ஐந்திலக்கணங்களையும் விளக்கிக் கூறும் தமிழ் இலக்கண நூல். இதன் ஆசிரியர் வைத்தியநாத நாவலர். இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருவாரூரைச் சேர்ந்தவர். தொல்காப்பியப் பயிற்சி குறைந்து வந்த போது, அந்நெறியைத் தெளிவுபடுத்தி யாவரும் எளிதில் உணரும் வகையில் இந்நூலை இவர் இயற்றினார். மதுரைத் திருமலை நாயக்கர் காலத்தில் விளங்கிய தலைவரும் சிறந்த புரவலருமாகிய மாதைத் திருவேங்கடநாதன் என்பார் வேண்டிக்கொள்ள, இவர் இந்நாலை இயற்றினார். இந்நூலில் சிறப்புணர்ந்த அறிஞர் இதனைக் ‘குட்டித் தொல்காப்பியம்’ என்று போற்றுவாராயினர். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் தனித்தனி ஐந்து இயல்களைக் கொண்டது. இந்நூல் நூற்பா யாப்பினால் ஆகியது. எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுபுணரியல் ஆகிய இயல்களை 158 நூற்பாக்களாலும், சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், இடைச் சொல்லியல், உரிச்சொல்லியல், பொதுவியல் ஆகிய இயல்களை 214 நூற்பாக்களாலும் விளக்குகின்றன. பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் ஆகிய இயல்களை 569 நூற்பாக்களால் கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதிகளாகிய செய்யுளியலும் உவமவியலும் காலப்போக்கில் வளர்ச்சியுற்று யாப்பு, அணி எனத் தனித்த பிரிவுகளாகித் திகழலாயின. இதனால் ‘ஐந்திலக்கணம்’ எனக் கூறும் மரபு தோன்றியது. இந்த நிலையில் உருவாகிய இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறிய போதிலும் யாப்பு, அணி ஆகியவற்றைத் தொல்காப்பியம் போலப் பொருளதிகாரத்திலேயே அடக்கிக் கூறுகிறது. இந்நூலின் எழுத்து, சொல் ஆகிய அதிகாரச் செய்திகள் தொல்காப்பியம். நன்னூல் ஆகியவற்றையும், பொருளதிகாரத்தமைந்த அகத்திணையியல் நம்பியகப்பொருள். இறையனாரகப் பொருள் ஆகியவற்றையும், புறத்திணையியல் புறப்பொருள் வெண்பாமாலையையும், அணியியல் தண்டியலங்காரத்தையும், செய்யுளியல் யாப்பருங்கல விருத்தியையும், பாட்டியல் இதற்கு முன்தோன்றிய பாட்டியல் நூல்களையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. இந்நூல்களின் கருத்திற்கு மாறாகப் புதிய கருத்துக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் தொல்காப்பியம், நன்னூல் போன்ற முன்னூல்களிலுள்ள நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டும், சில நூற்பாக்களைச் சிறிது மாற்றம் செய்து ஏற்றுக் கொண்டும் அமைந்துள்ளது. எழுத்திலக்கணம் கூறும் நூல்கள் பலவும் சார்பெழுத்துகளின் தொகை கூறுவதில் மாறுபடுகின்றன. இந்த நூல் சார்பெழுத்துகள் 240 என்று வகுத்துள்ளது. இந்த எண்ணிக்கையை உடன்பட்டே, தமிழ் விடுதூதின் ஆசிரியர், தமிழைக் குறிப்பிடும் போது. ‘சார்பு இருநூற்று நாற்பதெழுத்தாய் நனி சிறந்தாய்’ என்று கூறியுள்ளார். இந்நூலாசிரியராகிய வைத்திய நாத தேசிகரே இந்நாலுக்கு உரையும் எழுதியுள்ளார். இந்நூலின் அணியியலிலுள்ள சொல்லணிகள் பற்றிய பகுதியும் பாட்டியல் பகுதியும் அவற்றின் உரைகளும் இந்நூலாசிரியரால் எழுதப்பட்டன அல்ல என்பது கூறப்படுகிறது. சொல்லணிப் பகுதி இந்நூலாசிரியரின் முதல் மகன் சதாசிவ தேசிகராலும், பாட்டியற் பகுதி இந்நூலாசிரியரின் இரண்டாம் மகன் தியாகராச தேசிகராலும் இயற்றப்பட்டன என்னும் செய்தி. ‘பொன்மலை நின்று தென்மலை யுற்ற’ எனத் தொடங்கும் இந்நூற் பதிகத்தால் புலனாகிறது. இவ்விரு பகுதிகளும் நூலாசிரியரின் குடும்பத்தவரால் எழுதப்பெற்றன வாயினும், இவற்றையும் சேர்த்தே ‘இலக்கண விளக்கம்’ என்னும் இந்நூல் நிறைவுறுகிறது. மற்றவர்கள் எழுதிய பகுதிகளும் இடம்பெற்றபோதிலும் இந்த நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் என்றே பொதுவாகக் கூறப்படுகிறது. இந்நூலை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் கி.பி. 1889–ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிட்டுள்ளார். தஞ்சையிலுள்ள சரபோசி மன்னரின் சரசுவதி மகால் நூலகம் இந்நூல் முழுவதையும் பல ஆய்வுக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளது; தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரும் பதிப்பித்துள்ளனர். இந்நூலாசிரியரின் காலத்தில் விளங்கிய சிவஞான முனிவர் இந்நூற் கருத்துக்கள் பலவற்றை, அவற்றின் பொருந்தாமையினை எடுத்துக் காட்டி, மறுத்து. ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ என்னும் மறுப்பு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.