யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிறித்தவத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். அழகுசுந்தரம் என்பது இவரது இயற்பெயரும் இளமைக்காலப் பெயருமாகும். யாழ்ப்பாணத்தில் கி.பி. 1873–ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகனாகப் பிறந்த இவர் இளமையிலேயே கிறித்துவ மதத்தைத் தழுவினார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். சென்னை அரசாங்கம், தமிழ் அகராதித் தொகுப்புக் குழு ஒன்றினை நியமித்தது. அக்குழுவில் இவரும் ஓர் உறுப்பினராக அமைந்து சீரிய தொண்டாற்றினார். அக்காலத்தில் அ. மாதவையா ‘பஞ்சாமிர்தம்’ என்னும் ஓர் இதனை நடத்தி வந்தார். அவ்விதழில் இவர் பல கட்டுரைகளை எழுதினார். இவர் மெசபெட்டோமியா போர்க்களம் சென்று திரும்பியவர். கிறித்து, தெய்வத்தினின்றும் இறங்- கிய மகன் அல்லர். மனிதராய்ப் பிறந்தே தெய்வ நிலை அடைந்தவர் என்னும் கருத்துடையவர். இக்கருத்தைப் பல இடங்களில் பேசியும் எழுதியும் வலியுறுத்தினார். இதனால் இவர் திருச்சபையினின்று விலக்கப் பெற்றார். இவர் திருவாசகத்தையும் சுவிசேடத்தையும் ஒருங்கிணைத்து வெளியிட்ட கருத்துகள் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனவென்று திரு.வி. கல்யாண சுந்தரனார் தம் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. இவரது சிறந்த ஆராய்ச்சி அறிவுக்குக் கிட்டிய பாராட்டாகும். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தார். ‘நான் ஏன் கிறித்துவன் ஆனேன்’, ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம் ஆகிய நூல்களைத் தமிழிலும், ‘லைப் ஆப் சீசசு’ (Life of Jesus) சீசசு ஆப் நாசரத்து (Jesus of Nazareth) ஆகிய நூல்களை ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பல தனிப்பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இவருக்குக் ‘கிங்சுபெரி’ என்ற வேறு பெயரும் உண்டு. இவர் கி.பி. 1941–ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.மு.த.