செய்தித் தொடர்புக் கம்பி வடங்கள்
ceytit toṭarpuk kampi vaṭaṅkaḷ
செய்திகளை மின்னியல் குறிப்பலைகளாகச் செலுத்தும் இவை குறைந்த மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின்னோட்டங்களுக்காக வடிவமைக்கப் பட்டன.
செய்திகளை மின்னியல் குறிப்பலைகளாகச் செலுத்தும் இவை குறைந்த மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின்னோட்டங்களுக்காக வடிவமைக்கப் பட்டன. தொலை பேசிக் கம்பி வட மின் சுற்றிலுள்ள குறிப்பலை ஆற்றல், ஒரு வாட்டில் சில மில்லியனை விடக் குறைந்தது. தொலை வரிச் செய்திகள், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றில் இவை மிகுதியாகப் பயன் படுகின்றன.
நிலத் தொலைவரித் தொடர்களின் வளர்ச்சி. முதல் நெடுந்தொலைவு மின் செய்தித் தொடர்பு முறை 1830ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட தொலை வரியாகும். இக்கண்டுபிடிப்பு கம்பி மற்றும் கம்பி வடத் தொழிற்சாலைகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தது. கம்பங்களின் மேல்இருக்கும் கடத்தாப் பொருள்களின் மேல் தாங்கலாக வைக்கப் பட்டிருக்கும் உறையற்ற கம்பிகளில் தொலை வரிச் செய்திகள் செலுத்தப்பட்டன. 1860ஆம் ஆண்டில், ஏறக் குறைய, அமெரிக்காவிலுள்ள அனைத்து நகரங்களும், தொலை வரித் தொடர்களால் இணைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது, தொலை வரியில் பயன்படுத்தப் படும் மோர்ஸ் குறியீட்டில்தான் (தந்திச் செய்தி அனுப்பப் பயன்படும் ஒரு வகைக் குறியீடு) அக்காலத்திலும், செய்திகள் அனுப்பப்பட்டன. மோர்ஸ் குறியீட்டினால், சில நிமிடங்களிலேயே செய்திகள் நெடுந் தொலைவுக்கு அனுப்பப்படுகின்றன.
நிலத் தொலை பேசிக் கம்பி வடத்தின் வளர்ச்சி. 1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பார் தொலை பேசியைக் கண்டு பிடித்தார். பின்னர், தொலை பேசித் தொடர்களுக்குத் தேவையான கம்பி வடங்களை உருவாக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. கம்பங்களின் மேல் உள்ள உறையற்ற கம்பிகளையும், கடத்தாப் பொருள்களையும் கொண்டு உருவான தொலை வரித் தொடர்களைப் போல், முற்காலத் தொலை பேசித் தொடர்கள் அமைக்கப்பட்டன. தொலை பேசிக் கம்பி வடங்களை அமைக்கும் போது, நெடுந்தொலைவிற்குச் செலுத்தப் படும் பேச்சு, சிக்கல்களை உருவாக்கியது. ஏனெனில், சைகைத் திறனிழப்பு, உருக் குலைவு இவை பேச்சுச் சைகைகளை வாங்கி முனையில் தெளிவின்றிக் கேட்கச் செய்யும்.
கம்பி வடத்தின் மின் பண்புகளான மின் தேக்கம் மற்றும் மின் நிலைமம் போன்றவற்றின் இன்றியமையாமை இங்கிலாந்தின் ஒலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside) என்பவரால் வலியுறுத்தப் பட்டது. அமெரிக்க அறிவியலாரும், பொறியியல் வல்லுனருமான மைக்கேல் ஐ. பியூபின், 1899-ஆம் ஆண்டில், தொலை பேசிக் கம்பி வடங்களுக்குத் தூண்டு சுருள்கள் சேர்க்கப் பட்டால், வலிமை மிகு தெளிவான குரல் செலுத்தம் உண்டாகுமெனக் கண்டு பிடித்தார்.
நவீன நிலத் தொலைபேசிக் கம்பி வடம். ஜே.ஏ. பிலமிங், லீ டீ ஃபாரெஸ்ட் ஆகியோரால் இரு முனைய, மும்முனைய வெற்றிடக் குழாய்கள் கண்டு பிடிக்கப் பட்டன. பிறகு, பேச்சுச் சைகைகள் மிகைப் படுத்தப் பட்டு, ஒற்றைக் கம்பி வடத்தின் மேல் தொடர்ந்த உரையாடல்களைச் சுமக்க, சுமப்பி அதிர்வெண்கள் பயன்படுத்தப்பட்டன. மாறுபட்ட சுமப்பி அதிர்வெண்களில் நிகழும் உரையாடல்களைத் தனியாகப் பிரிக்க இசைவுறு வடிப்பான்கள் (tuned filters) பயன்பட்டன. . அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளில் 0.935 செ.மீ. ஆரமுள்ள ஒரே மையம் கொண்ட கம்பி வடங்கள் மிகுதியாகப் பயன்படும். இவை இரட்டைகளாகப் பயன்படும். ஒரு திசையிலிருந்து வரும் செய்திகளுக்காக ஒரு கம்பி வடமும், மற்றொரு திசையிலிருந்து வரும் செய்திகளுக்காக மற்றொரு கம்பி வடமும் பயன்படும். ஒழுங்கான சுமப்பி முறைகளில், இம்மாதிரியான கம்பி வடங்கள் ஓர் இரட்டைக்கு 36000 குரல் பாதைகளைக் கொடுக்கும். ஒரே மையம் கொண்ட 20 கம்பி வடங்கள், 432,400 குரல் பாதைகளைக் கொடுக்கும்.
அமெரிக்காவின் கண்டங்கள் கடந்து செல்கிற தொலை பேசித் தொடர்கள், கம்பி வடங்கள் ஆகியவை கீழ்க் காணும் வரிசையில் வளர்ச்சி அடைந்தன. அவை காப்பற்ற கம்பித் தொடர்கள், சுமையேற்றப்பட்ட கேளலை அதிர்வெண் கம்பி வடம், சுமப்பி அதிர்வெண் செலுத்தத்திற்கான பல இரட்டைக் கம்பி வடங்கள், சுமப்பி அதிர்வெண் செலுத்தத்திற்கான ஒரே மையம் கொண்ட கம்பி வடங்கள் என்பனவாகும். அமெரிக்காவைக் கடந்து செல்கிற முதல் தொலைபேசி வழி 1915இல் தொடங்கப் பட்டது. ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றை இணைக்கும் முதல் கண்டங்களுக்கிடையேயான தொலை பேசிக் கம்பி வடம் 1956இல் நிறுவப்பட்டது.
—இரா. இந்து நூலோதி. S. L. Uppal, Electrical Power, Twelfth Edition, Khanna Publishers, New Delhi, 1986.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 772)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72haaub2/
தமிழ்“செய்தித் தொடர்புக் கம்பி வடங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/72haaub2/APA
Oliyon Research. (2026). செய்தித் தொடர்புக் கம்பி வடங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/72haaub2/MLA
"செய்தித் தொடர்புக் கம்பி வடங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/72haaub2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment