அரசியலமைப்புச் சட்டம்
araciyalamaippuc caṭṭam
அரசியல் அமைப்பு (Consitution) என்றால் என்ன என்பதற்கு அறிஞர் பலர் விளக்கம் அளித்துள்ளனர்.
அரசியல் அமைப்பு (Consitution) என்றால் என்ன என்பதற்கு அறிஞர் பலர் விளக்கம் அளித்துள்ளனர். அரசாங்கத்தின் அமைப்பையும் அலுவல்களையும் பொறுப்புகளையும் பற்றிக் கூறும் விதிகளின் தொகுப்பே அரசியலமைப்பு என்கிறார் என்றி மெயின் (Henry Maine).
வளர்ச்சி பெற்ற அரசியற் சமுதாயம் தன்னைத் தானே ஆண்டுகொள்ள ஏற்படுத்திக்கொண்ட சட்டங்கள், வழக்கங்கள், வழக்காறுகள் ஆகியவற்றின் தொகுப்பே அரசியலமைப்பு என்கிறார் பிரைசு பிரபு (Lord Byrice)
எனவே, அரசியலமைப்பு என்பது, அரசின் உறுப்பாகிய அரசாங்கத்தின் அலுவல்கள், அதிகாரங்கள், பொறுப்புகள் முதலியவற்றை விளக்கும் விதிகளின் தொகுப்பாகும்.
அரசாங்கத்தின் அடிப்படை அதிகாரம் பற்றிப் பல்வேறு கொள்கைகள் நிலவுகின்றன. அதிகாரம் அனைத்தும் இறைவனால் அளிக்கப்பட்டது என்பது ஒரு கொள்கை. அரசனும் குடிகளும் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவே இவ்வதிகாரம் என்பது மற்றொரு கொள்கை. அதிகாரம் முழுவதும் குடிகளுக்கே சொந்தம்; அவர்களிடமிருந்தே அரசாங்கம் இவ்வதிகாரத்தைப் பெறுகிறது என்னும் கொள்கை இக்காலத்தில் வலுப்பெற்றுள்ளது. ‘இந்திய மக்களாகிய நாம் இந்த அரசியல் அமைப்புச் சட்ட மூலமாக இந்த அரசியல் அமைப்பை ஏற்றுச் சட்டமாக இயற்றி, இதனை நமக்கு நாமே அளித்துக் கொள்கிறோம்’ என்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் முன்னுரையாகும். அரசியல் அதிகாரம் மக்களால் அளிக்கப்படுவது என்பது இதன் கருத்தாகும். ஆனால், உண்மையில் அரசை ஒரு சிலரே நடத்த இயலும். அனைவரும் சேர்ந்து ஒருங்கே ஆள முடியாது. ஆகையால் அரசாங்கத்தின் பல்வேறு உறுப்புகள் எந்த எந்த எல்லைக்குள் இயங்க வேண்டும் என்று விளக்கப் பொதுமக்கள் எண்ணப்படி வரையறுத்துக் கூறும் அடிப்படைச் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் என்பது, அரசின் பல்வேறு உறுப்புகளின் அமைப்பையும் பணிகளையும் அவ்வுறுப்புகனிடையே இருக்க வேண்டிய தொடர்பையும் அவ்வுறுப்புகளுக்கும் மக்களுக்கும் இடையே இருக்க வேண்டிய தொடர்பையும் உறுதிசெய்து, ஒழுங்கு செய்யத் தேவையான விதிகள் அடங்கியது எனலாம். அரசின் இன்றியமையா அங்கங்கள் மூன்று. அவை சட்ட மன்றம் (Legislature), நிருவாக அமைப்பு (Executive), நீதி மன்றம் (Judiciary) என்பன.
அரசியலமைப்புச் சட்டமானது, சட்டங்கள் இவற்றுவதற்கு வேண்டிய நிறுவனங்கள், சட்டசபை உறுப்பினர், தேர்தல் நடத்த வேண்டிய முறை, சட்டங்கள் இயற்ற வேண்டிய முறை, சட்டங்கள் இயற்ற வேண்டிய செய்திகள், நாட்டுப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்புக்காகப் படைகளை அமைப்பது, அவற்றின் பொறுப்பு, சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய முறை, வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிமன்றங்களின் அதிகாரம், தீர்ப்பு ஆணைகள் முதலியன பற்றியது.
மேலும், மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் செல்லும் பகுதி, அப்பகுதியின் எல்லைகள், அதனுடன் இணைத்தல் அல்லது நீக்குதல், குடிகளாவதற்குரிய தகுதிகள் ஆகியவற்றையும் அது வகுக்கும்.
அரசியலமைப்பு பெரும்பாலும் எழுதப்பட்டதாகவே (Written Constitution) இருக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இந்தியா போன்ற சில நாடுகளின் அரசியல் அமைப்புகள் எழுத்து வடிவில் அமைந்துள்ளன. இங்கிலாந்தின் அரசியலமைப்பு மட்டும் எழுதப்படாத அரசியலமைப்பாக விளங்குகிறது (Unwritten Constitution). எழுதப்படாத அரசியல் அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்பை மாற்ற விரும்பினால் எளிதில் மாற்றி விடலாம். ஆனால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள விதிமுறையினைத் தழுவியே, அரசியல் அமைப்பினை மாற்ற இயலும். அன்றியும் நெகிழும் (Flexible) அல்லது நெகிழாத (Rigid) அரசியலமைப்பு என மற்றொரு வகை அரசியலமைப்பும் உள்ளது. எழுதப்படாத அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவது எளிது; எழுதப்பட்ட அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்யச் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பினைக் கொண்டது இந்தியா. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 395 விதிகளும் 10 இணைப்புகளும் கொண்ட நீண்ட ஆவணமாகும்.
அனைத்து அதிகாரங்களும் சட்டங்களும் ஆணைகளும் ஒரே சட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்திடமிருந்து பிறந்தால், அதனை ஒற்றையாட்சி முறை (Unitary Type) என்று கூறுவர். எடுத்துக்காட்டாக இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, சப்பான் ஆகிய நாடுகளைக் கூறலாம்.
கூட்டாட்சி முறை (Federal Type) நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளைக் கூறலாம்.
உருசியா, பொதுவுடைமை அடிப்படையில் அமைந்த அரசாங்கத்தைப் பெற்றிருந்தபோதிலும், அது “மக்களாட்சியில் அதிகாரக் குவிப்பு” (Democratic Centralization) என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கூட்டாட்சி நாடே ஆகும்.
அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட நாடுகளில் அரசு செயற்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் எழுதப்பட்டிரா. வரையப்படும் விதிகளுடன் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய முறைகளைப் பற்றி எழுதப்படாத வழக்கங்கள் (Customs) நாளடைவில் தோன்றி நிலைத்துச் சட்டத்துக்கு இணையாக வலுப்பெற்றுவிடும். இத்தகைய வழக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இங்கிலாந்து நாட்டு அரசருக்கு வழங்கப்பட்டுள்ள மறுப்பாணை (Veto)யைக் குறிப்பிடலாம். பாராளுமன்றம் இயற்றும் எச்சட்டத்தினையும் புறக்கணிக்கும் அதிகாரம் அரசருக்குச் சட்டப்படியாக இருந்தபோதிலும், இவ்வதிகாரத்தினைக் கி.பி. 1704–ஆம் ஆண்டு முதல், இங்கிலாந்து நாட்டு அரசர் எவரும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காண்க: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 712)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bkfyvxc/
தமிழ்“அரசியலமைப்புச் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6bkfyvxc/APA
Oliyon Research. (2026). அரசியலமைப்புச் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6bkfyvxc/MLA
"அரசியலமைப்புச் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6bkfyvxc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment