மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு இன்றியமையாதவை என்பதை வரலாற்று ஏடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அரசு (State) எங்ஙனம் உருவாகியது அல்லது உருவாக்கப்பட்டது என்பதற்குத் தத்துவ முறையான கோட்பாடுகள் பல உண்டு. ஆனால் காலப் போக்கில் ஏற்பட்ட சமுதாய அமைப்பே அரசு என்பதில் ஐயப்பாடில்லை. அரசு தோன்றியது முதல் இன்றுவரை மனிதன் அரசியல் உணர்வுகளால் உந்தப்பட்டவனாய், மக்கள் வாழ்வு நலம்பெற, செழிப்புற அரசு எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திப்பவனாய் வாழ்ந்து வந்துள்ளான். மனிதச் சிந்தனையில் விளைந்த அரசியற் கருத்துகள் பலப்பல. அரசியல் ஆய்வுக் கூடமாகப் பண்டைக் கிரேக்கம் விளங்கியது. மலைகள் நிறைந்த கிரேக்கத்தில் தனித்தியங்கும் நகர அரசுகள் (City States) தோன்றவாயின. எனவே, அவ்வரசுகள் ஒற்றுமையுணர்வோடு ஒன்றுபட்டு வாழ்வது அரிதாயிற்று. முதற்கண் முடியாட்சி (Monarchy) அமைக்கப்பெற்று, பின்னர்ச் சிலராட்சி (Oligarchy) தோன்றி, அவ்வாட்சி மக்கள் ஆதரவு பெற்ற தனிப்பட்டவர்களால் கவிழ்க்கப்பட்டுத் தனியார் ஆட்சி (Tyranny) உருவாகி இறுதியில் மக்களாட்சி (Democracy) நிறுவப்பட்டது. முடியாட்சி என்பது மன்னராட்சியாகும். சிலராட்சி என்பது செல்வம் கொழித்த உயர்குடி மக்கள் சுயநலத்தைக் கருதி ஆட்சி புரிவதாகும். தனியார் ஆட்சியினை ஆங்கிலத்தில் ‘டிரன்னி’ (Tyranny) என்பார்கள். பொதுவாகக் கூறின், அத்தகைய ஆட்சி கொடுங்கோலாட்சியைக் குறிக்கும். ஆனால் கிரேக்கத்தில் சிலராட்சியைக் கவிழ்த்துத் தனியார் ஆட்சியை நிறுவியவர்கள் கொடுங்கோலர் அல்லர். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய விதந்தான் முறைகேடானதே தவிர அவர்கள் ஆட்சிமுறை மக்கள் நலனைப் பேணிக்காக்கும் ஆட்சியாகவே விளங்கியது. எனினும், படை பலத்தையே அவ்வாட்சி நம்பிருந்ததால் அதனை மக்கள் வெறுக்கலாயினர். இவ்வண்ணம் மக்களாட்சி மலரத் துவங்கியது. கிரேக்கத்தில் சிறந்தோங்கி விளங்கிய நகர அரசுகள் இசுபார்ட்டா (Sparta), ஆதென்சு (Athens) என்பவையாகும். இவ்விரு அரசுகளும் கிரேக்க அரசியல் வானில் இரு துருவங்களாக விளங்கின. முடியாட்சி, உயர்குடியாட்சி (Aristocracy), மக்களாட்சி இம்மூன்று ஆட்சி முறைகளின் இயல்புகளைக் கொண்டதாக இசுபார்ட்டா செயல்பட்டது. இதற்கு மாறாக ஆதென்சு நகர அரசு மக்களாட்சியின் சின்னமாகச் சிறப்புற்றிருந்தது. குறிப்பாகக் கி.மு. 5–ஆம் நூற்றாண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த பெரிக்கிளீசு (Pericles) காலத்தில் மக்களாட்சி ஆதென்சில் உச்சக் கட்டத்தை அடைந்தது. இசுபார்ட்டாவில் குடிமக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார்கள். ஆதென்சு மக்கள் பல்வேறு துறைகளில் கலைத்திறன் படைத்தவர்களாக இருந்தனர். அனைத்துக்குடி மக்களும் பங்கேற்கும் நேர்முக மக்களாட்சியாக ஆதென்சு சிறப்புற்று விளங்கியது. என்றாலும் மகளிரும் அடிமைகளும் அரசியலில் பங்கேற்க உரிமைகள் பெற்றிருக்கவில்லை. நல்ல குடிமகன் என்பான் ஆளுகின்ற தகுதி பெற்றவனாகவும், பிறருடைய ஆட்சிக்குட்பட்டுக் கட்டுக்கோப்புடன் செயற்படும் தகுதி பெற்றவனாகவும் இருத்தல் வேண்டும் என்ற அரிய கோட்பாட்டினை எடுத்துரைத்தவர்கள் பண்டைக் கிரேக்க மக்களாவர். கிரேக்கத்தில் தம்மை அரசியல் மேதைகள் என முதன்முதல் பறைசாற்றிக் கொண்டவர்கள் சோபிசுடுகள் (Sophists) ஆவர். இவர்கள் கி.மு. 5–ஆம் நூற்றாண்டில் ஆதென்சு நகரத்தில் வாழ்ந்த சிந்தனையாளர்கள் ஆவர். மரபுவழிச் சமய, அறநெறிக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிந்து மனிதன் கட்டுப்பாடற்ற உரிமையுடன் வாழ்ந்து மேம்பாடடைய வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார். ஆதென்சு நகரத்தைச் சார்ந்த சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீசு ஆவார். ‘வாதமுறைப்படி உண்மையை ஆய்தல் வேண்டும்; ஐயம், வினா, விடை, அறிவுரை என்னும் முறையைப் பின்பற்ற வேண்டும்’ என்று ஆதென்சு நகர இளைஞர்கட்கு அறிவுரை புகட்டினார். அவர்தம் கருத்துகள் சோபிசுடுகளின் கருத்துகளுக்கு மாறானவையாகும். அரசு என்பது இயல்பாக உருவாகிய தவிர்க்க முடியாத அமைப்பாகும். சட்டம் புனிதத் தன்மை வாய்ந்தது. நிலையான தன்மை பெற்றது. அதிகாரம் என்பது என்றென்றும் நிலைத்திருக்கும் உரிமைக்குட்பட்டதாகும். அறிவிற் சிறந்தவர்கள் ஆட்சி செலுத்தும் பொதுநலக் கருவியாக அரசாங்கம் விளங்குதல் வேண்டும். எழுத்து வடிவில் சாக்ரட்டீசு தம் அரிய கருத்துகளை விட்டுச் செல்லவில்லை என்றாலும், அவர்தம் கருத்துகளை உலகறியச் செய்யச் செனோபன் (Xenophon) பிளேட்டோ (Plato) ஆகிய இரு மாணவர்களைப் பெற்றிருந்தார். பிளேட்டோ இயற்றிய குடியரசு (The Republic) என்னும் நூல் மிக்கபுகழ் பெற்றதாகும். ஒழுங்கு என்பது ஒவ்வொரு குடிமகனும் குடியுரிமைக்குரிய தம் பணிகளைச் செவ்வனே செய்வதாகும் என்றார். ஒரு குடிமகனின் தலையாய கடமை நாட்டிற்குத் தன்னை உரிமைப்படுத்துதலாகும். பிளேட்டோ வரைந்த குடியரசில் ஆட்சியாளர்கள் தன்னலமற்றவர்கள் தமக்கென மனைவி, மக்கள் சொத்துகளைப் பெற்றிராதவர்கள். நல்லாட்சி புரியும் எண்ணம் அதற்குரிய கல்வியறிவைப் பெற்றவர்கள். இவ்வகையில் பொதுவுடைமைக் கருத்துகளை அன்றே வெளியிட்டவர் பிளேட்டோ என்பது கருதப்படுகிறது. பிளேட்டோவின் தலை சிறந்த மாணவர் அரிசுடாட்டில் (Aristotle) ஆவார். ஆனால் ஆசிரியர் கூறிய கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர். அவர் எழுதிய அரசியல் (Politics) என்னும் நூல், பிளேட்டோவின் குடியரசு நூலின் இலக்கியச் சிறப்பைப் பெற்றிராவிட்டாலும், அரசியல் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. மனிதன் அரசியல் பிராணி என்னும் தத்துவத்தைப் போதித்த அறிஞர் அரிசுடாட்டில், எந்த மனிதனும் ஓரரசின் கட்டுக்கோப்பிற்குள்தான் சிறப்புற வாழ்ந்திட முடியும் என்றார். ஆட்சியாளர்கள் மனைவி மக்களைப் பெற்றிருத்தல் கூடாது. தனிச்சொத்துகள் கொண்டவர்களாகயிருத்தல் கூடாது என்ற பிளேட்டோவின் கருத்துகளை அரிசுடாட்டில் ஏற்க மறுத்தார். என்றாலும் கல்வியறிவின் முதன்மைத் தன்மையைப் பிளேட்டோவைப் போன்றே வற்புறுத்தினார். அரசு ஒருவராட்சி, சிலராட்சி, பலராட்சி என மூவகைப்படும். இவ்வாட்சி முறை ஒவ்வொன்றும் நல்லாட்சியாகவும், அதற்கு நேர்மாறானதாகவும் அமையலாம். புரட்சி தோன்றுவதற்கு முதன்மையான காரணம் சமத்துவம் இல்லாமையாகும். இவ்வரிய கருத்துகள், கிரேக்க இயல்புடையனவாகவும், எங்கும் எப்பொழுதும் இன்றுவரை ஒப்புக் கொள்ளக்கூடியனவாகவும் திகழ்கின்றன. எபிக்யூரசு (Epicurus, கி.மு. 312–270) ஆதென்சு நகரத்தைச் சார்ந்தவர் அல்லர். இவர் சேமாசு என்னும் தீவில் பிறந்தவர். ஆனால் தம் பதினெட்டாம் வயதில் ஆதென்சை அடைந்து, அந்நகரைத் தம் பிறப்பிடமாக்கிக் கொண்டு. அங்கே தம் கருத்துகளைப் பரப்பினார். அரசியலில் மக்கள் பங்கேற்பதை இவர் விரும்பவில்லை. இன்பம்தான் மனிதனின் குறிக்கோள். மனித இன்பத்திற்கு வழிவகுக்கும் கருவி அரசாகும். ஆட்சிமுறை வேறுபாடுகள் முதன்மை வாய்ந்தவை அல்ல. இக்கருத்துகளை மேற்கொண்ட எபிக்யூரியர்கள் நாளடைவில் அறநெறி தவறியவர்களாய்ச் சமுதாயக் கடமையுணர்வு இழந்தவர்களாய்ச் சீரழிந்தனர். சினோ (Zeno, கி.மு. 340–260) என்பவர் இசுடாய்க்குகளின் (Stoics) தலைவர். எபிக்யூரிசைப் போன்று ஏதென்சு நகரத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றாலும், அவரைப் போன்றே தம் கருத்துகளை அந்நகரில் பரப்பியவர். சைப்ரசு தீவில் பிறந்த சினோ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கோட்பாட்டிற்கு இணங்க மனித இனம் ஒரே குலம் என்றும், மனிதனின் குறிக்கோள் கடமையேயன்றி இன்பம் அன்று என்றும், மக்கள் சமத்துவம் வாய்ந்தவர்களாகயிருத்தல் இன்றியமையாதது என்றும், அரசு இயல்பான அமைப்பாகும் என்றும், இயற்கைச் சட்டம் என்பதொன்று உண்டு என்றும், அச்சட்டமே நிலையானது உயர்வானது என்றும் கற்பித்தார். இத்தகைய அரசியற் கருத்துகள் உரோமானிய அறிஞர்களிடையே பரவலாயின. உரோமானிய இசுடாய்க்குகளில் தலை சிறந்தவர் செனிக்கா (Seneca கி.பி. 3–65) என்பவராவார். இத்தாலியில் சிறுநகரமாக அமைந்திருந்த உரோம் பிற்காலத்தில் (கி.மு. முதல் நூற்றாண்டில்) பெரும் பேரரசின் தலைநகரமாகியது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களையும் உள்ளிட்ட பேரரசாக உரோமானியப் பேரரசு விளங்கியது. இப்பரந்து விரிந்த பேரரசு அனைத்திலும் அமைதியை நிலைநாட்டிய பெருமை பண்டை உரோமாபுரியைச் சாரும். ஒருவரிடத்திலோ ஓரிடத்திலோ அத்துணை அதிகாரமும் குவிக்கப்பட்டிருந்தலாகாது என்றும், அரசு பதவியேற்றிருப்பவர்கள் நீண்ட காலம் பதவி வகித்தலாகாது என்றும், அதிகாரம் வரம்புடையதாக இருத்தல் வேண்டும் என்றும் உரோமானியர்கள் கருதினார்கள். சட்டம் மூவகைப்படும். முதலாவது, எழுதப்படாத சட்டம். இது இயற்கைச் சட்டம் எனப்படும். இரண்டாவது, அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும். மூன்றாவது, உரோமானியப் பேரரசில் வாழும் எல்லா மக்களையும் கட்டுப்படுத்துவது. இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சட்டக் கருத்து, பின்னர்ப் பன்னாட்டுச் சட்டத்திற்கு வித்திட்டது. உரோமானிய அரசியல் தத்துவ மேதைகளில் முதன்மையானவர் எனக் கருதப்படும் பாலிபியசு (Polybius – கி.மு. 205–122) என்பார் ஒரு கிரேக்கர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் உரோமானியப் பேரரசின் வளர்ச்சியினையும், உரோமானிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகளையும், அச்சட்டத்தின் ஈடு இணையற்ற நிலைத் தன்மையினையும் விவரித்துள்ளார். ஆனால் அவர் இறக்கும் போது அவர் போற்றிப் புகழ்ந்த உரோமாபுரி உட்பூசலுக்கும் கலவரத்திற்கும் ஆளாகியது. மாவீரன் சூலியசு சீசர் (Julius Caesar) வாழ்ந்த காலத்தில் குடியரசுக் கோட்பாட்டினைத் தீவிரமாகப் பறைசாற்றியவர் சிசரோ (Cicero) ஆவார். இவர் உரோமானியக் குடியரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பினை விளக்கினார். உரோமானியக் குடியரசின் சீர்கேடுற்ற நிலைக்கு முதன்மையான காரணமாக இருந்தவர்கள் மக்களை மயக்கும் தலைவர்களாக விளங்கிய மரையசும் (Marius) சீசரும் போன்றவர்களாவர் என்று குறிப்பிட்டார். அரசியற் செயல்களும், சட்டங்களும் அறநெறியையொட்டியனவாகவே அமைந்திருத்தல் வேண்டுமென்றார். அவர் வலியுறுத்திய சட்டக் கருத்துச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டின் அடித்தளமாக விளங்கியது. உரோமானியப் பேரரசு சிதைந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ மதம் பரவியது. கி.பி. 313–ஆம் ஆண்டு உரோமானியப் பேரரசர் கான்சுடன்டைன் (Constantine) சட்ட முறையில் கிறித்தவ மதத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதுகாறும் உரோமானியப் பேரரசில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைக்காலம் முழுவதிலும் இயற்கைச் சட்டமும், தெய்விகச் சட்டமும் ஒரு பொருளின் இருமுகங்களாகக் கிறித்தவ அறிஞர்களால் கருதப்பட்டன. அச்சட்டத்தை மனிதனுடைய அறிவு ஒன்றை மட்டும் கொண்டு தெரிந்துகொள்ள முடியாது. அது இறைவனால் வெளிப்படுத்தப்படுவதாகும். அதனை ஆகமங்கள் வாயிலாக மக்கள் உணர்வர். தெய்விகத் துறையில் திருச்சபை, தன்னைப் பேராளர் என்று கருதுகிறது. சமயச் சார்பற்ற உலகியல் விவகாரங்களில் புனித உரோமானியப் பேரரசு (Holy Roman Empire) தன்னைப் பேராளர் என்று கருதுகிறது. புனிதர் அகசுடின் (St. Augustine) இறைநகர் (City of God) என்னும் நூலில் மண்ணகருக்கும் விண்ணகருக்கும் வேறுபாடு கண்டார். அவர் பேரரசரது அதிகாரம், இறைவனால் அளிக்கப்பட்டது என்றும், மக்கள் பேரரசருக்கு அடிபணிந்திருத்தல் வேண்டும் என்றும், அதே நேரத்தில் பேரரசர் சமயச் சார்புடைய அதிகாரங்களைப் பெற்றவரல்லர் என்றும் குறிப்பிட்டார். உண்மையில் இடைக்காலம் முழுவதும் போப்பின் அதிகாரம் உயர்ந்ததா, பேரரசின் அதிகாரம் உயர்ந்ததா என்ற விவாதம் நடைபெற்றது. பாதுவாவைச் சார்ந்த மார்சிலியசு (கி.பி 1270–1342) என்பார், டிபென்சார் பாசிசு (Defensor Pacis, கி.பி. 1324) என்னும் நூலில், திருச்சபைக்கு முழு அதிகாரம் உண்டு என்னும் கொள்கையை மறுத்தார். திருச்சபை என்பது, அரசின் பல்வேறு துறைகளில் ஒன்றாகும் என்று கருதினார். அக்கருத்திற்கு மாறாக இத்தாலிய அறிஞர் தாந்தே (Dante, 1265–1361) டி மானர்க்கியா (De Monarchia) என்னும் நூலில் பேரரசிற்குச் சமயச் சார்பற்ற விவகாரங்களில் முழு அதிகாரம் உண்டு என்றாலும், அவ்வதிகாரம் இறைவனிடமிருந்தே நேரடியாகப் பெறப்படுகிறது என்றும், பேரரசின் அதி- காரத்திற்கிணையாகப் போப்பிற்குச் சமய விவகாரங்களில் முழு அதிகாரம் உண்டு என்றும் குறிப்பிட்டார். இடைக்கால அரசியல் தத்துவ மேதைகளில் சிறப்பு வாய்ந்தவர் புனிதர் தாமசு அக்வைனசு (St. Thomas Aquinas, கி.பி. 1227–1274) ஆவார். இவர் இயற்றிய இறையியற் களஞ்சியம் (Summa Theologica) என்னும் நூலில், மனிதர்களால் இயற்றப்படும் சட்டங்கள் தெய்விகச் சட்டங்களினின்றும் தோன்றுபவை என்று கூறினார். ஆயினும், சாலிசுபரியைச் சேர்ந்த சான் (John of Salisbury) கூறியதுபோல், கொடுங்கோலனைக் கொல்வதில் குற்றமில்லை என்று கருதவில்லை. கிரேக்கப் பேரறிஞர் அரிசுடாடிலின் கருத்துகளையும், கிறித்தவச் சமயக் கருத்துகளையும் ஒருங்கிணைத்த வண்ணம் அரசியற் கருத்துகளை எடுத்துரைத்த பெருமை அவரைச் சாரும். இடைக்கால ஐரோப்பாவில் மறுமலர்ச்சி (Renaissance) தோன்றிய காலத்தில் இத்தாலியைச் சார்ந்த மாக்கியவெல்லி (Machiavelli, கி.பி. 1469–1527), “தி பிரின்ஸ்” (The Prince) என்னும் புகழ் மிக்க நூலை இயற்றினார். அவர் அந்நூலில், அரசன் என்பான் தன் குறிக்கோளை அடைய எவ்வித வழிமுறைகளையும் கடைப்பிடிக்கலாம் என்று எடுத்துரைத்தார். சிங்கத்தின் கொடூரத்தையும் குள்ளநரியின் நயவஞ்சகத்தையும் அரசன் பெற்றிருத்தல் வேண்டும் என்றார். எனவே அவர் இயற்றிய நூல் கொடுங்கோலரின் வேதம் எனப் பழிக்கப்பட்டது. அன்று சீர்கேடுற்ற இத்தாலி ஒன்றுபட, முன்னேற்றப் பாதையில் செல்ல மாக்கியவல்லி அக்கருத்துகளை வலியுறுத்தினார். ஆனால் சமயத்தையோ அறநெறியையோ அவர் பழிக்கவில்லை. அன்றைய இத்தாலியில் சமய, அறநெறிச் சார்புடைய கோட்பாடுகளின் அடிப்படையில் அரசன் செயல்பட்டானேயானால், அவன் கொண்ட இலட்சியத்தை அடைய இயலாது என்பது அவர் கொள்கை. இக்காலத்தில் அரசு முற்றிலும் சமயச் சார்பற்ற பண்புகளைப் பெற்றிருப்பதாகும் என்ற கருத்தினைக் கூறியிருப்பவர்களில் மாக்கியவல்லியே முதல்வர். அவர் கருத்துகள், அரசியல் துறையில் தேசியக் கோட்பாடு வளரப் பெரிதும் துணை புரிந்தன. அரசுகள் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் தோன்றலாயின. அத்துடன் இறைவழி உரிமைக் கோட்பாடும் (Divine Right Theory) தோன்றிற்று. அதாவது அரசன் என்பான் இறைவனின் பேராளனாக மண்ணுலகில் ஆட்சிபுரிவான். இதன் கருத்து மக்களுக்கோ மக்கள் பிரதிநிதித்துவ மன்றத்திற்கோ அவன் கட்டுப்பட்டவனல்லன் என்பதாகும். பதினாராம் நூற்றாண்டின் அரசியற் கொள்கை, அக்கால ஐரோப்பாவில் தோன்றிய சமயச் சீர்திருத்தத்தையொட்டியதேயாகும். அவ்வியக்கத்தைத் தொடங்கியவர் மார்ட்டின் லூதர் (Martin Luther கி.பி. 1483-1546) ஆவார். அரசாங்கத்திற்கு அடி பணிந்து நடக்க வேண்டியது மக்களின் கடமையென்றும், ஒவ்வொரு நாட்டிலும் திருச்சபையின் அதிகாரமும் அரசியல் ஆட்சியும் தனிப்பட்ட முறையில் வேறுபட்டிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். ஆனால் மதச் சீர்திருத்தமே இலரது முதன்மையான நோக்கமாகும். செருமனியில் நடைபெற்ற சமயப் புரட்சிக்கு வழி வகுத்தவர் இவரேயாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமயச் சீர்திருத்தக் காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய தலைவர்களில் சிறந்தவர்கள் சுவிங்லி (Zwingli), கால்வின் (Calvin) என்பவர்கள் ஆவர். அரசியலும் சமயமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது சுவிங்லின் கருத்தாகும். சுவிட்சர்லாந்தில் நடப்பிலிருந்த குடியரசு போன்ற ஆட்சி முறையைப் பரவச் செய்வதே அவர் குறிக்கோளாயிற்று. கால்வின் அறிவுரைகள் அரசியற் கொள்கைகளைப் பெரிதும் தாக்கின. சமய வழியிலும் அரசியற்றுறையிலும் கட்டுப்பாடுற்ற வாழ்வின் பெருமையை எடுத்துக் காட்டினார். பிரபுக்கள் ஆட்சியை அவர் விரும்பியபோதிலும், கொடுங்கோலாட்சியை அகற்ற மக்களுக்குரிமையுண்டென அவர் எடுத்துரைத்தார். திருச்சபையில் மக்கள் ஆட்சியை அவர் ஆதரித்தார். இக்கருத்து அரசாங்கத் துறையிலும் பரவிற்று. பொதுவுடைமைக் கருத்துகள் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் ஆனபாட்டிசுடுகள் (Anabaptists} என்பவர்களால் செர்மனி, நெதர்லாந்து முதலிய நாடுகளில் பரப்பப்பட்டன. இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சர் தாமசு மோர் (Sir Thomas More, கி.பி. 1480–1535), பொதுவுடைமைக் கருத்தைக் கொண்ட இலக்கியல் அரசு (Utopia, கி.பி. 1516) என்ற கற்பனை நூலை இயற்றினார். பொதுவுடைமையை மேற்கொண்ட ஒரு புதுநாடு எவ்விதம் செயல்பட வேண்டுமென்று தம் நூலில் விளக்கினார். மன்னனின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டுமென்று தச்சு நாட்டவரான இராசுமசு (Erasmus, கி.பி. 1466–1536) எடுத்துரைத்தார். ஆனால் பிரெஞ்சு நாட்டுக்காரரான சான் போதான் (Jean Bodin, கி.பி. 1530–1596) அரசு இறைமைக் கோட்பாட்டை விளக்கி, அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் உரிமை மக்களுக்கில்லை என்றார். அரசியல் ஒப்பந்தக் கொள்கைகள் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவின. குறிப்பாக இங்கி- லாந்து நாட்டவர்களான தாமசு ஆப்சு (Thomas Hobbes, கி.பி. 1588–1679), சான் லாக்கு (John Locke, கி.பி. 1632–1704) ஆகியோரும், பிரெஞ்சு நாட்டவரான உரூசோ (Rousseau, கி.பி 1712–1778) என்பாரும் அரசியல் ஒப்பந்தக் கொள்கையை விளக்கியவர்களுள் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆவர். ஆப்சு (Hobbes), லெவையதன் (Leviathan, கி.பி. 1651) என்னும் நூலில், அரசியல் உடன்பாட்டுக் கொள்கையின் மூலம் மன்னனின் வல்லாட்சிக்கு துணை நல்கினார். அரசு ஏற்படுவதற்கு முன்னால், மனிதன் இயற்கை நிலையில் இருந்தான். அந்நிலை உயிருக்கும் உடைமைக்கும் உறுதியளிக்க முடியாத போர் நிலையாக இருந்தது. அந்த இழிநிலையிலிருந்து விடுபட மக்கள் சமுதாய உடன்படிக்கை செய்து கொண்டு அவ்வுரிமைகளை எல்லாம் நாடாளும் தலைவனிடம் ஒப்புவித்தனர் என்பது ஆப்சு எடுத்துரைத்த கோட்பாடாகும். இசுடுவர்ட்டு மன்னரான முதலாம் சார்லசுக்கும் நாடாளுமன்றத்திற்குமிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரின் விளைவாக மன்னர் தோல்வியுற்றுத் தூக்கிலிடப்பட்ட போது ஆப்சு தம் நூலை இயற்றி, மன்னரின் வல்லாட்சியினை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர்க் கி.பி. 1688–ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இரத்தம் சிந்தாப் புரட்சியொன்று நடைபெற்றது. இரண்டாம் சேம்சு மன்னனின் வல்லாட்சிப் போக்கைக் கண்டித்து அந்நாட்டு நாடாளுமன்றம், ஆலந்து அதிபரான வில்லியம் என்பவரை மன்னராக முடி சூட்டியதே அப்புரட்சியாகும். அப்புரட்சிக்குத் துணை நின்று குடிமுறை அரசாங்கம் (Civil Government, கி.பி. 1690) என்ற தலைப்பில், இரு நூல்களை இயற்றினார். அரசியல் உடன்படிக்கையின் இன்றியமையாமையை எடுத்துரைத்த இலாக்கு (Locke) மக்கள் தம் உரிமைகள் அனைத்தையும் யாரிடமும் ஒப்படைத்துவிட மாட்டார்களென்றும், முறைகேடான ஆட்சியினைக் கவிழ்க்குமுரிமையினை அவர்கள் பெற்றிருப்பார்களென்றும் வலியுறுத்தினார். பிரெஞ்சு அரசியல் தத்துவ மேதையான உரூசோ தாம் இயற்றிய சமூக ஒப்பந்தம் (Social Contract, கி.பி. 1762) என்ற நூலில், சுதந்திரத்துடன் பிறந்த மனிதன் எங்குப் பார்ப்பினும் விலங்கிடப்பட்டவனாகக் காணப்படுகிறான் என்று சுட்டிக்காட்டினார். அரசியல் ஒப்பந்தக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட உரூசோ, மக்கட் பொதுவிருப்பம் (General Will) என்ற கருத்தின் சிறப்பினை விளக்கினார். குடியரசே மேன்மையான ஆட்சிமுறையென்பது அவரது கருத்தாகும். உரூசோ இயற்றிய நூல் கி.பி. 1789–ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் வேதநூலாக அமைந்தது என்பர். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் மான்டெசித்து (Montesquieu, கி.பி. 1689–1755) என்பாரும் தலைசிறந்தவராவர். அவர் இயற்றிய சட்டங்களின் சாரம் (Spirit of the Laws கி.பி. 1742) என்ற நூலில், அதிகாரப் பிரிவினைக் கொள்கையை விளக்கினார். அரசு அதிகாரம் நிருவாகப் பகுதி, சட்டமியற்றும் பகுதி, நீதிப்பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டுமென்றும், அதற்கு மாறாக எல்லா அதிகாரங்களும் ஒருவரிடத்தோ ஓர் அமைப்பினிடத்தோ குவிக்கப்பட்டிருக்குமாயின் தனி மனிதனின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் நம்பினார். பிரான்சில் நிலவிய அரசியல் சூழ்நிலையே அவர் கருத்துக்குப் பின்னணியாக அமைந்திருந்தது. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலத்தே செருமனியில் இமானுவெல் கான்ட் (Emmanuel Kant, கி.பி. 1724–1804) கருத்தியற் கொள்கையைப் (Idealism) பரப்பினார். அவர் உரூசோ, மான்டெசுக்யூ ஆகியோரின் கருத்துகளை ஒருங்கிணைக்கப் பெரிதும் பாடுபட்டார். அரசியற் கலை, நீதி நெறியைத் தழுவியது என்பதுதான் அவருடைய தலைசிறந்த கொள்கையாகும். இங்கிலாந்தில் மூவர் சீர்திருத்தக் கொள்கையைப் பரப்பினர். எட்மண்ட் பர்க் (Edmund Burke, கி.பி. 1729–1797), அமெரிக்கக் குடியேற்ற நாட்டிற்கு ஆதரவு அளித்தும், பிரெஞ்சுப் புரட்சியைக் கண்டித்தும் தம் கருத்துகளை எடுத்துரைத்தார். சீர்திருத்த மாற்றங்களை அவர் விரும்பிய போதிலும், முடியாட்சி போன்ற மரபுவழி அமைப்புகளைத் தகர்த்தெறியும் கருத்துகளை அவர் ஏற்க மறுத்தார். வில்லியம் காட்வின் (William Godwin, கி.பி. 1756–1836) தனியுரிமைக் கோட்பாட்டினைக் கொண்டவர். செரிமி பெந்தம் (Jeremy Bentham, கி.பி. 1748–1832) பயனெறிமுறைக் கோட்பாட்டை (Utilitarianism) விளக்கியவர். பெரும்பான்மையான மக்களின் மகிழ்ச்சியைப் பெருமளவில் போற்றுவதே அரசின் கடமையென எடுத்துரைத்தார். அக்கோட்பாட்டின் அடிப்படையிலேதான் அரசை மதிப்பிடவேண்டுமென்பது அவர் கருத்தாகும். தனியுரிமைக் கோட்பாடு (Individualism) 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முக்கிய ஐரோப்பிய அரசியற் கருத்தாக விளங்கியது. அம்போல்ட்டு (Humboldt, கி.பி. 1769–1835) என்ற செருமானியர், அரசாங்கம் தவிர்க்க முடியாத தீங்கென்றும், உயிரையும் உடைமையையும் கட்டிக்காப்பதே அதன் தலை சிறந்த பணியென்றும், கட்டுப்பாடற்ற தனியுரிமை மானிட வளர்ச்சிக்கு இன்றியமையாததென்றும் கூறினார். குறிப்பாக இங்கிலாந்தில் பெந்தம் (Bentham} என்பாரின் கொள்கைகள் பின்பற்றப்பட்டன. சேம்சு மில் (James Mill, கி.பி. 1773–1836) மக்கள் விழிப்- புடன் இருக்க வேண்டிய தேவையினையும் நிருவாகத் துறையைக் கட்டுப்படுத்தும் ஓரவை கொண்ட பிரதிநிதித்துவ மன்றத்தின் தேவையையும், வாக்குப்பெட்டியில் வாக்களிக்கும் முறையின் சிறப்புத்தன்மையினையும் எடுத்துரைத்தார். சேம்சு மில்லின் மகன் சான் இசுடுவர்ட் மில் (John Stuart Mill, கி.பி. 1806–1873) பயனெறி முறைக் கோட்பாட்டைக் கொண்ட தனியுரிமைக் கொள்கையாளர். அவர் சுதந்திரம் (On Liberty, கி.பி. 1759), பிரதிநிதித்துவ அரசாங்கம் (Representative Goverament, கி.பி. 1861) என்னும் நூல்களை இயற்றினார். எர்பெர்ட் இசபென்சர் (Herbert Spencer, கி.பி. 1802-1903) மனிதனும் அரசும் (Man Versus the State, கி.பி. 1884) என்னும் நூலில் தனியுரிமைக் கோட்பாட்டை வலியுறுத்தினார். காண்டின் (Kant) கருத்தியற் கொள்கையை பிக்டே (Fichte, கி.பி. 1762–1814) ஏகல் (Hegel, கி.பி. 1770–1831), கிரீன் (Green, கி.பி. 1848–1923) ஆகியோர் பரப்பினர். பிக்டே மக்கள், இறை ஆகிய இரண்டினையும், சமுதாய ஒருமைப்பாட்டினையும் வலியுறுத்தினார். அரசு கடவுள் தன்மை கொண்டது; அதற்குப் பணிந்திருப்பது உண்மையான சுதந்திரமாகும் என்ற கருத்துகளை ஏகல் வலியுறுத்தினார். செருமானியரான ஏகலின் கொள்கையை இங்கிலாந்தில் பின்பற்றியவர்களில் தலைசிறந்தவர்கள் கிரீன் (Green), பொசான்கே (Bosanquet) ஆகிய இருவர். வலிமைக்கு மாறாத மக்களின் விருப்பம் அரசின் அடித்தளமாக விளங்கவேண்டும் எனக் கிரீன் வலியுறுத்தினார். ஏகலை மிகவும் பின்பற்றிய பொசான்கே அரசுக்கு எதிராகவோ புறம்பாகவோ எதுவும் இருக்க முடியாது என்றார். தனியுரிமைக் கோட்பாடு பரவிய கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பொதுநலக் கூட்டுத் தத்துவம் (Socialism) மூவகையில் தோன்றலாயிற்று. முதலில் பிரான்சு நாட்டைச் சார்ந்த செயினட் சைமன் (Saint Simon, கி.பி. 1760–1825) நிலம், உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுச் சொத்தாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். பொரியர் (Fourier), புரௌதான் (Proudhon), லூயி பிளாங்க் (Louis Blanc) ஆகியோர் அத்தகைய கருத்தினைப் பரப்பினர். இரண்டாவது வகையான பொதுநலக் கூட்டுத் தத்துவத்தினை இங்கிலாந்தில் காணலாம். மோர், ஆரிங்டன் (Harrington) ஆகியோர் இயற்றிய நூல்களிலும் சார்டிசுடுகளின் (Chartists) கோரிக்கைகளிலும் பொதுநலக் கூட்டுத் தத்துவத் தன்மையினை உணர முடிகிறது. அதேபோன்று செருமனியில் காரல் மார்லோ (Karl Marlo) இராட்பெர்டசு (Rodbertus), பெர்டினாண்டு லெசால் (Ferdinand Lassale) ஆகியோர் அத்தகைய தத்துவக் கோட்பாட்டினை இயம்பினர். மேற்கூறிய மூவகைத் தன்மைகளும் காரல் மார்க்சு (Karl Marx, கி.பி. 1818–1883) பறைசாற்றிய பொதுவுடைமைக் (Communism) கொள்கையில் ஒருங்கிணைந்தன. மார்க்சும் அவரது நண்பர் எங்கெல்சும் (Engels) கூட்டாக இயற்றிய பொதுவுடைமை அறிவிப்பில் அக்கொள்கை முதன்முதல் விரித்துரைக்கப்பட்டது. பின்னர் அவரது மூலதனம் (Capital) என்னும் நூலில் பொதுவுடைமைக் கொள்கையின் தத்துவ விரிவாக்கம் காணப்படும். 1917–ஆம் ஆண்டு லெனின் தலைமையிலான போல்செவிக் (Bolshevik) புரட்சிக்குப்பின் உருசியா உலகிலேயே முதல் பொதுவுடைமை நாடாகத் தோற்றம் பெற்றது. பொதுவுடைமை, முதலாளித்துவக் கொள்கைகளின் வேறுபாடு ஒருபுறமிருக்க, முதலாம் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தாலியில் பாசிசக் (Fascist) கொள்கையும், செருமனிபில் நாசிசக் (Nazism) கொள்கையும் உருவாயின. பாசிச இத்தாலியில் முசோலினி (Mussolini) எல்லாம் அரசுக்குட்பட்டதாயிருத்தல் வேண்டும் என்றும், எதுவும் அரசுக்கு எதிராகவும், அதற்கப்பாற்பட்டதாகவும் இருத்தல் கூடாதென்றும் ஒரு கோட்பாட்டினை நிலைநாட்டினார். அதே வல்லாட்சிக் (Totalitarian) கோட்பாட்டினை இட்லர் (Hitler) தலைமையிலான நாசிச் செருமனி கொண்டிருந்த போதிலும், தலைமைக் (Leadership) கொள்கை பாசிசத்தைவிட நாசிசக் கொள்கையில் மிகுதியாகக் காணப்படும், மற்றும் இனப்பெருமை செருமனியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. மார்க்சிசம், முதலாளித்துவம் வன்முறைப் புரட்சியால் தூக்கியெறியப்பட்டுப் பின்னர் அரசு மறைந்து விடும் என்ற தத்துவத்தை அறிவித்தது. ஆனால் இங்கிலாந்தில், அரசின் வாயிலாகக் காலப்போக்கில் பொதுநலக் கோட்பாட்டுத் தத்துவத்தைச் செயற்படுத்தலாம் என்ற கொள்கை வேரூன்றியது இதனைப் பேபியன் பொதுநலக் (Fabian Socialism) கோட்பாடு என்பர். பிரான்சில் பொதுவேலை நிறுத்தம் (General Strike) தொழிலாளரின் சிறந்த கருவியாகக் கருதப்பட்டது. அக்கோட்பாட்டினைச் சிண்டிகலிசம் (Syndicalism) என்பர். அரசு இன்றியமையாத அமைப்பன்று, அதை முற்றிலும் நீக்கிவிடலாம் என்று கூறுவது ஆட்சி வேண்டாக் கொள்கை (Anarchism) ஆகும். அரசு என்பது சமுதாய அமைப்புகளில் காணப்பெறும் ஓர் அமைப்பே தவிர, அதற்குத் தனிப்பண்பு ஒன்றுமில்லை என்பது பன்மைவாதம் ஆகும். ஆசுடின் (Austin, கி.பி. 1790–1859) கூறிய ஒருமை இறையாண்மைக் கோட்பாட்டிற்கு எதிராகத் தோன்றியதே பன்மை வாதமாகும். அரிய அரசியற் கருத்துகளை இருபதாம் நூற்றாண்டில் வெளிப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த எரால்டு லாசுகி (Harold Laski) ஆவார். அவர் இயற்றிய நூல்களுள் புகழ் மிக்கவை, இறையாண்மைச் சிக்கல் (Problem of Sovereignty, 1917), இக்கால அரசியலில் அதிகாரம் (Authority in the Modern State, 1919), அரசியல் இலக்கணம் (Grammer of Politics, 1951) ஆகியவையாம். லாசுகி பன்மை வாதத்தை (Pluralism) வலியுறுத்தினார்; அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்பது அவர் கருத்தாகும். பண்டை இருக்கு வேதத்தில் இராச்சியம், இராட்டிரம், சத்திரியன் ஆகிய சொற்கள் இடம்பெற்றிருப்பினும் அதில் அரசியல் தொடர்பான கருத்துகள் ஒன்றுமில்லை. ஆனால் பிராமணங்களில் அக்கருத்துகள் மிகுதியாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஐதரேய பிராமணம், பகைவர்களை வென்று நாட்டின் அமைதியைக் காக்கும் பொருட்டு அரசன் ஏற்பட்டான் என்று கூறுவதோடு, பல அரசர்களை வென்று பேரரசை உருவாக்கி முடி சூட்டிக் கொண்ட மன்னர்களின் பெயர்களையும் குறிக்கிறது. முதன்முதல் கி.மு. 660–300–இல் எழுதப்பெற்ற பெளதாயன, கௌதம, ஆபசுதம்ப தரும சூத்திரங்களில் அரசியல் கருத்துகள் ஆராயப்பட்டன எனலாம். இந்நூல்களில் சத்திரிய அரசர்களுடைய கடமைகளும், அவர்களுக்கும் அவர்களுடைய குடிமக்களுக்குமிடையேயான உறவுமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இராமாயணத்தில் இராம அரசின் சிறப்பும், முறையற்ற அரசின் கொடுமைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் அரசநீதி, வீடுமரால் தருமனுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. மனுசுமிருதி, கௌடிலிய அர்த்தசாத்திரம் ஆகிய நூல்களிலும் அத்தகைய கொள்கைகள் காணப்படுகின்றன. பண்டைய இந்தியாவில் அரசனில்லாத குடியரசும் நிலவியிருந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும். அக்குடியரசுகள், வட இந்தியாவில் இமயமலைச் சாரல்களிலும், கோசல நாடு, மிதிலை நாடு, பஞ்சாபு, சிந்து முதலிய பகுதிகளிலும் நிலவியிருந்தன. கௌடில்யன் தனது நூலில் அரசர்கள் அத்தகைய அரசுகளைச் சீர்குலைத்துத் தம் வசப்படுத்திக் கொள்வதற்கான பல சூழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறான். தமிழகத்தில் முற்காலத்தில் நிலவியிருந்தது, முடியரசாகும். நாட்டுக் குடிகளுக்கு அரசனே உயிர்; அவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்னும் கருத்தைப் பழைய தமிழ் நூல்களிற் காணலாம். அரசு என்பது அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறு உறுப்புகளைக் கொண்டதாகும் என்று கூறுகிறது திருக்குறள். திருக்குறனில் பொருட்பால் என்னும் இரண்டாம் பகுதியில் அரசியல், அங்கவியல், குடியியல் ஆகியவை கூறப்படுகின்றன. அரசனே அச்சந் தீர்ப்பவன்; அறங்காப்பவன்; முறைசெய்பவன்; குறை தீர்ப்பவன்; அவனே இறைவனாவான் என்பவை பண்டைத் தமிழர் அரசியற் கருத்துகளாகும். சங்ககாலந் தொட்டு உள்ள தமிழ் நூல்கள் பலவும் இத்தகைய கருத்துகளையே பலவாறாக எடுத்துக் கூறுகின்றன. கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் முகம்மதியரது ஆட்சி வட இந்தியாவில் நிறுவப்பட்டது. இசுலாமியர் அல்லாதவர் சசியா (Jizya) என்னும் தலைவரியைச் செலுத்தித் தாழ்மையுடன் நடக்க வேண்டுமென்பது இசுலாமிய அரசியற் கொள்கையாக இருந்தது. தென்னாட்டில் இசுலாமியரின் அரசு வலிமையை எதிர்க்கும் வண்ணம் விசயநகர அரசு ஏற்படுத்தப்பட்டது. விசய நகர மன்னர்களுள் தலைசிறந்தவரான கிருட்டிண தேவராயர் தாம் இயற்றிய “ஆமுக்தமால்யதா” என்னும் நூலில் பல அரசியற் கருத்துகளைக் கூறியுள்ளார். மொகலாய மன்னர்களுள் புகழ்மிக்க அக்பர் (கி.பி. 1556–1605) சமய அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல் இந்துக்களையும் இசுலாமியரையும் ஒன்றுபடுத்த முயற்சி மேற்கொண்டார். அக்பருடைய நன்னோக்கம் அவர்தம் பின் தோன்றல்களிடம் காணப்படவில்லை. குறிப்பாக, ஔரங்கசீப் (கி.பி. 1658–1707), சமயச் சார்பான ஆட்சியை நிறுவி, இந்துக்களின் பகைமையைத் தேடிக் கொண்டார். சிவாசி (1630–1680) இந்து மதத்தைக் காப்பாற்றும் நோக்கோடு மராத்திய அரசை நிறுவி மொகலாயப் பேரரசை எதிர்த்துப் போரிட்டார். ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் வேரூன்றிய போது இந்தியர், மேனாட்டு முறையில் குடிமை உரிமைகளையும், கடமைகளையும், ஆட்சித் தத்துவங்களையும் ஆராயத் தலைப்பட்டனர். மேனாட்டுக் கல்வியின் விளைவாக இந்தியர்கள் சமூகச் சீர்திருத்தங்களை வேண்டுவராயினர். இராசாராம் மோகன் ராய் போன்றவர்கள் இந்தியர்களுடைய முன்னேற்றம் ஆங்கிலக் கல்வியை ஏற்பதினாலேயே ஏற்படும் எனக் கருதினர். கி.பி. 1857–ஆம் ஆண்டுப் பெருங்கலகத்திற்குப் பின்னர் இந்தியரிடையே தேசிய உணர்வு வலுப் பெறலாயிற்று. அவ்வகையில் கி.பி. 1885–ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரசு, கியூம் (Hume) என்பார் முயற்சியினால் நிறுவப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்துக்களையும் இசுலாமியரையும் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றினர். ஒருபுறம் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டபோதிலும், தேசிய இயக்கத்தை ஒடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கோகலே போன்றவர்கள் மிதவாதிகளாகவும் திலகர் போன்றவர்கள் தீவிரவாதிகளாகவும் அரவிந்தர் போன்றோர் புரட்சிக்காரர்களாகவும் விளங்கினர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை நான் பெற்றே தீருவேன்” என முழங்கினார் திலகர். அன்னி பெசன்ட் (Annie Besant) அம்மையார் 1916-இல் தன்னாட்சி இயக்கத்தைத் துவக்கினார். காந்தியடிகள் 1919–ஆம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தன்னிகரில்லாத் தலைவராக விளங்கினார். சத்தியாக்கிரகம் என்ற புதியதோர் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் நாட்டு விடுதலையைப் பெற்றுத் தந்தார். தென்னாட்டில் சமத்துவச் சீர்திருத்தக் கொள்கையைப் பார்ப்பனரல்லாத இயக்கம் பரப்பியது. அத்தகைய பகுத்தறிவுத் தந்தையாக விளங்கியவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார் ஆவார். 1947–ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற பின்னர் மக்களாட்சிக் கருத்துகளைக் கொண்ட குடியரசு அரசியலமைப்புச் சட்டம், 1950 சனவரி 26–இல் நிறைவேற்றப்பட்டது. சமதரும, சமயச் சார்பற்ற கொள்கையையும் அச்சட்டம் வகுத்துள்ளது. பண்டைச் சீனாலில் இலாவோசு (Lao–tsu, பிறப்பு, கி.மு. 604), கன்பூசியசு (Confucius, கி.மு. 551–479) முதலியவர்கள் சட்டம், அரசாங்கம் என்பவற்றைப் பற்றிக் கூறியுள்ளவைகளையே சீன அரசியல் கருத்துகள் எனக் கூறலாம். அவர்கள் கொள்கையினைத் தாவோக் (Taoism) கொள்கை என்பர். அரசு, குடிகளுடைய நடவடிக்கைகளில் தலையிடக் கூடாதென்பதும், வல்லந்தத்திற்கு அடிப்படையான போர்ப்படைகளை அமைக்கக்கூடாதென்பதும் அவர்களுடைய தலைசிறந்த கருத்துகளாகும். சட்டங்களால் ஆட்சி புரிவதைக் காட்டிலும் ஒழுக்கத்தால் சீர்திருத்துவதே சிறந்தது என்பது கன்பூசியின் கோட்பாடாகும். சீனர்கள் தனித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களாதலால் தேசிய அரசாங்கம் என்னும் கோட்பாட்டை அவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். 1911-ஆம் ஆண்டுச் சீனப் புரட்சி நடைபெற்றவரை பொது மக்களின் கருத்து (Public Opinion) என்பது, சீனா அதுவரை கேட்டிராத ஒன்றாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் புரட்சிகரமான அரசியற் கருத்துகள் பரப்பப்பட்டன. காங்க்-யூ-வே (Kang–Yu–Wei, கி.பி. 1858–1927) என்பவர், சட்டங்கள் தேவையில்லை என்னும் பண்டைய கருத்துக்கு மாறாக, இலவசக் கட்டாயக் கல்வி, 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கெல்லாம் வேலை தருதல், நிலம், இருப்புப் பாதை (Railway), தொழிற்சாலை முதலியவற்றைத் தேசிய மயமாக்குதல் முதலிய சோசியலிசக் கருத்துகளைக் கூறினார். சன்யாட்சென் (Sun Yat-sen, கி.பி. 1866–1925) மக்களாட்சி (Democracy), தேசியம் (Nationalism), மக்கள் வாழ்வு (People's Living) என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தேசியக் (Kuomin–tang) கட்சியைத் தொடங்கினார். பின்னர் மா சே துங் ( Mao Tse–tung, கி.பி. 1893–1976) பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்பி 1949–ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இசுலாமிய நெறி, சமய, அரசியல், சமூக, குடும்ப நிலைகளையெல்லாம் ஒருவழிப்படுத்துவதற்கான விதிகளைக் கூறியுள்ளது. அந்நெறிக்குச் ‘சரியத்’ (Shariat) என்று பெயர். அச்சொல் இசுலாமிய வேதநூலான குர்ஆனிலேயே இடம் பெற்றுள்ளது. இசுலாமிய அரசியற் கொள்கைப்படி அரசாளும் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவரைக் கலிபா (Caliph) என்பர். ஒவ்வொரு முசுலிம் குடிமகனும் கலிபா ஆவதற்கு உரியவர். கலிபா சட்டப்படியும் நீதி வழுவாமலும் ஆட்சிபுரிகின்றவரை மக்கள் கீழ்ப்படிந்து நடப்பர். அவர் கொடுங்கோலராய் மாறிவிட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இசுலாமிய அமைப்பு ஒரு குடியரசு அமைப்பாகும். அதில், சாதி, மதம், இனம், இடம், மொழி முதலிய வேறுபாடுகள் இல்லை, நீதியையும் அறநிலையையும் ஒழுக்க நெறியையும் இசுலாம் கற்பிக்கிறது.ந.கு.நா. துணை நூல் Appadorai, A., “The Substance of Politics”, Oxford University Press, London, 1972.