சிறுநீரக நோய் அறுதியிடச் செய்யப்படும் ஆய்வின் பெயர் சிறுநீரகப் பிணிக் கூறாய்வு (renal biopsy) எனப்படும். சிறுநீரகத்தின் ஒரு சிறு பகுதி துண்டித்து எடுக்கப்பட்டுப் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, நோய் நிலை முடிவு செய்யப்படுகிறது. இவ்வாய்வு மூலம் சிறுநீரகத்தைப் பற்றிய மருத்துவ அறிவு பெரிதும் முன்னேறியுள்ளது. பிணிக் கூறாய்வு மூலம் பெறப்பட்ட திசு,சாதாரண உருப் பெருக்கி, எலெக்ட்ரான் உருப் பெருக்கி போன்றவற்றால் ஆய்வு செய்யப்படும். தடுப்பாற்றல் பன்னிறப் பகட்டொளி உருப் பெருக்கியின் மூலம் ஆய்வு செய்தால், இம்யூனோகுளோபிலின், ஃபைப்ரின் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். சிறுநீரில் குருதி, புரதம், சிறுநீரக முறிவு போன்ற பல நிலைகளின் காரணத்தைத் தெரிந்து கொள்ளச் சிறுநீரகப் பிணிக் கூறாய்வு உதவுகிறது. பட்டறிவு மிக்க மருத்துவரின் மேற்பார்வையில் இந்த ஆய்வு செய்யப்படும் போது, தீமை ஏற்படாது. இந்த ஆய்வின் போது, நோயாளிக்கு இரண்டு சிறு நீரகங்கள் இருக்க வேண்டும்; குருதி உறைவு தொடர்பான கோளாறுகள் எதுவும் இருக்கக் கூடாது. குருதி மிகு அழுத்தம் இருந்தால், அது கட்டுப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இம்முறை நோய் அறுதியிட மட்டுமின்றி, நோய் முன் கணிப்புக்கும் உதவுகிறது. சிறுநீரகப் பெயர்ச்சி அறுவை செய்வதற்கு முன்பும், பின்பும் இந்த ஆய்வு தேவையாகிறது. முதுகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஊசியைச் செலுத்தி, சிறுநீரகத் திசுவைப் பெறுகின்றனர். இதில் ஏறத்தாழ 5—35 சிறுநீரக வடிவ முடிச்சுகள் இருக்கும். இன்றியமையா நிலையில், அறுவை மூலம் பிணிக்கூறாய்வு செய்யப்படுகிறது. —சாரதா கதிரேசன் நூலோதி. J.H. Stein. Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983.