தென்னிந்தியச் சிற்றரச மரபினருள் இருக்குவேளிரும். ஒருவர். கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை இவர்கள் ஆண்டுவந்ததால் கொடும்பாளூர் வேளிர் எனவும் குறிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 18 வகை வேளிர்கள் ஆண்டுவந்தனர் என இலக்கியங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ வேந்தர்கட்கு உட்பட்டு, சிறு நிலப் பகுதிகளை ஆண்டுவந்த வேளிர்கள் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர். இருக்கு வேளிரும் தம் உழைப்பால் வரலாற்றில் முதன்மைத் தன்மை பெறுகின்றனர். இருக்குவேளிர் ஆட்சிபுரிந்த பகுதி கோனாடு என்று குறிக்கப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த கொடும்பாளூர், அன்னவாசல், ஒல்லையூர் (ஒலிய மங்கலம்) ஆகிய மூன்று கூற்றங்களைத் தன்னகத்தே கொண்ட நிலப்பரப்பே கோனாடு ஆகும். இவர்கள் யாதவர் மரபினர் என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம். கொடும்பாளூர் வேளிர் மன்னர்கள் இருக்குவேள் என்றும் இளங்கோவேள் என்றும் பட்டம் புனைந்து ஆண்டு வந்தனர். அரசனாகப் பதவியேற்று ஆட்சிபுரிந்தவர்கள் இருக்குவேள் என்னும் பட்டத்தையும், மற்றவர்கள் இளங்கோவேள் என்னும் பட்டத்தையும் பூண்டனர். இவர்கள் கி.பி. 6,7,8–ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்களுடனும், பாண்டியர்களுடனும் அரசியல் தொடர்பு கொண்டிருந்தனர். இருக்குவேளிர் பாண்டியர், சோழர், முத்தரையர் என்ற அரச குலத்தவருடன் திருமண உறவு கொண்டிருந்தனர். இவர்களால் எடுப்பிக்கப்பட்ட கொடும்பாளூர்க் கோயிலில், கன்னடக் கல்வெட்டு ஒன்று காணப்படுவதால், இவர்கட்குக் கன்னட நாட்டுடன் தொடர்பு இருத்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். விசயாலய சோழன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், வலிமைமிக்க முத்தரையரை வென்று, முத்தரையர் நாட்டைக் கைப்பற்றி, மீண்டும் சோழரின் ஆட்சியை நிலை நாட்டினான். இதற்குப் பேருதவி புரிந்தவர் இருக்கு வேளிரேயாவர். இவர்கள் தொடர்ந்து சோழரின் படைத்தலைவர்களாகவும் அரும்பணி ஆற்றிவந்தனர். இவர்தம் பழைமை பற்றியும், வரலாறு பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள நமக்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களது குடிவழி பற்றி அறிந்துகொள்ளப் பூதிவிக்கிரம கேசரியின் கொடும்பாளூர் மூவர்கோயில் கல்வெட்டு மட்டும் பயன்படுகிறது. வடமொழியிலான இக்கல்வெட்டும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் தொடக்கமும் முடிவும் சிதைந்துள்ளன. இக்கல்வெட்டில் இவர்களது குடிவழி (Genealogy) கூறப்பட்டுள்ளது. இதில் இவர்கள்தம் இயற்பெயர்கள் கூறப்படாமல், விருதுப்பெயர்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. அவை பின்வருவன: யானைப்படையை முறியடித்தவன், அவனது மரபில் தோன்றிய ‘பரவீரசித்’, மழவர்நாட்டை அதிரடித்த வீரதுங்கன், அதிவீர அனுபவன், சங்ககிரிது, நிருபகேசரி, வாதாபியை வென்ற பரதுர்க்க மர்த்தனன் (எதிரிகளின் கோட்டைகளை அழிப்பவன்), சமராபிராமன் (போர் செய்வதில் மகிழ்பவன்), பூதிவிக்கிரமகேசரி (வீரத்தில் சிங்கம் போன்றவன்). மூவர் கோயில் கல்வெட்டின் காலத்தைக் குறித்துப் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் அண்மைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் இதன் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் முதல் காற் பகுதிக்குள் அமைந்தது என்று கருதலாம். பரதுர்க்க மர்த்தனனும் சமராபிராமனும் (ஏறத்தாழ கி.பி. 850–880) பரதுர்க்க மர்த்தனன் பூதிவிக்கிரம கேசரியின் பாட்டன். இவன் வாதாபியை வென்றதாக மூவர் கோயில் கல்வெட்டு உணர்த்துகிறது. பரதுர்க்க மர்த்தனின் மகனும் பூதிவிக்கிரம கேசரியின் தந்தையுமான சமராபிராமன் அபிராச மங்கலப் போரில் சாளுக்கியரை முறியடித்தான் என மூவர் கோயில் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. சோழருடன் திருமண உறவு கொண்டிருந்த சமராபிராமன். விசயாலய சோழன் முத்தரையரிடம் தஞ்சையைக் கைப்பற்றப் பெரும்படையுதவி அளித்தான் எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. விசயாலய சோழன், இவ்வுதவிக்குக் கைம்மாறாகச் சமராபிராமனுக்குப் பல விருதுகளையும் சிறப்புரிமைகளையும் அளித்திருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர்க் கொடும்பாளூர் வேளிர், சோழர்களின் சிற்றரசர்களாக மாறிவிட்டனர். இவர்கள் இருவரும் அதித்த சோழனின் ஆணைக்கு இணங்க இராட்டிரகூடருக்கு ஆதரவாக மேலைச் சாளுக்கியருடன் போரிட்டனர் போலும். பூதிவிக்கிரம கேசரி (கி.பி. 880–930) கொடும்பாளூர் வேளிர்களுள் தலையாயவனும் பெரும் புகழ்பெற்றவனும் பூதிவிக்கிரம கேசரியேயாவன். தென்னவன் இளங்கோ வேளான், மறவன் பூதியார், மின்னாமலா, மதுராந்தக இருக்குவேள் முதலான பெயர்களாலும் குறிக்கப்பெறும் இவ்வேந்தன், பெரும் வெற்றி வீரனாகத் திகழ்ந்தது மட்டுமன்றி, சமய வளர்ச்சிக்கும் கலை வளர்ச்சிக்கும் பேராதரவு நல்கியவனாகவும் இருந்தான். பூதிவிக்கிரம கேசரி பல்லவர் மீது கொண்ட வெற்றியே, மூவர் கோயில் கல்வெட்டில் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் ஒரு பகுதியை (நாமக்கல், இராசிபுரம் பகுதி) ஆண்டு வந்த நுளம்ப பல்லவரை, முதலாம் ஆதித்த சோழன் வென்றபோது, இவன் சோழனுக்கு உறுதுணை புரிந்ததையே கல்வெட்டு இவ்விதம் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். அடுத்து, இவன் சோழருக்குத் துணையாகப் படைநடத்திச் சென்று வீரபாண்டியனையும் வஞ்சிவேளையும் வென்றுள்ளான். கருவூரில் (திருச்சி மாவட்டம்) வஞ்சி வேளடியானின் நடுகற்கல்வெட்டுக் கிடைத்துள்ளதால். விக்கிரமகேசரி வஞ்சி வேளைக் கருவூரில் வென்றான் எனக் கொள்ளலாம். பூதிவிக்கிரமகோரி சோழருடன் மண உறவு கொண்டிருந்தான். இவன் தன் மகள் பூதி ஆதிச்சபிடாரியாரை, முதலாம் பராந்தகனின் மகன் அரிஞ்சய சோழனுக்கு மணம் செய்வித்ததும், பூதியின் மூத்த மகன் பூதிபராந்தகன். சோழ இளவரசியைய மணந்ததும் இங்குக் குறிப்பிடத்தக்கன. கொடும்பாளூர் மூவர் கோவில் இவனால் கட்டப்பட்டது. இவன் பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். செம்பியன் இருக்குவேளான பூதிபராந்தகன் பூதி விக்கிரம கேசரியின் மூத்த மகனான பூதிபராந்தகன், முதலாம் பராந்தகனது ஆட்சிக்காலத்தில் செம்பியன் இருக்குவேள் என்னும் பட்டத்துடன் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளான். இவன் சோழ இளவரசியை மட்டுமன்றி, முத்தரைய இளவரசியையும் வேறுசில பெண்களையும் மணந்தான். இவனைப் பற்றிய செய்திகள் முதலாம் பார்ந்தகனின் 14–ஆம் ஆட்சியாண்டு வரையில்தான் கிடைக்கின்றன. இவன் திருக்கோயில்களுக்கு நிவந்தங்கள் சில விட்டுள்ளான். அந்தநல்லூர் சிவன் கோயிலை இவன் கட்டுவித்தான். செம்பியன் இளங்கோவேளான பூதி ஆதித்திய பிடாரன் பூதி விக்கிரம கேசரியின் இளைய மகனான இவனுக்கு, ஆதித்தியவர்மன் என்னும் பெயரும் இருந்தது. இத்தலைவனைப் பற்றிய வேறு செய்திகள் கிடைத்தில. பராந்தகன் குஞ்சரமல்லனான வீரசோழ இளங்கோவேள் (ஏறத்தாழ கி.பி. 930–967) செம்பியன் இருக்குவேள் மகனாகக் கருதப்படும் இவன், முதலாம் பராந்தக சோழனுக்குட்பட்டுக் கோனாட்டை ஆண்டவன். கல்வெட்டில் மகிமாலய இருக்குவேள் என்னும் பராந்தகன் வீரசோழன் என்னும் பெயரில் குதி்க்கப் பெறுபவனும் இவனேயாதல் வேண்டும். சோழரது இலங்கைப் படையெழுச்சியில் பங்கு கொண்ட இவன், சுந்தரசோழனின் சகோதரியான வரகுணப் பெருமானாரை மணந்துகொண்டான். இலங்கைப் படையெழுச்சியை மேற்கொள்ளுமுன்பே, இவன் குடுமியான் மலைக்கோயிலுக்கு நிவந்தமளித்துள்ளான். பராந்தகன் இருங்கோளான் ஆன சிறிய வேளான் பூதி பராந்தகனின் மகனான இவன், இரண்டாம். பராந்தகனான சுந்தர சோமுனின் படைத்தலைவன்; இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, சோழர்க்கு வெற்றி தேடித் தந்து போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவன். இவன் திருக்கற்றளிப் பிச்சன், வீர சோழ இருங்கோளார் முதலான பெயர்களாலும் குறிக்கப் பெறுகிறான். திருவிசலூரில் உள்ள இவனது வடமொழிக் கல்வெட்டு இவன் சிறப்பை எடுத்துக்கூறும். பிற்காலத்திய இருக்குவேளிர் தலைவர்கள் முதலாம் இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் மதுராந்தகன் அச்ச பிடாரன் (இராசராச இளங்கோ வேளாள்) மும்முடிச் சோழ இளங்கோவேள் ஆகிய இருவரும் சோழருக்குத் துணைபுரிந்தனர். இராசராசனின் படைத்தலைவனாகப் பணிபுரிந்து, பாண்டிய நாட்டுப் படையெழுச்சியில் பங்கு கொண்ட மதுராந்தகன், வீரசோழ இளங்கோ வேளானின் மகனாவாள். இவனுக்கு மதுராந்தகன் சுந்தரசோழனான இராசராச இளங்கோ வேளான் என்னும் பெயரும் உண்டு. இராசேந்திர சோழ இருக்குவேளான் முதலாம் இராசேந்திர சோழனின் காலத்திலும், மதுராந்தகனான இராசாதிராச இளங்கோ வேளான் இரண்டாம் இராசேந்திரனின் ஆட்சிக்காலத்திலும், வீர சோழ இளங்கோ வேளான் அதிராசேந்திர சோழனின் காலத்திலும் கோனாட்டுத் தலைவர்களாக விளங்கினர். இரணசிங்கன் உத்தமசீலன் என்னும் மும்முடிச் சோழ இருக்குவேள், விக்கிரம சோழ இருக்குவேள் ஆகியோரும் கோனாட்டுத் தலைவர்களாகக் கல்வெட்டில் இடம் பெறுகின்றனர் வீழ்ச்சி இருக்குவேளிர் கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையில் தமிழக வரலாற்றில் புகழ் பெற்று விளங்கினர். அதன்பின் இவர்கள் வீழ்ச்சியுற்றனர். இவர்கள் புகழ் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் உச்சநிலையிலிருந்தது. சமயத் தொண்டு இருக்குவேளிர் சைவ சமயத்தை ஆதரித்து, அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் சிவனுக்குக் கோயில்கள் பல எடுக்கப்பெற்றன. மடங்கள் கட்டப்பட்டன. பார்ப்பனர்களுக்கு நிலக் கொடைகள் அளிக்கப்பட்டன. திருக்கோயில்களில் பூசனை குறைவற நடைபெற, இருக்குவேள் மன்னர்களும், தலைவர்களும் இளவரசிகளும், அரசிகளும் தானங்கள் பல அளித்துள்ளதனைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். பூதி விக்கிரமகேசரி காளாமுகச் சைவப் பெரியாரான மல்லிகார்ச்சுனருக்குப் பெரிய மடம் ஒன்று கட்டிக் கொடுத்ததுடன், 11 சிற்றூர்களையும் அளித்துள்ளான். இவர்கள் சைவ சமயத்தை ஆதரித்த போதிலும், அதில் பெரும்பற்றுடையராய்ச் சமயவெறி கொண்டு பிற சமயத்தவர்க்குந் தீங்கிழைக்கவில்லை. இவர்கள் காலத்தில் கொடும்பாளூர்ப் பகுதியில் சமணமும் தழைத்திருந்தது என்பதனாலும் இவர்களின் சமயப் பொறையுடைமை புலனாகும். கலைத் தொண்டு இவர்கள் கட்டடக் கலை சிற்பக் கலை வளர்ச்சிக்கு ஆதரவு நல்கினர் என்பதனை, இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களால் அறியலாம். இருக்கு வேளிர்களின் கலைச் சிறப்பினைக் கொடும்பாளூர், செட்டியப்பட்டி, திருக்கட்டளை, திருச்செந்துறை, அந்தநல்லூர் ஆகிய இடங்களில் இவர்கள் கட்டியுள்ள கோயில்களால் அறியலாம். கொடும்பாளூரில் பூதிவிக்கிரமகேசரி மூவர் கோயிலை எடுப்பித்தான். இவற்றுள் ஒன்றினைத் தன் பெயரிலும், மற்ற இரண்டினைத் தன் இருமனைவியரான கற்றளி, வரகுணா பெயர்களிலும் எடுத்துள்ளான். இக்கோயில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டு, இருக்குவேளிரின் கலையார்வத்தை நன்கு புலப்படுத்துகிறது. இது பண்டு திருப்பூதீச்சரம் என்றே சொல்லப்பட்டது. இம்மூவர் கோயிலைச் சுற்றிலும் 13 சிற்றாலயங்கள் கட்டப்பட்டிருந்தன. மூவர் கோயிலில் ஒன்று அழிந்துவிட்டது; இரண்டு கோயில்களே இன்று எஞ்சியுள்ளன. இக்கோயிலின் மூன்றுதள (முத்தள) விமானமும், விமானத்திலும் தேவகோட்டங்களிலும் இடம் பெற்றுள்ள சிற்பங்களும் அழகே உருவாக உள்ளன. கொடும்பாளூர் முசுகுந்தேச்சரம், ஐவர் கோயில் ஆகியனவும் இருக்குவேளிர் காலத்தனவேயாகும். திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் (சிவன் கோயில்) பூதிவிக்கிரம கேசரியின் மகள் பூதிஆதித்த பிடாரியாலும், திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோயில் பூதிவிக்கிரம கேசரியின் மூத்த மகனான செம்பியன் இருக்குவேள் பூதி பராந்தகனாலும் கட்டப்பட்டன. அந்தநல்லூர் கோயிலுக்குப் பூதிபராந்தகன், பூதிபராந்தகனின் அரசியார், கன்னரதேவனின் அரசியார் ஆகியோர் தானமளித்துள்ளனர். குன்னாண்டார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த செட்டியப்பட்டி (புலியூர் அருகில்) கோயில் உருவில் சிறியதாயினும் அழகில் சிறந்துள்ளது. இருக்குவேளிர் கோயில்கள் பெரும்பாலும் முற்காலச் சோழர் கலைப்பாணியைக் கொண்டுள்ளன. இவற்றில் பல்லவரது கலைப்பாணியும் சிறிது கலந்துள்ளது. கொடும்பாளூர் முசுகுந்தேச்சரம் மகா மண்டபச் சிற்பங்கள் பல்லவர் சிற்பங்களை ஒத்துள்ளன. ம.இரா.த.