இன்னிசை இருநூறு
iṉṉicai irunūṟu
அரசஞ்சண்முகனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு நீதி நூல்.
அரசஞ்சண்முகனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு நீதி நூல். இது இருநூறு இன்னிசை வெண்பாக்களால் ஆகியது. வாழ்த்து, அறம், இல்வாழ்க்கை, கூடாவொழுக்கம், நல்வினையாட்சி முதலாக இந்நூலுள் அமைந்துள்ள 20 அதிகாரங்களும் தனித்தனியே பத்துப் பாடல் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள சோழவந்தான் ஊரில் கி.பி. 1868–ஆம் ஆண்டு தோன்றினார். பெற்றோர் அரசப்பப்பிள்ளை; பார்வதி அம்மை ஆவர். இவர் சோழவந்தான் கிண்ணிமடத் தலைவராக விளங்கிய சிவப்பிரகாச சுவாமிகளிடம் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த நூல்களையும் பயின்று சிறந்த புலவராக விளங்கினார். மதுரை நகரிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர்த் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கல்லூரியிலும் சில ஆண்டுகள் பணி புரிந்த இவர் 1925–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மாலைமாற்றுமாலை, தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
இந்நூலாசிரியர் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்களைத் திரட்டி அதிகார அடைவு செய்து இன்னிசை இருநூறு என்னும் பெயரில் நூலாக உருவாக்கியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆவார். இந்நூலின் பல பாக்கள் திருக்குறட் கருத்துகளை விளக்குவனவாகவே அமைந்துள்ளன. சிலபாக்களின் ஈற்றடிகளாகத் திருக்குறள் அமைந்துள்ளது. ‘கற்பன கல்லா’ எனத் தொடங்கும் வெண்பாவின், பின்னிரண்டடிகளாக, ‘அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம், அவாவுண்டேல் உண்டாம் சிறிது’ என்னும் திருக்குறள் அமைந்து விளங்குகிறது. ‘முல்லை குறிஞ்சி முறையில் திரிந்துபெயல் இல்லாமை யாற்பாலை என்னப் படிவமுறும்’ என்னும் செய்யுட்பகுதி, ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து, நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்னும் சிலப்பதிகாரப் பகுதியினை அடியொற்றி அமைந்ததாகும். ‘எண்ணு தூஉம் பொன்னிறத்து மால்விடைப் புத்தேள் இடம் பிரியா, அன்னை சிறுவர் அடி’ என்னும் கடவுள் வாழ்த்து வெண்பாவில் இவர் திருமால், சிவன், உலகம்மை, விநாயகர், முருகன் ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துக் கூறியிருப்பதனால், சைவ வைணவ வேறுபாடில்லாத இறைநெறியாளர் என்பது புலனாகிறது. மேலும் இவ்வாசிரியர் வாழ்த்துப் பகுதியில், ‘நூலினைப் போற்றுதும் நூலினைப் போற்றுதும்’ என்று நாலுக்குப் போற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, தாய் தந்தை ஆசான், ஆகியோரையும் அறம், அன்பு ஆகியவற்றையும் வாழ்த்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நூலின் செய்யுள்கள் மட்டும் முதன்முதல் 1913–ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்றன. இந்நூலினுக்குப் புலவர் ஆ. பொன்னுசாமிப் பிள்ளை பொழிப்புரையும் குறிப்புரையும் எழுதி 1975– ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். வெ.ப.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 568)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6s36myas/
தமிழ்“இன்னிசை இருநூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6s36myas/APA
Oliyon Research. (2026). இன்னிசை இருநூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6s36myas/MLA
"இன்னிசை இருநூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6s36myas/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment