இலக்கண விளக்கச் சூறாவளி
ilakkaṇa viḷakkac cūṟāvaḷi
இலக்கண விளக்கச் சூறாவளி என்பது சிவஞான முனிவர் இயற்றிய ஒரு மறுப்பு நூலாகும்.
இலக்கண விளக்கச் சூறாவளி என்பது சிவஞான முனிவர் இயற்றிய ஒரு மறுப்பு நூலாகும். தொல்காப்பியத்தைப் பின்பற்றித் தோன்றிய இலக்கண நூல்களுள் ‘இலக்கண விளக்கம்’ என்பதும் ஒன்று. இதனை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர், இந்நூலுக்கு மறுப்பாக எழுந்ததே ‘இலக்கண விளக்கச் சூறாவளி’. இலக்கணம், சமயம் ஆகிய துறைகளில் ஒருவர் சொல்லிய கருத்தை மறுத்துரைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் ‘சூறாவளி’, ‘சண்ட மாருதம்’ முதலியனவாகும். இந்நூலாசிரியர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் திகழ்ந்த பெரும் புலவர்களுள் ஒருவர்; ‘திருவாவடுதுறை ஆதினம் தந்த தமிழ்ச் செல்வம்’ எனப் போற்றப் பெறுபவர். நுண்மாண் நுழைபுலமிக்க இவர் மறுப்பெழுதுதலிலும் நிகரற்றவராய் விளங்கினார். ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ எழுந்ததற்குப் பின்வரும் காரணம் சொல்லப்படுகிறது.
‘இலக்கண விளக்கம்’ இயற்றிய வைத்தியநாத தேசிகர் தரும புர ஆதீனத்தைச் சேர்ந்தவர். எனவே இவரெழுதிய இத்நூலினைத் தாழ்வுபடுத்த விரும்பிய திருவாவடுதுறை ஆதீனத்தார், சங்கரநமச்சிவாயரைக் கொண்டு நன்னூலுக்கு ஒரு விருத்தியுரையும், மாதவச் சிவஞான முனிவரைக் கொண்டு இலக்கண விளக்கச் சூறாவளியும் எழுதுவித்தனர் என்பது கூறப்படுகிறது. ஆதீனங்களுக்கிடையே நிகழ்ந்த உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாகத் தமிழ் இலக்கண உலகில் புதியதொரு மறுப்பு நூல் தோன்றியது எனலாம்.
ஆசிரியர் மாதவச் சிவஞான முனிவர் சைவ சித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானபோதத்திற்கு மாபாடியம் கண்டது போல், இலக்கண நூல்களுக்கும் விரிவான உரை விளக்கம் செய்துள்ளார். அத்தகைய நூல்களுள் சிறப்புடையன நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியச் சூத்திர விருத்தி. இலக்கண விளக்கச் சூறாவளி என்பனவாகும்.
இம்மறுப்பு நூல் அளவில் சிறிதேயாயினும் பொருளில் மேம்பாடுடையது. இது இலக்கண விளக்கத்திலுள்ள எழுத்து, சொல் என்னும் இரண்டு அதிகாரங்களிற் காணப்படும் குற்றங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. முற்பகுதியில் நாற்பத்திரண்டும் பிற்பகுதியில் நாற்பதுமாக எண்பத்திரண்டு இடங்களில் இவரது மறுப்புரை காணப்படுகிறது.
மறுப்பின் பல்வேறிடங்களில், ‘தொல்காப்பியப் பாயிர விருத்தியில் விரித்துரைத்தாம், ஆண்டு காண்க’ என்று சுருக்கமாகக் கூறுதல் இவரது இயல்பு. ஆசிரியர் தொல்காப்பியனார்பால் அளவிருந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டவர் இவர் என்பதனைத் ‘தொல்காப்பியனார் வரைத்தோதியிருப்ப’; ‘ஆசிரியர் தொல்காப்பியனார்க்குங் கருத்து’ என்று கூறுவன கொண்டு தெளியலாம். இவரது மறுப்புரையை ஊன்றி நோக்கினால், நன்னூலார், பரிமேலழகர், சேனாவரையர் ஆகியோரிடத்து இவர் கொண்டுள்ள பற்றுப் புலனாகும்.
அவரறிந்திலர் போலும்; தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்; பயனில் கூற்றாமென்க; வழுவாமாறறிக; பழுதுபடக் கூறினார்; நூல் திறனறியாமையினென்க; அது போலியுரை யென்க என்றெல்லாம் வைத்தியநாத தேசிகரைப் பொதுவாக மறுத்துரைக்கும் இவர், இங்ஙனம் முன்னொடு பின் மயங்கக் கூறுதல் அவரியல்பென்க, அவருக்கு மயக்கமு மறவியும் இயல் பென்றற் கிதுவே சான்றாத லறிக; தொல்காப்பியத்திற் கிடந்தவாறே படியெடுத்தெழுதித் தமதறியாமையை விளக்கினாரென வறிக என்னுங் கடுஞ்சொற்களால் அவரைச் சாடவுஞ் செய்கிறார்.
வைத்தியநாத தேசிகர் கூறியன பலவும் குற்றமுடையன என்பது முனிவர் கருத்து. ஒவ்வொன்றையும் ஆராயப் புகுந்தால், இச்சூறாவளி விரிந்து செல்லுமாதலின் விரித்துரைக்கவில்லை என்ற பொருளில், ‘இன்னுமிவ்வியல் (பதவியல்) முழுவதினும் இவர் கூறியவற்றுட் குற்றங்களை புகின், விளையாட்டு மகளிரட்ட மணற் சோற்றிற் கல்லாராயப் புகுதலோ—டொக்கு மென்றொழிக!’ எனக் கூறிச் செல்கிறார்.
இலக்கண விளக்கப் பெயரியலில் வரும் ‘உயர்திணை என்மனார்’ என்னும் நூற்பாவில், ‘திணை என்பது ஒழுக்கம்’ என்று கூறிப் போந்தார் வைத்தியநாத தேசிகர். இதனைச் சிவஞான முனிவர் ‘திணையென்பது சாதி என்றார். அஃறிணையு ளுயிரில்லனவற்றிற்கு ஒழுக்கமின்மையின் அது பொருளன்று. இவை யுயர் சாதி, இவை யிழிசாதியென உலகத்துப் பொருளையெல்லாம் இருவகைச் சாதியாய்ப் பகுத்துக் கூறலே ஆசிரியர் கருத்தாகலானும், திணையென்னும் பல பொருளொரு சொல் ஈண்டுச் சாதியுணர்த்தி நின்றதெனக் கொள்க!’ என்றுரைத்து மறுத்துள்ளார்.
இங்ஙனம் இவர் கூறும் மறுப்புரை கற்றுவல்ல புலவர்க்குப் பெருவிருந்தாயமைதல் கூடும். எனினும் இவர் எழுதிய மறுப்பு நீதியற்றது என்று கருதியவர்களும் இருந்தனர் என்பதைச் சி.வை. தாமோதரம் பிள்ளை, ‘இலக்கண விளக்கச் சூறாவளியென்று ஓர் அநியாய கண்டனம்’ என்று கூறுவது கொண்டு தெளியலாம். ச.சா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 281)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6usg9yha/
தமிழ்“இலக்கண விளக்கச் சூறாவளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6usg9yha/APA
Oliyon Research. (2026). இலக்கண விளக்கச் சூறாவளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6usg9yha/MLA
"இலக்கண விளக்கச் சூறாவளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6usg9yha/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment