மலையமான் மன்னர்களுள் ஒருவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் சிற்றரசர்களுள் ஒருவனாகத் திகழ்ந்தான். தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ள அரியூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். இவன் கிளியூர்மலையமான் பெரிய உடையான் எனவும் குறிக்கப்பட்டான். இச்சேதிராயன் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1076) திருக்கோவலூர் வீரட்டானமுடையாருக்குத் திருக்கார்த்திகைத் திருநாளுக்கும், திருநாட் படிக்கும், சந்திக்கும், அரியூரின் நான்கெல்லைகளுக்குட்பட்ட நன்செய், புன்செய் நிலங்களின் கடமை, குடிமை உள்ளிட்ட அனைத்து ஆயங்களையும் தானமாக அளித்தான். இவ்வேந்தனது கால்வழியினர் பிற்காலத்தில் மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை இறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இரண்டாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலும் இராசராசச் சேதிராயன் என்பான் ஒருவன் மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். எனவே, இருவரையும் வேறுபடுத்தி அறிதற்பொருட்டு இவனை முதலாமவன் எனக் குறிக்கின்றனர். ம.இரா.த.