இவ்வேதி வினையில் நைட்ரோ தொகுதி கரிமச் சேர்மங்களில் இணைக்கப் படுகிறது. நைட்ரோ ஏற்ற வினை, தொழில் துறையில் மிக இன்றியமையாதது. பல்வேறு நைட்ரோ–அரோமாட்டிக் சேர்மங்களைத் தொழில் துறையில் பெருமளவில் தயாரிக்க நைட்ரோ ஏற்றம் உதவுகிறது. எடுத்துக் காட்டாக, தற்போது ஆண்டு தோறும் ஒரு லட்சம் டன்னுக்கும் மேலான அளவில், நைட்ரோ பென்சின் சேர்மம், பென்சீனிலிருந்து நைட்ரோ ஏற்ற முறையால் தயாரிக்கப் படுகிறது. இவ்வாறு தயாரிக்கப் படும் நைட்ரோ பென்சீனின் பெரும் பகுதி அனிலீனாக மாற்றப் பட்டு, வண்ணச் சாயங்கள் தயாரிக்கப் படுகின்றன. பல வித வெடி மருந்துகள் தயாரிக்கவும், நைட்ரோ ஏற்றம் உதவுகிறது. கரிமச் சேர்மங்களான டொலுவின், ஹெக்சா மெத்திலீன், டெட்ரமீன், கிளிசரின், செல்லுலோஸ் ஆகியவற்றைத் தனித் தனியே நைட்ரோ ஏற்றம் செய்வதால், முறையே டிரை–நைட்ரோ டொலுயீன் (TNT), சைக்ளோனைட், நைட்ரோ–கிளிசரின், நைட்ரோ–செல்லுலோஸ் ஆகிய வெடி மருந்துகள் கிடைக்கின்றன. பொதுவாக, அரோமாட்டிக் நைட்ரோ ஏற்ற வினைகள் நைட்ரிக் அமில–சல்ஃப்யூரிக் அமிலக் கலவையின் உதவியால் நடை பெறுகின்றன. நைட்ரிக் அமிலம், அசெட்டிக் அமிலம்–அசெட்டிக் அமில நீரிலிக் கலவையும் நைட்ரோ ஏற்ற வினைக்குப் பயன் படுத்தப் படுவதுண்டு. சில சமயங்களில், சூழ்நிலைக்கேற்ப நீர்த்த நைட்ரிக் அமிலமும் இதற்காகப் பயன் படுத்தப் படுகிறது. தற்போது, நைட்ரோனியம் அயனிகள் கொண்ட (NO₂*) படிக உப்புகளைப் பயன் படுத்தி, நைட்ரோ ஏற்றம் செய்யும் முறையும் கையாளப் படுகிறது. நைட்ரோ ஏற்றம் ஒரு வெப்பம் உமிழ் வினை (exothermic reaction). இதில் ஒரு மோல் அளவான கரிமச் சேர்மம் வினை புரியும் போது, ஏறத் தாழ 15–35 கிலோ கலோரிகள் அளவிலான வெப்பம் வெளிப் படுகிறது. இது ஒரு மீளா வினை. இவ்வினையின் போது பயன் படுத்தப் படும் அடர் சல்ப்யூரிக் அமிலம் வினையின் துணை விளை பொருளான நீர்மூலக் கூறுகளை நீக்க உதவுகிறது. எனவே, இந்த அடர் அமிலம் ஒரு நீர்–நீக்கியாக (dehydrating agent) மட்டுமே முன்னர் கருதப் பட்டது. இது மீளா வினை என்பதால், இக்கருத்து தவறானது என்று பின்னர் தெளிவாயிற்று. தற்போது, அடர் சல்ஃப்யூரிக் அமிலம் ஒரு வினை வேக மாற்றியாகக் (catalyst) கருதப் படுகிறது. இது, நைட்ரிக் அமிலத்துடன் வினை புரிந்து, நைட்ரோனியம் அயனிகளை உருவாக்குகிறது. இந்த நைட்ரோனியம் அயனிகளே, உண்மையில் நைட்ரோ ஏற்றிகளாகச் செயற்படுகின்றன. நைட்ரோனியம் அயனிகளை உருவாக்கக் கலவை அமிலங்களில் அடர் சல்ப்யூரிக் அமிலத்திற்குப் பதிலாகப் பெர்குளோரிக் அமிலம், அசெட்டிக் அமில நீரிலி, ஹைட்ரஜன் ஃபுளுரைடு, போரான் டிரை-ஃப்ளுரைடு போன்ற சேர்மங்களைப் பயன் படுத்தலாம். நைட்ரோ ஏற்ற வினை வேகம், பயன் படுத்தப் படும் சல்ஃப்யூரிக் அமிலத்தின் செறிவைப் பொறுத்து மாறு படும். செறிவு மிகுந்த அமிலத்தைப் பயன் படுத்தினால், வினை வேகம் மிக அதிகமாக உயர்கிறது. எனினும், அமிலத்தின் செறிவு 90%க்கு மிகையானால், வினை வேகம் குறையத் தொடங்குகிறது. அமிலச் சூழலில் வெவ்வேறு நைட்ரோனியம் அயனி உருவாகிறது என்பதைப் பின் வரும் சமன்பாடு விளக்கும். HNO_3 + H^* \rightarrow NO_2^{+} + H_2O சல்ப்யூரிக் அமிலத்தின் செறிவை மட்டுமின்றி, வினையின் வேகம், நைட்ரோ ஏற்றம் செய்யப் படும் அரோமாட்டிக் சேர்மத்தின் இயல்பையும் பொறுத்துள்ளது. எடுத்துக் காட்டாக, ஆர்த்தோ–பாரா–திசை வழிப் பதிலீடுகள், வினை வேகத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆனால், மெட்டா–திசை வழிப் பதிலீடுகள், வினை வேகத்தைக் குறைக்கின்றன. கொள்ளிடத் தடை (Steric hindrance) நைட்ரோ ஏற்ற வினை நிகழ்வது எளிதா அல்லது கடினமா என்பதை அறுதியிடுகிறது. எடுத்துக் காட்டாக, பென்சீனை விட, டொலுயீன் எளிதில் நைட்ரோ ஏற்றம் அடைகிறது. தொழிற் துறையில், பல விதமான அரோமாட்டிக் நைட்ரோ ஏற்ற வினைகளை நிகழ்த்த 1960-ஆம் ஆண்டிலிருந்து தொடர் இயக்க முறைகள் (continuous flow Processes) கையாளப் படுகின்றன. அதற்கு முன்னர், அடுக்கு முறை (batch process) கையாளப் பட்டது. பின்னர் அறிமுகமான, தொடர்ந்தியங்கும் முறை முன்னதை விடப் பல விதங்களிலும் பயனளிக்கிறது. பென்சீன், டொலுவீன் போன்ற சேர்மங்களின் நைட்ரோ ஏற்றத்தில் பயன் படும். ஷிமிட்–மிஸ்னர் முறை மற்றும் பியாசி முறையில் (Biazzi process) தொடர்ந்தியங்கும் கலக்கிகள் பயன் படுத்தப் படுகின்றன. அமில அடர்த்தியையும் வினை முறையையும் பொறுத்து, வினைக் கலன் ஏற்ற வெப்ப நிலையில் வைக்கப் படுகிறது. இம்முறைகளில் சிறியனவும், எளியனவுமான கருவியே பயன் படுத்தப் படுகிறது. இம்முறைகளில் ஆபத்து அதிகமில்லை. ஏனெனில், எந்தச் சமயத்திலும் வினைக் கலனில் டைநைட்ரோ அல்லது டிரைநைட்ரோ டொலுயீன்கள் போன்ற வெடிக்கும் தன்மையான நைட்ரோ அரோமாட்டிக் சேர்மங்களின் அளவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. மேலும், இம்முறைகளில் சூழ்நிலையை நன்கு கட்டுப் படுத்தித் துணை வினைகளைக் (side reactions) கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடிகிறது. நைட்ரோபென்சீன். 39 சதவீகித அடர் நைட்ரிக் அமிலம், 55% அடர் சல்ஃப்யூரிக் அமிலம் போன்ற அமிலக் கலவைகளைப் பயன் படுத்திப் பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்து, நைட்ரோபென்சீன் தயாரிக்கப் படுகிறது; வினைப் பயன் 99% அமைகிறது. இத்தகைய வீரிய அமிலங்களைப் பயன் படுத்தும் போது, வெப்பக் கடத்தல் முறைகள் கையாளப் பட வேண்டும். நைட்ரோ ஏற்ற வினை வெப்பம் உமிழ் வினை என்பதால், இந்த முன்னெச்சரிக்கை தேவைப் படுகிறது. மேலே சொல்லப் பட்ட நைட்ரோ ஏற்றத்துக்கு விதி விலக்காக விளங்குவது ஃபினால், ஃபினாலிக் ஈதர்கள், பாரா–குளோரோ அனிசோல் போன்ற சேர்மங்களின் நைட்ரோ ஏற்றமாகும். இச்சேர்மங்கள் எளிதில் நைட்ரோ ஏற்றம் செய்யக் கூடியவை என்பதால், நைட்ரல் அமிலம் ஆற்றல் மிகு வினை வேக மாற்றியாக விளங்குகிறது. இவ்வினையில் நைட்ரோசோனியம் அயனிகள் (NO*) இச்சேர்மங்களை முதலில் தாக்கி, நைட்ரோசோ அரோமாட்டிக் சேர்மங்களாக மாற்றுகின்றன. பின்னர், இந்த நைட்ரோசோ சேர்மங்கள் நைட்ரிக் அமிலத்தால், நைட்ரோ சேர்மங்களாக ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. இவ்வினையில், நைட்ரிக் அமிலம் வினையின் முதல் பகுதியில் நைட்ரல் அமிலமாக, ஆக்சிஜன் ஒடுக்கம் செய்யப் படுகிறது. டை நைட்ரோ பென்சீன். தொழில் முறையில் இந்தச் சேர்மமும் பெருமளவில் தயாரிக்கப் படுகிறது. 1.3–டை நைட்ரோ–பென்சீனை ஆக்சிஜன் ஒடுக்கம் செய்து, மெட்டா–நைட்ரோ அனிலீனாக மாற்றலாம். குளோரோ–நைட்ரோ–பென்சீன், பாரா–நைட்ரோ–அசெட்டானிலைடு, நைட்ரோ–டொலுயீன், நைட்ரோ நாஃப்த்தலின் போன்றவை வேதி வினைகளின் போது, இடை நிலைச் சேர்மங்களாகப் பயன் படுகின்றன. பாராஃபின்களின் திரவ நிலை நைட்ரோ ஏற்றம். பாராஃபின் அல்லது அலிபாட்டிக் ஹைட்ரோ கார்பன்களை நைட்ரோ ஏற்றம் செய்வது, அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களைப் போன்று எளிதன்று. நைட்ரோ–வளைய–ஹெக்சேன் (Nitro–cyclo–hexane), 2-நைட்ரோ புரோப்பேன், 2.2–டைநைட்ரோ புரோப்பேன் ஆகிய ஹைட்ரோ சேர்மங்களைத் தயாரிக்க, திரவ நிலை நைட்ரோ ஏற்ற முறையே ஏற்றது. இந்த வினைகளில் ஒன்றுடன் ஒன்று கலவாத இரண்டு நீர்மங்கள் பயன் படுகின்றன. வினை புரியும் கலவையைத் திரவ நிலையிலேயே வைத்திருப்பதற்குத் தேவையான அளவு அழுத்தமளிக்கப் படுகிறது. விளை பொருள்களில் ஒன்றான நீரைக் கலவையிலிருந்து அவ்வப்போது விரைவாக வெளியேற்ற வகை செய்வதால், அதிக அளவில் வினை நிகழ்ந்து கூடுதல் விளைச்சல் பெற முடிகிறது. பாராபின்களின் ஆவி நிலை நைட்ரோ ஏற்றம் (vapour–phase nitration of paraffins). சாதாரண வெப்ப நிலையில் வாயுக்களாக அமைந்திருக்கும் பாராஃபின்களை நைட்ரோ ஏற்றம் செய்ய, இம்முறை கடைப் பிடிக்கப் படுகிறது. எடுத்துக் காட்டாக, சூடாக்கப் பட்ட நிலையில், புரோப்பேனில் திரவ நைட்ரிக் அமிலத்தைத் தெளிப்பதன் மூலம், புரோப்பேனை நைட்ரோ ஏற்றம் செய்யலாம். இது ஒரு வெப்பம் உமிழ் வினை என்பதால், இதன் மூலம் வெளிப் படும் வெப்பம் நைட்ரோ ஏற்றம் தொடர்ந்து நடைபெற உதவுகிறது. 1-நைட்ரோ புரோப்பேன், 2-நைட்ரோபுரோப்பேன், நைட்ரோஎத்தேன், நைட்ரோ மெத்தேன் ஆகிய சேர்மங்கள் இம்முறையில் தயாரிக்கப் படுகின்றன. இவை கரைப்பான்களாகவும், இடை நிலைச் சேர்மங்களாகவும், எரி பொருள்களாகவும் உதவுகின்றன. மூலக் கூறு எடை குறைவான பாராஃபின்கள் பொதுவாக, ஆவி நிலையில் நைட்ரோ ஏற்றம் செய்யப் படுகின்றன. மூலக் கூறு எடை மிகக் குறைவான மெத்தேன் மற்றும் ஈரிணைய, மூவிணைய ஹைட்ரஜன்களை (Secondary and tertriary hydrogen) கொண்ட பாராஃபின்களை 100psi அழுத்தத்திலும், 375–440°C வெப்ப நிலையிலும் 0.5-2 நொடிகளுக்குள் மிக எளிதாக நைட்ரோ ஏற்றம் செய்யலாம். மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில், அல்க்கேன்களில் உள்ள எந்த ஹைட்ரஜனையும் நைட்ரோ தொகுதியால் பதிலீடு செய்ய முடியும். இந்த வினை மாற்றங்கள் இயங்கு உறுப்புத் தொடர் வினை வழி முறையால் (free radical and chain mechanism) நிகழ்கின்றன. கிடைக்கப் பெறும் விளை பொருளின் அளவு 35–40 சதவிகிதமாக அமைகிறது. ஆனால், ஆக்சிஜன் அல்லது ஹாலோஜனை வினை புரியும் கலவையில் சேர்க்கும் போது, வினை நிகழ்ந்து கிடைக்கப் பெறும் விளை பொருளின் அளவு 70% ஆகிறது. ஆக்சிஜனைப் பயன் படுத்தும் போதும், கலனின் வெப்ப நிலை மாறு படும் போதும் கிடைக்கும் விளை பொருள்களில் நைட்ரோ மெத்தேனின் அளவு மிகுந்து காணப் படுகிறது. இது போன்றே, ஹாலோஜன்களைப் பயன் படுத்தும் போதும், கலனின் வெப்ப நிலை மாறாமல் கட்டுப் படுத்தப் படும் போதும் கிடைக்கும் விளை பொருள்களில் நைட்ரோ புரோப்பேன்கள் மிகுதியாக அமைகின்றன. இத்தகைய ஆவி நிலை நைட்ரோ ஏற்ற வினைகளில் (குறிப்பாக ஆக்சிஜனைப் பயன் படுத்தும் போது), ஆக்சிஜனேற்றமடைந்த ஹைட்ரோ கார்பன்கள் உருவாகின்றன. ஆனால், இந்த வினைகளில் இரு பதிலீட்டுச் சேர்மங்களான டைநைட்ரோ சேர்மங்கள் கிடைப்பதில்லை. ஆல்கஹால்களின் நைட்ரோ ஏற்றம். ஆல்கஹால் பல்ஹைட்ராக்சி ஆல்கஹால் போன்ற சேர்மங்களை நைட்ரிக் அமில–சல்ஃப்யூரிக் அமிலக் கலவை கொண்டு நைட்ரோ ஏற்றம் செய்யலாம். நைட்ரிக் அமிலத்தின் எஸ்ட்டர்களைத் தரும் இவ்வினை ஒரு மீள் வினை. இவ்வினை அரோமாட்டிக் சேர்ம நைட்ரோ ஏற்றத்தையே பெரும்பாலும் ஒத்துள்ளது. பாலிஹைட்ராக்சி சேர்மங்களை நைட்ரோ ஏற்றம் செய்து, பல வித வெடி மருந்துகளைத் தயாரிக்கலாம். அமீன் நைட்ரோ ஏற்றம். அமீன்களை நேரடியாக நைட்ரோ ஏற்றம் செய்து, நைட்ரோ அமீன்களைப் பெற முடிவதில்லை. அதற்கான மாற்று வழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அமைடுகளையும், அமீன் சார்புச் சேர்மங்களையும் தனித்த நைட்ரிக் அமிலத்தாலோ, சல்ஃப்யூரிக் அமிலம் கலந்த கலவையாலோ, நைட்ரோ ஏற்றம் செய்யலாம். இவ்வகை நைட்ரோ ஏற்றத்திற்கு நைட்ரிக் அமிலம்–அசெட்டிக் அமிலம், அசெட்டிக் அமில நீரிலி கலவையும் ஏற்றதாக அமைகிறது. இவ்வினை மூலம் கிடைக்கும் விளை பொருள்களில் ஹெக்சா மெத்திலீன் டெட்ரமீன் போன்ற மூவிணைய அமின்கள் நைட்ரோ ஏற்றிகளுடன் வினை புரிந்து, நேரடியாக நைட்ரோ அமின்களைத் தருகின்றன. பிற நைட்ரோ ஏற்ற வினைகள். அம்மோனியம் பிக்ரேட், சைக்ளோனைட் என்பன அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் வெடி மருந்துகளாகும். சைக்ளோனைட் என்பதன் வேதிப் பெயர் வளைய–டிரை–மெத்திலீன்–டிரை–நைட்ரோ–அமீன் ஆகும். TNT என்னும் வெடி மருந்தை விட இது, மிகையான ஆற்றல் வாய்ந்தது. மிகவும் பாதுகாப்பான இது இடை விடாது தொடர்ந்தியங்கும் நைட்ரோ ஏற்ற முறையால் பெருமளவில் தயாரிக்கப் படுகிறது. இம்முறையில், ஏறத் தாழ 600 அடி நீளமுள்ள பைரக்ஸ் கண்ணாடிக் குழாயில், முதலில் ஹெக்சா மெத்திலீன் டெட்ரா–அமீனையும், தக்க இடை வேளைகளில் அடர் நைட்ரிக் அமிலம், அம்மோனியம் நைட்ரேட், அசெட்டிக் அமில நீரிலி ஆகியவற்றையும் செலுத்திச் சைக்ளோனைட்டை (70%) பெறலாம். பாராஃபின்களையும், ஒலிஃபின்களையும், நைட்ரோ ஏற்றம் செய்ய நைட்ரஜன் பெராக்சைடு வளிமத்தைப் பயன் படுத்தலாம். எடுத்துக் காட்டாக, புரோப்பேன் ஹைட்ரோ கார்பன் நைட்ரஜன் பெராக்சைடுடன் வினை புரிந்து கிடைக்கப் பெறும் விளை பொருளில் 2–நைட்ரோ புரோப்பேன் அளவு 72% ஆகும். 200–250°C வெப்ப நிலையில் ஈரிணைய கார்பன்–ஹைட்ரஜன் பிணைப்புகளைத் தாக்குவதில், நைட்ரஜன் பெராக்சைடு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது. வளைய ஹெக்சேனும், நைட்ரஜன் பெராக்சைடும் வினை புரிந்து, மிக அதிக அளவில் நைட்ரோ–வளைய ஹெக்சேனைத் தருகிறது. நைட்ரஜன் பெராக்சைடு ஒலிஃபீனுடன் கூட்டு வினை (addition reaction) புரிந்து டை–நைட்ரோ–அல்கேன்களையும், நைட்ரோ நைட்ரேட் சேர்மங்களையும் உருவாக்குகிறது. ஒலிஃபீன்கள் நைட்ரிக் அமிலம் கொண்டும், நைட்ரோ ஏற்றம் செய்யப் படலாம். இவ்வினையில், நைட்ரோ ஒலிஃபீன்களும், நைட்ரோ ஆல்கஹால்களும், நைட்ரோ நைட்ரேட் எஸ்ட்டர்களும் உருவாகின்றன. ஆய்வகத்தில், அலிஃபாட்டிக் நைட்ரோ சேர்மங்களைத் தயாரிக்க, வெள்ளி நைட்ரைட்டையும், அல்க்கைல் குளோரைடையும் பயன் படுத்தும் விக்டர் மேயர் முறை கையாளப் படுகிறது. சோடியம் நைட்ரைட், லித்தியம் நைட்ரைட், பொட்டாசியம் நைட்ரைட் போன்ற கார உலோக நைட்ரைட்டுகளைப் பயன் படுத்தும் மற்றொரு முறையும் உள்ளது. இந்த முறையில், எத்திலீன் கிளைகால், நீர் அல்லது ஹைட்ரஜன் அயனிகளைத் தரும் கரைப்பான்கள் பயன் படுகின்றன.ஆய்வகத்தில் ஓரளவு பயன் படுத்தப் படும் சில நைட்ரோ ஏற்றிகளான நைட்ரைல் குளோரைடு, நைட்ரஜன் பெண்ட்டாக்சைடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். —க. ரத்னமுத்து துணை நூல். A. Marshall, Explosives: Their History, Manufacture, Properties and Tests, 3 volumes, 1980.