உத்தரமேரூர்
uttaramērūr
செங்கற்பட்டு மாவட்டத்தில், உத்தரமேரூர் வட்டத்தில், சென்னைக்குத் தென் மேற்கில் எண்பது கி.மீ.
செங்கற்பட்டு மாவட்டத்தில், உத்தரமேரூர் வட்டத்தில், சென்னைக்குத் தென் மேற்கில் எண்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவப் பெருவேந்தனான தந்திவர்மன் காலந்தொட்டே இவ்வூர் வரலாற்றுச் சிறப்புமிக்கு விளங்கியமை கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. இவ்வூர் சதுர்வேதி மங்கலமாகப் பல்லவர் கால முதல் விளங்கியது. இவ்வூர் உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலம் என்றும் இராசேந்திர சோழச் சதுர்வேதி மங்கலம் என்றும் கண்டகோபாலச் சதுர்வேதிமங்கலம் என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது காலியூர்க் கோட்டத்தினுள் அடங்கிய ஊராகும். இவ்வூரில் அக்காலத்தில் இருந்த பல்வேறு கோயில்களுள் பெரும்பான்மையானவை சுவடற்றுப்
வைகுந்தப் பெருமாள் கோயில்
போய்விட்டன. இருப்பனவற்றுள் இரட்டைத் தளி ஈச்சரம், சுப்பிரமணியர் கோயில், கொலம்பேசுவரர் கோயில் போன்றவை நல்ல நிலையில் உள்ளன. இன்று இவ்வூரில் இருக்கும் கோயில்களுள் குறிப்பிடத்தக்கவை 1. வைகுந்தப் பெருமாள் கோயில், 2. சுந்தர வரதப் பெருமாள் கோயில், 3. கைலாசநாதர் கோயில் ஆகிய மூன்றுமேயாகும்.
வைகுந்தப் பெருமாள் கோயில்
இது மாடக் கோயில் வகையைச் சேர்ந்த பல்லவர் காலக் கற்றளியாகும். இதன் திறந்த முன்மண்டபத்தைப் பதினாறு தூண்கள் தாங்குகின்றன. முகமண்டபத்தை அடுத்து உள்மண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறையில் வைகுந்தப் பெருமாளும் தேவியும் திருமணக் கோலத்தில் வீற்றிருக்கின்றனர். கருவறையை ஒட்டியுள்ள உள்மண்டபப் புறச் சுவர்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அரைத் தூண்களும் மகரதோரணங்களும் காணப்படுகின்றன. மாடக்குழிகள், தெய்வத் திருமேனிகள் இன்றி வெறுமையாக உள்ளன. விமானத்தின் சிகரம் வேசர வகையைச் சார்ந்ததாகும். கிழக்கு நோக்கியுள்ள இத்திருக்கோயிலின் முன் கருடனுக்கென்று திருமுன் ஒன்று அமைந்துள்ளது.
இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ள எழுபது கல்வெட்டுகளுள் காலத்தால் பழமையானது தந்திவர்மனுடையதாகும். பிற்காலப் பல்லவர்களான நிருபதுங்கவர்மன், நந்திவர்மன், கம்பவர்மன் ஆகியோர் கல்வெட்டுகளும் இங்குள்ளன. சோழப் பெருவேந்தர்களான முதலாம் பராந்தகன், வீரபாண்டியன் தலை கொண்ட பார்த்திவேந்தராதிபதி வர்மன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன் முதலியோரின் கல்வெட்டுகளும், இராட்டிரக்கூடக் கன்னரதேவனின் கல்வெட்டுகளும் இங்குக் காணப்படுகின்றன.
கல்வெட்டுச் செய்திகள்
இக்கல்வெட்டுகள் பெரும்பான்மையான கோயில் வழிபாட்டுக்குத் தரப்பட்ட கொடைகள் பற்றியும், இவ்வூரில் இருந்த வயிர மேகத்தடாகத்தை விரிவுபடுத்தவும் கரையமைக்கவும் ஓடம் விடவும் செய்யப்பட்ட அறங்களைப் பற்றியும் விரிவான பல செய்திகளைத் தருகின்றன. இவ்வூரிலேயே நிலையாக இருந்து பாடம் சொல்லிக் கொடுப்பதற்காகப் பலிசியக் கிடைப்புறமாகவும், வியாகரண சாத்திரம் என்னும் இலக்கண விளக்கம் செய்தவர்களுக்காக வியாக்கிய விருத்தியாகவும், நஞ்சை முறிக்கும் நஞ்சுக்கடி மருத்துவருக்கு விடகர போகமாகவும் நிலக்கொடைகள் தரப்பட்ட செய்தியைச் சில கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பார்த்திவேந்திரனின் பதினொரு கல்வெட்டுகள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் எழுநூற்றுவன் என்னும் வணிகப் பெருமகனார், இக்கோயிலுக்கும் பிறகோயில்களுக்குமாய்ச் செய்தருளிய பல்வேறு அறங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.
சுந்தரவரதப் பெருமாள் கோயில்
சுந்தரவரதப் பெருமாள் கோயில்
அழகிய சிற்பங்களைக் கொண்டு விளங்கும் இப்பல்லவர் காலத்து முத்தளக் கற்றளியின் முதல்தளக் கருவறையில் சுந்தர வரதப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தேவியருடன் காட்சியளிக்கிறார். இரண்டாம் தளக் கருவறையில் வைகுந்தநாதர் அமர்ந்த திருக்கோலத்தில் தேவியருடன் வீற்றிருக்கிறார். இக்கருவறையின் உட்சுவர்களில் விசயநகரக் காலத்து ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்றாம் தளக் கருவறையில் அனந்த நாராயணனாய் இறைவன் கிடந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு தளத் தேவக்கோட்டங்களிலும் பெருமாளின் அழகிய பல தெய்வத் திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன.
இங்கிருந்து படியெடுக்கப்பட்ட முப்பத்தொன்பது கல்வெட்டுகளுள் பதினான்கு முதலாம் இராசராசனுடையவை; ஒன்பது முதலாம் இராசேந்திரனுடையவை. காலத்தால் பழமையானது தந்திவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டுகளுள் பல, பார்த்திவேந்திரவர்மனின் தேவியார் திரிபுவன மாதேவியார் உட்படப் பல பெருமக்கள் இக்கோயிலுக்குச் செய்த விளக்கு அறங்கள், சிறப்பு வழிபாடுகள், படையல்கள் இவற்றிற்கான நிலக் கொடைகள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தருகின்றன.
சுந்தரவரதப் பெருமாள் கோயிலின் விமானத்தோற்றம்
கைலாச நாதர் கோயில்
ஊர்க்கோடியில் அழிந்துபட்ட நிலையில் காணப்படும் இக்கோயிலின் முன்மண்டபமும் முகமண்டபமும் சிதறி நொறுங்கிக் கற்குவியலாய்க் காட்சியளித்தபோதும் கருவறை முழுமையாக உள்ளது. விமானத்தின் இரண்டாம் தளத்திலுள்ள சுதையுருவங்கள் இந்நிலையிலும் எழிலோடு விளங்குகின்றன. சிகரம் வேசர வகையைச் சேர்ந்தது.
கைலாசநாதர் கோயில்
வெள்ளைமூர்த்தி, ஆழ்வார், இராகதேவர், அனந்தநாராயணன், கீழ்த்தளத்திலுள்ள மூன்று தெய்வத் திருமேனிகள், திருவாய்க்குலமுடையார் என்னும் சீகிருட்டிணர், புருடோத்தமர், சொக்கப்பெருமான் என்று பல தெய்வத் திருமேனிகள் இக்கோயிலில் நிறுவப்பட்டதையும், வைணவப் பெரியார்களால் திருவாய்மொழியும் திருப்பதியங்களும் ஓதப்பட்டதையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்கு அருளாளதாசன் மடம், குந்தவை ஆழ்வார் மடம் எனப் பல மடங்கள் இருந்தன. குந்தவை ஆழ்வார் மடத்தில் வைணவப் பெரியார்களை உண்பிக்க ஊரவை நிலமளித்தது கல்வெட்டுகளில் குறிப்பிடப் பெற்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், மூன்றாம் இராசராசனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டும், ஆயிரத்து இருநூற்றுவன் மாணிக்கம் என்னும் தேவரடியாள் இக்கோயிலில் வெளித்திருச்சுற்று, திருமுழுக்காட்டு மண்டபம் போன்றவற்றைப் பெரும் பொருட் செலவில் எடுப்பித்த திருப்பணிகளைப் போற்றி, இந்நங்கைக்கும் இவர்தம் வழியினருக்கும் நாள்தோறும் இறைவனுக்கிடும் படையலில் ஒரு குறுணிச் சோறு வழங்கவும், தேரோட்டத்தின்போது சில சிறப்புரிமைகள் காட்டவும் ஊரவை, கோயிலார் அனுமதியுடன் ஏற்பாடு செய்து இவரைப் பெருமைப்படுத்திய செய்தியைக் கூறுகின்றன. இதேபோல் மூன்றாம் இராசராசன் காலத்தில் சீவைணவ மாணிக்கம் என்னும் ஆடலரசிக்கும் அவளின் சேவைகளைப் பாராட்டிச் சிறப்புகள் செய்யப்பட்டதை மற்றொரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. வீரபாண்டியதேவனின் கல்வெட்டொன்று சொக்கப்பெருமாள் கோயிலைச்
கைலாச நாதர் கோயில் – அழிந்துள்ள முன் மண்டபம் சுற்றியுள்ள தெருக்களில் வசிப்பவர்கள் எண்ணெய்ச் செக்குகள், தறிகள் முதலியவற்றிற்காக வரிகளைத் தரவேண்டாமெனக் குலசேகரன் சம்புவரையரால் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியைத் தருகிறது.
இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ள முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டொன்று இக்கோயில் இறைவர்க்கு மூன்று சந்திக்கும் திரு அமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றைப் படைக்கவும், முச்சந்திக்கும் ஆறு விளக்குகள் ஏற்றவும், இரண்டு நந்தா விளக்குகள் எரிக்கவும், வழிபாட்டு வகைகளுக்குமாய் ஊரவை நிலைக்கொடை அளித்ததைக் குறிப்பிடுகிறது.
ஊராட்சி முறைபற்றிக் கூறும் கல்வெட்டுகள்
வைகுந்தப் பெருமான் கோயிலில் முதற்பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிலும் பதினான்காம் ஆட்சியாண்டிலுமாய் வெட்டப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகளும் வரலாற்றுச் சிறப்புடையனவாகக் கருதப்படுகின்றன. இவை சோழர் காலத்து ஊராட்சி அமைப்பையும் தேர்தல் முறைகளையும் வேட்பாளர்களின் தகுதிகளையும் எடுத்துரைக்கின்றன. பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மன்னன் ஆணைப்படி அரசு அலுவலரின் முன்னிலையில் ஊரவை அமைத்துக் கொண்ட தேர்தல் விதிகளையும், வாரிய அமைப்புகளையும் விளக்குகிறது. பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவ்விதிமுறைகளில் இரண்டாண்டு அனுபவங்களைக் கொண்டு ஊர்ப் பேரவை செய்து கொண்ட மாறுதல்களையும் வரன்முறைகளையும் தெளிவாக்குகிறது.
வாரியங்களில் உறுப்பினராவதற்குரியவர்
1. முப்பது வயதுக்குமேற்பட்டு அறுபது வயதுக்கு உட்பட்டிருப்பவர். 2. சொந்த மனையில் வீடுகட்டிக் குடியிருப்பவர். 3. கால்வேலி நிலம் உள்ளவராய் இருப்பவர். 4. வேதத்தில் வல்லவர்களாய், அறநெறி தவறாதவர்களாய்ச் செயலாற்றல் நிறைந்தவர்களாய் நல்வழியில் பொருளீட்டி வாழ்பவர். 5. சிறந்த அறிவாற்றல் உடையவராயிருப்பின் அரைக் கால்வேலி நிலமிருப்பினும் போதுமானது. 6. மூவாண்டிற்குள் எந்த வாரியத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாதவர்.
உறுப்பினராகும் உரிமையற்றவர்
1. வாரியங்களில் உறுப்பினராயிருந்து, பணிக்கால இறுதியில் கணக்குக் காட்டாமல் இருந்தவர்களும் இவர்களுடைய நெருங்கிய உறவினர்களும். 2. ஐம்பெருந் தீச்செயல்களில் முதல் நான்கைச் செய்தவர்கள். 3. தீயோர் கூட்டுறவால் கெட்டவர்கள். 4. கையூட்டுப் பெற்றவர்கள். 5. பிறர்பொருள் கவர்ந்தவர்கள். 6. கள்ளக் கையெழுத்திட்டவர்கள். 7. கூடக் கூடாதவர்களோடு கூடியவர்கள் 8. ஊருக்குத் தீங்கு செய்தவர்கள்.
உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறை
அக்காலத்தில் ஊரின் மொத்த விளைநிலங்கள் பல தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இத்தொகுப்பு ஒவ்வொன்றும் குடும்பு என்று வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பும் சில குடும்பங்களை உடையதாக இருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்குடும்புகளின் எண்ணிக்கை ஊரின் அளவைப் பொறுத்தே அமைந்தது. உத்திரமேரூரில் முப்பது குடும்புகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊரின் குடியிருப்புப் பகுதியின் உட்பிரிவுகள் குடும்புகள் எனப்பட்டன என்ற கருத்து அறிஞர்களிடையே நிலவி இருந்தது. ஆனால் இக்கால ஆய்வுகளில் இக்கருத்துத் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பில் உள்ளவர்களும் தமக்குள் வாரிய உறுப்பினராகக் கூடிய தகுதிகள் அமைந்த அனைவர் பெயரையும் தனித்தனி ஓலைத் துண்டுகளில் எழுதி ஒன்று சேர்த்து, அது எக்குடும்பைச் சேர்ந்தது என்பது தெரியுமாறு வாயோலை வைத்துக் கட்டி ஒரு குடத்திலிட்டு வைப்பர். இவ்வாறே முப்பது குடும்புகட்கும் தனித்தனியே கட்டிக் குடத்தில் இடுவர்.
தேர்தல் நாளன்று ஊரார் அனைவரும் நம்பிமார் உட்படக் கூடுவர். நம்பிமார்களுள் மூத்தவர் ஒருவர் அனைவரும் காணுமாறு குடும்புகளின் ஓலைக்கட்டுகள் போடப்பெற்ற குடத்தை மேல்நோக்கித் தூக்கிக் கொண்டு கூட்டத்தின் நடுவில் நிற்பார். விவரமறியாத ஒரு சிறுவனைக் கொண்டு அக்குடத்திலிருந்து ஒரு குடும்பிற்குரிய ஓலைக்கட்டை எடுக்கச் செய்து, அவிழ்த்து அதிலுள்ள ஓலைத்துண்டுகளை மற்றொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அத்துண்டுகளுள் ஒன்றை அச்சிறுவனைக் கொண்டு எடுக்கச் செய்து, அதை ஊரவை அலுவலரின் கையில் தரச் செய்வர். அவர் தம் ஐந்து விரல்களையும் அகல விரித்து அவ்வோலைத் துண்டை உள்ளங்கையில் பெற்று, அதிலுள்ள பெயரைப் படிப்பார். பின் நம்பிமார் ஒவ்வொருவராக அதைப் படிப்பார்கள். தனியோலை ஒன்றில் அப்பெயர் குறித்துக் கொள்ளப்படும். இதுபோன்றே முப்பது குடும்புகட்கும் முப்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுள் அநுபவமும் அறிவும் நிறைந்த பன்னிருவர் சம்வத்சர வாரியத்திற்கும், அடுத்த பன்னிருவர் தோட்ட வாரியத்திற்கும், எஞ்சிய அறுவர் ஏரி வாரியத்திற்கும் பொறுப்பேற்பர். இது தவிர மீண்டும் குடவோலை முறையில் பன்னிருவரைத் தேர்ந்து அறுவரைப் பொன்வாரியத்திற்கும் எஞ்சியவரைப் பஞ்ச வார வாரியத்திற்கும் உறுப்பினராய் அமர்த்துவர். இக்குடவோலைத் தேர்தல் முறையே சோழர்கால ஊராட்சியமைப்பின் அடிப்படைக் கருவாய் அமைந்திருந்தது. இரா.க.
துணை நூல்கள்
சதாசிவ பண்டாரத்தார், தி.வை., பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974.
பாலசுப்பிரமணியம், எஸ்.ஆர்., முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், தமிழ் வெளியீட்டுக் கழகம், 1966.
Nilakanta Sastri, K.A., The Cholas, University of Madras, Madras, 1984.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 882)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bs56zbb/
தமிழ்“உத்தரமேரூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bs56zbb/APA
Oliyon Research. (2026). உத்தரமேரூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bs56zbb/MLA
"உத்தரமேரூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bs56zbb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment