பிற வளரும் நாடுகளைப் போலவே உகாண்டாவும் (Uganda) உயர்கல்வித் திறம் பெற்றவர்கள் பற்றாக்குறையால் வாடுகிறது. இக்காரணத்தால் இந்நாடு சமுதாய, பொருளாதார மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சியும் சமுதாய நலனும் கல்வியால்தான் மேம்பட்டு அமையும் என்று இந்நாட்டு அரசு கருதத் தொடங்கியுள்ளது. அனைவருக்கும் கல்வியறிவு வழங்குவது, அந்நாட்டின் பண்பாடுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது, சுறுசுறுப்பான சமுதாயத்தின் ஆக்கத்திறன் மிக்க குடிமக்களை உருவாக்குவது, நாட்டுப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்யத் துணைபுரியும் திறமைமிக்க தொழில் வல்லுநர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்குவது ஆகியன உகாண்டா நாட்டுக் கல்வியின் தலையாய குறிக்கோள்கள். உகாண்டாவில் ஊர்ப்புறங்களில் மழலையர் பள்ளிகள் இன்னும் தோன்றவில்லை. நகர்ப்புறங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ள மழலையர் பள்ளிகளில் சில செல்வர் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் படித்து வருகின்றனர். தொடக்கக் கல்வி ஏழு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் ஆறுவயதில் முதன் முதலாகப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கின்றனர். 70 விழுக்காடு குழந்தைகள் தொடக்கக் கல்வி பெறுகின்றனர். தொடக்கப் பள்ளியில் ஆங்கிலம் கணிதம், பொது அறிவியல், வரலாறு, சமய அறிவு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளி மாணவர்கள் ஏழாம் ஆண்டிறுதியில் தொடக்க நிலையிறுதித் தேர்வு (Primary Learning Examination – PLE) எழுதுகிறார்கள். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளிலோ (Advanced ‘A’ level) தொழிற் பள்ளிகளிலோ சேருகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவில் இம்மாணவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பள்ளிகளிலும் சேருகின்றனர். தொடக்கநிலைப் பள்ளிகளில் சேர்ந்து பயின்ற மாணவர்களுள் 25 விழுக்காடு மாணவர்களே உயர்நிலைக் கல்விக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் ஏறத்தாழப் பாதியிலே நின்று விடுகிறார்கள். உயர்நிலைக் கல்வியை வெற்றியுடன் முடித்த மாணவர்களுள், 20–இலிருந்து 40 விழுக்காடு வரையிலான மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளிலோ (Advanced ‘A’ level) ஆசிரியர் உயர் பயிற்சிக் கல்லூரிகளிலோ தொழிற்கல்வி நிறுவனங்களிவோ வணிகவியல் கல்லூரிகளிலோ சேர்ந்து பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் சேர்ந்து பயின்ற மாணவர்களுள் 20 விழுக்காடு மாணவர்களே வெற்றி பெறுகின்றனர். ஏறத்தாழ 80 விழுக்காடு மாணவர்கள் படிப்பைப் பாதியிலே நிறுத்திவிடுகின்றனர். உகாண்டாவில் பள்ளிசாராக் கல்வி (Non–formal Education) வசதி உண்டு. இக்கல்வி மையங்களில் இளைஞர்களும் வயது முதிர்ந்தோரும் சமுதாய, பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு பெறும் வகையில் கல்வி கற்கின்றனர். பள்ளிசாராக் கல்வி வளர்ச்சியில் ஆலயங்கள், வட்டார எழுத்தறிவுக் கழகங்கள், பண்பாடு, சமுதாய மேம்பாடு அமைச்சகம் (Ministry of Culture and Community Development) ஆகியன ஈடுபடுகின்றன. இந்நாட்டில் 1964–65–ஆம் ஆண்டுகளில் அரசினால் தொடங்கப்பெற்ற வயதுவந்தோர் கல்வியறிவு இயக்கம் (Adult Literacy Campaign) வெற்றியடையவில்லை. இருந்தபோதிலும் இந்நாட்டு வானொலி, தொலைக்காட்சி ஆகியன உடல்நலம், உடல்நலப் பாதுகாப்பு, ஊட்டச் சத்துணவு, குடும்பநலம், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில்கள் குறித்து மக்களுக்குப் பொது அறிவை வழங்கி வருகின்றன. உகாண்டாவிலுள்ள மாக்ரரே பல்கலைக்கழகத் தொடர்கல்வி மையம் (Makerere University's Centre for Continuing Education–CCE) பல்கலைக்கழகக் கல்வியை ஊர்ப்புற மக்களுக்கு அளிக்கும் சிறந்தபொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இம்மையம் வயதுவந்தோர் கல்விப் பாடங்களை முழுநேரக் கல்வியாகக் கற்பிக்கிறது. இக்கல்வி பெறுவோர் இம்மையத்தில் வந்து தங்கிக் கற்கின்றனர். ஓராண்டுக் கால இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்கலைக்கழகம் வயதுவந்தோர் கல்விச் சான்றிதழ் (University Certificate in Adult Studies) வழங்குகிறது. இம்மையத்தின் மாநில மையங்கள் உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்விப் பாடங்களை வேலையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்குக் கற்பிக்கின்றன. மேலும், இவை வயதுவந்தோர் கல்வி குறித்து ஆசிரியர்களைக் கொண்டு கலந்துரையாடல், கருத்தரங்கம் போன்றவற்றையும் நடத்தி வருகின்றன. நிதியும் நிருவாகமும் இந்நாட்டின் கல்வியை நிருவகிக்கும் முழுப் பொறுப்பும் கல்வி அமைச்சகத்திடமுள்ளது. ஆனால், தொடக்கநிலைப் பள்ளிகளின் பொது நிருவாகம் மாவட்டக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் மேல்நிலைப் பள்ளிக் கல்வி, ஆசிரியர் பயிற்சி, தொழில்நுட்பக் கல்வி, வணிகவியல் கல்வி ஆகியவற்றை நேரடிப் பொறுப்பேற்றுக் கண்காணித்து வருகிறது. மாக்ரரே பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்று ((Autonomous) இயங்கி வருகிறது. பள்ளிசாராக்கல்வி நிருவாகம் பண்பாடு, சமுதாய மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்குகிறது. அரசு கல்விக்காகத் தன் வரவு செலவுத் திட்டத்தில் 1972–ஆம் ஆண்டில் 25.3 விழுக்காடு ஒதுக்கியது; ஆனால், நாட்டின் வருவாய்க் குறைவு காரணமாக 1980–ஆம் ஆண்டிலோ 14.7 விழுக்காடு நிதியே ஒதுக்கியது. ஆசிரியர் பயிற்சி உகாண்டாவில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் பயிற்சி பெறுகிறார்கள். மாக்ரரே பல்கலைக்கழகக் கல்வியியல் புலம் மேனிலைக் கல்வியில் ஆசிரியர் பயிற்சி தருகிறது. தேசியக் கல்வி நிறுவனம் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருகிறது. கம்பாலா (Kampala) நகரிலுள்ள உகாண்டாத் தொழில்நுட்பவியல் கல்லூரி தொழில்நுட்பவியல் பணியாளர்களுக்குப் பயிற்சி தருகிறது. கல்வித்திட்டம் உகாண்டாவில் 1973–இல் தொடங்கப்பெற்ற தேசிய கல்வித் திட்ட மேம்பாட்டு மையமே (National Curriculam Development Centre) இந்நாட்டின் பாடத்திட்டம், கல்வித்திட்டம் ஆகியவற்றை முடிவு செய்கிறது. இம்மையத்தில் சிறந்த ஆசிரியர்களும் கல்வியாளர்கள் குழுக்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தம் பாடநூல்கள் எழுதுதல், ஆசிரியர் கையேடு தயாரித்தல், பாட நூல்களை அச்சிட்டு வெளிக் கொணருதல் போன்ற பணிகளைச் செய்கின்றனர். நாடு முழுவதற்கும் ஒரே தன்மையான கல்வித்திட்டம் இந்நாட்டில் செயற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்வித் திட்ட மேம்பாட்டு மையம் புதிய கற்பித்தல் முறைகளைச் சோதித்தறிதல், கற்பித்தல் திறன்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. தேர்வு முறைகள் வெளித்தேர்வு முறைகள் மூலமே உயர்நிலை, மேனிலை வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். உகாண்டாத் தேசியத் தேர்வுகள் கழகம் (Uganda National Examinations Board–UNEB) ஒவ்வொரு கல்வி நிலையிலும் தேர்வு நடத்திச் சான்றிதழ்கள் வழங்கி வருகிறது. கல்வியியல் ஆய்வு இந்நாட்டில் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் சுல்வியியலாய்வு முன்னேற்றமடையவில்லை பல்கலைக்கழகங்களில் கற்பித்தலுக்கு முதன்மையிடம் தரப்படுகிறதேயொழிய, ஆய்வுக்குச் சிறப்பிடம் தரப்படவில்லை. தனியார் முயற்சியில் மாணவர்களின் கல்வித்திறம் குறித்தும் ஆசிரியர் நடத்தை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களிடையே பெருகிவரும் எழுத்தறிவின்மை, தொடக்கநிலை, உயர்நிலை, மேனிலை ஆகிய ஒவ்வொரு நிலையிலும் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டவர்களின் எண்ணிக்கைப் பெருக்கம், கற்ற கல்விக்கும் செய்ய வேண்டிய பணிக்கும் தொடர்- பின்மை, தகுதித்திறம் கொண்ட ஆசிரியர் பற்றாக்குறை ஆகியன உகாண்டாக் கல்வி அமைப்பில் தீர்வு காணப்பட வேண்டிய சிக்கல்களாகத் தோன்றியுள்ளன. இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உகாண்டா அரசு புதிய பள்ளிகளை நிறையத் தோற்றுவிக்கிறது; செயலறிவுப் பாடங்களைப் பள்ளிகளில் புகுத்தியுள்ளது; தொழில் நுட்பவியல் கல்விக்கு முதலிடம் தந்துள்ளது; பள்ளிப் பாடத்திட்டத்தில் வேளாண்மையை ஒரு பாடமாகப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்துள்ளது. துணை நூல்கள் Uganda, Education Commission, Education in Uganda Report, Government Printer, Entebe, 1963. Uganda, Recovery Programme 1982–84, Government Printer, Entebe, 1982.