இலைபீரியா
ilaipīriyā
நாடு வடமேற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளது.
நாடு வடமேற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பழமையான கறுப்பர் நாடு. அமெரிக்காவிலிருந்து விடுதலைபெற்ற நீக்கிரோ அடிமைகளைக் கொண்டு இலைபீரியா (Liberia) கி.பி. 1822 ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பெற்றது. இந்நாட்டை ஓர் அமெரிக்க அறநிறுவனம் உருவாக்கி, விடுதலை பெற்ற அடிமைகளுக்குப் புகலிடமளித்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியால் ஐரோப்பியக் குடியேற்றவாதிகளாலும், ஆப்பிரிக்க மரபு மக்களினங்களாலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை இந்நாடு சமாளித்தது இலைபீரியக் குடியேற்றவாதிகள் கி.பி. 1847–ஆம் ஆண்டில் தாம் விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்தனர்.
எல்லை
இலைபீரியா உலக நடுக்கோட்டிற்கு அண்மையில் அதன் வடபால் அட்லாண்டிக்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் வடக்கில்
இலைபீரியா கினி நாடும், கிழக்கில் ஐவரி கோசுட்டு (Ivory Coast) நாடும், வடமேற்கில் சீராலோனும் இதன் எல்லைகளாகும். இதன் மேற்கு எல்லையாக 560 கிலோ மீட்டர் நீளமுள்ள அட்லாண்டிக்குக் கடற்கரை அமைகிறது. உட்பகுதியில் இலைபீரியா நிம்பா மலைத் தொடர்வரை நீண்டுள்ளது.
பரப்பு
இலைபீரியாவின் பரப்பளவு 1,12,600 ச.கி.மீ.
மக்கள்தொகை
இலைபீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 19,00,000 (1981).
மக்கள் தொகையில் நாலில் ஒருபங்கைவிடக் குறைந்த அளவினர் அமெரிக்க இலைபீரியர்கள். அவர்கள் பெரும்பாலும் மன்ரோவியாவிலும் (தலைநகர்) கடற்கரையை அடுத்துள்ள நகரங்களிலும் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலோர் மறுப்புரையாளர் கிறித்தவர்கள். ஆங்கிலம் அவர்களின் பேச்சு மொழி, ஆட்சிமொழியும் இந்நாட்டில் ஆங்கிலமே. வாழ்க்கை முறையில் அவர்கள் ஐரோப்பியர்களைப் பின்பற்றினாலும், ஆப்பிரிக்கப் பழக்க வழக்கங்களிலும் அவர்கள் ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இலைபீரிய மக்கள் ஏறத்தாழ 21 குழுக்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் இந்நாட்டின் உட்புறங்களின் வாழ்கிறார்கள். பசா (Bassa), இக்ரு (Kru), கெப்பிலி (Kpelle), கியோ (Gio), உலோமா (Loma), கோலா (Gola), கபண்டி (Gbandi), மண்டிங்கோ (Mandingo), வை (Vai) போன்றவை அவற்றுள் சிறப்பான குழுக்களாகும். அவர்கள் பல மொழிகளில் பல்வேறு வகைகளில் பேசுவர். எனினும் ஆங்கிலமே ஆட்சி மொழியாகும். குழந்தைகள் இக்காலத்தில் அரசுப் பள்ளிகளிலும் கிறித்தவப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
அம்மக்களுள் சிலர் பல நூற்றாண்டுகளாக முசுலிம் சமயத்தைச் சார்ந்தவர்களாயும், ஏனையோர் தொன்மையான ஆப்பிரிக்கப் பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கொண்டவர்களாயும் திகழ்கிறார்கள். அண்மைக் காலத்தில் பலர் கிறித்தவச் சமயத்தை ஏற்றுக் கொண்டனர்; இரகசியச் சங்கங்களை அமைத்துக் கொண்டு சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். பொரோ (Poro) ஆண்களின் இரகசியச் சங்கம், சந்தே (Sande) பெண்களின் இரகசியச் சங்கம் ஆகியவை இளைஞர்களுக்குக் கல்வி புகட்டுகின்றன.
மன்ரோவியா நகரம்
மகளிர் இலப்பா என்னும் ஆடையை வழக்கமாக அணிவர். ஒரு மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் ஆன இதனை நாட்டுத் துணி என்பர். இதை அவர்கள் விதவிதமாக இடுப்பில் சுற்றிக் கொள்வர். மார்புச்சட்டையின் மேலும் இதைச் சுற்றிக் கொள்வதுண்டு.
ஆண்கள் பை போன்ற காலுறைகளை அணிவர். முசுலிம் ஆண்கள் துருக்கித் (Fez) தொப்பியை அணிந்து கொள்வர். பெண்கள் வண்ணத் துணியாலான குட்டையால் தலையை மூடிக் கொள்கிறார்கள், குழந்தைகள் பிறந்தமேனியாக இருப்பதுண்டு; குறைந்த ஆடைகளை அணிவதுமுண்டு. விழாக் காலங்களில் நல்லாடைகள் உடுப்பர். கால்களுக்குச் செருப்புகளை அணிந்து கொள்வர்; அணியாத வழக்கமும் உண்டு.
தட்பவெப்ப நிலை
இலைபீரியாவில் வெப்ப மண்டலப் பருவக்காற்றுத் தட்ப வெப்பநிலை நிலவுகிறது. ஆண்டு முழுவதும் இந்நாடு வெப்பமாகவே இருக்கும். குளிர்காலமும் வறண்ட காலமும் மாறி மாறி வருகின்றன. கடற்கரைப் பகுதியில் மிகப் பலத்த மழை பொழிகிறது; 380 செ.மீ. அளவு மழை பெய்கிறது. உள்நாட்டில் மழை சராசரியாக 190 செ.மீ. அளவு பொழிகிறது. குளிர் காலத்தில் மழைமிகுதியாகப் பொழிகிறது. புனித பவுல் (St Paul) உலோபா (Lofa), செசு (Cess) ஆகியன முதன்மையான ஆறுகள். இவை வடக்கிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக்குக் கடலில் கலக்கின்றன.
நகரங்கள்
இலைபீரியாவின் தலைநகரமும் பெருநகரமும் மன்ரோவியா (Monrovia) ஆகும். இந்நகரில் ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு இக்காலப் புதுமைகளுடன் விளங்கும் சிறந்த துறைமுகம் உளது. புனித பவுல் ஆற்றங்கரை நகரான இது சிறந்த அங்காடி மையமாகும். இலைபீரியாவின் ஏற்றுமதிப் பொருள்கள் மன்ரோவியத் துறைமுகத்தின் வழியாகவே அனுப்பப்படுகின்றன. இந்நகரம் கல்விக்கும் பண்பாட்டிற்கும் சிறந்த இடமாகும்.
புச்சானன் (Buchanan), ஆர்ப்பர் (Harper) கிரீன்வில் (Greenville) போன்றவை கடற்கரைச் சிறு நகரங்கள். வோன்சமா (Voinjama), கபர்ன்ங்கா (Gbarnga), சனீகுவிலி (Sanniequeillie), கோமலாஅன் (Kolahun) போன்றவை உள்நாட்டு நகரங்கள்.
பொருளாதாரம்
பெரும்பாலான மக்கள் நிலத்தை நம்பியே வாழ்கிறார்கள். அரிசி முதன்மையான உணவுப் பொருள். நாடுகளைத் திருத்தி அமைக்கப் பெற்றிருக்கும் சிறு பண்ணைகளில் நெல் பயிராகிறது. பெண்கள் மலைச் சரிவுகளில் பாத்தி கட்டி நெல்பயிரிட்டு அறுவடை வரை காவல் புரிகின்றனர்.
இலைபீரியர்கள் மரவள்ளிக் கிழங்கையும் மீனையும் விரும்பி உண்கின்றனர். இரும்புத் தாது இலைபீரியாவின் முதன்மையான ஏற்றுமதிப் பொருள். காப்பி, பனங்கொட்டை, கோகோ, இரப்பர் போல்வனவும் இங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
வரலாறு
இலைபீரியாவில் அறிவியல் அறிஞர்கள் புதுமையான கல் வட்டங்களையும் ஏனைய பண்டைக் கைவினைப் பொருள்களையும் கண்டுபிடித்துள்ளார்கள். எனினும் அப்பகுதியில் வாழ்ந்த தொன்மைக்கால மக்களைப் பற்றி நமக்குப் போதிய சான்றுகள் கிடைத்தில. இப்பகுதியில் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் முசுலிம் பழங்குடி மக்கள் குடியேறியிருக்க வேண்டும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அமெரிக்கக் குடியேற்றவாதிகளின் கழகம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நீக்கிரோக்களை ஆப்பிரிக்காவில் தங்கவைக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது. இக்கழகம் பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கி, இலைபீரியாவை உருவாக்கியது. இலைபர் என்னும் இலத்தீன் சொல் ‘விடுதலை’ என்று பொருள்படும். விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நீக்கிரோக்களின் நாடு என்பதே இலைபீரியா என்னும் சொல்லின் பொருளாகும்.
அமெரிக்கக் கறுப்பர்கள் 19–ஆம் நூற்றாண்டு முழுவதும் இலைபீரியாவில் குடியேறினர். குடியேற்றவாதிகள் கழகம் அங்குக் குடியேறியவர்களின் சொந்தச் செயல்களில் தலையிடாமல் அவர்களைச் சொந்தக்காலில் நிற்க வைத்தது. கறுப்பர்கள் கி.பி. 1838 இல் தமக்கெனச் சட்டமன்றத்தை நிறுவினர். குடியேறியவர்களுக்கும் கழகத்திற்குமிடையே கி.பி. 1840 இல் பூசல்கள் மூண்டன. அதன் விளைவாகக் குடியேற்றவாதிகள் 1847 இல் இலைபீரியாவைச் சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அவர்கள் சோசபு சென்கின்சு இராபர்ட்சு என்பாரைக் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள்.
தொடக்கத்தில் இலைபீரியாவின் பெரும்பாலான நிலம் கடற்கரையை ஒட்டியே இருந்தது. படிப்படியாகப் பழங்குடி மக்களின் நிலங்களை விலைக்கு வாங்கி நாட்டின் பரப்பைப் பெருக்கிக் கொண்டார்கள்.
முதல் உலகப் போரின்போது இலைபீரியாவின் படை வீரர்கள் பிரான்சில் போரிட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது மன்ரோவியாவுக்கு அண்மையில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைத்தது. ஐரோப்பா, மத்திய கிழக்குப் போர் முனைகளுக்கு நேசப்படைகளின் படைக்கலங்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. போருக்குப் பின்னர் இலைபீரியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடாகியது.
வில்லியம் தப்மன் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் (1944–1971) பல சமூக, பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் ஊக்குவிக்கப்பட்டன. அனைத்து மக்களையும் இணைக்க அவர் அரும்பாடுபட்டார். அமெரிக்க–ஐரோப்பிய நிறுவனங்களை வரவழைத்து நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பெருக்க வழிவகை செய்தார். ஆப்பிரிக்க நாடுகளுடனும் பொருளாதார–பண்பாட்டுக் கூட்டுறவை ஏற்படுத்த தப்மன் பெரிதும் முயன்றார். அவருக்குப்பின் குடியரசுத் தலைவரான வில்லியம் தோல்பர்ட்டும் தப்மனின் கொள்கைகளைத் தொடர்ந்து செயலாற்றினார்.
இலைபீரியாவின் அரசுத் தலைவர்கள் பெரும்பாலும் அமெரிக்க இலைபீரியர்களேயாவர். படை வீரர்களின் சிறு குழு ஒன்று 1980–இல் கலகம் செய்து தோல்பர்ட்டைக் கொலை செய்து இராணுவ ஆட்சியை நிலைநாட்டியது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 453)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bb5tjva/
தமிழ்“இலைபீரியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bb5tjva/APA
Oliyon Research. (2026). இலைபீரியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bb5tjva/MLA
"இலைபீரியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bb5tjva/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment