அரும்பொருள் விளக்க நிகண்டு
arumporuḷ viḷakka nikaṇṭu
ஒரு சொற் பல பொருள்களை மட்டும் விரித்தோதும் நிகண்டுகளுள் ஒன்றாகும்.
ஒரு சொற் பல பொருள்களை மட்டும் விரித்தோதும் நிகண்டுகளுள் ஒன்றாகும். அருஞ்சொற் பொருள்களை விளக்கியமையினாலே இந்நூல் அரும்பொருள் விளக்க நிகண்டு என்னும் பெயர் பெறுவதாயிற்று.
மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டின் அமைப்பைப் பின்பற்றிய நிகண்டு நூல்களுள் இது முதலாவதாகும். இது ககர எதுகை முதல் னகர எதுகை ஈறாகச் சொற்களை அமைத்து, ஆசிரிய விருத்தத்தில் அமைக்கப் பெற்றுள்ளது. சூடாமணி போல் ஓரெதுகையில் பிற எதுகைச் சொற்கள் விரவுதலின்றி அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
இதனை இயற்றியவர் அருமருந்தைய தேசிகர். இவர், சிவப்பிரகாசருக்கு மகனாவார்; வீரசைவமரபினர்; திருச்செந்தூரில் வாழ்ந்தவர். இவர் தம் ஞானாசிரியரும் தில்லைவாசியுமாகிய பச்சைக் கந்தைய தேசிகருடைய ஆணையை மேற்கொண்டு இந்நூலினை இயற்றியுள்ளார். இந்நூல் 700 விருத்தங்களால் ஆயது. இதில் சூடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, அகராதி நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றிலுள்ள ஒருசொற் பல்பொருட் பெயர்களைத் திரட்டித் தந்துள்னார். இதில் 3200 சொற்களுக்கு மேல் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
இந்நூல் அரங்கேறிய காலம் சாலிவாகன சகம் 1885–ஆம் ஆண்டு சித்திரபானு மாசிமாதம் சிவநிசி பொருந்திய வெள்ளிக்கிழமை ஆகும். எனவே இந்நூல் கி.பி. 1763–இல் இயற்றி முடிந்தது என்பது தெளிவு.
வீரசைவராகிய இரேவணாத்திரியர் கி.பி. 1594–இல் இயற்றிய அகராதி நிகண்டினை, வீரசைவராகிய இவரும் பின்பற்றியுள்ளார். வீர சைவர் என்பார் பெரும்பாலும் கன்னடதேசத் தொடர்புடையவர். ஆதலினால் இவர் தம் நிகண்டில் கன்னடச் சொற்கள் பலவற்றைச் சேர்த்திருக்கிறார். அகராதி நிகண்டினை அரும்பொருள் விளக்க நிகண்டு பல இடங்களில் அடியொற்றிச் செல்லுகிறது.
சூடாமணி நிகண்டின் 11-ஆம் தொகுதியைத் கி.பி. 1897–இல் உரைவிளக்கத்துடனும் மேற்கோளுடனும் பதிப்பித்த திருமழிசைச் சிவப்பிரகாசையராகிய வீரசைவர், முந்திய வீரசைவ ஆசிரியர் இயற்றிய அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு என்பன அச்சாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளார். இவர் அரும்பொருள் விளக்க நிகண்டினை ‘அரும்பொருள் விளக்க தீபிகை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் பல பிரதிகளையும் ஒப்பு நோக்கி நன்கு ஆராய்ந்து அச்சில் வெளியிட்டவர் பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளையாவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்ப் பிரசுரம் 54–ஆவதாக 1931–இல் இந்நூல் அச்சிடப்பெற்து வெளிவந்தது. பல பொருள் ஒரு சொல் அகராதியையும் பதிப்பாசிரியர் தொகுத்துத் தந்திருப்பது இப்பதிப்பிற்கு ஒரு தனிச் சிறப்பை நல்குகிறது. ஆய்வாளருக்கு இந்த அகராதி பெரும்பயனுடையதாகும்.மு.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 824)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6tp2muuy/
தமிழ்“அரும்பொருள் விளக்க நிகண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6tp2muuy/APA
Oliyon Research. (2026). அரும்பொருள் விளக்க நிகண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6tp2muuy/MLA
"அரும்பொருள் விளக்க நிகண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6tp2muuy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment