பிறவிக் கோளாறுகளால் குழந்தைக்குக் காது செவிடாகலாம். பெற்றோர் செவிடாக இருந்தால், குழந்தையும் செவிடாக வாய்ப்புண்டு. முதல் மூன்று மாதச் சூல் காலத்தில், தாய்க்கு அம்மை, மணல் வாரி நோய் வந்தால், அவற்றின் நச்சுத் தன்மையாலும், நச்சுத் தன்மையுள்ள மருந்துகளைச் சாப்பிடுவதாலும், சிசுவின் உள் செவி குன்றி விடும். குழந்தை பிறந்ததும், நன்கு அழுது சுவாசிக்காவிடில், (asphyxia) மூளைக்கு ஆக்சிஜன் இல்லாமல், கை, கால் நரம்புகளின் கேட்கும் திறன் குன்றி விடும், மேலும், குருதிக் கோளாறுடன் மஞ்சள் காமாலை, பிறவிக் கிரந்தி, இரண்டு வயதிற்கு மேல், தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, மூளை வெளி உறை சுழற்சி (meningitis) ஆகிய நோய்களும், செவி நரம்பைப் பாதிக்கலாம். காது கேட்டால்தான் பேச்சு வரும். கேட்பதை மீண்டும் சொல்லப் பழகுவதால், குழந்தைக்குப் பேச்சு வருகிறது. அதனால், காது கேட்காத குழந்தை ஊமையாகி விடும். இதைச் செவிட்டூமை என்பர். மருத்துவம். கருவிலிருக்கும் சிசுவிற்கும், பிறந்த குழந்தைக்கும், வளரும் குழந்தைக்கும், நோய் வாராமல் தவிர்ப்பதே நல்லது. செவிட்டூமைக் குழந்தை 10 மாதம் அல்லது 1 வயதிற்குள் அப்பா, அம்மா என்று சில சொற்களாவது பேச வேண்டும். அதற்கு முன்பே 2–3 மாதங்களில், குரல் வரும் திசையில் கண்களைத் திருப்பிப் பார்க்க வேண்டும். இல்லாவிடில், காது கேட்கும் திறனை ஆய்வு செய்ய வேண்டும். செவித் திறனை, ஆய்வுக் கருவி மூலம் கணிக்க வேண்டும். பிறவியிலே செவிடாக இருந்தாலும், சிறிது கேட்கும் திறன் இருப்பதைக் காணலாம். இந்த மிஞ்சிய திறனைக் கேட்கும் கருவியைப் பயன் படுத்திப் பழக்கலாம். இதனால், குழந்தை ஊமையாக மாறி விடாமல், சிறிதளவேனும் பேசக் கற்றுக் கொள்ளும். வளர்ந்த பிறகு, காது கேளாத குழந்தைகளுக்கான தனிப் பள்ளியில் பயிற்சியளிக்க வேண்டும். அங்கு, கேட்கும் கருவியுடன், உதட்டசைவு, வாய் அசைவு, பார்வை இவற்றின் மூலம் பேசவும் படிக்கவும் பழக்கலாம். —டி.எம். பரமேஸ்வரன்