செந்நட்டு
cennaṭṭu
இது நான்கு சிற்றினங்களைக் கொண்ட கேஸ்டேனியா (Castanea) என்ற இனத்தைக் குறிப்பதாகும்.
இது நான்கு சிற்றினங்களைக் கொண்ட கேஸ்டேனியா (Castanea) என்ற இனத்தைக் குறிப்பதாகும். இனிப்புச் செந்நட்டு (sweet chestnut) பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தது. இதன் தாவரவியல் பெயர் கேஸ்டேனியா சட்டைவா (Castanea sativa). இது ஃபேகேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கேஸ்டேனியா இனத்தில் காணப்படும் 40 சிற்றினங்களில் சில சிற்றினங்களே பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. அழகுக்காகவும், கட்டைகளுக்காகவும் வளர்க்கப்படும் இவை, இலையுதிர் மரங்களாகும்.
தாயகம். இனிப்புச் செந்நட்டு யுரேஷியா, வட ஆஃப்ரிக்கா ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது. இது மத்திய தரைக் கடல் பகுதியில் தோன்றி, அங்கிருந்து ரோமானியர்களால் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது. கேஸ்டேனியா சிற்றினங்கள், வட கோளத்தின் மித வெப்ப நாடுகளில் காணப் படுகின்றன. இனிப்புச் செந்நட்டு 1800ஆம் ஆண்டு அமெரிக்காவில் புகுத்தப் பட்டது. இச்சிற்றினம் ஃபிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் காணப்படுவதால், இதற்கு அந்தந்த வட்டாரப் பெயர்களுண்டு. இவை ஐரோப்பிய, ஃபிரான்ஸ்–ஸ்பானிய இத்தாலிய செந்நட்டு எனப் படும். இனிப்புச் செந்நட்டு என்பது ஆங்கிலக் கவிகளால் சூட்டப்பட்ட பெயராகும்.
வகைப்பாடு. இனிப்புச் செந்நட்டைத் தவிர, இக்குடும்பத்தில் பல செந்நட்டுகளுண்டு. அமெரிக்க–செந்நட்டு (C.dentata), சீன–செந்தட்டு (C.mollissima), ஐப்பானிய–செந்தட்டு (C.orenta) ஆகியவை பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. இங்கிலாந்தில் காணப்படும் குதிரைச் செந்நட்டு (horse chestnut) வேறொரு குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
வயதான இனிப்புச் செந்நட்டை, மரப் பட்டையின் அமைப்பைக் கொண்டே இனம் காணலாம். மரப் பட்டைகளில் மேல் நோக்கிச் சுழல் முறையில் அமைந்துள்ள வெடிப்புகள், இதன் சிறப்புப் பண்பாகும். பொதுவாக, செந்நட்டின் காய்களில் 3 அல்லது 4 கொட்டைகள் காணப்படும். ஆனால், ஒற்றைக் கொட்டை கொண்ட இனங்களைச் சின்கோபின்ஸ் (chinquapins) என்பர். பெரும்பாலும், செந்நட்டுகள் நீண்ட காலம் உயிர் வாழக் கூடிய மரங்களாகும். சிசிலி தீவில் காணப்படும் ஒரு மரம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இம்மரம் 1000 ஆண்டு வாழ்ந்ததோடன்றி, ஒரு காலத்தில் 100 போர் வீரர்களைக் கடும் சூறாவளிப் புயல் காற்றிலிருந்தும் பாதுகாத்ததாக, வரலாற்றின் மூலம் அறியப் படுகிறது.
வளரியல்பு. செந்நட்டுகள் பொதுவாக, உயரமான கிளை மிகுந்த இலையுதிர் மரங்களாகும். ஏறத் தாழ, 30 மீ. உயரம் வளரும். செந்நட்டில் இரு வகைக் கிளைகள் தோன்றும். நீண்ட கிளைகள் நுனி மொட்டுகளுடன் காணப்படும். சிறு பக்கக் கிளைகள் (spur shoots) நுனி மொட்டற்றுக் காணப்படும். பக்க மொட்டுகள் பனிக் காலத்தில், 3 அல்லது 4 செதில் இலைகளால் பாதுகாக்கப்படும்.
இலைகள். தனியிலைகள், மாற்றிலையடுக்கு அமைப்பு இரு வரிசைகளில் காணப்படும். இலையடிச் செதில்கள் மொட்டுப் பாதுகாப்பில் பங்கு பெறுகின்றன. இலைப் பரப்பு நீள் முட்டை அல்லது ஈட்டி முனை வடிவம் கொண்டது. விளிம்பு கூரானது.
மஞ்சரி. மலர்கள் ஒரு பால் பூக்கள், மஞ்சரிகளிலும் ஆண், பெண் என்று இரு வகை காணப்படும். இவை ஓரில்ல (monoecious) வகையாகும். ஒரே மரத்தில் இரு வகைப் பூக்களும் காணப்படும். ஆண் மஞ்சரி, சிறு கிளைகளின் கீழிலை அல்லது செதில் இலைகளின் இலைக் கோணத்தில் தோன்றும். இவை 15–20 செ.மீ. நீளமுள்ள நீண்ட கதிர் போலிருக்கும். இவற்றில், ஆண் மலர்கள் 3–7 சேர்ந்து, சைம் (cyme) அமைப்பில் காணப்படும். ஒவ்வொரு சைம் அமைப்பைச் சுற்றியும், பூக்காம்புச் செதில்களுண்டு. பெருவாரியான செந்நட்டுகளில் பெண் மலர்கள், ஆண் மஞ்சரியின் அடிப் பகுதியில் தோன்றும் (androgynous).
ஆண் மலர். அல்லிகளற்றது. புல்லி வட்டம் 6 ஆகப் பிளவு பட்டிருக்கும். மகரந்தத் தாள்கள் 10–20 வரை ஒவ்வொரு மலரிலும் காணப்படும்.பெண் மலர். பொதுவாக 3 மலர்கள் சேர்ந்து, காணப்படும். இவற்றைச் சூழ்ந்து, பூவடிச் செதில்கள் காணப்படுகின்றன. ஒன்றோடொன்று இணைந்து, கிண்ணம் போன்றிருக்கும். தொடக்க நிலையில், பள பளப்பாகச் சதைப் பற்றுடன் பச்சையாகக் காணப் படும்; பிறகு, கெட்டியாக மாறி விடும் இது முள்களைக் கொண்டது. முள்கள் பொதுவாகக் கொத்துக் கொத்தாகக் காணப்படும். முள்களோடு கூடிய மேலுறையை உமி (husk) என்பர். பெண் மலரில் புல்லி வட்டம் மட்டுமே காணப்படும். அது 6 ஆகப் பிளவு பட்டிருக்கும்.
சூலகம். சூலகத் தண்டு 6–9 ஆகப் பிளவு பட்டிருக்கும். புல்லி வட்டம் சூல் பையோடு இணைந்திருக்கும். சூல் பை 6 சூலறைகளைக் கொண்டது. ஒவ்வோர் அறையிலும் 2 தொங்கும் சூல்களுண்டு.
கனி. உலர் கனி; இதைக் கொட்டை என்பர். செந்நட்டில் 3 கொட்டைகள் முள்ளோடு கூடிய உறையால் சூழப்பட்டிருக்கும். முதலில் கொட்டைகளை முழுவதுமாக மூடியுள்ள உறை, கொட்டைகள் முற்றியதும், இரண்டாகவோ, நான்காகவோ பிளவு படும். இதன் மூலம் கொட்டைகள் வெளிப் படும்.
வளர் சூழ்நிலை. ஐரோப்பாவில், எந்தப் பயிரும் வளர முடியாத வறண்ட மலைச் சரிவுகளில் செந்நட்டுப் பயிரிடப்படும். இம்மரங்களில், கனிகள் தோன்ற, குறிப்பிட்ட வெப்பம் தேவைப் படுகிறது. இனிப்புச் செந்நட்டுகள் இங்கிலாந்தில் புகுத்தப் பட்ட போதும், அங்குள்ள குளிரால் அவை கனிகளைக் கொடுப்பதில்லை. இந்தியாவில் இனிப்புச் செந்நட்டு இமயமலைச் சாரல், காசிக் குன்று, பஞ்சாப் ஆகிய இடங்களில் பயிரிடப்படுகிறது.
மகரந்தச் சேர்க்கை. பொதுவாக ஃபேகேசி குடும்பத் தாவரங்களான ஓக், பீச், பிரிச் முதலியவை காற்று நாட்ட வகைகளாகும். செந்நட்டு, பூச்சி நாட்டம் கொண்டதாகும். இதன் ஆண் மஞ்சரி, செங்குத்தாக அல்லது சற்றே சாய்ந்து காணப்படும். ஆண் மலர்களின் புல்லி வட்டம், மகரந்தத் தாள்கள் மஞ்சள் வண்ணத்துடனும், நறுமணத்துடனும் காணப்படுவதால், பூச்சிகள் மரங்களை நாடி வருவதுண்டு. பெண் மலரில்,சூலகத் தண்டுகள் தடிப்பாக, பசையோடு கூடிய நுனியைக் கொண்டமையால், பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழியேற்படுகிறது. சூல் பையில், பல சூல்கள் இருந்த போதும், ஒரேயொரு சூல் மட்டுமே விதையாக மாறுவதால், ஒரு மலருக்கு ஒரு விதை எனக் காணப்படுகிறது. இம்மரங்கள் ஜூன் மாதத்தில் மலரும். அக்டோபர் மாதத்தில், காய்கள் வெடித்துக் கொட்டைகள் வெளிப்படும்.
உட்கூட்டுப் பொருள். செந்நட்டு ஏனைய வணிகக் கொட்டைகளிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம், இவற்றில் மிகுந்த மாவுப் பொருள்களும் குறைந்த புரோட்டீன், கொழுப்புகளும் இருப்பதேயாகும். செந்நட்டுக் கொட்டையிலுள்ள பொருள்கள்: நீர் 29, மாவுப் பொருள்கள் 33%, சர்க்கரை 22%, புரோட்டின் 11%, கொழுப்பு 2%, சாம்பல் சத்து 3%.
சாகுபடி. பொதுவாக விதைகள் பாத்தியில் ஊன்றப் பட்ட பின்பு, வளர்ந்த நாற்றே நடப்படும். பனிக் காலத்தில் எலி, அணில், முயல் இவற்றின் தொல்லை குறைவானதால், கொட்டைகளை அந்தப் பருவங்களில், பாத்திகளில் ஊன்றுவர். அவை முளைத்து ஓராண்டு ஆன பிறகு, இளவேனிற் காலத்தில், தோட்டங்களில் நாற்றுக்கு நாற்று 2 மீ. இடைவெளி இருக்கும்படி நடுவர். கொட்டைகளுக்காக வளர்க்கப்படும் இனங்களை ஒட்டுக் கட்டுதல் மூலம் மேம்பாடடையச் செய்வர். கட்டைகளுக்காகப் பயிரிடப்படும் மரங்கள் நட்ட, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தரைமட்டத்தில் வெட்டப்படும். வெட்டப் பட்ட அடிக் கட்டைகளிலிருந்து புதுக் குருத்துகள் முளைக்கும். இவை வளர்ந்து, 10–15 செ.மீ. கனமுள்ள கம்புகளாக மாற, 10–15 ஆண்டுகள் தேவைப்படும். அவற்றை வெட்டிப் பயன்படுத்துவர்.
பயன். செந்நட்டு மரங்கள் கொட்டைகளுக்கும், கட்டைகளுக்கும் பயிரிடப்படுகின்றன. செந்நட்டு உருட்டுக் கட்டைகளை வேளிலி, பந்தல், கொடிக்கால் போன்றவற்றுக்குப் பயன்படுத்துவர், கட்டைகள் வெயில் பட்டால் வெடித்து விடும். ஆகையால், வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதில்லை. கள்ளிப் பெட்டி, முரட்டு நாற்காலி போன்றவை செய்யப் பயன்படும்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் செந்நட்டுக் கொட்டைகளைக் காய்கறிகளாகப் பயன் படுத்துகின்றனர். காய்ந்த கொட்டைகளை அரைத்துப் பொடி செய்த மாவினால் திண்பண்டம் தயாரிப்பர். செந்நட்டுத் தோல் மிகவும் கடினமாக இருக்குமாதலால், கொட்டையை முதலில் வேக வைத்து, மென்மையான பின் மேலுறையை நீக்கி விட்டு, மீண்டும் வேக வைத்துப் பயன்படுத்துவர். பிரெஞ்சு சிறப்பு உணவுப் பொருளான மேருன்ஸ்க்ளேஸ் (marronsglaces) என்பது, செந்நட்டிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். கொட்டைகள் கால் நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இலை, பட்டை, கட்டை இவற்றில் டானின் உள்ளமையால் (8–13% ) கனமான தோலைப் பதனிட, இவற்றைப் பயன்படுத்துவர். இங்கிலாந்தில் செந்நட்டை, கட்டைகளாகப் பயன்படுத்துவர். செந்நட்டைக் குச்சி அல்லது மொட்டு ஒட்டுக் கட்டுதல், மூலம், மேம்பாடடையச் செய்கின்றனர். தேர்வு மூலம் பெரிய கொட்டைகளையுடைய வகைகளே பயிரிடப்படுகின்றன. முழுக் கொட்டைகளைச் சர்க்கரைப் பாகில் ஊற வைத்துப் பயன்படுத்துவர். பொதுவாகக் கொட்டைகளை வறுத்தும், வேக வைத்தும், பச்சையாகவும் உண்ணலாம்.
நோய். செந்நட்டுக் குலை நோய் (Chestnut blights) பெருமளவில் அழிவை விளைவிக்கக் கூடியது. இதற்குக் காரணம் எண்டோதீகா பாரசைடிகா (Endotheca parasitica) என்னும் பூசணமேயாகும். 1900ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாநிலங்களில், செந்நட்டு மரங்கள் அழிந்தன. இப்பூசணம் முதலில் பட்டையைத் தாக்கும். பிறகு, உட்புகுந்து மென்மையான மரப் பகுதியை அடையும். அங்கு, பூசணம் பெருக்கமடைவதால் கட்டைத் திசுக் குழாய்கள் அடை பட்டு விடும். இதனால், வேரிலிருந்து உணவு செல்வது தடைப்பட்டு, மரத்தின் மேற்பகுதி வாடி விடும். இப்பூசணம், ஜப்பானிலிருந்து புகுத்தப்பட்டதாகும். ஐப்பான், சீனாவில் பூசணத் தாக்கம் பெருமளவில் இல்லை. தற்சமயம், அமெரிக்கச் செந்நட்டைச் சீனா அல்லது ஜப்பான் செந்நட்டோடு கலப்புச் செய்து, நோய் எதிர்ப்புப் பண்பு கொண்ட வீரிய வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. —தி.ஸ்ரீ. கணேசன் நூலோதி. S.L. Kochher, Economic Botany in the Tropics, Macmillan India Ltd., Madras, 1981. H.A. Gleason, The National Geography of plants, Columbia University Press, New York, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 746)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6uzut8yd/
தமிழ்“செந்நட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6uzut8yd/APA
Oliyon Research. (2026). செந்நட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6uzut8yd/MLA
"செந்நட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6uzut8yd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment