அறிவியல் நுண்ணறிவு பெறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், அறிவியல் சார்ந்த செயற்கைக் கோள்கள் எனப்படுகின்றன. இவ்வகைச் செயற்கைக் கோள்களை, செயற்பாட்டுச் செயற்கைக் கோள்களுடன் ஒப்பு நோக்கலாம். சில சமயங்களில் இவ்வகை அறிவியல் செயற்கைக் கோள்கள் ஆய்வு வகைச் செயற்கைக் கோள்கள் என்றும் குறிப்பிடப் படுகின்றன. செயற்பாட்டுச் செயற்கைக் கோள்கள், செயற்படும் விதங்களைக் கொண்டு மேற்கோளிட்டு வழங்கப்படுகின்றன. எ.டு: கப்பற்துறைச் செயற்கைக் கோள்கள். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் & ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> மூன்று விதங்களில் அறிவியற் செயற்கைக் கோள்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. அவை, தன்னிலையைப் பற்றியும் (local conditions), வெளிப் புறக் கண்டறிதல்கள், புவியைப் பற்றிய உள் நோக்கிய ஆய்வுகளில் பங்கேற்குமாறும் செயல்படுகின்றன. ஏனைய செயற்கைக் கோள்கள் தனிப்பட்ட சிறப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. புவி அறிவியல், புவியைச் சூழ்ந்துள்ள அயன மண்டலம் (ionosphere), சூரிய குடும்பத்தில் அதன் பங்களிப்புப் போன்ற வானவியல் தகவல்கள், புவி மேற்கோட்டில் நிகழும் சலனங்கள், கண்டங்களின் நகர்ச்சி (continental drift) ஆகியன காலப் போக்கில் மாறி வரும். நில அமைப்புகள் பற்றிய புவி நிலை இயல் (geodesy) குறிப்புகள் போன்றவை புவி அறிவியற் பாற்படும். இந்தியாவின் பாஸ்கரா உட்பட எண்ணற்ற செயற்கைக் கோள்கள், இத்தகைய அறிவியல் செயற்கைக் கோள்களே. புவியின் மேல் ஏறத்தாழ 90– 150 கி.மீ. உயரத்தில் அடர்த்தி குறைந்த வளிமஅணுக்கள், விண் வெளியிலிருந்து வந்து மோதும் காஸ்மிக் கதிர் வீச்சினால் அயனிகளாக்கப் படுகின்றன. அந்த அயன மண்டலத்தில் D-படலம், E- படலம், F1, F2 படலங்கள் என உயரத்திற்கும், இயல்பிற்கும் ஏற்ப வெவ்வேறு தள அடுக்குகள் உள்ளன. செறிவு குறைந்த E- படலமே சிற்றலை வானொலிப் பரப்பைச் சுமந்து வரும் மின்காந்த அலைகளை எதிரொலித்து, நெடுந் தொலைவுள்ள இடங்களிலும் கேட்கும்படிச் செய்கிறது. அயன மண்டல ஆய்விற்குத் தாழ் புவி சுற்றுச் செயற்கைக் கோள்கள் உதவும். துருவப் பாதைச் செயற்கைக் கோள்களான அமெரிக்க லாண்ட்சாட், பிரான்சின் ஸ்பாட் போன்ற தொலை உணர்வுச் செயற்கைக் கோள்கள் இடம் பெயர்ந்து, நகரும் மிதவைக் கண்டங்கள் (plate tectonics) குறித்தும் ஆய்ந்துள்ளன. 1915இல் ஆல்ஃபிரட் வேகனர் எனும் ஜெர்மானிய அறிஞர் வெளியிட்ட கண்டங்கள் மற்றும் பெருங்கடல் தோற்ற மூலம் (The Origin of Continents and Oceans) எனும் நூலின் கொள்கை விளக்கப்படி, முன்னொரு காலத்தில் இந்திய துணைக் கண்டம் தென் ஆஃப்ரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா இவற்றுடன் ஓட்டிக் கிடந்ததாகவும், பின்னர் பிரிந்து ஆண்டுக்கு ஏறத் தாழ 0.0015 மீ. வேகத்தில், வடக்கு நோக்கி நகர்ந்து சென்று, ஆசியக் கண்டத்துடன் மோதிக் கொண்டதாகவும் கருதப் படுகின்றது. வானவியல். சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழும் சூரியப் புள்ளிகள் (Sun Spots) சூரியனின் புறப் பரப்பிலிருந்து, அவ்வப்போது கடுமையாகத் தொடங்கி வீசும் சூரியக் காற்று அண்ட வெளியில் வெடித்துச் சிதறி, உருவாகும். சூப்பர் நோவா எனப் படும் மிகைப் புது விண் மீன்கள், எக்ஸ் கதிர் உமிழும் அரிய விண் மீன்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்ய புவியை விட விண் வெளிப் பாதையே ஏற்றது. அங்கே புழுதி, தூய்மையற்ற காற்று மண்டலம், மின் காந்த அலைகள் நெருக்கடி போன்ற இடையூறுகள் இல்லை. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு செலுத்திய அகச் சிவப்பு வானவியல் செயற்கைக் கோள்களான ராஸ், புளுட்டேோ போன்றவை மீதொகைக் கோள்களையும் படம் பிடித்துள்ளன. விண்வெளிச் சூழல் ஆய்வுகள். விண்மீன்கள், கோள்கள் மட்டுமன்றி விண் வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள், உடுமண்டலங்களிலிருந்து (galaxies) புறப்படும் கதிர் வீச்சுகள் பற்றிய அறிவியல் உண்மைகள் இன்னும் புதிராகவே உள்ளன. விண் வெளியில் செயற்கைக் கோள் இயங்கி வரும் எடையற்ற நிலை புவியில் பல அறிவியல் விந்தைகளைப் புரிகிறது. செயற்கைக் கோள் சுற்றியக்கத் திசை வேகத்தால் (orbital velocity) ஊட்டப் படும் மைய விலக்கு விசையும் (centrifugal force), ஈர்ப்பு விசையும் (gravitational force) சரி சமப்படும் நிலையே, செயற்கைக் கோளின் ஒரு குறித்த சுற்றுப் பாதை இயக்க அடிப்படை. புவி ஈர்ப்பினால், நேராகப் புவியில் விழாமல், வளைவான சுற்றுப் பாதையில் இயல்பாக நழுவி விழும் நிரந்தர நிலையே (free falling state) செயற்கைக் கோளினுள் எடையற்றுப் போன நிலையை உருவாக்குகிறது. விண் வெளிச் சூழலில் மருத்துவ ஆய்வு, படிக வளர்ச்சி, உலோகங்கள் பற்று வைத்தல், உலோகக் கலவைகள் தயாரித்தல், நெகிழ்ம வகைச் (polymer) சிறப்புப் பொருள்கள் தொடர்பான ஆய்வுகள் பலவும், சோவியத் ஒன்றியக் குடியரசின் சல்யூட், மிர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஸ்கை லாப் போன்ற விண்வெளி ஓடங்களில் நிறைவேறியுள்ளன. கருவிகள். இவ்வகை ஆய்வுக்கெனத் தொலைக் காட்டிகள், கீகர் எண்ணிகள் (Geiger counters), அயனியாக்க அறைகள் (ionization chambers), அழுத்த அளவிகள் (pressure gauges), காந்த அளவிகள் (magnetometers) போன்ற பல நுட்பமான கருவிகள் அறிவியல் செயற்கைக் கோள்களில் இடம் பெறுகின்றன. —க.முத்து —வி. சண்முகசுந்தரம் நூலோதி. W.M. Smart, Text Book on Spherical Astronomy, Sixth Edition, Vikas Publishing House Pvt Ltd, New Delhi, 1979.