சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; உகாய்க்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது ஊர்ப்பெயரே இவருக்குப் பெயராக வழங்கி வந்துள்ளது. இவர் பாடிய பாடலொன்று குறுந்தொகையில் (63) இடம்பெற்றுள்ளது. பாலைத் திணையில் தலைவன் கூற்றாக அமைந்துள்ள அப்பாடல் பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்துள்ளது. பொருள் இல்லாத ஒருவர் வறுமையிலுள்ளவர்களுக்குக் கொடுக்கவும் இன்பங்களை நுகரவும் முடியாது என்னும் உண்மையினை, ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லென’ என்று தம் பாடலில் அழகுற அமைத்துக் காட்டியுள்ளார்.