அயோவா என்பது அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மாநிலங்களுள் ஒன்று. கூலங்கள் (தானியங்கள்) அயோவா விளையும் மாநிலம் என்ற பெயரும் இதற்குண்டு, இம்மாநிலத்தில் கூலங்களும் சோயாபீன்சும் மிகுதியாக விளைகின்றன. இம்மாநிலம் கலிபோர்னியாவுக்கும் மாசசுசெட்சுக்கும் (Massachusetts) இடையிலுள்ளது. அயோவா (Iowa), சிடர் (Cedar), கிளியர் வாப்சிபினிகோன் (Wapsipinicon), சுவிப்ட் (Swift) போன்ற ஆறுகளும், கிளியர் ஓகோபோசி (Okopoji), இசுபிரிட் (Spirit), இசுடார்ம் (Storm) போன்ற ஏரிகளும் இம்மாநிலத்தில் உள்ளன. இங்கு வேளாண்மையே முதன்மையான தொழிலாகும். இங்குத் தேன் எடுத்தலும், கால்நடை வளர்த்தலும் மிக்க அளவில் நடைபெறுகின்றன. நிலக்கரிச் சுரங்கங்கள் மாநிலத்தின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளன. உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் தொழிலும், இறைச்சியைப் பதஞ்செய்து புட்டிகளில் அடைக்கும் தொழிலும் இம்மாநிலத்தில் பெருமளவில் நிகழ்கின்றன. அயோவா - மாநிலச் சட்ட மன்றம் அயோவா கி.பி. 1846–ஆம் ஆண்டுத் திசம்பர் மாதம் 28–ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 29–ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 1,45,700 சதுரக் கி.மீ. ஆகும். இங்குள்ள மக்கள்தொகை 29,13,387 (1980). மாநிலத்தின் தலைநகர் தமாயின் (Desmoines) ஆகும். கி.பி. 1857–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்புத் திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது இதுவரை 37 திருத்தங்களைப் பெற்றுள்ளது. அயோவா மாநிலச் செனட்டு அவை 50 உறுப்பினர்களையும் மக்கள் அவை 100 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. செனட்டு உறுப்பினர்கள் 4 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். அவர்களுள் பாதிப்பேர் 2 ஆண்டுகளில் வெளியேறுவர். ஆளுநரும் துணை ஆளுநரும் 4 ஆண்டுக் காலத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். அயோவா 99 ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.