அகமதிய இனம்
akamatiya iṉam
இசுலாமியப் பிரிவுகளுள் ஒன்று, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குருதாசுபூர் மாவட்டத்திலுள்ள காடியான் என்ற ஊரைச் சேர்ந்த சமய அறிஞர் மீர்சா குலாம் அகமது என்பவர் 1889–ஆம் ஆண்டில் இப்பிரிவை ஏற்படுத்தினார்.
இசுலாமியப் பிரிவுகளுள் ஒன்று, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குருதாசுபூர் மாவட்டத்திலுள்ள காடியான் என்ற ஊரைச் சேர்ந்த சமய அறிஞர் மீர்சா குலாம் அகமது என்பவர் 1889–ஆம் ஆண்டில் இப்பிரிவை ஏற்படுத்தினார். இந்தியாவில் இப்பிரிவினரின் மக்கள் தொகை இன்று 1,00,000 ஆகும். மேலும் ஆப்கானிசுதானம், பாரசீகம், அராபியா, எகிப்து போன்ற இசுலாமிய நாடுகளிலும் இப்பிரிவினர் வாழ்கின்றனர்.
நபிகள் நாயகம் சமயப் பரப்புநர்களுள் ஒருவர். தெய்விக வெளிப்பாடு அவரோடு மட்டும் நின்று விடுகின்ற ஒன்றன்று என்று அகமதிய இனத்தவர் கருதுகின்றனர், “இறைவன் இறுதிவரைத் தம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர் மூலம் பேசிக் கொண்டிருப்பவன்” என்றும் இப்பிரிவினர் உறுதியுடன் கூறுகின்றனர். “உலக முடிவு நாளில் மகதியென்னும் ஒருவர் ஒரு கையில் வாளுடனும், மற்றொரு கையில் குரானுடனும் தோன்றி, இசுலாம் சமயத்தின் மேன்மையை நிலை நாட்டுவார்” என்ற மற்ற முசுலிம்களின் கருத்தை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தங்கள் கருத்துக்கு ஆதரவாகக் குரானிலிருந்தே இவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள், “சமயத்தில் கட்டாயம் ஏதுமில்லை” என்பதே இவர்களுடைய வாதமாகும். முசுலிம் அல்லாத பிரிவினருடனும் இவர்கள் நெருங்கிய நட்புறவு கொண்டிருப்பதோடு அவர்களுடைய சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள்.
அகமதிய இனத்தைத் தோற்றுவித்த மீர்சாகுலாம் அகமதுவின் காலத்திற்குப்பின், மௌவலி நூருதீன் என்பவர் இப்புதிய இனத்தின் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1914–இல் காலமானபோது, அகமதிய இனம் பிளவுண்டது. காடியான்கள் என்னும் தொடக்ககாலப் பிரிவினர் குலாம் அகமதுவை நபிகள் நாயகமாகவும், அவர் மகன் அட்ரத்து மீர்சா பசீருதீன் முகமது அகமதுவை இரண்டாம் கலீபா என்றும் கருதினர். ஆனால், பிரிந்து சென்ற மற்றொரு பிரிவினர் குலாம் அகமதுவை ஒரு சீர்திருத்தக்காரர் என்றே சுருதினர், இரண்டாம் பிரிவினரின் தலைமையிடம் இலாகூரில் அமைந்தது.
இப்பிரிவினரில் பெரும்பாலோர் தம் தாய்மொழியான பஞ்சாபி மொழியையே பேசுகின்றனர். 1974-ஆம் ஆண்டு அகமதிய இனத்தவரை முசுலிம் அல்லாத சிறுபான்மையினத்தவர் என்று பாகிசுதான் (Pakistan) அரசு அறிவித்தது. இப்பிரிவினர் காடியான்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்பிரிவை நிறுவிய மீர்சாகுலாம் அகமது 1908-இல் தாம் இறப்பதற்கு முன்பே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய காரணத்தினால், சாகர் அஞ்சுமணி அகமதியா என்பவர் இப்பிரிவினரின் இப்போதைய தலைவராக இருக்கிறார். காடியான்கள் சிறப்பாகப் பாகிசுதானத்திலே வாழ்கிறார்கள், சிலர் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். இவ்வினத்து மக்கள் கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்றவர்கள்; செல்வச் செழிப்பு மிக்கவர்கள் அகமதிய நம்பிக்கைகளே உண்மையான இசுலாம் சமயம் என்றும், முகமதுநபியும் மீர்சாகுலாம் அகமதுவும் தீர்க்கதரிசிகள் என்றும் நம்பும் இவர்கள் சிறந்த சமயப் பரப்புநர்கள். 1947-இல் பாகிசுதானம் உருவானபோது தம் தலைமையிடத்தைக் காடியானிலிருந்து இரப்வா (Rabwah) என்னும் இடத்திற்கு மாற்றிக் கொண்டனர்.
இலாகூர்ப்பிரிவினரும் மதமாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களே. ஆனால், அவர்கள் இசுலாம் சமயத்திற்கு மற்றவர்களை மாற்றுகிறார்களேயன்றி, அகமதிய இனத்திற்கன்று. இதனை நடத்திச் சென்ற மௌலானா முகமது அலி என்பவர் தம் இனத்தைப் பரப்ப ஆங்கிலத்திலும் உருதுவிலும் பல நூல்களை வெளியிட்டு இசுலாம் சமயத்தை முற்போக்குச் சமயமாக்கப் பாடுபட்டார். அவர் 1951–இல் காலமானார்.
அகமதிய இனத்தவர்கள் சூபி இயக்கத்தாரை ஒத்தவர்கள், எகிப்திலும் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் இத்தகைய முற்போக்கு இசுலாம் இனம் ஒன்று இருந்தது.
இசுலாம் சமயத்தைச் சார்ந்த வைதிக சமய சித்தாந்திகள் அகமதிய இனத்தைக் கடுமையாகக் குறைகூறுவார்கள். அ.கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 98)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69tdqf4n/
தமிழ்“அகமதிய இனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/69tdqf4n/APA
Oliyon Research. (2026). அகமதிய இனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/69tdqf4n/MLA
"அகமதிய இனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/69tdqf4n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment