இலங்கணி
ilaṅkaṇi
இராமாயணக் கதைமாந்தருள் இடம்பெறும் ஒரு பெண்.
இராமாயணக் கதைமாந்தருள் இடம்பெறும் ஒரு பெண். இவள் மதில் சூழ்ந்த இலங்காபுரிக் கோட்டை வாயிலைக் காவல் பூண்டிருந்தவளாவாள். கம்பன் இலங்காதேவி என்று இவள் பெயரைக் குறிப்பிட்டுள்ளான். சீதையைத் தேடிக் கடலைத் தாண்டி இலங்கை அடைந்த அனுமான் அந்நகரக் கோட்டைமதிலின் பெருமையையும் அதன் காவல் திறத்தையுங் கண்டு வியந்து, அவ்வாயில் வழியே உட்செல்ல விரும்பாது மதிலைத்தாண்டி உள்புக முயன்றான். அப்போது இலங்கணி ‘யாரடா’ என்று இடைமறித்து வினவினாள். இலங்கணிக்கும் அனுமனுக்கும் நடந்த போரில் இவள் அவன் மீது சூலத்தினை ஏவினாள். அப்படையினை அனுமன் முறித்துச் சிதைத்தான். இவள் தொடர்ந்து ஏவிய படைகள் அனைத்தையும் பற்றி, விண்ணில் எறிந்த அனுமன் பெண்ணைக் கொல்லுதல் பழியாம் என்றெண்ணி, இவள் மார்பில் ஓர் அடி அடித்தான். அவ்வளவில் இவள் தளர்ந்து தரையில் வீழ்ந்து, பின், எழுந்து அனுமனிடம் தன் வரலாறு கூறினாள். தன் பெயர் இலங்கை மாதேவி என்பதாகவும், பிரமன் ஏவலால் இலங்கை நகரைக் காப்பதாகவும், தன் கடமைக்கு ஊறு நேர்ந்தமையால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறி மன்னிக்க வேண்டினாள். ‘ஒரு குரங்கு வந்து உன்னைக் கையால் தீண்டும் காலம்வரை நீ இக்காவல் தொழில் புரிய வேண்டும்’ என்பதும், ‘அதற்குப் பின் இந்நகரம் அழிவது உறுதி’ என்பதும் பிரமன் தனக்கிட்ட சாபம் என்பதையும் கூறினாள். பின்னர், அனுமன் இலங்கையுள் புகுந்தான்.
இலங்கணி எட்டுத் தோள்களும், நான்கு முகமும், உலகினைத் தொட்டு மீளும் மார்பும், சுழலும் கண்களும், கூற்றுவனை ஒத்த வலிமையும் உடையவள் என்று கம்பன் கூறுகிறான். மேலும், வேல், வாள், சூலம், கதை, பாசம் முதலிய படைக்கலன்களைக் கையிற் கொண்டவள் என்றும், திங்களைப் பிளந்து வைத்தது போன்ற எயிற்றினை உடையவள் என்றும், கண்டால் காலனும் நடுங்கும் சினமுடையவள் என்றும் இவளைக் குறிப்பிட்டுள்ளான். இராம நாடகம் எழுதிய அருணாசலக் கவிராயர், இவளைக் குறிப்பிடும் போது, ‘தாரம் உள்ள அரக்கி அரக்கி இலங்க கணிதான், ஆல காலம் என் வடவாசற் காவற்காரி’ என்று சித்திரித்துள்ளார். இவள் அனுமனுடன் புரிந்த போரினையும் அதன் முடிவினையும் ‘ஆரடா என்றதட்டி வந்தாள் அனுமான் கையால் அறை கொண்டாள் கொண்டளவே தறை கண்டாளே’ என்று நயமுறக் காட்டியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 305)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6pmcdj87/
தமிழ்“இலங்கணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6pmcdj87/APA
Oliyon Research. (2026). இலங்கணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6pmcdj87/MLA
"இலங்கணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6pmcdj87/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment