கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்செல்வர்களுள் ஒருவர். சமய ஈடுபாடுமிக்க இவர் இராமநாத பண்டாரம் எனவும் அழைக்கப்பட்டார். சேது புராணம் இயற்றிய நிரம்பிய அழகிய தேசிகர் இவர்பால் மிக்க அன்புடையவராக இருந்துள்ளார். அப்புராணம் பாடும்படி தேசிகருக்கு இவர் ஊக்கம் மிக அளித்தார். தேசிகர் இவர்பால் கொண்டிருந்த அன்பினைச் சேதுபுராணத்தின் இறுதிப்பாடலில் உள்ள ‘இராமநாத மாமுனிவன் நீடுழி வாழ்க மாதோ’ என்னும் வாழ்த்தினால் அறியலாம். தளவாய் சேதுபதி காத்த தேவர், அவர் மகன் கூத்தன் சேதுபதி ஆகியோர் காலங்களில் வாழ்ந்தவர் இவர். இப்பெரு மக்களிடமிருந்து ஊர்கள், பொருள்கள் ஆகியவற்றோடு ஏவலர், காரியத்தலைவர் ஆகியோரையும் பெற்று இவர் இறைத் தொண்டில் ஈடுபட்டார்; இராமேச்சரத் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்தார்; அங்கு நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் நடைபெற ஏற்பாடுகள் செய்தார்; மேலும் இறைவனுக்குப் பல அணிகலன்களும் வாகனங்களும் செய்தளித்து மக்கள் அனைவரும் மகிழுமாறு தொண்டு புரிந்தார். இராமேசுவர இறைவன் கட்டளைப் பூசைக்காகச் சேதுபதி காத்த தேவர், கருக்குளம் முதலிய எட்டு ஏந்தல்களை இராமநாத முனிவரிடம் அளித்த கொடையினை, கி.பி. 1605–இல் தோன்றிய ஒரு கல்லெட்டு விளக்குகிறது. இராமநாத முனிவர் திருக்கோயிற் பணிகள் முடித்த செயலினை, ‘தருமாயிரத்தைந்து நூற்று முப்பால் செல் சகவருடத்து அருமாதவஞ் செய் முனி ராமநாதன் அமைத்தனனே’ என்று பாடல்கள் புகழ்கின்றன.