெண்ணை மணந்து வேற்று நாகரிகத்தில் ஈடுபட்டிருந்த இவர் தம்மையும் தம் குடும்பத்தையும் தமிழ் வாழ்வில் ஈடுபடுத்தித் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு புரிய முற்பட்டது. குறிப்பிடத்தக்க சிறப்பினதாகும். இவர் யாழ்ப்பாணத்து மக்களின் நலன் கருதி அங்குள்ள திருநெல்வேலியில் ஆண்கள் பயிலுவதற்குப் பரமேசுவரக் கல்லூரியும் மகளிர் பயிலுவதற்குச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியும் தோற்றுவித்தார். கொழும்பு கொச்சிக்கடையில் இவர் இலட்சக் கணக்கில் செலவு செய்து, பொன்னம்பல வாணேசர் திருக்கோயிலை உருவாக்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். அமெரிக்க அறிஞர்களின் அழைப்பிற்கிணங்கி இவர் அங்குச் சென்று அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பிற சபைகளிலும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இலங்கையில் முதன்முதலாக அமைந்த சட்ட சபைக்கு ஆங்கிலம் கற்றவர்களால் தேர்ந்தெடுக்கத்தக்க உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவர் தமிழில் பகவத்கீதை விரிவுரை, திருக்குறள் பாயிரம் இராமநாதீயம், செந்தமிழ் இலக்கணம், ஆத்திகுடி, மந்திரவிளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ‘மேலை நாடுகளில் ஆன்ம வித்தை’ (A Culture of the Soul among Western Nations) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கைத் தமிழர் நலங் காப்பதற்காகப் பன்முறை இங்கிலாந்து சென்று தொண்டாற்றித் திரும்பினார். ஆங்கில அரசினால் ‘சர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்ற இவர், இலங்கை மக்களுக்கு ஆற்றிய கல்வி, சமுதாய, அரசியல் தொண்டுகளை அரசு பாராட்டியது. இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னர் இவரது வெண்கலைச் சிலை நிறுவப் பெற்றுள்ளது. இவர் தம் 80-ஆம் வயதில் 26.4.1930–இல் காலமானார்.