இராமா கெமாங்கு என்பவர் தாய்லாந்து நாட்டின் இடைக்கால அரசர்களுள் ஒருவர். இவர், கி.பி. 1275 முதல் கி.பி. 1317 வரை அரசராக இருந்தார். அக்காலத்தில் தாய்லாந்தைச் சுகோதாய் (Sukhothai) என்றனர். இராமா கெமாங்கு (Rama Khamheng) என்னும் சொல்லுக்கு மாவீரன் இராமன் என்பது பொருள். இவர் சுகோதாய் மரபின் முதல் அரசரான இந்திராதித்தியன் என்பாரின் இரண்டாம் மகன். இவர் தம் அண்ணனுக்குப் பின்னர் அரசரானார். அரசரானதும் இவர் தம் தந்தையாரின் வெற்றிகளைத் தொடர்ந்தார்; அண்டையிலிருந்த அரசர்களைத் தம் உறுதுணைவர்களாக்கிக் கொண்டார்; அக்காலத்தில் சீனாவின் பேரரசராயிருந்த குப்ளாய் கான் (Kublai Khan) என்பாரிடம் தம் தூதுக்குழு ஒன்றினையும் பீக்கிங்கு நகரத்திற்கு அனுப்பிவைத்தார். இராமா கெமாங்கு, இராணுவ நடவடிக்கையிலும் அரசியலிலும் திறமை பெற்றவராயிருந்ததோடு, தேரவாத புத்த சமயத்திலும் (Theravada Buddhism) கலைகளிலும் பேரார்வம் உடையவராக விளங்கினார். சீனாவிலிருந்து மட்பாண்டத் தொழிலாளர்களைச் சுகோதாய்க்குக் கொணர்ந்து செங்கற் சூளைகளை நிறுவிய பெருமை இவருக்குண்டு, இவரே தாய்லாந்தின் முதல் தாய் அகரவரிசையை (Thai Alphabet) உண்டாக்கியவர். இதனை இவர் அயல் எழுத்து வடிவங்களின் அடிப்படையில் உருவாக்கினார். இவர் காலத்தில் நாட்டில் பெருகிய வளத்தையும், நீதி நெறி தவறாது இவர் ஆட்சி நடத்திய பெருமையையும், கி.பி. 1292–இல் நாட்டப்பெற்ற கற்றூணிலமைந்த கல்வெட்டொன்று விளக்குகிறது. இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்தே தாய் மொழியின் தொன்மையான எழுத்தாகும்.