இது பாலூட்டி இனத்தில் காட்ரைனா வரிசையில், செர்கோபிக்காய்டே குடும்பத்தில் உள்ள மக்காகா என்ற பேரினத்தில் அடங்கிய சைலினஸ் என்ற சிற்றினத்தைச் சார்ந்தது. இது கருங்குரங்கு என்றும் குறிப்பிடப்படும். சிங்கவால் குரங்கின் உடல் கறுப்பாகவும், முகத்தைச் சுற்றியுள்ள பிடரி மயிர் சாம்பல் அல்லது பழுப்புக் கலந்த சாம்பல் வண்ணத்தில் நீளமாகவும் காணப்படும். வால் நீளம் மிகுந்ததாகவும், வாலின் முடிவிலுள்ள முடிகள் குஞ்சம் போன்றும் காணப்படும். 51—61 செ.மீ. உயரம் உள்ள சிங்க வால் குரங்கின் வால் நீளம் 25—38 செ.மீ. இருக்கும். பெண் குரங்கு, ஆண் குரங்கை விட உருவத்தில் சிறியது. சிங்கவால் குரங்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள், நீலகிரி மலைகள், ஆனை மலைப் பகுதிகளிலும் தேயிலை, ஏலக்காய் போன்றவை மிகுதியும் விளையக் கூடிய பகுதிகளிலும் காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படும் ஒருவிதக் கசுக் கொட்டை செந்நட்டுப் பழங்களை விரும்பி உண்ணுகிறது. கொட்டைகள், பூக்கள், ஏலக்காய்ச்செடியின் தண்டுப் பகுதி ஆகியவற்றையும் உட்கொள்கிறது. சிங்கவால் குரங்கின் ஒலி, நீலகிரி மந்திக் குரங்கின் ஒலியை ஒத்திருக்கும். இது எதிரிகளின் வருகையை அறிவிக்கவும், விழிப்புணர்ச்சிக்கும், அபாயங்களிலிருந்து எச்சரிக்கவும், இனப்பெருக்கத்திற்கும், பெண் குரங்கையும், குட்டிக் குரங்குகளையும் அழைப்பதற்கும் வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புகிறது. சிங்கவால் குரங்கின் கருக் காலம் 170—175 நாள்களாகும். குட்டிகள் பிறக்கும் போது, பழுப்பு நிற முடியையும், வெளிர் இளஞ்சிவப்பு நிறத் தோலையும் கொண்டிருக்கின்றன. பெண் குரங்கு குட்டிகளை வயிற்றில் அணைத்துத் தூக்கிச் செல்கிறது. 15 நாளில் குட்டிகள் நடக்கத் தொடங்குகின்றன. இலைகளை உண்ணவும், மரங்களில் தனியாக ஏறவும் குட்டிகளுக்கு மேலும் சில நாளாகலாம். பொதுவாக, சிங்கவால் குரங்கு 16—22 வரை சேர்ந்து கூட்டமாகக் காணப்படும். அக்கூட்டங்களில், பெண் குரங்குகள் மிகுதியாக உள்ளன. சிங்கவால் குரங்கு இடம் விட்டு இடம் செல்லும் போது, ஆண் குரங்குகளின் பாதுகாப்பில் செல்கிறது, இரண்டு கூட்டங்கள் சந்திக்க நேரும் போது, ஆண் குரங்குகள் அருகருகே வந்து ஒலியெழுப்பினாலும், அவை சண்டையிடுவதில்லை. சிறிது நேரத்திலேயே, தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. சில சமயங்களில் ஒரு கூட்டத்திலேயே தற்காலிகப் பிரிவுகள் ஏற்படுவதுண்டு. நீலகிரி மந்திகள், குல்லாக் குரங்குகள் ஆகியவை சிங்கவால் குரங்குகளின் வாழிடங்களுக்கு வத்தாலும், அவற்றுடன் சிங்கவால் குரங்குகள் சண்டையிடுவது இல்லை. சிங்கவால் குரங்கு நிலப் பகுதிகளில் நீண்ட நேரம் தங்கும். உணவு மற்றும் உறைவிடத்திற்காக மரங்களையே நாடும். உயர்ந்த மரங்களில் உச்சி வரையிலும் செல்லும் திறன் கொண்டது. மரங்கள் அடர்ந்த பகுதிகளையே வாழுமிடங்களாக கொண்டுள்ள சிங்கவால் குரங்கு, பசுமை மாறாக் காடுகளில் மிகுதியாகக் காணப்படும். சிங்கவால் குரங்கின் வாழிடங்கள் பெருமளவில் அழிக்கப்படுவதன் காரணமாக இவ்வரிய இனம் பெரிதும் குறைந்து வருகிறது. இயற்கை வாழிடங்களில் ரப்பர், தேயிலை போன்ற பயிர்களைப் பயிரிடுதல், காடுகளின் குறுக்கே சாலைகள் போடுதல், நீர் மின் திட்டங்களை ஏற்படுத்துதல் ஆகியன இவ்வினம் குறையப் பிற காரணங்களாகும். நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் சிலர் இக்குரங்குகளை உணவிற்காக வேட்டையாடுகின்றனர். இக்குரங்குகளின் இறைச்சி, நோய்களைக் குணப்படுத்தும் என்ற தவறான எண்ணத்தாலும், தோல்களைக் கொண்டு பெண்களுக்கான கைப் பைகள் போன்றவை தயாரிக்கப்படுவதாலும், இக்குரங்கு கள்ளத்தனமாகப் பெருமளவில் கொல்லப்படுகிறது. புலி, சிறுத்தை போன்றவற்றால் கொல்லப்படுவதாலும் அழிந்து வருகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> வாழிடங்களைப் பாதுகாத்தல், வேட்டையாடுதல், கள்ளத்தனமாகப் பிடித்தலைத் தடுத்தல், அவற்றின் வாழிடங்களுக்கு மனிதர்கள் செல்வதைத் தடை செய்தல், பழங்குடி மக்களுக்கு அறிவூட்டி அவர்களால் வேட்டையாடப்படுவதைக் குறைத்தல், இவை வாழிடங்களில் சாலை போடுதல், நீர் மின் திட்டம் அமைத்தலைக் கை விடுதல் ஆகியவை இவ்விலங்குகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளாகும். மேலும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் போன்றவை எடுத்த தேவையான நடவடிக்கைகளால் இவ்வரிய இனம் சிறிது சிறிதாக எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. —சிவ. தியாகராஜன் நூலோதி. M.L. Roonwal, and S. M.Mohnot, Primates of South India, Harward University press, 1977.