நுரையீரல், குருதிக் கசிவு
nuraiyīral, kurutik kacivu
நுரையீரலுக்குக் குருதியினை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில், குருதி அதிக அளவில் இருக்கும் போது, நுரையீரலில் குருதிக் கசிவு ஏற்படுகிறது.
நுரையீரலுக்குக் குருதியினை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில், குருதி அதிக அளவில் இருக்கும் போது, நுரையீரலில் குருதிக் கசிவு ஏற்படுகிறது. கால்நடைகளில் இறப்பை ஏற்படுத்தும் பல்வேறு நோய்களில், இந்நிலை முடிவாக உண்டு. நிமோனியா எனப் படும் நுரையீரல் வீக்க நிலையில், குருதிக் கசிவு முதல் நிலையாகத் தோன்றுகிறது. இது புகை, எரிச்சலைத் தரும் நீர்மப் புகை, ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்பட வாய்ப்புண்டு. நோய்வாய்ப் பட்டு படுத்த நிலையில் உள்ள கால்நடைகளிலும், இந்நிலை ஏற்படுகிறது.
இதயம் செயலற்றதாகும் போது, குருதி நுரையீரலுக்குச் செல்ல வழியிராமையால், நுரையீரலில் குருதி தேங்கி, கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. குதிரைகள் நீண்ட தொலைவு ஓட்டப் படும் போது, இந்நிலை ஏற்படலாம். சில வகை வேதிப் புகைகளைச் சுவாசிக்க நேரிடும் போதும், கால்நடைகளின் நுரையீரலில் குருதிக் கசிவு ஏற்படலாம். ஆர்கானிக் பாஸ்ஃபரஸ் வகைப் பூச்சிக் கொல்லிகளைக் கால்நடைகள் உட்கொள்ள நேரிடும் போது, இந்நிலை தோன்றும். எலிகளைக் கொல்ல, ஆல்பா நேப்தைல் தைபோ யூரியா எனப் படும் ஒரு வகை வேதிப் பொருள் பயன் படுகிறது. இது நுரையீரலில் குருதிக் கசிவினை மிகுதிப் படுத்தி, இறப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலை, பண்ணைக் கால்நடைகளிலும் ஏற்படக் கூடும்.
குருதிக் கசிவு ஏற்படும் போது, நுரையீரலில் உள்ள சுவாச நுண்ணறைகள் அடை படுகின்றன. இதனால், ஆக்சிஜனை உட்கவரும் அளவு பெரிதும் குறைகிறது. இதனால், கார்பன் –டை–ஆக்சைடு வெளியேற்றமும் தடைபடுகிறது. இந்நிலை மிகக் கடுமை அடையும் போது, கால்நடைகள், சுவாசித்தலில் கடினம் ஏற்படும். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும். வயிற்றுப் பகுதியும் நெஞ்சுப் பகுதியும், மேலும், கீழும் வேகமாக ஏறி இறங்கும். பாதிக்கப் பட்ட கால்நடை, முன் கால்களைப் பரப்பி இருக்கும். நாடித் துடிப்பு அதிகரித்துக் காணப் படும். சளியுடன் கூடிய இருமல் இருக்கும். சில கால்நடைகளின் மூக்கிலிருந்து சளி வடியும். சில நேரங்களில், சளியுடன் குருதியும் கலந்திருக்கும். இவ்வாறு, கடுமையான சுவாசக் கோளாறு உண்டாகும் போது, இறப்பு நேரிடலாம்.
பாதிக்கப் பட்ட கால்நடைகளை வெளிப்புற ஆய்வு செய்வதன் மூலம், ஓரளவிற்கு நோயினைக் கண்டறியலாம். ஆனால், குருதி ஆய்வில், ஈசனோபில் வகைச் செல்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதன் மூலம், இந்நோயினை உறுதி செய்யலாம். பிண ஆய்வின் போது, பாதிக்கப் பட்ட கால்நடைகளின் நுரையீரல்கள் குருதிச் சிவப்பு நிறத்தில் இருக்கும். நோயின் கடுமையைப் பொறுத்து, நிற மாறுதல் இருக்கும். நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை இழந்து காணப் படும். நோய்க்கான காரணத்தை முதலில் கண்டறிதல் வேண்டும். நோய், நுண்ணுயிரிகளால் உண்டாகி இருந்தால், நோய் எதிர்ப்பு மருந்துகளை அளித்தல் சிறந்தது. நோய் ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்தால், அதற்குத் தகுந்த மருந்துகளை அளிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக ஓய்வு அளித்தல் வேண்டும். கடுமையான கசிவு நிலையில், 1 கி.கி. உடல் எடைக்கு 10 மி.கி. குருதியினை உடலிலிருந்து வெளியேற்றுதல் ஓரளவிற்கு உதவும். ஆக்சிஜன் செலுத்தலும், பயனளிக்கலாம். நுரையீரலில் நீர்த் தேக்கம் மிகுதியாக இருப்பதால், அட்ரோபின் வகை மருந்து அளித்தல் நோயினின்று விடுபட உதவும். பூச்சி கொல்லி மருந்துகளால் பாதிக்கப் படும் போது, எவ்வகைப் பூச்சி கொல்லி மருந்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, நோயகற்றும் முறைகளைக் கையாள வேண்டும். —வி.புருஷோத்தமன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 111)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mwp8wba/
தமிழ்“நுரையீரல், குருதிக் கசிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6mwp8wba/APA
Oliyon Research. (2026). நுரையீரல், குருதிக் கசிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mwp8wba/MLA
"நுரையீரல், குருதிக் கசிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6mwp8wba/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment