அங்கதம்
aṅkatam
அங்கதம் என்பது ஓர் இலக்கிய வகை.
அங்கதம் என்பது ஓர் இலக்கிய வகை. இது தனிமனிதன், சமுதாயம், நிறுவனம் முதலியவற்றில் காணப்படும் குறைபாடுகளைத் திறனாய்வு செய்யும் ஒரு கேலிச் சித்திரம். அன்றியும், அங்கதம் (Satire) செய்யுளில் எடுத்தாளப்படும் ஓர் உத்தியுமாகும்.
அங்கத இலக்கியம் முதன்முதல் உரோம் நாட்டில் தோன்றியது எனச் சில திறனாய்வாளர் கருதுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே மிகப் பழைய கிரேக்க நாடகங்களில் அங்கதக் குறிப்புகள் அமைந்துள்ளன என்று மற்றொருசார் திறனாய்வாளர் கருதுவர். கிரேக்க உரோமானிய இலக்கியங்களில் அமைந்திருந்தது போலவே, பழந்தமிழ் இலக்கியங்களிலும் அங்கதக் குறிப்புகள் வந்துள்ளன. காலத்தால் எது முந்தியது பிந்தியது என அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை.
கிரேக்க, இலத்தீன், தமிழ் இவக்கியங்களை அடியொற்றி ஆங்கில இலக்கியத்திலும் அங்கதம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக மேலைநாட்டில் கவிதையின் வடிவம் கொண்டு அங்கதத்தைப் பாகுபடுத்தினர். பொருள் நோக்கிப் பிரிக்கும் நிலை காலத்தால் பிற்பட்டது. அங்கதம் கொடுமைகளையும் முறைகேடுகளையும் சாடுதல் என்ற கொள்கையிலிருந்து முகிழ்த்தது. பின்னர், அதுவே ஒரு கலையாக வளர்ந்தது. அங்கதப் படைப்பில் யாதேனும் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். சமுதாயம் திருந்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், கேலியும் நகையும் கலந்து பாடப்படுவது இது. ஒன்றன் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கும், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையே அங்கதம் அறிவுறுத்த முற்படுகிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவருடைய குற்றங்குறைகளைத் தகர்த்தெறிவதற்காக எவன் ஒருவன் மக்களை ஆற்றுப்படுத்துகிறானோ அவனே சிறந்த அங்கதப் படைப்பாளி ஆவான் என்பது மேனாட்டார் கருத்து.
தொல்காப்பியர் எழுவகைப்பட்ட இலக்கியங்களைக் கூறும்போது அங்கதத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் ‘கூற்றிடை வைத்த குறிப்பு’ என்பர். இது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரை எழுந்துள்ள தமிழிலக்கியங்களில் அங்கதப் பாங்கு தொடர்ந்து வந்துள்ளது.
தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் கண்டு பாடிய ‘இவ்வே பீலியணிந்து’ எனத் தொடங்கும் புறநானுற்றுப் பாடல் (95) அங்கதக் குறிப்புடையது எனப் பல திறனாய்வாளர் விளக்கியுள்ளனர். இது பழிகரப்பு அங்கதத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஒளவையார் தொண்டைமானின் படைக்கருவிகளைப் புகழ்வது போலப் புகழ்ந்து அவனது போர்த் திறமை இன்மையை - போர்க்களமே காணாத தன்- மையைச் சாடியுள்ளார். அதே நேரத்தில், அதிகமான் அஞ்சி படைப் பயிற்சி மிக்கவன் என்பதையும் அடிக்கடி போர்க்களம் செல்வதால் இவன் போர்க்கருவிகள் மழுங்கி எப்பொழுதும் கொல்லன் உலைக் களத்தில் கிடந்தன என்பதையும் கட்டியுள்ளார். இப்பாடலில் அங்கதக் குறிப்பு அமைந்துள்ளது.
பிற்காலத் தனிப்பாடல்களில் அங்கதத்தினை மிகுதியாகக் காணமுடிகிறது. காளமேகப்புலவர் சிறந்த அங்கதப் புலவராவர். இவர் ஒரு சமயம் நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவனது சத்திரத்திற்குச் சென்றார். அங்கு உணவு உண்பதற்காகப் புலவர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதனால் மனம் வெதும்பிய காளமேகப்புலவர் காத்தானையும் அவனது சத்திரத்தையும் அவன் உணவு அளிக்கும் விதத்தையும் ஏளனமாகப் பாடினார். இப்பாடல் குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் அங்கதமாகிறது. “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்” என்று தொடங்குவது அப்பாடல்.
இக்கால இலக்கியங்களுள் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இயற்றிய ‘மருமக்கள் வழி மான்மியம்’ சிறந்த அங்கதக் குறிப்புகளையுடைய நூலாகும். நூற்பெயரிலும் பகுப்பிலும் அவர் அங்கதத்தைக் கையாண்டுள்ளார். நாஞ்சில் நாட்டுச்சமுதாயம் ஒன்றும் அதன் பல்வேறு அங்கங்களும் அங்கதப் பார்வைக்கு ஆளாயின. மூடப்பழக்க வழக்கங்களும் கவிஞரால் பெரிதும் சாடப்பட்டுள்ளன.
இன்றைய புதுக்கவிதைகளில் அங்கதக் குறிப்பு முதலிடம் பெற்றுள்ளது. சங்க காலத்திலிருந்தே அங்கதச் சுவைதரும் பாடல்கள் இருந்தாலும் புதுக் கவிதைதரும் அங்கதத் தொனி புதுமையாக உள்ளது. அரசியல், சமுதாயம், கல்வி, நீதி, சாதி வெறி, நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளுள்ளும் காணலாகும் குறைகளைச் சாடுவதில் வல்லவர்களாகப் புதுக் கவிஞர்கள் உள்ளார்கள். கவிதைகள் தவிர கதை, இக்காலக் கட்டுரை, நாடகம் போன்றவற்றுள்ளும் அங்கதம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
குற்றங் குறைகளை எதிர்த்து மனிதனால் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நீதியற்ற முறையை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர்களாக அங்கதக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.நா.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 141)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6sezggwu/
தமிழ்“அங்கதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6sezggwu/APA
Oliyon Research. (2026). அங்கதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6sezggwu/MLA
"அங்கதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6sezggwu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment