அரசாங்கச் செலவு என்பது பொது நிதியியலின்படி மத்திய, மாநில அமைப்புகள் செலவிடுவதாகும். இது தனிப்பட்டவர் செலவினின்றும் முற்றிலும் வேறுபடும். அரசு, தனியார் துறை போல் ஆதாயம் தரும் தொழில் துறைகளில் ஈடுபடினும், அரசுச் செலவின் நோக்கம் ஆதாயமன்று. நாட்டு மக்களை வெளிநாட்டுப் படையெடுப்பினின்றும் பாதுகாப்பதும், உள்நாட்டில் நீதியை நிலைநாட்டி மக்களைப் பேணுவதும், பொது அமைப்புகளை (Public Institutions) நிறுவுவதும் அரசின் சிறந்த கடமைகள் எனப் பொருளியல் வல்லுநர் கூறுவர். இப்பொதுப் பணிகள் சமுதாயத்திற்கு மிகுந்த நன்மை பயப்பினும், தனியாரால் ஏற்று நிறைவேற்றத் தக்கன அல்ல என்பதால், அரசாங்கச் செலவின் தனித் தன்மை புலனாகும். இதனை ஆராய்ந்த ஆதம் சுமித்தின் ஆய்வுதான் அரசாங்கச் செலவைப் பற்றிய சிறப்பான முதல் ஆய்வாகும். இரிக்கார்டோ, மில் போன்றோர் “அரசாங்கச் செலவு” பற்றி ஆய்வு செய்யவில்லை. ஏறத்தாழ நூறு ஆண்டுக் காலம் இதைப் பற்றிய சிந்தனை வல்லுநர்களிடம் இருந்து பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலிராய் போலியூ (Leroy Beaulieu) அரசாங்கச் செலவு பற்றி ஆராய்வது பொது நிதியியலின் நோக்- கமன்று, அரசாங்க வருவாயே இன்றியமையாதது எனக் கருதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செலவினங்கள் மிகுதிப்படவே, அரசாங்கச் செலவின் நோக்கம், அதன் வரன்முறை, எல்லை பற்றி ஆராய முற்பட்டனர். உலகப் போருக்குப் பின் அரசாங்கச் செலவு பற்றிய விவாதம் வல்லுநர்களிடையே ஏற்பட்டுச் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டது. அரசாங்கச் செலவின் இயல்பு, அளவு, நோக்கம் யாவும் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் பொருளியல் முறைகளைப் பொறுத்து அமையும். அரசாங்கத்தின் கடமைகள், அரசியல் சூழ்நிலையில் பெறப்படும் அழுத்தம், செல்வாக்கான குழுக்களின் ஆதரவு, உறுதி ஆகிய இவற்றைப் பொறுத்துத்தான் ஒரு பின் தங்கிய (Primitive) அரசாங்கத்தின் செலவு முடிவு செய்யப்படும். பொருளாதாரச் சூழ்நிலையில் பொதுச் செலவு பற்றிய சிக்கல்கள் இல்லை. ஒரு காலத்தில் தனி மனிதனின் கடமையாக இருந்த செலவு, பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறியிருக்கும் இக்காலத்தில், அரசின் செலவினங்கள் வளர்வதை விரும்பவில்லை. இக்காலத்துக் குடியாட்சி அரசாங்கச் செலவு வரம்பின்றி உயர்வதற்குக் காரணமாகிறது என்றால் அது மிகையாகாது. பொது உடைமை, சமதருமப் பொருளியல், நலப் பொருளியற் கோட்பாடுகள் ஆகியவற்றின் மனப்பான்மையால் அரசாங்கச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆதிகாலத்தில் சமுதாயப் போக்கில் பொது வாழ்க்கையும் தனிப்பட்டவர் வாழ்க்கையும் ஒன்றுபட்டு இணைத்திருந்தன. இப்போது அரசாங்கச் செலவின் மிகுதிப்பாட்டிற்குச் சமுதாயச் சிக்கல்கள் காரணம். அரசியல் அமைப்புகளுக்கும் குறிப்பாக மதச் சடங்குகளுக்கும் மிக்க செலவு ஏற்பட்டு, அதனை அரசே ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அக்காலத்தில் மக்களே முன்வந்து படைக்கலமேந்திப் போரிட்டனர். அதனால், போர்க்கால வரி ஏதுமில்லை; செலவுமில்லை. பிற்காலத்தில் போருக்கான செலவு மிகுந்த சூழ்நிலையில் அதற்கான மதிப்பு அளவிட முடியாததாக வளர்ந்து விட்டது. ஏதன்சு, இசுபார்ட்டா (Sparta) ஆகிய நாடுகளில் பொதுப்பணிக்கு மிக்க சிறப்பிடம் கொடுத்தனர். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அரசாங்கம் மிகுந்த பாதுகாப்புக் கொடுத்தது. உரோம் நாட்டில் சாலைகள், கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு மிகுதியான பொருளை அரசாங்கம் செலவு செய்தது. மேலும், அக்காலத்தில் உரோமில் வேலையற்றோர்க்கு அரசாங்கம் துயர்துடைப்பு நிதி அளித்தது. “நிலப்பண்ணை” (படைமானிய) முறை காலத்தில் சமுதாய அமைப்புச் சிறியதாக இருந்தது. அரசாங்கச் செலவும் தனியார் செலவும் ஒருங்கிணைந்திருந்தன. மன்னன் நலமே மக்கள் நலமாகக் கருதப்பட்டு வந்தது. அரசியல் சட்ட அமைப்பு வந்த பின்பு பெரும் மாற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு, பொதுக் கடன் செலவு, அரசாங்கச் செலவுகள் யாவும் பொதுமக்களே தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இன்றைய தொழில் மயமான சமுதாயத்தில் அரசாங்கச் செலவு மிகுதியாக உள்ளது. ஆதம் சுமித்து அரசாங்கச் செலவின் கீழ்ச் சாலைகள், பொதுக் கட்டிடங்கள், பாலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். பொதுக்கல்வி முதலாளித்துவ அரசாங்கத்தின் அதிகாரப் போக்கை மிகவும் குறைக்க முற்படுகிறது. இது பொருளாதாரச் சக்திகளை உயரச் செய்கிறது. அரசாங்கச் செலவும் வரிகளும் மிகுந்து தொழிலும் வாணிகமும் முன்னேறுகின்றன. அரசாங்கச் செலவு இக்காலத்தில் மக்கள்தொகை மிகுவதை விட மிகுதியாக உள்ளது. புதுச் செலவுகளும் மிகுந்து வருகின்றன. இதனை அடால்பு வாக்னர் (Adolf Wagner) “வளர்ந்து செல் அரசு நடவடிக்கைகளின் விதி” (Law of increasing state activities) எனக் குறிப்பிடுகிறார். வெவ்வேறு நாடுகளையும் வெவ்வேறு காலங்களையும் ஒப்பிட்டு ஆராய்கையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் சீரான வளர்ச்சி காணப்படுகிறது. பொதுவாகப் பொது நிதியியல் அறிஞர்கள் அரசாங்கச் செலவு மிகுந்து வருகிறது என்றும், குறிப்பாகச் சில நாடுகளில் தொழில் புரட்சிக்குப் பின்னரே இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்றும் கருதுகின்றனர். ஆயினும், மிகுந்து வரும் விலைவாசி உயர்வை அவர்கள் தங்கள் கணிப்பில் கொண்டு வருவதில்லை. கோம்சுடாக் என்னும் ஆசிரியர், மேலை நாடுகளின் செலவினங்கள் 19–ஆம் நூற்றாண்டில் இரண்டு முதல் இருபது மடங்குகள் வரை மிகுந்துள்ளனதாகக் கணித்திருக்கிறார். வி.டி. இலேய்டன் (V.T. Layton) இங்கிலாந்தின் மத்திய அரசுச் செலவு 1918–இலிருந்து 1923–வரை உள்ள காலப் பகுதியில் ஐந்து விழுக்காடு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டரசு அமைப்பில் நிருவாகத்திற்கும், நாட்டுப் பாதுகாப்புக்கும் அரசாங்கச் செலவு மிகுந்ததோடு, தொழிலாளர் துயர் துடைப்புக்கும் விதவைகள், திக்கற்றோர் ஆகியோரின் மறுவாழ்விற்கும் சமூகப் பணிகளுக்கும் செலவு மிகுந்தது. அரசாங்கச் செலவு அரசாங்க வருவாயை வரையறை செய்கிறது. அரசாங்கச் செலவின் பெரும்பகுதி நாட்டுப் பாதுகாப்புக்கெனச் செலவிடப்படுகிறது. எல்லா நாடுகளி- லும் இது நடைமுறையில் காணப்படும் உண்மை. இந்நூற்றாண்டில் நிகழ்ந்த இரு பெரும் போர்களும் அதனைத் தொடர்ந்து அவ்வப்போது நிலவிவரும் போர் ஆயத்த நடவடிக்கைகளும் போர்ச் சூழ்நிலைகளும் பாதுகாப்புச் செலவினங்கள் வளர்வதற்குக் காரணமாகின்றன. இச்செலவு மிகுதியாக இருப்பதால் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கிறது. செலவு விரிவாகவும் வேறுபட்டனவாகவும் இருப்பதால் பொருளாதாரத்தின் எல்லாப் பிரிவுகளையும் பாதிக்கிறது. நிருவாகத்தையும் அமைதியையும் பாதுகாப்பது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்றாதலால், அரசாங்கச் செலவு கணிசமாக உயர்வதில் வியப்பில்லை. பொருளாதார, சமுதாய நோக்கங்களுக்கான செலவினங்களும் வளர்ந்து வருகின்றன. ஆதம்சுமித்து காலத்தில் சமுதாயப் பணிக்கான செலவினங்கள் மிகக் குறைவு. பொதுமக்களின் கல்விக்கான அரசாங்கச் செலவை ஆதம்சுமித்து ஆதரித்தார். தலையிடாக் கொள்கையைப் பெரிதும் ஆதரித்த அவர், பாதுகாப்பு வரிகள், உதவித்தொகை வழங்கல் (Subsidy) சிறுதொழில்களுக்கு ஊக்கமூட்டுதல், கொடை வழங்கல் (Bounty) ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். இக்காலத்தில் சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையானது எனக் கருதப்படும் தொழில் துறைகளை நிறுவுவதற்கும் வளர்ப்பதற்கும் உதவிகளும் நன்கொடைகளும் வரிச் சலுகைகளும் அளிக்க அரசாங்கம் முன் வருவதால் அதன் செலவும் மிகுதியாகிறது. அரசே இத்துறைகளில் நேரடியாகவும் இறங்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் அரசுத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமதருமச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் மிகச் சிறந்த தொழிற்சாலைகள் பலவற்றை அரசுத் துறைக்கீழ் கொண்டு வர அரசினர் கடுமையாகச் செயல்படுகின்றனர். சமுதாயப் பணிக்கான செலவினங்கள் இக்காலத்தில் மிகுந்து வருகின்றன. பொது நலம், மருத்துவ வசதி வழங்கல், நோய்களைத் தடுக்கும் வழிகளைக் கையாளுதல் ஆகியவற்றிற்கெனச் செலவினங்கள் வளர்ந்து வருகின்றன. மேலும், பொதுக் கடனுக்கான வட்டியைச் செலுத்துவதும் அரசாங்கச் செலவின் ஒரு சிறந்த கூறாகும். அரசாங்கச் செலவுக் கோட்பாடுகள் நன்மைவிதி அரசாங்கச் செலவு பொதுமக்களுக்குச் சமுதாய உச்ச நன்மையைப் பயக்க வேண்டும். மிகப் பலருக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி தருவது அரசாங்கச் செலவின் நோக்கமாக இருக்க வேண்டும். இச்சமுதாய நன்மையை மிகுதிப்படுத்தப் பேராசிரியர் பிகு (A.C. Pigou) இரு பெரும் கோட்பாடுகளை விதிக்கிறார். முதலாவதாக அரசாங்கச் செலவின் கடைசித் துளி நாணயத்தின் மறுப்பு, தன்னிழப்பு, இறுதிநிலைப் பயன்பாடு ஆகியவை அதனைத் திரட்ட எடுத்துக் கொள்ளும் இறுதிநிலைத் தியாகத்திற்கு இணையாக இருத்தல் வேண்டும். இரண்டாவதாக, அரசாங்கம் மொத்தத் தொகையாகப் பல்வேறு வழிகளில் செலவு செய்யும் போது அவ்வகைச் செலவுகளின் இறுதிநிலைப் பயன்கள் சமமாக இருக்க வேண்டும். பல்வேறு வழிகளில் செலவிடும்போது பதிலீட்டுக் கோட்பாடு செயல்படுத்தப்படல் வேண்டும். இது செயல்படுத்த முடியாத கருத்தாயிருப்பினும் ஒரு சிறந்த கருத்து என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. சமுதாயத்தை உள்நாட்டுக் குழப்பத்திலிருந்தும் வெளிநாட்டுப் படையெடுப்பிலிருந்தும் பாதுகாப்பது, உற்பத்தியளவையும் வேலைவாய்ப்பையும் தொழில் அமைப்பையும் மிகுதிப்படுத்துவது, சமுதாயத்தில் காணப்படும் வருவாய்ப் பகிர்வின் ஏற்றத்தாழ்வினைக் குறைப்பது ஆகியவை அரசின் செலவைத் திட்டமிடுவதற்கு அடிப்படையான முயற்சிகளாகும். சிக்கன விதி சிக்கனமும் எளிமையும் தனிப்பட்டவர் செலவில் கடைப்பிடிப்பது மட்டும் போதாது. பொது நிதியிலும், குறிப்பாக அரசாங்கச் செலவிலும் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். சிக்கனம் என்பது செலவழிக்காமல் இருப்பதோ தேவைக்கு மிகவும் குறைவாகச் செலவழிக்க முயற்சி செய்வதோ அன்று. எங்கு, எவ்வளவு நிதி நியாயமாக ஒதுக்கப்பட்டுச் செலவு செய்யப்படல் வேண்டும் என்பதைச் சிக்கனம் குறிக்கிறது. எங்குச் செலவு செய்தல் தவறோ அங்குச் செலவு செய்வதைத் தவிர்க்கவேண்டும். பேரறிஞர் எட்மண்டு பர்க்கு பகர்ந்தது போல் சிக்கனம் என்பது வெறும் சேமிப்பன்று; செலவைத் தெளிவாக தேர்ந்தெடுப்பதே என்பது இச்சிக்கன விதியின் விளக்கமாகும். அனுமதி விதி இவ்விதி முறையான அனுமதி பெறாமல் எச்செலவும் மேற்கொள்ளல் தவறு என இயம்புகிறது. எச்செலவிற்கும் அனுமதி தேவை. எந்த நோக்கத்திற்காக எவ்வளவு அளவில் அனுமதிக்கப்படுகின்றதோ அதனைக் கண்காணிப்பது அரசின் கடமையாகும். பொதுக் கடன்கள் எழுப்பப்பட்டால், நோக்கம் நிறைவேறும் வகையில் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். உபரி விதி பற்றாக்குறை ஏற்பட்டுச் சிக்கல் உண்டாகிவிடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துவது உபரி விதியின் நோக்கமாகும். மிதமான உபரி விரும்பத்தக்கது; நலம் பயக்கும் மிக்க உபர் வீண் செலவை உண்டு பண்ணும்; நாட்டை இக்கட்டான பாதையில் அழைத்துச் செல்லும் சமமான வரவு செலவுத் திட்டம், விரும்பத்தக்க நல்ல முறை என்- பது ஒரு சாரார் எண்ணம். இக்காலத்தில் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் பொருளாதார முன்னேற்றத்தை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது. பொது நிதியியலில் அரசாங்கச் செலவுகளை வகைப்படுத்துவது பற்றிப் பல்வேறு பொருளியல் வல்லுநர்கள் பன்னெடுங்காலமாகப் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். சே.எசு. மில் என்பார் அரசாங்கச் செலவைக் கட்டாய அலுவல், கட்டாயமற்ற அலுவல் என இரு பிரிவாகப் பிரிக்கிறார். உரோசர் என்பார் தனியார் செலவினங்களின் பாகுபாட்டை ஒட்டியே அரசாங்கச் செலவையும் வகைப்படுத்துகிறார். இவர் செலவைக் கட்டாயச் செலவுகள் பயனுள்ள செலவுகள், ஆடம்பரச் செலவுகள் என மூன்றாகப் பிரிக்கிறார். பின்னர், 19–ஆம் நூற்றாண்டின் பொருளியல் வல்லுநர்கள் செலவினங்கள் அளிக்கும் நன்மைகளின் அடிப்படையில் செலவைப் பிரிக்க முற்பட்டனர். கோகன் (Cohen), பிளன் (Flehen) என்ற அறிஞர்களின் பகுத்தாய்வின் முடிவுகளின்படி, மக்களுக்குப் பொதுவாக நன்மை பயக்கும் பாதுகாப்புப் போன்ற செலவினங்கள், சிலருக்கு மட்டுமே குறிப்பாக, ஏழைகளுக்கு உதவி வழங்கல் தொடர்பான செலவினங்கள் தனிப்பட்ட சிலருக்கு நன்மை தரும் செலவினங்கள், அனைவருக்கும் பயன்தரும் நிதி நிருவாகம் போன்ற செலவினங்கள் ஆகியவை ஆராயப்பட்டன. நிக்கல்சன் என்பவர் அரசாங்கச் செலவைப் பொதுச் சேவைகளுக்குக் கிடைக்கக் கூடிய வருவாய்க்கு ஏற்றாற்போல் பின்வருமாறு பாகுபாடு செய்கிறார்: (1) எவ்வித வருவாயும் தேடித்தராத செலவினங்கள் (2) மறைமுகமாக வருவாய் தேடித் தரக்கூடிய செலவினங்கள் (3) ஓரளவு வருவாய் தரக்கூடிய செலவினங்கள் (4) செய்யப்பட்ட செலவுகள் அல்லது அதற்கு மிகுதியாக வருவாய் தேடித் தரக்கூடிய செலவினங்கள். முதற் பாகுபாட்டில் ஏழைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் போரில் உண்டான இழப்புகளும் அடங்கும். இரண்டாம் பாகுபாட்டில் கல்வி, சுகாதாரம் போன்ற மறைமுக வருமானம் தரக்கூடிய செலவினங்கள் குறிக்கப் பெறும். மூன்றாம் பாகுபாடு கட்டணம் பெறும் கல்வியைக் குறிக்கும். எச்.சி. ஆதம்சு (H.C. Adams) அரசாங்கச் செலவுகளைப் பணிகள் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கிறார். அவை பாதுகாப்புப் பணிகள், வாணிகப் பணிகள், வளர்ச்சிக்கான பணிகள் எனப்படும். பாதுகாப்புச் செலவினங்கள் சமுதாய முன்னேற்றம் மிகும்போது குறையும் என்கிறார். பேராசிரியர் பிகு என்பவர் அரசாங்கச் செலவைச் சமுதாயத்தில் மக்களிடையே வருவாயை மீண்டும் பங்கீடு செய்யத் தக்க மாற்றம் காணும் செலவினங்களாகவும் (Transfer–expenditure), சமுதாயத்தின் உற்பத்திச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கத்தக்க மாற்றங் காணும் செலவினங்களாகவும் பாகுபாடு செய்கிறார். அரசாங்கச் செலவைப் பற்றித் திட்டவட்டமான விதிகள் இல்லாதது பெரிய குறையாகும். சே.பி.சே என்பார் எல்லா நிதித் திட்டங்களிலும் மிகச் சிறந்த நிதித்திட்டம் மிகக் குறைவாகச் செலவிடுதல் எனக் குறிப்பிட்டார். மேலும், தால்டன் (Dalton) என்பவர் மன நிறைவு தரக்கூடியதும், முழுமையானதும், முறையானதுமான அரசாங்கச் செலவு முறைக் கோட்பாடு இல்லாதது பெருங்குறை என்று வருந்தினார். இருப்பினும், காலப் போக்கில் அரசாங்கச் செலவுகள் வளர்ந்து கொண்டு போகின்றனவேயன்றிக் குறைந்தபாடில்லை. காரணம் யாதெனில், நலம் சார் நாடுகளாக (Welfare State) இக்கால நாடுகள் கருதப்படுவதால் செலவினங்கள் வளர்ந்து விட்டன. வெறும் காவல்துறை நாடாக (Police State) இருந்தால் செலவு குறையும். இக்காலப் போர்களும், போர் ஆயத்தங்களும் செலவை மிகுதிப்படுத்துகின்றன. மேலும், மக்கள்தொகை வளர்ச்சியினாலும் நாட்டுப்புற மக்கள் நகர்ப்புறங்களில் வேலை தேடி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைத்துக் குவிவதாலும் அரசாங்கத்தின் செலவு உயர்கிறது. குடியாட்சி முறையில் தேர்தல் நடப்பதும் செலவு மிகுதியாகக் காரணமாகிறது. விலைவாசி உயர்வும் அரசாங்கச் செலவு மிகுதற்குக் காரணமாக உள்ளது. மேலும், ‘குழாய் நிரப்புகைக் கோட்பாட்டின்’படி (Pump – Priming) பொருளாதார மந்தக்காலத்தில் பொருளாதார மீட்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இதுவும் அரசாங்கச் செலவு மிகுதியாகக் காரணமாகிறது. வணிகச் சுழல்களை ஈடு செய்யும் (Counter Cyclical Expenditure) அரசாங்கச் செலவும், நடைமுறை முதலீட்டிற்கும் சேமிப்பிற்கும் இடையில் சமநிலை இன்மையை நெறிப்படுத்துகிறது. பொதுவாக, முன்னேற்றம் காணும் நாடுகளின் அரசாங்கச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. சான் ஆட்லர் (John Adler) கருத்துப்படி, உற்பத்தியில் உயர்ந்து வரும் விகிதாச்சார அளவை, முதல் ஆக்கத்திற்கும் (Capital Formation) ஒதுக்கினால் வளர்ச்சி குன்றிய நாடு வளர்ச்சி பெறும். இக்காலப் பொருளியல் வல்லுநர்களின் முயற்சியால், அரசாங்கச் செலவு பற்றிய சிக்கல்கள் அறிவியல் அணுகுமுறையில் ஆராயப்படுகின்றன. அதன்படி, நடைமுறையில் ஏற்படும் தேவைக்கேற்ற அரசாங்கச் செலவு இன்றியமையாதது. இதில், பயன் இப்படித்தான் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எவ்வாறு அரசாங்க நிதி செலவு செய்யப்படவேண்டும் என்றும், நாட்டுப் பொருளாதாரம் நிருவகிக்கப்பட வேண்டுமென்றும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட சமூக அரசியல் அமைப்பில் எவ்விதச் சக்திகள் எவ்வெவ்வாறு அரசாங்கச் செலவைக் கட்டாயப்படுத்துகின்றன என்பது மட்டுமன்றி அளவையும் வரையறுக்கின்றன. இச்சூழ்நிலையில் அரசாங்கச் செலவு எப்படி இருந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை மசுகிரேவ் (Musgrave) என்பார் ஒரு புதுக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார். அரசு நிதி, ஒதுக்கீடு (Allocation), பகிர்வு (Distribution), நிலைநிறுத்தல் (Stabilization) என மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. ஒதுக்கீடு (Allocation) அரசாங்கச் செலவின் தலையாய சிக்கல், எவ்வாறு அளவையும் முறையையும் வரையறுப்பது என்பதே. கையிருப்பு நிதியைச் கொண்டு எவ்வாறு தனியார் விருப்பங்களையும் சமூகப் பொது விருப்பங்களையும் நிறைவேற்றுவது என்பது கேள்விக்குறியாகிறது. நாட்டு நிதி, அரசுச் செலவுகளுக்கு ஒதுக்கப்படின் சமூக விருப்பங்கள் நிறைவுறும். ஆனால், தனியார் தேவைகள், விருப்பங்கள் அந்த அளவு நிறைவுறா. எத்தன்மைப்பட்ட தனியார் தேவைகள் ஒத்திப்போடப்படலாம் அல்லது தவிர்க்கப்படலாம் என்பது முடிவு செய்யப்பட வேண்டிய சிக்கல், அரசாங்கச் செலவை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. வாய்ப்புச் செலவு (Opportunity Cost) முறை மூலம்தான், அதன் ஆக்கமும், அதனால் பெறப்படும் நலனும் கணிக்கப்பட்டு உணரப்பெறும். ஆகவே, அரசாங்கச் செலவு அரசாங்க வருவாயைப் பொறுத்து அமையும். இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. பொதுமக்கள் யாவரும் தங்களால் இயன்றவரை வரி செலுத்த வேண்டும் என்பது ஆதம் சுமித்தின் கொள்கை. தகுதிக்கேற்ப வரி (Ability to pay) என்னும் கொள்கை ஆங்கிலநாட்டு நிதி வல்லுநர்களைக் கவர்ந்தது. சே.எசு.மில் (1848) என்பவரால் ‘சம இழப்பு’ (Equal Sacrifice) என்ற முறையில் உருவாக்கப்பட்டு, பின் எட்சுவொர்த்து என்பவரால் ‘மிகக் குறைந்த மொத்த இழப்பு’ (Least Total Sacrifice) என்று திருத்தியமைக்கப்பட்டு, இதுதியில் ஏ.சி.பிகு என்பவரால் மொத்த, நேர்விகித, எல்லை நிலை (Total Direct Proportional Marginal Sacrifice) இழப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இக்கொள்கை சீர்திருத்தவாதிகளிடம் நல்ல செல்வாக்குப் பெற்றது. பழமை விரும்பிகள் அரசாங்கச் செலவைக் கண்மூடித்தனமாக எதிர்த்தாலும், இக்கருத்தை மட்டும் உவந்து, வியந்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டு ஒரு பக்கம் இருக்க, இக்கொள்கையில் (தகுதிக்கேற்ப வரி) பல்வேறு கடும் குறைபாடுகள் காணப்பட்டன. இயல்புக்கு ஏற்ப வரி விதிக்கும். கொள்கைக்கு இது பயன்பட்டதே தவிர, அரசாங்கச் செலவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்யவில்லை. உயர் அளவில் ஒரு குறிப்பிட்ட வரி எவ்வாறு விதிக்கப்படவேண்டும் என்று மட்டுமே இது முடிவு செய்கிறது. வரவு–செலவுத் திட்டத்தைப் பற்றி (Budget) இது கவலைப்படவில்லை. ‘வாய்ப்புச் செலவு’ முறை பற்றியும் இது செயல்படவில்லை. ஆகவே, இக்கொள்கையின் நேர்மை, செயல்திறன் முதலியன ஐயப்பாட்டிற்கு இடமளிக்கின்றன. சம இழப்பு (Equal Sacrifice) என்பது, மக்களிடையே பயன்பாட்டு ஒப்பீட்டுத் தேவையை நிலைநிறுத்துகிறது. ஆனால், இது காலப் போக்கில் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. “பாரிடோ உத்தம நிலைக் கொள்கை” (Pareto Optimality)யின் படி, ‘அ’ என்னும் தனி மனிதனின் நிலை முன்னேறும் போது, அதே சமுதாயத்தில் வாழும் ‘கி’யின் பொருளாதார நிலை குறைபடாதிருப்பின் அரசாங்கச் செலவு மூலம் சமுதாயத்தில் பொருளாதார நிலை உயர்கிறது என்று உணரலாம். இருப்பினும், இது செயலாற்றும்போது இக்கருத்தும் குறைபாடுடையதாக இருக்கிறது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் விளங்கும் அடிப்படைப் பொருட் பங்கீட்டு நிலை பற்றி ஒன்றும் இது கூறவில்லை. மிகுதியான ஏற்றத் தாழ்வு இருப்பினும் அதனை இது கண்டு கொள்ளவில்லை. “பயன் கொள்கை” (Benefit Theory) தொடக்கத்திலிருந்தே வரவையும் செலவையும் நிதி வரவு–செலவுத் திட்டத்தில் இணைத்தே செயலாற்றி வந்தது. வரவு–செலவு அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட செலவுத் திட்டம் மக்கள் சபையில் நிறைவேற்றப்பட குறிப்பிட்ட வரித்திட்டம் ஒன்று அதனுடன் இணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரே மனத்துடன் வரவேற்கப்படும். அப்போது பெரும்பான்மையோர் தங்கள் வாக்குகளை அளிக்க முன்வருவர். ஆகவே, ஒரு வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு மிக்க நலம் பயக்கும் நிலையில் இருக்க வேண்டும். தனியாரை மையமாகக் கொண்டது இக்கொள்கையின் போக்கு. ஆனால், நடைமுறையில் பொது விருப்பங்களும் தனியார் விருப்பங்களும் ஒன்றுக்கொன்று ஈடுபாடு கொண்டவை. பிரிக்க முடியாதவை. தனிப்பட்ட முறையிலும் கணிக்க இயலாதவை. பொது விருப்பங்கள் நிறைவு செய்யப்படின், அவை குறிப்பிட்டவருக்கு மாத்திரம் போய்ச் சேருவதில்லை. யாவருக்கும் பொதுவாயிருப்பதால், எவரையும் நுகர்வதிலிருந்து விலக்க முடியாது. தேசப் பாதுகாப்பான நன்மைகளோ சாக்கடையைத் துப்புரவு செய்வதன் பலனோ தனி ஒருவனுக்கு மாத்திரம் பயன் அளிப்பதன்று. சமுதாயத்தில் வாழும் அனைவரும் ஒரே அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் எந்த அளவு பயன் பெறுவார்கள் என்பதைக் கணித்து அதற்கேற்ப வரி பெறல் வேண்டும். இலிண்டால் என்னும் பொது நிதியியல் வல்லுநர், தனியார் தங்கள் தேவைக்கேற்பச் சமுதாய விருப்பப் பொருள்களையும் தொண்டுகளையும் துய்த்து அதற்கேற்ப விலையையும், அதாவது, வரியையும் செலுத்த முன்வருவர் என்கிறார். போவன் (Bowen) என்பவர் தம் 1948–ஆம் ஆண்டு ஆய்வுப்படி, தனியார் தேவையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும்போது உற்பத்தி அளவு, மொத்தத் தேவை, மொத்த அளிப்பு ஆகியவை சந்திக்கும் இடத்தில் தீர்மானிக்கப்படுகின்றன என்கிறார். ஆகவே, அரசாங்கச் செலவும், அதற்கேற்ப வரி பெறுவதும், அங்காடியில் நடைபெறும் கொடுக்கல்–வாங்கல் போல அமைகிறது. இதையே சாமுவேல்சன் (P.A. Samuvelson) பொதுநலக் கொள்கைப்படி (Welfare) ஆராய்ந்து, சமூகப் பொருள் என்பது, ‘அ’யின் நுகர்ச்சியில் ‘கி’யின் நுகர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதே என்றார். சமுதாயப் பணியும் பொருளும் யாவர்க்கும் கிடைக்க வேண்டும். சிலர் அதற்குரிய விலையை வரி மூலம் கொடுக்கவில்லை என்பதற்காக ஒதுக்கப்படக் கூடாது. ஏனெனில், ஏழைகள் துய்ப்பதை வரி கொடுப்போர் தவிர்க்க முயற்சி செய்யலாம். சமூக விருப்பங்கள், அரசின் வரவு–செலவுத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படல் வேண்டும். சமூக விருப்பத்தை நிறைவு செய்யும் பொருளையும் பணியையும் அரசாங்கமே உற்பத்தி செய்து, சமத்துவச் சமுதாயம் அமைக்கப் பங்கீடு செய்தால் சமுதாயப் பணிகள் நிறைவு பெறும். பங்கீட்டு முறை நலம் சார் பொருளாதாரச் சமுதாயத்தில் வெவ்வேறு திட்டங்கள் அரசாங்க வரவு–செலவுத் திட்டத்தின்கீழ்க் கையாளப்படும்போது அதன் நன்மை தீமைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பங்கீடு என்று வரும்போது சமுதாயத்தில் செயற்படும் அரசியல் முறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமத்துவ முறை நாடுகளில் மூலதனத்திற்குக் கிடைக்கும் வருவாய் நேரடியாக அரசாங்கத்தைச் சாரும். மேலும், தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது அன்று. முதலாளித்துவ அரசியல் அமைப்பு நாடுகளிலும் கூட வவியமையற்றோருக்கும் ஏழைகளுக்கும் அரசாங்கம் பொருளாதாரப் பங்கீட்டில் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே தான் முதியோர்கள், விதவைகள், திக்கற்றோர் போன்றோருக்கு அரசாங்கம் நேரடியாக உதவி செய்கிறது. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளின் வாழ்வு வளம் பெற இலவசக் கல்வித் திட்டங்கள் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. வரி விதித்து அதன் மூலம் மக்களிடையே நிதியுதவி பெற்று, ஏற்றத் தாழ்வுகளைச் குறைத்துச் சமுதாய நிலையை உயர்த்துவதும் அரசாங்கச் செலவின் ஒரு பகுதியே. பொருளாதார உறுதிப்பாடு வளர்ச்சி முதலியவற்றைப் பேணவும் அரசாங்கச் செலவு பயன்படுகிறது. மொத்தத் தேவை (Aggregate Demand) ஒரு அங்காடிப் பொருளாதாரத்தில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கலாம். இதனை ஈடுகட்ட அரசிறைக் கொள்கை தக்கதொரு அரசாங்கச் செலவு முறையை அல்லது பணக்கொள்கையைக் கண்டு பிடித்துச் செயலாற்ற வேண்டும். பொதுநிதித் துறையில் அரசாங்கச் செலவை மிகுதிப்படுத்தியோ வரியைக் குறைத்தோ சமநிதித்திட்ட வளர்ச்சியைப் பெற வழிகோலமுடியும். அரசாங்கச் செலவுக் கொள்கை, ஒதுக்கீடு, பகிர்ந்தளிப்பு முறைகளில் குறுக்கிடக் கூடாது. அரசின் செலவினங்கள் சமுதாயத்தில் செயற்படும் ஒதுக்கீடு முறையைக் கெடுக்காமலும், பகிர்ந்தளிப்பு முறையை மாற்றாமலும் செயற்பட வேண்டும்.எல்.கா.ந. துணை நூல்கள் Taylor, P.F., “The Economics of Public Finance”, Oxford & IBH Publishing Company, 3rd Edition, 1968. Groves, H.M., “Financing Government”, Henry Holt & Company, New York, 1950. Prest, A.R., “Public Finance in Theory and Practice”, ELBS & Weidenfeld and Nicolson, 1974. Carl, S. Shoup, “Public Finance”, Wiedenfeld and Nicholson, 1969. Musgrave & Shoup, “Readings in Economics of Taxation”, AFA, 1959.