அலங்கார சாத்திரம்
alaṅkāra cāttiram
அலங்கார சாத்திரம் என்பது அணி இலக்கண நூலாகும்.
அலங்கார சாத்திரம் என்பது அணி இலக்கண நூலாகும். இலக்கியம் தோன்றி வன்ர்ந்த பின் இலக்கணம் தோன்றுவது இயல்பு. இந்திய நாட்டில் தொன்மையும் இலக்கிய வளமும் பெற்ற இரு பெரும் மொழிகளான தமிழுக்கும், வட தமிழுக்கும் வட மொழிக்கும் இது பொருந்தும். இவ்விரு மொழிகளிலும் காப்பியங்கள் நிறைந்துள்ளன. காப்பியத்தை அணி செய்வன இவை என்று அவ்வக்காலங்களில் தோன்றிய நூல்கள் வரையறை செய்துள்ளன. அத்தகைய நூல்களை அணி நூல் அல்லது அலங்கார சாத்திரம் என்று கூறுவர்.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களுள், பொருளதிகாரம் தமிழ் இலக்கியத்தின் அகப்பொருள் புறப்பொருள் பற்றியும் அவற்றின் இயல்புகள் பற்றியும் கூறுவது. சிறப்பாகத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல், செய்யுளியல், உவமவியல், மரபியல் என்னும் நான்கு இயல்களும் தமிழிலக்கிய இயல்புகள் பற்றியன. இவை இலக்கியத் திறனாய்வின் பகுதியாகக் கொள்ளத்தக்கன.
தமிழிலக்கியத்தில், பொருள் பற்றி அகம், புறம் என்ற பாகுபாடும், திணைபற்றிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைப் பாகுபாடும் சிறப்பியல்புகளாகக் கருதப்படுகின்றன. இயற்றமிழ்ப் பாடல்கலை எழுதுவோரும் நாட்டிய நாடகங்களை நடிப்போரும் இப்பாகுபாடுகளை உளத்தில் கொள்ளவேண்டும் என்பதும், அகப்பாடல்களில் வரும் தலைவன் தலைவி முதலியோர் பெயர் சுட்டப் பெறாமல் பொதுவாகவே குறிப்பிடப்படுதல் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் காலத்து இலக்கிய மரபு.
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எட்டு மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இவை நாட்டியம், நாடகம், செய்யுள் ஆகியவற்றில் ஆளப்படுவன. ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் உரிய பொருள், பொறியுணர்வு, குறிப்பு, சத்துவம் ஆகியவற்றைக் கணக்கிட்டு முப்பத்திரண்டு பொருள்களைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இவை பரதரின் நாட்டிய சாத்திரத்திலும் கூறப்பட்டுள்ளன.
ஒரு காப்பியப் பாடலில், சொற்களிலிருந்து நேராகப் பெறப்படும் கருத்தை விடக் காப்பியச்சுவை பயக்கும் “குறிப்புப் பொருளைத்” தருவதில் சில கவிஞர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இக்குறிப்புப் பொருளைத் தொல்காப்பியர் ‘இறைச்சி’ என்பார். இதை வடமொழி அலங்கார சாத்திரம் ‘வியங்கியப் பொருள்’ என்றும் ‘தொனிப்பொருள்’ என்றும் கூறும்.
தொல்காப்பியர் உவமையை ஓரியலில் விளக்கியுள்ளார். உவமம் என்பது எக்காலத்திலும் எம்மொழியிலும் ஆளப்படும் முதன்மையான அணி. ஒரு பொருளை மற்றொரு உயர்ந்த பொருளோடு ஒப்புமை காட்டி அழகுற விளக்குவதே உவமம் எனப்படும். அதை உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்று இருவகையாகத் தொல்காப்பியர் காட்டியுள்ளார். இவ்வுவமத்தைத் தொழில், பயன், வடிவு, வண்ணம் என்ற அடிப்படையில் நான்கு வகையாக விரிக்கிறார்.
தொல்காப்பியர் செய்யுளியலில் கூறிய ‘வண்ணம்’ ‘வனப்பு’ ஆகியன பற்றிய கருத்துகள் திறனாய்வுத் தன்மையுடையனவாகக் கொள்ளத்தக்கன. ‘மெல்லென்ற சொற்கனால் விழுப்பம் பொருந்திய பொருளைச் சொல்லுதல்’ (செய், 553), ‘தெரிந்த சொற்களால் செம்மையாக எடுத்துச் சொல்லுதல்’ (செய். 553) என்பன, காப்பிய வனப்பைக் கூறும்போது இலக்கியத்திற்கு அணி செய்யும் தெளிவு, இனிமை முதலான காப்பியப் பண்புகளைச் சுட்டுவனவாகக் கொள்ளலாம். இவை போன்ற ‘வனப்புகள்’ சொற்களின் அமைப்புப் பற்றியும் பொருள் பற்றியும் தரப்பட்டுள்ளன. காப்பியத்தில் ஒலிநயம் அமைத்துப் பாடுவது மரபு. இதனையும் தொல்காப்பியர் பாகுபாடு செய்து விளக்கியுள்ளார்.
திவாகர நிகண்டில் (கி.பி. 700) நான்கு தொகுதிகளாக 28 அணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை வடமொழியில் பாமகரால் எழுதப்பட்ட காவியாலங்காரத்தையும், தண்டியால் எழுதப்பட்ட காவியாதரிசத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. பிங்கல நிகண்டும் (கி.பி. 10–ஆம் நூற்) 28 அணிகளையே குறிப்பிட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தி 27 அணிகளைக் குறிக்கும்.
புத்தமித்திரர் (கி.பி. 1100) தமிழ் வடமொழி இரண்டையும் பயின்றவர். வீரசோழியம் என்ற இலக்கணத்தை எழுதியவர். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது. தண்டியால் வடமொழியில் இயற்றப்பட்ட காவியாதரிச நூலின்படியே அலங்காரப் படலத்தை அமைத்துள்ளதாக ஆசிரியர் கூறியுள்ளார். செய்யுள் என்ற மனிதருக்குச் சொல் உடலாகவும், பொருள் உயிராகவும் உள்ளது என்பது அவர் கருத்து. உடலுக்கு அணிகள் போலச் செய்யுளை அணி செய்வன அங்காரங்கள், காவியாதரிசத்தை ஒட்டியே வைதருப்ப நெறியின் ஆவியாகிற ‘சிலிட்டம்’ முதலான பத்துக் காப்பிய குணங்களையும், ‘தன்மை’ முதலாகப் ‘பாவிகம்’ ஈறாக அலங்காரங்கள் முப்பத்தைந்தையும் குறிப்பிடுவதோடு ‘சுவை’யையும் (காப்பிய ரசத்தை) அணி எனக் கருதிச் சேர்த்துள்ளார். ஆசிரியர் பௌத்தராகையால், தொல்காப்பியர், பரதர், தண்டி ஆகியோர் குறிப்பிட்டுள்ள எட்டு மெய்ப்பாடுகளோடு ‘சாந்தத்தை’ ஒன்பதாம் மெய்ப்பாடாகக் கொண்டுள்ளார்.
அடுத்துக் குறிப்பிடத்தக்கவர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டியலங்கார ஆசிரியர். இவர் காஞ்சியில் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் பல்லவர் அரசவையில் வாழ்ந்த தண்டி என்பவர் ஆக்கிய ‘காவியா தரிசம்’ என்ற வடமொழி அலங்கார நூலைத் தமிழில் ஆக்கியவர். தமிழாக்கம் செய்யும்போது தமிழிலக்கியங்களுக்கேற்ப ஒரு சில மாற்றங்களையும் செய்துள்ளார். வடமொழி நூலில் காப்பிய வகைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தண்டி அதை விடுத்துச் செய்யுளணிகளை விளக்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். எனினும், முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என்று தமிழ்ச் செய்யுளை வகைப்படுத்தியுள்ளார். வடநூலை ஒட்டி வைதருப்ப நெறி, கெளடநெறி என இருவகை நெறிகளையும் அவற்றைச் சார்ந்த செறிவு, தெளிவு, முதலான பத்துக் காப்பியக்குணங்களையும் விளக்கியுள்ளார்.
தொகைநிலைச் செய்யுள் என்ற வகை தமிழுக்கே சிறப்பாக உள்ளது. இது பொருள், இடம், காலம், யாப்பு முதலான அடிப்படைகளில் பாகுபாடு செய்யப்படுவது. புறநானூறு, களவழி நாற்பது, கார் நாற்பது, கலித்தொகை முதலாயின இவற்றிற்கு எடுத்துக் காட்டுகள். தொடர்நிலைச் செய்யுள் பொருள் தொடர்நிலை (சீவகசிந்தாமணி) என்றும், சொல் தொடர்நிலை (அந்தாதி) என்றும் இரு வகையாகும். பொருள் தொடர்நிலை ‘பெருங்காப்பியம்’ என்றும், ‘காப்பியம்’ என்றும் இருவகைப்படும். பலவகைப் பிரபந்தங்களும் ‘காப்பியம்’ என்ற பிரிவில் அடங்கும். காவியாதரிசத்தைப் பின்பற்றித் தண்டியலங்காரத்திலும் பொருளணியியலில் முப்பத்தைந்து பொருளணிகள் விளக்கப்பட்டுள்ளன. அக்கால நிலைக்கேற்பச் சொல்லணியியலில் வல்லினம், இடையினம், மெல்லினம் என்ற பாகுபாட்டு அடிப்படையில் மடக்கணியும் நிரோட்டகம், நாகபந்தம் முதலான பல்வேறுவகைச் சொல்லணிகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியில் கவிஞன் தவிர்க்க வேண்டிய வழுக்கள் சுட்டப்பெற்றுள்ளன.
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (கி.பி. 1700) மாறனலங்காரத்தை இயற்றியுள்ளார். இவர் ஓரளவு தொல்காப்பியத்தையும் பெருமளவு தண்டியலங்காரத்தையும் பின்பற்றியுள்ளார். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என்ற நான்கு இயல்களைக் கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கவை வருமாறு; தண்டியலங்காரத்தில் கூறப்பட்ட இரு நெறிகளுக்கு மேலாக அக்கால வடநூன் மரபையொட்டிப் பாஞ்சால நெறி என்னும் மூன்றாம் நெறியையும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் 64 பொருளணிகளும் 32 சொல்லணிகளும் விளக்கப்பட்டுள்ளன.
அப்பய்ய தீட்சிதரால் வட மொழியில் எழுதப் பெற்ற குவலயானந்தம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் விளக்க உரையுடன் வெளியிடப்பட்டது. இதில் 120 அணிகள் இடம் பெற்றுள்ளன. கி.பி. 18–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலின் அணியதிகாரப் பிரிவில் 30 சொல்லணிகளும், 30 பொருளணிகளும் விளக்கப்பட்டுள்ளன. எண்வகைப் பொருள்கோளும் சொல்லணியில் அடங்கும்.
அணியிலக்கணம் ஒன்று கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உரைநடையில் எழுதப்பெற்றது. இதில் 102 பொருளணிகள் விளக்கப்பட்டுள்ளன. இது வடமொழியில் சயதேவரால் எழுதப்பட்ட சந்திராலோகத்தைத் தழுவியது. இந்நூற்றாண்டின் மத்தியில் முத்துவீரிய உபாத்தியாயர் எழுதிய முத்துவீரியம் என்ற இலக்கணத்தின் அணியதிகாரம் என்ற ஐந்தாம் பகுதியில் சொல்லணி, பொருளணி, செய்யுளணி என்ற வகையில் அணிகளும், நெறிகள், பொருள் கோள், வழுக்கள், மலைவுகள் ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளன. இதே நூற்றாண்டின் பிற்பகுதியில் சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் என்பவரால் சந்திராலோகம் என்ற நூலில் நூறு அணிகள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூற்றாண்டில் சீனிவாசராகவாச்சாரி என்பவர், வடமொழியில் உள்ள காவியப் பிரகாசம் போன்று காப்பியப்பாகுபாடு, சொற்பொருள் வகை, காப்பிய நெறிகள், மெய்ப்பாடு, சொல்லணி, பொருளணி ஆகியன கொண்ட தண்டியலங்கார சாரம் என்ற நூலை ஆக்கியுள்ளார்.
நாட்டிய சாத்திரம் இயற்றிய பரதர் கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக் கூடும். அவர் தம் நூலில் நாட்டியத்தின் பல்வேறு இயல்புகளை மிகுதியும் விளக்கினாலும், காப்பிய இலக்கணத்தின் முன்னோடியாக உவமை உருவகம், தீபகம், இயமகம் என்ற நான்கு அலங்காரங்கள், சிலேடம், பிரசாதம் முதலான பத்துக் காப்பிய குணங்கள், கூடார்த்தம், அர்த்தாந்தரம் முதலான பத்துக் காப்பிய தோடங்கள், முப்பத்தாறு இலட்சணங்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் வந்த அலங்கார சாத்திரக்காரர்கள், பரதர் கூறிய இலட்சணங்களுள் சிலவற்றை அலங்காரங்களாகவும் வேறு சிலவற்றைக் காப்பியக் குணங்களாகவும் கொண்டுள்ளார்கள்.
காஞ்சியில் வாழ்ந்த தண்டி (கி.பி. 700) வடமொழியில் காவியாதரிசம் என்ற அலங்கார நூலை எழுதினார். அதனைத் தழுவிக் கன்னட மொழியில் எழுதப்பட்ட கவிராசமார்க்கமும், சிங்கள மொழியில் எழுதப்பட்ட ‘சீய–பாள்–லகாரமும்’ (சுவீய பாடாலங்காரம்) கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. தமிழகத்தில் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் இதே நூலைப் பெரும்பகுதி தழுவித் ‘தண்டியலங்காரம்’ என்னும் பெயரில் ஓர் அணி நூலைத் தமிழில் எழுதினார். அது இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. காவியாதரிசத்தில் காவியத்தின் இலக்கணம் கூறப்பட்டிருப்பதுடன், அக்காவியம் வடமொழி, பிராகிருதம், போன்ற மொழி அடிப்படையிலும், உரைநடை (கத்தியம்), செய்யுள் (பத்தியம்) இரண்டும் கலந்தது (மிசிரம்) என்ற வகையிலும் பாகுபாடு செய்யப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. பெருங்காப்பியத்தின் இலக்கணமும் தரப்பட்டுள்ளது. சிலேடம், பிரசாதம் முதலான காப்பியக் குணங்களுள் வைதருப்பம் கவுடம் என்ற நெறிகளுக்கும் தண்டி முதன்மை கொடுத்துள்ளார். ஆசிரியர் வைதருப்பத்தையே சிறந்த நெறியாகப் போற்றியுள்ளார்.
பாமகர் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் காவியாலங்காரம் என்ற தம் நூலில் காவியத்தைச் செய்யுள் (பத்தியம்), உரைநடை (கத்தியம்) என்று பிரித்துள்ளார். முப்பத்தெட்டு வகை அலங்காரங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தேர்ந்த சொற்களையும் ஏற்புடைப் பொருளையும் கொண்ட காவியத்திற்கு அணி செய்வது அலங்காரம் என்று பாமகர் கூறுகிறார். பொது மக்கள் பேசுவது போலல்லாது மாறுபட்ட முறையில் அழகொழுக ஒரு கருத்தைக் கூறுவதே ‘வக்ரோக்தி’, இதுவே எல்லா அணிகளிலும் பொதுவாகக் காணப்படுவது என்பதனை முதன் முதல் சொன்னவர் பாமகர்.
பாமகருடைய நூலுக்கு உரை எழுதிய உத்படர் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் எழுதிய நூல் அலங்கார சார சங்கிரகம். இவர் நாற்பத்தொன்று அலங்காரங்களைத் தாம் எழுதிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். வாமனர் (கி.பி. 900) இயற்றிய நூல் காவியாலங்கார சூத்திரம் என்பதாகும். காவியத்தின் பயனை முதலில் குறிப்பிட்டு, இரீதி காவியத்தின் உயிர்நாடி என்ற கருத்தை எடுத்துக் காட்டினார். முன் கூறப்பட்ட வைதருப்பம், கவுடம் ஆகியவற்றுடன் மூன்றாவதாகப் பாஞ்சாலி என்ற நெறியையும் இவர் குறிப்பிட்டுள்ளார். தண்டி கூறிய பத்துக் குணங்களையும் சொல்லைச் சார்ந்தவை பத்து, பொருளைச் சார்ந்தவை பத்து என விரித்துள்ளார். காவிய குணங்களையும் அலங்காரங்களையும் வேறுபடுத்தியுள்ளார். உவமை முதலான 33 அலங்காரங்களையும் விளக்கியுள்ளார். காவியம் எழுதும் போது தவிர்க்கப்பட வேண்டிய சொற்குற்றம் பொருட் குற்றம் ஆகியவற்றையும் சுட்டியுள்ளார்.
காவியாலங்காரத்தின் ஆசிரியரான உருத்ரடர் கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். காவியத்தின் பயன், கவிக்கு வேண்டிய தகுதிகள், காவியத்தின் இலக்கணம், ஐவகை விருத்திகள், இயமகம், சிலேடை, சித்திராலங்காரங்கள், பொருளணிகள் முதலானவற்றை விளக்கியுள்ளார். வாமனர் கூறிய நெறிகளோடு நான்காவதாக ‘இலாடீ’ என்ற நெறியையும் சேர்த்துள்ளார்.
குந்தகர் என்பவர் சொல்லையும் பொருளையும் காட்டிலும் மேலானதொரு கவியின் திறன்தான் காவியத்தின் சிறப்புக்குக் காரணம் என்பதை வலியுறுத்துகிறார். ‘வக்கிரத்தன்மை’ என்பது கவிக்கு இயல்பாயமைந்த சக்தி. இத்தன்மையுடைய கவிஞனே எல்லோரும் வழங்கும் சொற்களிலே ஏற்றவற்றைத் தேர்ந்து அழகுற எடுத்துச் சொல்லும் திறனைப் பெற்றிருக்கிறான். மகிமபட்டர் தொனியை அநுமானத்தில் அடக்குவர்.
போசன் (கி.பி. 1100) ‘சரசுவதீ கண்டாபரணம்’ ‘சிருங்காரப்பிரகாசம்’ என்னும் நூல்களின் ஆசிரியர். எல்லா அலங்கார நூல்களிலும் அளவிற் பெரியது சரசுவதீ கண்டாபரணம். இதில் காவியத்தின் பயன், இலக்கணம், வகைகள், குற்றங்கள், குணங்கள், அணிகள், நாயகநாயகிப் பிரிவுகள், விருத்திகள், சுவைகள் முதலானவை ஆராயப்படுகின்றன. சுவை என்பது அபிமானம், அகங்காரம், சிருங்காரம் என்ற சொற்களால் விளக்கப்பட்டுள்ளது. ‘சிருங்காரம் (இன்பம்) ஒன்றே சுவை’ என்பது இவரது கொள்கை.
சேமேந்திரன் கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் ‘ஔசித்ய விசாரசர்ச்சை’ என்ற நூலை எழுதினார். ‘ஏற்புடைத் தன்மை’ என்ற கொள்கையைச் சொல், வாக்கியம், நூல், காவியகுணம், அலங்காரம், சுவை, காலம், இடம் முதலானவற்றுடன் தொடர்புபடுத்தி விரிவாக ஆராய்ந்துள்ளார். ஒரு காவியத்தில் சுவை சிறக்க வேண்டுமானால் இக்கொள்கை இன்றியமையாது பின்பற்றப்பட வேண்டும் என்பதைப் பின்வந்த ஆனந்தவர்த்தனர் வலியுறுத்தியுள்ளார்.
மம்மடர் கி.பி. 11–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் காவியப்பிரகாசம் என்ற முழுமையான நூலை எழுதினார். இது இன்றும் பல்லோராலும் பயிலப்படுவதற்குக் காரணம் காப்பியத்தைப் பற்றிய அனைத்தும் இதில் விளக்கம் பெற்றுள்ளமையேயாகும். காப்பியத்தின் பயன், அதன் இலக்கணம், சொற்பாகுபாடு, பொருட் பாகுபாடு, இவற்றை ஒட்டிய சொற்சக்திகள், தொனிப் பாகுபாடு, சுவைகள், அலங்காரங்கள் ஆகிய அனைத்தும் திட்பமாக விளக்கப்பட்டுள்ளன.
உருய்யகரின் (கி.பி. 1200) ‘அலங்கார சருவசுவம்’ தொனிக் கொள்கையை ஆதரிக்கிறது. சில சொல்லணிகளும் 75 பொருளணிகளும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை முன்மாதிரியாக வைத்து எழுந்தவையே பின்னர்த் தோன்றிய ஏகாவளீ, குவலயானந்தம் போன்றவை. அலங்காரங்களை நுட்பமாக எடுத்துக் கூறுவது இந்நூல். ‘சாகித்ய மீமாம்சை’ என்பதும் இவருடைய நூலாகச் சிலரால் கருதப்படுகிறது. இதில் விருத்தி, தோடம், குணம், அலங்காரம், சுவை, காவியப் பாகுபாடு, சொற்பொருள் முதலியன ஆராயப்பட்டுள்ளன.
வாக்படர் (கி.பி. 1200) என்ற சமணரின் பெயரால் வழங்கப்படுவது வாக்படாலங்காரம். காப்பிய இலக்கணம், கவிக்கு வேண்டிய தகுதி, மொழிவாரிக் காப்பியப் பாகுபாடு, குணங்கள், அணிகள், சுவைகள், நாயக – நாயகிப் பாகுபாடு முதலியன விளக்கப்பட்டுள்ளன.
ஏமசந்திரரின் (கி.பி. 1300) ‘காவியாநு சாசனம்’, ‘காவிய மீமாம்சை’, ‘காவியப் பிரகாசம்’ போன்ற முந்தைய நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.
சயதேவரின் (கி.பி. 1300) ‘சந்திராலோகம்’ எளிய, இனிய முறையில் எழுதப்பட்ட நூல், காப்பிய இலக்கணம் முதலாக விருத்தி, சுவை முதலிய அனைத்தும் பத்து இயல்களில் விளக்கப்பட்டுள்ளன.
வித்தியாதரரின் (கி.பி. 1400) ‘ஏகாவளியும்’, வித்தியாநாதரின் (கி.பி. 14–நூ.) ‘பிரதாப ருத்திர யசோபூடண’மும் மரபுவழி அமைந்த அலங்கார நூல்களாகும்.
வாக்படரின் (கி.பி. 1500) ‘காவியாநு சாசனமும்’, இவ்வகையைச் சார்ந்ததே. விசுவநாதரின் ‘சாகித்ய தர்ப்பணத்தில்’ காப்பியத்தின் பயன், சொற்சக்தி, பாவங்கள், தொனி, நாடகவியல், காப்பியதோசங்கள், குணங்கள், அணிகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வங்காள வைணவரான உரூப கோசுவாமி “உச்வலநீலமணி” என்ற நூலில் பக்தியும் ஒரு சுவையே என்பதைத் திறம்பட நிறுவியுள்ளார்.
அப்பய்ய தீட்சிதர் (கி.பி. 1600) சந்திராலோகத்தை அடியொற்றிக் குவலயானத்தம் என்னும் அலங்கார நூலை இயற்றினார். இதில் 115 அணிகள் ஆய்வுமுறையில் விளக்கப்பட்டுள்ளன. இவர், உவமையெனும் கூத்தி பல்வேறு வேடம் பூண்டு பல அணிககளாகக் காட்சியளிப்பதாகக் கூறியுள்ளார். சித்திர மீமாம்சை என்னும் நூலில் காப்பியத்தை மூன்று வகையாகப் பிரித்துள்ளார். முதல் தரமான காப்பியம் தொனிக் காப்பியம். இரண்டாந் தரமான காப்பியத்தில் தொனி மற்றொரு பொருளுக்கு அடங்கியிருக்கும். மூன்றாந் தரமான காப்பியம் சொல்லணி பொருளணி சிறப்பாகப் பயிலப்படும் காப்பியம். பொருளணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறர் கருத்தைத் திறனாயும் வகையில் ஆராய்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த இவர் நூற்றுக்கும் மேலான நூல்களை ஆக்கியுள்ளார். இவரைப் புரந்தவர் சின்ன பொம்மன் ஆவார்.
சகந்நாதபண்டிதர் (கி.பி. 1700) ‘இரச கங்காதரம்’ என்னும் சிறந்த அலங்கார நூலின் ஆசிரியர்; ஆந்திர நாட்டைச் சார்ந்தவர். நூல் அளவை முறை உரைநடையில் இவரால் எழுதப்பட்டுள்ளது. பிறர் கருத்தைத் துருவிப் பார்த்துத் தம் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதில் இவர் வல்லவர். காப்பியப் பகுப்பு, சூத்திர விளக்கம், கணங்களும் சுவையும், அலங்காரங்கள் – இவை அனைத்தும் திறம்பட விளக்கப்பட்டுள்ளன. அப்பய்ய தீட்சிதரின் சித்திரமீமாம்சைக்குக் கண்டன நூல் எழுதியுள்ளார். தம்முடைய சிறு காப்பியங்களான பாமினி விலாசம், கங்காலகரி முதலியவற்றிலிருந்தும் தம் நூலிற்குரிய எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளார். இவரே குறிப்பிடத்தக்க சிறப்பான அலங்கார சாத்திர இறுதி ஆசிரியர் எனலாம்.பி.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 860)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6up4ca66/
தமிழ்“அலங்கார சாத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6up4ca66/APA
Oliyon Research. (2026). அலங்கார சாத்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6up4ca66/MLA
"அலங்கார சாத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6up4ca66/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment