இது ஒரு சல்ஃபேட் கனிமம். இது ஸ்ட்ரான்சியம் சல்ஃபேட் (SrSO₄) ஆகும். இதில் சிறிதளவு கால்சியமும், பேரியமும் கலந்திருக்கும். இது செலஸ்டைன் என்றும் குறிப்பிடப் படும். இது செவ்வகத் தொகுதியைச் சேர்ந்தது. இதன் அணுக் கோப்பு இயல்பு அடிப்படை வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக் கோப்பில், நான்கு கூட்டணுக்கள் உள்ளன. இக்கனிமத்தின் அணு அமைப்பில், அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு முன் பின்னாக, 8.36 ஆகவும், பக்கவாட்டில் 5.36 ஆகவும், கீழ் மேலாக 6.84 ஆகவும் இருக்கும். செலஸ்டைட்டின் (celestite) படிகங்கள் (001) பக்கத்திற்கு இணையாகத் தட்டையாக இருக்கும். சில பட்டகங்களாகக் காணப்படும். இக்கனிமம் இழைகளாகவும், உருண்டைகளாகவும், திண்மத் துகள்களாகவும், ஏடுகளாகவும், மண் போன்றும் காணப் படும். இதில் (001) கனிமப் பிளவு தெளிவாக இருக்கும். (210) கனிமப் பிளவு தெளிவாகவும் (010) கனிமப் பிளவு தெளிவற்றும் காணப் படும். செலஸ்டைட் நிறமற்றதாயும், வெள்ளை, சாம்பல் நிறம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் சருகு நிறத்திலும் காணப் படும். இதன் கடினத் தன்மை 3–3.5; ஒப்படர்த்தி 3.97, இது கண்ணாடி மிளிர்வு உடையது. கனிமப் பிளவுத் தளங்களில் முத்து மிளிர்வு காணப் படும். இது சீரற்ற முறிவு உடையது. நொறுங்க கூடியது. இதன் கீற்றின் நிறம் வெண்மை. இது ஒளி புகும் அல்லது ஒளி கசியும் தன்மையுடையது. செலஸ்டைட் இரண்டு ஒளி அச்சுகளை உடைய கனிமம். இதன் ஒளி அச்சுத் தளம் (010) தளத்திற்கு இணையாக அமைந்துள்ளது. இதன் குறைந்த அதிர்வுத் திசை (Z) (100) தளத்திற்குச் செங்குத்தாக உள்ளது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயுள்ள கோணம் (2V) 50° ஆகும். இது நேர் ஒளிக் குறியை உடையது. இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.6215; β = 1.6237; γ = 1.6308 ஆகும். செலஸ்டைட்டின் ஒளிச் சிதறல் சிவப்பு ஒளியில் குறைவாகவும், ஊதா ஒளியில் மிகுதியாகவும் இருக்கக் காணலாம். செலஸ்டைட்டின் இருண்ட நீல நிறமுடைய படிகங்களில் அதிர்வுத் திசை நிற மாற்றம் தெளிவாகக் காணப் படும். செலஸ்டைட் வெப்ப நீர்ப் படிவுகளாகக் காணப் படுகிறது. இது பெரும்பாலும், கடலில் உண்டான படிவுப் பாறைகளில், குறிப்பாக சுண்ணப் பாறைகளில் காணப் படுகிறது. இது கார–அனற் பாறைகளில் அரிதாகவும், நரம்பு போன்றும், பொந்துகளிலும் காணப் படுகிறது. செலஸ்டைட் கால்சைட், ஃபுளூரைட், பேரைட், கந்தகம், அரகோனைட் முதலான கனிமங்களுடன் சேர்ந்து காணப்படும். செலஸ்டைட் அமெரிக்காவிலுள்ள தெற்கு பாஸ்தீவு, ஒஹியோ, நியூயார்க், டெக்ஸாஸ், காலிக்கோ குன்றுகள், கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது. இக்கனிமம் கனடாவிலும், இங்கிலாந்திலும், சிசிலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, சோவியத் ஒன்றியக் குடியரசு, எகிப்து, டுனீசியா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. இது மடகாஸ்கரில் பொந்து படிவுகளாகவும், பெரிய நீல நிறப் படிகங்களாகவும், ஒளி புகுந் தன்மையுடன் காணப் படுகிறது. செலஸ்டைட் இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும் காணப் படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நம்பக்குறிச்சி என்னுமிடத்திற்கு அருகே, செலஸ்டைட் படிவுகள் நரம்புகளைப் போன்ற சிறிய தாரைகளில் காணப் படுகின்றன. இங்கு, இக்கனிமம் பேரைட்டுடன் சேர்ந்து கிடைக்கிறது. இக்கனிமப் படிவு இங்கு 30 மீ. ஆழம் வரை இருப்பதாகக் கருதப் படுகிறது. இது கிரெட்டேசியக் காலப் பாறைகளில் காணப் படுகிறது. இங்கு சிறிய அளவில் கிடைக்கும் செலஸ்டைட் வெடித் தயாரிப்பில் பயன் படுகிறது. —இல. வைத்திலிங்கம் —ந. சந்திரசேகர் நூலோதி. L.G. Berry and B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers and Distributors, New Delhi, 1985.