வேதியியல் பல சிறப்பான பகுதிகளை உள்ளடக்கியது. ஆய்வுக் கூடத்தில் ஆராயப் படும் பொருளின் அளவிற்கு ஏற்ப வழி முறைகளும், பயன்படுத்தப்படும் கருவிகளும் வேறுபடுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும், வேதியியலை வகைப் படுத்த முடியும். ஆய்வுக்கு உட்படும் பொருள்களின் எடை சில கிராம்களும், அதற்கு மேலும் இருக்குமானால், அம்முறை பெரு வேதியியல் என்றும், மில்லி கிராம் (1/1000 கிராம்), அல்லது நுண் கிராம் (μg)(1/1,000,000) நிலையிலானால், நுண் வேதியியல் (microchemistry) என்றும் பெயர் பெறும். நுண் வேதியியலின் தனிச் சிறப்புடைய கருவிகளும், முற்றிலும் மாறுபாடுடைய செய்முறைகளும், வியக்கத் தகு விளைவுகளும் எதிர் நோக்கப் படுகின்றன. சிறிய எடையைத் துல்லியமாக எடையிடும் தராசுகளும், தனிச் சிறப்புடைய நுண்ணோக்கிகளும், பொருள்களை எளிதில் பிரித்திட உதவும் மைய நோக்கு விசைக் கருவிகளும் (centrifuges), மேலும் பல நுண்ணிய கருவிகளும் கையாளப் படுகின்றன. செய்முறை வேதியியலின் பண்பறிவு, அளவறிவு பகுப்பாய்வுகளின் சில மைக்ரோ கிராம் பொருள்களையும், ஆயக் கூடிய வண்ணச் சொட்டு வினைகள் (spot tests, drop reactions) மேலும், நுண்ணோக்கி கொண்டு ஒரு சில படிகங்களைக் கொண்டே ஆய்தல் ஆகியவை நுண் வேதியலின் சிறப்புகளாகும். சொட்டு வினைகள். தனித்து அல்லது மிகையளவு பிற பொருள்களுடன் கலந்துள்ள நுண்ணளவிலான ஒரு பொருளைக் காண உதவும் வழி முறை முன்னேற்றமே. செய்முறை வேதியியலுக்கு, நுண் வேதியியல் ஆற்றிய பெரும் பங்கு எனலாம். இந்தச் செய்முறை முன்னேற்றம் இரு பிரிவுகளால் ஆனது. அவை சிறிதளவு வீழ் படிவுகளை நுண் பெருக்கி கொண்டு ஆய்ந்து முடிவுறல், வரையறுக்கப் பட்ட நிலைகளில் சொட்டு வினைகளில் ஏற்படும் சீரிய வண்ண விளை பொருள்களால், இனம் காணல் ஆகியவாகும். நுண் பெருக்கி கொண்டு அறியும் முறை பெஹ்ரன்ஸ் (Behrens) என்பாரால் கண்டறியப் பட்டதால், பெஹ்ரன்ஸ் வினைகள் எனப் படும். இவ்வினை வேதியியல் அறிஞர்களை விடப் படிக இயல் மற்றும் கனிம இயல் அறிஞர்களுக்கே மிகுதியும் பயன் படும். சொட்டு வினைகள் அல்லது பொட்டு வினைகள் (spot tests) எளிமையானவை. இவை இன்றைய செய்முறை பகுப்பாய்வு வேதியியலில் சிறப்பான பகுதியாக விளங்குகின்றன. பெரும்பான்மையான கரிம விளைப் பொருள்களாலும், (organic reagents) ஒரு சில கனிம விளைப் பொருள்களாலும், தனித்த நிறங்களை உடைய வினைப் பொருள்களைத் தோற்றுவித்தலே சொட்டு வினைகளின் சிறப்பியல்பாகும். இதனைச் சில சான்றுகளால் விளக்கலாம். தாமிரம் கண்டறிதல். 1% ஆல்கஹால் டை தயோ ஆக்சமைடு கரைசலால் நனைக்கப் பட்டு, உலர்விக்கப் பட்ட வடி தாள் துண்டு ஒன்று தாமிரம் கலந்த அம்மோனியா கரைசல் உள்ள ஒரு தந்துகிக் குழாயின் மூலம் தொடப் படுகிறது. தாமிர அடர்வுச் சேர்மத்தினுடைய கறுப்பு அல்லது பச்சை கலந்த கறுப்புப் பொட்டோ, வளையமோ தோன்ற, தாமிரம் கண்டறியப் படுகிறது. துத்தநாகம் கண்டறிதல். துத்தநாகம் இருக்கிறதா என்று கண்டறியப் பட வேண்டிய நடு நிலைக் கரைசலின் 3 அல்லது 4 சொட்டுகளுடன் 1% தாமிரம் (Cu2+) உள்ள கரைசல் சொட்டு ஒன்றும், 80 கி. பாதரசக் குளோரைடும் (Hgcl₂) 90 கி. அம்மோனியம் தயோசயனேட்டும் (NH₄CNS) 1 லிட்டரில் கரைந்துள்ள கரைசலின் 10 சொட்டுக்களும் சேர்க்கப் படும், பின் 1 நிமிட நேரம் நுண் சுடரில் கொதிக்க வைக்கப் பட்டுக் குளிர வைக்கப் படும். இத்துடன் 1 மி.லி. அமைல் அசெட்டேட் சேர்த்துக் குலுக்க, இரு நீர்மங்களும் சந்திக்கும் இடத்தில் உண்டாகும் ஊதா நிற வீழ் படிவு, துத்தநாகம் இருப்பதைக் காட்டும். கோபால்ட் கண்டறிதல். கோபால்ட் உள்ளதாகக் கருதப் படும் அமிலக் கரைசலின் மூசையிலுள்ள (crucible) 2 சொட்டுகளுடன், அம்மோனியம் தயோ சயனேட் படிகம் அல்லது இப்பொருளின் நிறைவுறு கரைசலின் 5 சொட்டுகள் சேர்க்கப் பட, உண்டாகும் அம்மோனியம் கோபால்ட் தயோ சயனேட் என்னும் அணைவுச் சேர்மத்தின் பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறம் கோபால்ட் இருப்பதைக் காட்டும். சொட்டு வினையின் கூருணர்வுத் திறம். ஆய்வில் எவ்வளவு மிகக் குறைவான பொருளைக் கண்டறிய இயலுமோ, அதையே கண்டறிதலின் எல்லை (limit of identification) என்பர். ஆய்வின் கூருணர்வுத் திறம் (sensitivity) விளைவை ஏற்படுத்தத் தேவையான கன அளவையும் பொறுத்தது. எனவே, ஆய்வின் கூருணர்வை அறிய அடர்வு எல்லை (limiting concentration) தேவையாகிறது. அடர்வு எல்லை. 1 மி.லி. கரைப்பானில் உள்ள பொருளின் எடை கிராமில் 1: ஓர் ஆய்வின் கூருணர்வுத் திறம் பல காரணிகளைச் சார்ந்திருப்பதால், மதிப்புகளை முற்றிலும் சரியான முடிவைக் காட்டுவனவாகக் கொள்ளப் படாமல், எதை எதிர் பார்க்கலாம் என்று காட்டுவதாகக் கொள்ளுவதே நலம். வினை, விளை பொருளின் பண்பு, கரை திறன், புலப்படும் தன்மை (visibility), வினை பொருளின் அளவு, நிறம், நோக்கப் படும் (observation) முறை, கால அளவு, மின் பகுளியின் முன்னிலை, ஹைட்ரஜன் அயனிச் செறிவு, செயல் முறை, செய்பவரின் ஈடுபாடு, கூழ்ம நிலை ஆகிய காரணிகள் ஆய்வின் கூருணர்வுத் திறத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும். திட்டவட்டமான தெரிந்தெடுப்பிற்குரிய வினைகள். ஒரே ஒரு பொருளைக் காண உதவும் வினையைத் திட்ட வட்டமான (specific) வினையென்றும், சில பொருள்களைக் காண உதவும் வினையைத் தெரிந்தெடுக்கப்பட்ட (selective) வினை என்றும் கூறலாம். வினையைத் தெரிவு செய்தலைப் பல வழிகளில் மேன்மைப் படுத்தலாம். வினை நிகழும் இடம் பொருந்தும் வினையின் தரம் வேறுபடும். ஆய்வுக் குழாய். பீங்கான் தட்டிலுள்ள அரை வட்டச் சூழ் ஆகியவற்றின் நடை பெறும் வினைகளை விட வடி தாளில் செய்யப்படும் வினைகள் சிறந்து விளங்குகின்றன. தெரிவு செய்தவை அதிகரிக்க, கரிமக் கரைப்பானைப் பயன்படுத்துவதும் ஒரு வழி. வினையின் இடையூறு செய்யும் பொருள்களை, ஃபுளுரைடு, பாஸ்ஃபேட், சிட்ரேட், டார்டாரெட், சயனைடு ஆகியவற்றால் அனைவுறு அயனிகளாக மாற்றி, இடையூற்றைக் களைவதும் தெரிவு செய்தலை அதிகரிக்கும். எ-டு: கோபால்ட் காண்பதற்கான தயோ சயனேட் வினையில் இரும்பு இடையூறு செய்வதால், அதில் ஃபுளுரைடு சேர்க்கப்பட்டு [FeF₆]++ என்னும் அணைவு அயனியாக மாற்றப் படுகிறது. இவ்வாறான மூடி மறைக்கும் (masking) பொருள்களால் கூருணர்வுத் திறம் பாதிக்கப் படலாம். இவ்வினைகளை, நுண் வேதியியலில் கையாளுவது எளிது. பண்பறிவாய்வுக்கு மிகவும் தேவையான நேர் அயனியின் பகுதிப் பிரிப்பு (group separation) தேவை இல்லை எனக் கொள்ளலாகாது. அறிவு சார்ந்த முறையில், பகுதிப் பிரிப்பு முறையையும், சொட்டு வினைகளையும் கையாளுதல் வேண்டும். தேவையான கருவிகள். இம்முறையில் பயன் படும் கருவிகள் எளிதானவை. எளிதில் செய்யக் கூடியவை. சிறிய ஆய்வுக் குழாய், அரைப் பள்ளம் உள்ள பீங்கான் தட்டுகள், சிறிய முகவை, தந்துகிக் குழாய், சொட்டுவிப்பான் (droppers–0.03 முதல் 0.05மி.லி.), கண்ணாடிக் கலக்கி, பிளாட்டின வளையக் கம்பி, நுண் எரிவி (micro burners) சிறந்த வடி தாள், கைகளால் இயக்கும் மைய நோக்கு சுழற்றி (centrifuge), நுண்ணோக்கி போன்ற ஆய்வுக் கருவிகள் இதில் பயன் படுத்தப் படும். சொட்டு வினைப் பயன்கள். பண்பறிவாய்வில் பகுதிப் பிரிப்பு, உள் பகுதிப் பிரிப்புக்குப் பின் (groups and subgroups), அறுதியிடும் (confirmatory) வினைகளாகச் சொட்டு வினைகள் கருதப் படுகின்றன. எ–டு: பிஸ்மத்துக்கான சின்கோனைன் பொட்டாசியம் அயோடைடு ஆய்வு, ஆண்டிமனிக்கான ரோடமின்–பி ஆய்வு, காட்மியத்திற்கான காடியன் ஆய்வு, மக்னீசியத்திற்கான மாக்னசான் ஆய்வு போன்றவை. அளவறி பகுப்பாய்வில், வடி கரைகலில் (filtrate) வினை முற்றுப் பெற்றதையும், வீழ் படிவில் கலந்துள்ள தேவையற்ற அயனிகளையும் கண்டறிய இவ்வினைகள் துணை புரிகின்றன. ஒளி புகாத கனிமப் பொருள்களில் உள்ள பல உலோகத் தனிமங்களைக் காணவும், சொட்டு வினைகள் பயன் படுகின்றன. உலோகக் கனிமங்களையும், இவை உள்ள இடங்களையும், காணத் தொடு பதிப்பு (contact print) பயன் படுகிறது. ஏற்றத் தாக்கு வினைப் பொருள் பரவப் பட்டு, ஊன் பசை (gelatin) பூசப் பட்ட தாள், கனிமத் தாதுவின் பளபளப்பான பரப்பின் மீது ஒற்றி எடுக்கப் படுகிறது. இத்தாள், எதிர் பார்க்கும் பகுதிப் பொருள்களுக்கான தக்க வினைப் பொருள்களால், படிப் படியாகக் கருவியியல் பண்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரச் (develop) செய்யப் படும். இவ்வினையால், மாதிரிப் பொருளுக்குத் (specimen) தீங்கேற்படுவதில்லை. இம்முறை, அம்மோனியம் மாலிபடேட், பென்சிடீன் முதலியவற்றால் பாறைகளில் உள்ள பாஸ்ஃபேட் படிகங்களைக் கண்டறிய உதவுகிறது. உலோகவியலில் சொட்டு வினைகள் அதிக அளவில் கையாளப் படுகின்றன. இவற்றில் ஒன்று நிறம் காட்டும் மின் வேதியியல் நுட்ப முறையாகும்.. இதில் உலோகமோ, உலோகக் கலவையோ, நேர் மின் முனையாகவும் கிராஃபைட் எதிர் மின் முனையாகவும், மின் பகுளியிலும், நிறம் காட்டும் வினைப் பொருளிலும் நனைக்கப்பட்ட வடி தாள் துண்டு ஒன்று, இரு மின் முனைகளுக்கு இடையில் மின்சாரம் கடத்தும் பொருளாகவும் உள்ளன. ஒரு சில நொடிகள் மின்சாரம் செலுத்துவதால், நேர் மின் முனையில் உள்ள உலோகம் அயனியாக மாறி, தாளில் உள்ள வினைப் பொருளுடன் இணைந்து, ஏற்ற நிறத்தை ஏற்படுத்தும். இம்முறையால், துரு ஏறா எஃகில் குரோமியம் இருப்பது, ஹைட்ரஜன் பெராக்சைடு வினைப் பொருளாகக் கொண்டு கண்டறியப் பட்டது. மருந்துப் பொருள்களைக் கண்டறிய, எண்ணெயிலும், வளிமப் பொருள்களிலும், மிகக் குறைந்த அளவிலுள்ள நிக்கலைக் காண, திசுக்களில் செலுத்தப் பட்ட எடை மிக்க உலோகங்களின் பரவல் தன்மையை ஆய, பழங்காலச் சித்திரங்களில் உள்ள நிறமிகளை, அச்சித்திரங்களுக்குக் கேடு ஏற்படா வண்ணம் கண்டறியச் சொட்டு வினைகள் உதவுகின்றன. விலங்கின் தசையில் உள்ள ஒரு தனிமத்தின் அளவைக் கண்டறியக் கதிரியக்க முறை பின் பற்றப் படுகிறது. இதற்கு கதிரியக்கத்தை அளவிடும் கிகெர் எண் சார் கருவி (Geiger Counter) பயன் படுகிறது. உயிர் வேதியியலில் சிறிதளவே பயன் படுத்தப் படும் நொதிகளின் செறிவைக் காணவும், நுண் வேதியியல் வழி செய்கிறது. நுண்ம வேதியியல் செயல் முறைகள் பதங்கமாதல். கரிமச் சேர்மங்களைத் தூய்மைப் படுத்திப் பிரித்தல், இனங் காணல் ஆகியவற்றில் பதங்கமாதல் கையாளப் படுகிறது. பதங்கமாகப் படிகமான (sublimate) நுண்ணிய படிகத்தை உண்டாக்கவும், நுண் நோக்கி கொண்டு ஆராயவும், உருகு நிலை காணவும் பயனாகும் எடெர்ஸ் (Eders) கருவி 0.1 மி.கி. பொருள் இதன் அடியிலுள்ள சிறிய குமிழில் வெப்பப் படுத்தப் படுகிறது. இக்குமிழினின்றும் ஒரு சில மி.மீ. தொலைவிலுள்ள ஒரு தட்டின் அடிப் புறம் நல்ல படிகங்கள் தோன்றும். இதனை நுண்ணோக்கியின் தாங்கியிலேயே உருகச் செய்து, உருகு நிலையையும் துல்லியமாகக் காண முடியும். இதற்கு 30 50 மை.கி. அளவே, அதாவது ஓரிரு படிகங்களே போதுமானவை. உருகு நிலை காணல். நுண்ணோக்கி கொண்டு காணப் படும் உருகு நிலையில் நிகழ்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது. தாங்கிக்கு ஏற்றபடி மின்னாற்றலால் வெப்பப் படுத்தும் பாளங்களும் (block) உள்ளன. இதற்குத் தள விளைவு பெற்ற (polarised) ஒளியும் பயன் படுகிறது. பெரும்பாலான பொருள்கள் இரண்டு ஒளி முறிவுப் (double refraction) பொருளாகையால், உருகு நிலை துல்லியமாக அளக்கப் படுகிறது. கொதி நிலை காணல். இதற்கு எமிச் (Emich) கருவி பயன் படுகிறது. ஒரு நுண் தந்துகியின் ஒரு முனை மேலும் சிறியதாக்கப் பட்டு, ஒரு நீர்மத்தில், அமிழ்த்தி, 1 அல்லது 2 செ.மீ. நீர்மம் ஏறியவுடன், அந்நீர்மத்தில் ஒரு காற்றுக் குழி இருக்கும்படி மூடப் படும். இவ்வாறான சில தந்துகிகள் ஒரு சொட்டு நீர்மத்தால், நுண் நோக்கி காட்சிக் கண்ணாடி வில்லையுடன் (slide) இணைக்கப் பட்டுப் படத்தில் காட்டியபடி வைக்கப் படும். வெப்ப உயர்விற்கு ஏற்ற நீர்மக் குமிழி பெரிதாய், கொதி நிலையில் அதிகப் பெருக்க மடைந்து, முகவையிலுள்ள நீர்ம மட்டத்திற்கு ஒப்ப நீர்மத் திவலையை உயர்த்தும். நிலை மாறு வெப்ப நிலை காணல். ஒரு நுண் தந்துகியில் பாதி அளவு நீர்மத்தால் நிரப்பப்பட்டு, தந்துகி மூடப் படுகிறது. தகுந்த நீர்மத்தில் இதனை வைத்து, வெப்பப் படுத்த நிலை மாறு வெப்ப நிலையில் தந்துகியின் உள்ளே மூடு பனி போன்று தோன்றும். வடி கட்டுதல். இதற்கு எமிக் வடி குச்சிகள் (Emich filter stick) பயன் படுகின்றன. இக்குச்சியில், பொக்குப் பளிங்கு (sintered glass) அல்லது பிளாட்டின நுரை பொருத்தப்பட்டிருக்கும். ‘அ’ என்பது மிகக் குறைவான வீழ் படிவுக்கு ஏற்றது. தந்துகி அடைப்படாமலிருக்க, ஒரு பிளாட்டின இழைச் சுருளும், வடி தாளாகக் கல் நார் பஞ்சும் பயன் படுகின்றன. மேல் நோக்கி உறிஞ்சுதலால், வடி கட்டுதல் நிகழ்கிறது . வீழ் படிவு முகவையிலும், வடி தட்டின் வெளிப் பகுதியிலுமே தங்கும். இவற்றால், 1–50 மி.கி. வரை வீழ் படிவைப் பிரிக்க இது உதவும். மேலும், மின்னாற்றலால் இயங்கும் மைய நோக்கு விசைக் கருவிகளையும் பயன் படுத்தலாம். கலன் விட்டுக் கலம் மாற்றுதல் இராமையால், பொருள் இழப்பு இல்லை. இதில் பயன் படும் கண்ணாடிக் குழாய் 2–5 மி.லி. நீர்மங்களைக் கொள்ளக் கூடியதும், அடிப் புறம் கூம்பு போன்ற அமைப்பைக் கொண்டதும் ஆகும். காய்ச்சி வடித்தல். வெப்ப நிலைத் தேவைக்கு ஏற்ப, இதற்கான கலன் வேறுபடும். எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மத்தைப் பிரித்தெடுக்கும் கருவி பிச்லெர்ஸ் கருவி (Pichler's apparatus) எனப் படும். இதில், எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம் கருவியின் மேலுள்ள வளைவான பகுதியில் தங்கி விடும். பிற முறைகள். ஒரு சில பொருள்கள், புற ஊதா ஒளியில் ஒளியை உறிஞ்சி, உடன் உமிழும் (fluorescence) தன்மை பெற்றவை. மருந்துப் பொருள்களை, இப்பண்பால் பிரித்தறிய முடியும். ஒத்த பண்புகளைக் கொண்ட தனிமங்களைக் கலவைகளிலிருந்து பிரித்தெடுக்க நிறச் சாரல் பிரிகை முறை (chromatography) மிகவும் பயன் படும். கரிம நுண் பகுப்பாய்வு முறையில், மூலக் கூறு எடை காண ரிச்சி (Rieche) முறையும், ஹாலோஜன்கள், கந்தகம், ஆர்செனிக் போன்ற பொருள்களின் எடையைக் காண பாம்ப் முறையும் (Bomb method), வீரிய ஹைட்ரஜனை அறிய சால்டிஸ் (soltys) முறையும் கையாளப் படுகின்றன. நுண் வேதியியல் செய்முறைகளால், உயிரியல், மருத்துவம், கதிரியக்க வேதியியல், கூழ்மம், படிகவியல், கனிவளவியல் போன்ற பல துறைகளில் வியக்கத் தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. —இரா. விசுவநாதன் துணை நூல். James S. Friz and George H. Schenk, Quantitative Analytical Chemistry, Fifth Edition, Allyn and Bacon, Inc.,