சங்க காலத்தில் விளங்கிய குறுநில மன்னர்களுள் ஒருவன்; வள்ளலுமாவான். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: அவியன் கான்கெழு நாடன்; கருந்தேர் உடையவன்; அவன் மலையில் ஆட்டுக்குட்டியும் குரங்கும் கூடி விளையாடும்; மூங்கில் ஓங்கி வளர்த்திருக்கும் (புறம். 383). காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் அகநானூற்றில், இவன் மலையில் வளர்ந்த மூங்கிலைத் தலைவியின் தோளுக்கு உவமையாகக் கூறியுள்ளார். மேலும் அவர், அவியன் மதுவளம் மிக்க மலைநாடன் என்றும், அவன் மலையில் வெண்மேகம் தவழும் என்றும், மூங்கில்கள் உயர்ந்து வளரும் என்றும், மலைப்பிளவுகளில் பழங்கள் பழுத்துத் தொங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன்; அவியனூர் என்றோர் ஊர் அவன் பெயரால் பண்டை நாளில் இருந்தது. அவியன் குடியில் தோன்றிய பிற்காலத்தார் பொறித்த கல்வெட்டுகள், பாண்டிநாட்டுத் திருப்புத்தூர்த் திருத்தளி நாதர் திருக்கோயிலில் உள்ளன’ என்று பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை, தம் புறநானூற்று உரைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.அர.சி.